Thursday, March 17, 2005

மறுபடியும்

எதிர்பாராமல் கிடைத்த இந்த நீண்ட இடைவெளி நிறைய படிக்க நேரம் தந்தது. ஆரம்பித்தபோது இத்தனை நீண்டதாக இருக்கும் என்பது கூட தெரியவில்லை. தவிரவும் எழுதும் வலைப்பதிவர்களின் அலசலும், வீச்சும், விஷயகனமும் கொஞ்சம் கலவரப்படுத்தியதும் நிசம். ஏதாவது எழுத உட்கார்ந்தால் மண்டைக்குள் ஆட்டோ சத்தம் கேட்க ஆரம்பிக்க, எழுத ஆரம்பித்த பாதி பதிவுகள் Draft ஆகவே இருக்கின்றன. ஆனால் பின்னூட்ட சேவை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

மேலும் நான் பணிபுரியும் இடத்திலேயே என் வீட்டம்மாவும் வேலைக்கு சேர்ந்து விட்டதால், கொஞ்சம் நேர நெருக்கடி வேறு. காலை ஆறு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள், மதியம் இரண்டரை மணிக்கு வருகிறார்கள். எனவே காலை எழுந்து, என் கடன்களை முடித்து, விழித்தவுடன் தென்படும் அம்மா இல்லா வெறுமையை ஈடுகட்ட கொஞ்ச நேரம் சூர்யாவுடன் தாயுமானவனாய் சுற்றி, அந்த விக்கிரத்துக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம்/ நைவேத்தியம் இட்டு டே கேர் என்று சொல்லப்படும் நவீன நரகத்தில் இட்டு விட்டு அலுவலகம் செல்லும்போது தினமும் வலிக்கிறது.

அந்த வலிக்கு சொறிந்து கொள்ள வலைச்சுவரில் கிறுக்கி இருக்கலாம். செய்தவன் தான். ஆனால், இப்போது என்னமோ ஒரு அந்நியத்தன்மை வந்து விட்டது. மனசு விட்டு எழுத முடிவதில்லை. எழுதுகின்ற நம்மிடையே நேயம் குறைந்து, வார்த்தைகளை பிய்த்துப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறொமோ என்று ஒரு எண்ணம்.

இன்று வெங்கட்டின் பதிவில் எழுதியதும், நீச்சல் தெரிந்த தண்ணீர் மறந்த ஒருவன் வெகு நாள் கழித்து குளத்தில் விழுந்தவுடன் அனிச்சையாய் கை கால் அசைத்து மிதப்பது மாதிரி மேற்கண்டதை எழுதி விட்டேன். ரெகுலராக எழுதா விட்டாலும், தோணுவதை எல்லாம் எந்த உறுத்தலும் இல்லாமல் மறுபடி எழுதப் போகிறேன்.

ஒவ்வொண்ணா எழுதறேன்.

எங்க ஆரம்பிக்கலாம்....ம்.....நாராயணணின் சிலுக்கு...??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...