Friday, April 08, 2005

சூரியனைப் பார்த்து குலைக்க ....


விகடன் ஜெயகாந்தன் பேட்டியும், அதி கறுப்பிலும்/சிவப்பிலும் எனது அவதானிப்புகளும்

‘‘தமிழ்ப் பாதுகாப்புக்காக ஒரு இயக்கம் தொடங்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்திருக்கிறார்களே...’’

‘‘திருவாளர் ராமதாஸ் போன்றவர்களுக்குப் பிடித்திருப்பது பற்றல்ல... அது அரசியல்! எதையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். அது தமிழாக இருந்தாலும்..! எப்படிப் பெயர் வைப்பது என்பதெல் லாம் அவரவர் விருப்பம். நீங்கள் உங்கள் கருத்தைப் பிரசாரம் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் உங்கள் கருத்தைத் திணிக்காதீர் கள். மிரட்டாதீர்கள். அது காட்டு மிராண்டித்தனம்! நினைத்தால் இங்கே யாரும் எப்போதும் சண்டியர் ஆகலாம். சான்றோர்கள் நினைக்காமல் இருக்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆமாமாம்..ரவி சுப்ரமணியமும், அப்புவும், கதிரவனும் இருந்தால் ,,,

‘‘திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள்தான் இன்று ஓரளவாவது தமிழைக் காப்பாற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?’’

‘‘முதலில் திராவிட இயக்கம் என்றால் எது? அவர்களின் கொள்கைகள் என்ன? சொன்னவற்றில் இதுவரை எதையெல்லாம் அவர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள்? திராவிட இயக்கத்தவர்கள் தமிழை வைத்து தற்கொலை செய்துகொண்டவர்கள். ‘ஐயோ பாவம்!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!’’

தமிழை வைத்துப் பிழைத்துவிட்டார்கள் என்று சொல்கிறார் ஓரிடத்தில் இன்னொரு பக்கம் தற்கொலை என்கிறார். ஸார் தெளிவாத் தான் இருந்தாரா..??


‘‘திராவிட இயக்கங்களால் நன்மையே விளையவில்லையா?’’

‘‘தி.மு.க. பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்தின் ஒழுக்கமும், நற்பெயரும் சீரழிந்துபோனது என்பதுதான் நிதர்சனம். வளர்ச்சி இவர்கள் இல்லா விட்டாலும் ஏற்படும். நாம் வளர்கிற நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியலுக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் லாயக்கற்றவர்கள் என்பது தமிழர்தம் அனுபவம்!
இதை அப்போதே, ‘தி.மு.க&வும் அ.தி.மு.க&வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராஜர் எல்லாருக்கும் போதித்தார். யாரும் கேட்கவில்லை. மட்டைகள் என்றால் அந்தக் கட்சிகள். குட்டை என்றால் என்ன? ஊழல் குட்டை!
திராவிடர் கழகம் போல இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசிய லில் இருந்து இனியாவது விலகி இருந்தால், தமிழகத்தின் எஞ்சிய மானமாவது மிஞ்சும்!’’

இவர்கள் இல்லாவிட்டாலும் வளர்ச்சி இருந்திருக்கும் என்பவர், இவர்கள் இல்லாதிருந்தால் ஊழலும் இல்லாதிருக்கும் என்று அறுதியிட்டு சொல்வாரா..??வரலாற்றை தான் விருப்பியபடி திருத்த தோழருக்கு முடிந்திருக்குமா..??


‘‘நீங்கள் ஆதரித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியே, திராவிட இயக்கத்துடன்தான் கூட்டணி வைத்திருக்கிறது?’’

‘‘இல்லையில்லை! தி.மு.கதான் காங்கிரஸ§டன் கூட்டணி வைத்திருக் கிறது. அ.தி.மு.க&வைத் தவிர, தி.மு.க. கூட்டணி வைக்காத கட்சி இங்கே வேறு என்ன இருக்கிறது?’’

காங்கிரஸைத் தேடி தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறதா..?? ஏதாவது ஒரு மாநிலக்கட்சிகளின் மீது சவாரி செய்வதில் பா.ஜ.கவுக்கும், காங்கிரஸுக்கும் போட்டி அல்லவா நடக்கிறது..??

‘‘பெரியார், அண்ணா, கலைஞர் என திராவிடப் பாரம்பரியத்தையே நீங்கள் அடியோடு மறுக்கிறீர்களா?’’

‘‘அந்த வரிசை, எப்படி படிப்படியாகக் கீழே இறங்கி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெரியவில்லையா?’’

நேரு, இந்திரா காந்தி, சஞ்சய்காந்தி, ராஜிவ்காந்தி , சோனியா காந்தி என்பது மட்டும் வளர்ச்சியாக்கும்..?? ஆமாம்..குடும்பத்தின் வளர்ச்சிதான்

‘‘தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?’’

‘‘அந்த ஆட்சி நடந்து முடியட்டும்!’’

எல்லா ஆட்சி நடந்தபோதும் இதைத்தான் சொன்னாரா..??

‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி...’’

‘‘ஏன் வம்பு?’’

அடேங்கப்பா...என்ன பயம்...?? திராவிடத்தலைவர்கள் எல்லாம் ஜெயலலிதாவைப் போல அராஜக ஆசிட் அரசியல் நடத்தினால் ஜெயகாந்தன்களின் வீரமுழக்கம் இப்படித்தான் இருக்குமோ..?? அவர்களையும் தொடாதோ..??


‘‘பயமா?’’

‘‘பயம் அல்ல... பெண் என்பதால் ஒரு மரியாதை!’’

அடேங்கப்பா...ஜெயகாந்தனின் இந்த பல்டித்திறமை கூட அரசியலில் அவரைக் காப்பாற்றவில்லையா..ஆச்சரியம்தான்.

‘‘தி.மு.கவை விமர்சிக்கிற அளவு அ.தி.மு.க\வை விமர்சிக்கத் தயங்குவது ஏன்?’’

‘‘என் எழுத்துக்களை, கட்டுரைகளை, விமர்சனங்களை முழுமையாகப் படித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியே வராது.’’

‘‘முன்னுதாரணமாகத் திகழும்படியான தலைவர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமா?

‘‘யாரும் பின்பற்றத் தயாராக இல்லாததால் அப்படியாகிறது. ஏன் யாரும் பின்பற்றவில்லை என்று கேட்பீர்களானால், தலைமையின் லட்சணம் அப்படி இருக்கிறது.’’

‘‘ஆன்மிகம் தனது ஒழுக்கத்தையும், கௌரவத்தை யும் காத்து வருகிறதா?’’

‘‘ஆன்மா இல்லாததற்குப் பெயர் சவம்! ஆன்மிக வாதிகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சரி... தவறு பற்றி அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!’’

திராவிட அரசியல்வாதிகளின் சரி/தவறு மட்டும் நான் பேசுவேன்.

‘‘உங்கள் அளவுகோல்படி எது சரி... எது தவறு?’’

‘‘அது அவனவன் புத்தி!’’

இது நழுவும் நேரம்

‘‘ஒரு படைப்பாளியாக நீங்கள் கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டனவா?’’

‘‘படைப்பாளி கனவு கண்டுகொண்டு இருப்ப தில்லை. அவனே கனவுகளைப் படைத்துவிடுகிறான். நான் கண்ட கனவுகள்தான் என் எழுத்துக்கள்!’’

நிறைவேறாத கனவைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே..? அது ஸஹ்ருதயர்களுக்கு மட்டும்தானா..??

‘‘அறிவாளிகளைத் தமிழகம் சரியாகப் போற்ற வில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?’’

‘‘அறிவு வரும்போது போற்றும். அதற்கு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது?’’

அறிவு என்பதை விருது என்ற வார்த்தையாக மாற்றினாலும் வாக்கியம்
சரிதான். அது சரி ..ஜெயகாந்தன் சொல்லும் பதில் ஆச்சே..

‘‘சங்கர மடம் தொடர்பாக நீங்கள் எழுதி இருக்கும் ‘ஹர ஹர சங்கர’ நாவல், உங்களின் பிரியமான வாசகர்களிடமேகூட அதிருப்தியை உண்டுபண்ணி இருக்கிறதே?’’

‘‘எழுதுவது மட்டும்தான் என் வேலை!’’

அதில் ஜால்ரா/ஜிஞ்சா சேர்ப்பது கூட என் உரிமைதான்

‘‘சமீபத்தில் கலவை சென்று ஜெயேந்திரரை சந்தித்தீர்களே... என்ன பேசினீர்கள்?’’

‘‘ஆம், அவர் எனக்குக் கௌரவம் செய்தார். ஆசீர்வதித்தார்! என்ன பேசினோம் என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை!’’

இலக்கியப் பங்களிப்பை விடுங்கள். இந்த விசுவாத்திற்காவது இவருக்கு பல வருடங்களுக்கு முன்னேயே ஏகப்பட்ட விருதுகள் கொடுத்திருக்க வேண்டும்.

‘‘இத்தனை வருட வாழ்வில் தாங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?’’

‘‘இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அதனால் பெற்றதுதான் எல்லாம்!’’

பெற்றது தன் எழுத்துத்திறமை மூலம் ( நான் உள்பட) ஏகப்பட்ட வாசகர்களை. இழந்தது, தன் கண்மூடித்தனமான திராவிட அரசியல் எதிர்ப்பு மூலம் நடுநிலையாளர்களின் நம்பிக்கையினை.

************************

சமீபத்தில் ஜெயகாந்தன் விருது பெற்றதை ஒட்டி திசைகள், சிவசங்கரியின் ஒரு பழைய கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அதன் மூலம் ஜெ.கேவைப் பற்றி ஓரளவு தெரியும் என்றது திசைகள். அதன் நீட்சியாக வந்திருக்கும் இந்த வார விகடன் பேட்டி, அவரது முழு உருவத்தையும் காட்டி இருக்கிறது. திராவிட அரசியலின் சாதக பாதகங்கள் நம் எல்லோருக்கும் தெரியுமென்றாலும், அதன் மாற்றாக ஏதோ ஒரு ஆட்சி இருந்திருந்தால் அது நல்லது மட்டுமே செய்திருக்கும் என்று நாம் யாருமே சொல்ல முடியாது. ஆனால் ஜெ.கே அதையே திரும்பத் திரும்ப இத்த்னை ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரே சொல்கிறபடி இந்திவாலாக்கள், பதில் மரியாதை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். மேலிருந்து கொண்டு தாங்கள் நினைத்தபடி கீழிருப்பவரினை அலைக்கழிப்பவர்களை விட, இங்கிருந்து கொண்டு மாற்றானுக்கு பாதம் தாங்குபவர்கள் அவனை விட அபாயகரமானவர்கள்.

பி.கு :

கறுப்பு/சிவப்பு வண்ணங்களும், பதிவின் தலைப்பும் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் வசதிக்காக. என் கோணத்தில் இருந்தும் தலைப்பு சரிதான் :-)

14 comments:

  1. நல்ல எள்ளல். :)

    ReplyDelete
  2. அடி தூள்.

    ReplyDelete
  3. நன்றி மூக்கன் இந்தப்பேட்டியைக்குறிப்பிட்டதற்கும் விமர்சித்தமைக்கும்.

    ஜெயகாந்தனுக்கு இது பேட்டிகளின் காலம். இன்னும் நிறைய வரவேண்டும். இன்னொனன்றையும் கவனிக்க வேண்டும், பேட்டிகள் பெரும்பாலும் அவரது இலக்கியத்தைப் பற்றியல்லாமல் அதோடு அவரது அரசியல்/ஆன்மீக தளங்களை, கருத்துக்களை வேண்டிக் கேட்கப்படுகின்றன. இவைகளுக்கு விஷேசமான நோக்கங்கள் உண்டு. திராவிட இயக்கத்த்கைய் விமர்சிக்க இப்போது சோவைவிடவும் தகுதியான ஒரே நபராக முன்னிருத்தப்படுகிறார். இழுப்பைப்பூவையெல்லாம் வைத்து சமாளித்தவர்களுக்கு இப்பொழுது மீடியா வெளிச்சத்தில் இருக்கும் ஜெயகாந்தன் ஒரு ஆலைதான். ஆனால் இதுவும் நன்மைக்குத்தான். இவரது அரசியல் நேர்மை, நடுநிலைவாதம், சார்புகளைக் கடந்த பார்வை இவையெல்லாம் முடை நாற்றமெடுக்கத்தொடங்கி வெகு நாளாகிறது. ஜெயகாந்தனைப்பற்றி பேசும் எவரும் அவரது அரசியல்பார்வையின் குறைபாட்டை, ஆன்மீக மூடநம்பிக்கைகளை அறிந்தே வருகிறார்கள். பெரியார் ஜெ.கெயின் விமர்சனத்துக்கு அளித்த இடம் அவரது நேர்மையையும், சுதந்திரத்துக்கான மரியாதையையும் காட்டுகிறதென்றால், அதைப் பயன்படுத்திகொண்ட வீரமுழக்கமிட்ட ஜே.கே, ஜெயேந்திரர், மூப்பனார், ஜெயலலிதா போன்றவர்களிடம் சாதிக்கும் மெளனமும், புகழ்ச்சிகளும் அவரது நேர்மையற்ற தன்மையை மட்டுமல்லாது, அடிப்படை சாதி உணர்ச்சிகளையே காட்டுகிறது.

    ஞானபீடம் கிடைக்காதிருந்தபோது தினமணி பேட்டியில்
    //என்னை மாதிரி தமிழ் மக்களால் கெளரவிக்கப்பட்ட எழுத்தாளன், நேசிக்கப்படுகின்ற எழுத்தாளன், புரிந்துகொள்ளப்படுகின்ற எழுத்தாளன், புகழப்படும் எழுத்தாளன், பொருள் சம்பாதித்திருக்கும் எழுத்தாளன், இன்னொருவன் இல்லை என்ற அளவில் என்னிடம் தமிழர்களின்பால் நன்றியுணர்சியே மேலோங்கியிருக்கிறது//

    என்று சொன்னவர், இன்று மேலேயிருந்து ஞானபீடம் கிடைத்தவுடன்

    ‘‘அறிவாளிகளைத் தமிழகம் சரியாகப் போற்ற வில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?’’

    ‘‘அறிவு வரும்போது போற்றும். அதற்கு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது?’’

    என்கிறார். தமிழர்கள்தான் என்னை (என்னுடைய நேர்மையற்ற சாதிய மனப்பான்மையோடு) முதலில் அங்கீகரித்து மரியாதை செய்தார்கள் என்றல்லவா இந்த மானஸ்த்தர் சொல்லியிருக்கவேண்டும்!

    ஜெ.கே ஒரு பேட்டியிலே சொன்னது நினைவுக்கு வருகிறது.

    //சோவியத் யூனியன் வீழ்ச்சியடையாது என்று நான் சொன்னேன். ஆனால் அது வீழ்ச்சி அடைந்தது, அதில் இருந்து என்ன தெரிகிறது நான் சொன்னது என்னுடைய விருப்பமே அன்றி உண்மையல்ல //

    அது போல அவரது விருப்பங்கள் எத்தனையோ இருக்கலாம். திராவிட இயக்கங்கள் தூண்டிய எழுச்சி அவரை காயப்படுத்தி இருக்கலாம். இன்றைக்கும் தமிழில் பாடாதே, கோயிலுக்குள் வராதே என்கிற பார்ப்பனத் தலையிடமும், உயர் சாதித் தலைமையிடமும் மண்டியிட்டு, அதன் கருணையை யாசித்தே உழைக்கிற மக்கள் வாழவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கலாம். ஆனால் என்ன செய்வது காலம் அவர் விருப்பங்களை கேட்பதில்லையே!

    இன்னும் அவர் நீண்டகாலம் இருந்து சங்கர மடம் உவந்து அளிக்கின்ற இன்னும் ஏதேனும் பட்டத்தையும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பாரதியை சாதிப்பிரஷ்ட்டம் செய்த அமைப்பு அது என்பதையும், அவனும் அதை ஆன்மீக ரீதியில் அதற்கு (அப்போதே) எந்த மதிப்பும் கொடுக்காது, புறக்கணித்த மடம் என்பதையும் ஒரு தகவலுக்காவது அவர் நினைவில் கொள்ளலாம்.

    ReplyDelete
  4. நண்பர்களுக்கு நன்றி.

    தங்கமணி, இந்தப் பேட்டியைப் படித்ததும் கொஞ்ச நாள் முன்பு நீங்கள் எழுதிய ( பரிசு கிடைத்த உடன்)ஜெ.கேவை பற்றிய மிருதுவான விமரிசனம் உள்ள கட்டுரைதான் நினைவுக்கு வந்தது. தன்னுடைய இலக்கியம் பிடித்த, அரசியல் பிடிக்காத வாசகர்களுக்கு அந்தக் கஷ்டத்தையே வைக்காமல், நேரடியாக அரசியல் பேசி இருக்கிறார். நமக்கென்ன தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியம்.
    அவருடைய பக்தர்களுக்கா பஞ்சமிங்கே :-)

    ReplyDelete
  5. மூக்கன்,

    அருமையான கேள்விகள், உரைக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    //தங்கமணி: இவரது அரசியல் நேர்மை, நடுநிலைவாதம், சார்புகளைக் கடந்த பார்வை இவையெல்லாம் முடை நாற்றமெடுக்கத்தொடங்கி வெகு நாளாகிறது. //

    நான் சொல்லுவது கொஞ்சம் குரூரம், ஆனால் இந்தப் பேட்டியைப் படித்த பிறகு என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

    "Jnanpith Award was conferred *posthumously* on the greatest Tamil writer Mr. Jayakanthan."

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  6. //"Jnanpith Award was conferred *posthumously* on the greatest Tamil writer Mr. Jayakanthan."//

    Sankarapandi,
    This is too much. What Sundararajan and Thangamani wrote are just enough. There is nothing new in his rants except that he is taking himself to new heights of stupidity. Now that the spot light is on him, he should be allowed bring out all the rubish he has collected at bottom of his heart. He will not get another chance you see.

    ReplyDelete
  7. //"Jnanpith Award was conferred *posthumously* on the greatest Tamil writer Mr. Jayakanthan."

    Sankarapandi, This is too much. //


    கழிசடை பேர்வழி ஜெயேந்திரருக்கு வால் பிடித்ததனால் அவருக்கு ஞானபீட பரிசு கிடைத்தது என்று என்னை நினைக்கத் தூண்டுவதை விட, நான் பெரிதும் மதித்த ஜெயகாந்தன் இன்று இல்லாவிட்டாலும், அவருக்குக் கிடைத்த விருது என்று என்னை ஏமாற்றிக் கொள்ளவிரும்புகிறேன், இது குரூரமான கற்பனையே ஆனாலும் )-:

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  8. **********************************
    ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தனை, தமிழ் உணர்வோடு நேரில் சந்தித்து வாழ்த்த நினைத்தார் கருணாநிதி. பண்போடும் பரிவோடும் இதைச் செய்ய நினைத்தாலும் ஜெயகாந்தன் தரப்பிலிருந்து வந்த ரியாக்ஷன் அதிரச் செய்ததாக ஒரு தகவல்!

    கருணாநிதிக்கு உயர் பாதுகாப்பு வளையம் இருக்கிறது. எனவே, அவர் எங்கு போவதாக இருந்தாலும்... அதற்குமுன் பாதுகாப்பு அதிகாரிகள் போய் அந்த இடத்தைப் பார்வையிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி, ஜெயகாந்தன் வீட்டுக்குக் போக நினைத்தார்கள். அதற்குமுன், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் போன் போட்டாராம். "நாங்க தி.மு.க. தலைவர் வீட்டுல இருந்து பேசுறோம். தலைவர் உங்களைப் பார்க்க திட்டமிட்டு இருக்காங்க. உங்க முகவரி சொல்ல முடியுமா?" என்று கேட்டதுதான் தாமதம். எதிர் பக்கத்திலிருந்து கனமான குரலில், "என் முகவரி தெரியாதா? முதலில் உங்கள் தலைவரின் முகவரி என்ன, அதைச் சொல்லுங்கள்? அவருக்கு முகவரி உண்டா?" என்று எதிர்க் கேள்வி வந்ததாம். என்ன பதில் பேசுவதென்று தெரியவில்லையாம் அந்த அதிகாரிக்கு. அப்படியே போனை வைத்து விட்டாராம்

    தகவல் கேள்விப்பட்டு தி.மு.க. வட்டாரத்திலும் இதேபோல்தான் அதிர்ச்சி காட்டுகிறார்கள். "படைப்பாளிகளுக்கு கர்வம் இருக்க வேண்டியதுதான். சில கொள்கைப் பிடிப்புகளும் இருக்க வேண்டியதுதான். ஆனால், அடுத்தவர் மனதைப் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை விடுவது நாகரிகமா?" என்று தங்களுக்குள் வேதனையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

    **********************************

    இந்த வார ஜூ.வி செய்தி இது. மஞ்சத்துண்டுக்கு இந்த வயசில் இது தேவையா..?? வித்தியாசங்களை கடக்க வேணும் என்று அவர் நினைத்தாலும், இந்த பீடங்களுக்கு புரியவில்லையே. அது சரி மஞ்சத்துண்டென்ன..காவியா..கலவையா..காஞ்சியா..?? அப்படி இருந்திருந்தால் ஒரு வேளை பீடங்கள் வீடு தேடி வந்திருக்கும் :-(

    ReplyDelete
  9. காஞ்சிக்கு முகவரி உண்டு. அது ஜெ.கேவுக்குத் தெரியும். அது போதும்.

    அவர் ஜெய ஜெய சங்கராவும் ஹர ஹர சங்கராவும் எழுதி இப்படி காஞ்சி மடத்திடமும் அணுக்கமாய் இருப்பது அவரது இயல்புக்கு மாறானதல்ல. அவர் திருடர்கள், தொழுநோயாளிகள், வேசிகள், பிச்சைக்காரர்கள் இப்படி விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். போலிச்சாமியார்களும் அப்படி ஒரு விளிம்பு நிலை மனிதர்கள் தானே! என்ன விளிம்பு நிலை மனிதர்களிடமும் எப்படி வாழ்க்கை மிளிர்கிறது என்று அப்போது எழுதுவார். இப்போது போலிசாமியார்கள் என்ற விளிம்பு நிலை மனிதர்களிடம் நான் எப்படி மிளிர்கிறேன் என்று எழுதுகிறார்!

    ReplyDelete
  10. Sundar,

    //அடேங்கப்பா...என்ன பயம்...?? திராவிடத்தலைவர்கள் எல்லாம் ஜெயலலிதாவைப் போல அராஜக ஆசிட் அரசியல் நடத்தினால் ஜெயகாந்தன்களின் வீரமுழக்கம் இப்படித்தான் இருக்குமோ..?? அவர்களையும் தொடாதோ..??//

    இந்த ஒரு கருத்தைத் தவிர (ஏனெனில்,தமிழகத்தில் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்!) மற்ற red and white விமரிசனங்களை ரசித்தேன்! நல்ல பதிவு.


    //சுடல மாடன் அண்ணாச்சி சும்மா வந்து கருத்து சொன்னோம்னு இல்லாம தேவையில்லாம "கழிசடை பேர்வழி ஜெயெந்திரர்"னு நூல் விடறார். அவரோட சொந்த கருத்து அதுவ இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரைக்கு பப்ளிக் ப்ளாக்கில சொல்லும்போது இன்னும் கொஞ்சம் sensitive-a சொன்னா நல்லாயிருக்கும்கறது என் தாழ்மையான கருத்து. //

    ஹலோ, அண்ணாச்சி இதை விட மோசமால்லாம் பேசுவாருங்க! நீங்க வேற!

    இப்படி யாராவது சுட்டிக் காட்டப்போனா அவரை ஜயேந்திரர் ஆதரவாளர்-னு லாடம் கட்டிடுவாங்க! இப்பல்லாம் இதாங்க Trend :-( அதனால, underline பண்ணிச் சொல்றேன், எனக்கு மடமும் ஆகாது, ஜயேந்திரரும் ஆகாது!!! எழுதும்போது கொஞ்சம் நாகரீகம் கடைபிடிச்சா நல்லா இருக்கும்!!!

    அதை விடுங்க! The most unfortunate thing about these types of dicussions is that they invariably end up in people wanting to show off their intellect OR score some brownie points through sarcasm.

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  11. //தஞ்சாவூர் குமார்:- சுடல மாடன் அண்ணாச்சி சும்மா வந்து கருத்து சொன்னோம்னு இல்லாம தேவையில்லாம "கழிசடை பேர்வழி ஜெயெந்திரர்"னு நூல் விடறார். அவரோட சொந்த கருத்து அதுவ இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரைக்கு பப்ளிக் ப்ளாக்கில சொல்லும்போது இன்னும் கொஞ்சம் sensitive-a சொன்னா நல்லாயிருக்கும்கறது என் தாழ்மையான கருத்து. //


    உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இருப்பினும் ஒரு சின்ன விளக்கம் ..

    ஜெயேந்திரரை அரசியல் அடிப்படையில் கடுமையான விமர்சித்த காலங்களில் கூட அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள நம்பிக்கையில் இம்மாதிரி வசைகளைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் எழுத்தாளர் அனுராதா ரமணனின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்த பொழுது எனக்கே சற்று அதிர்ச்சியாக இருந்தது. இப்படியெல்லாம் நடந்து கொள்பவரா என்று. ஆனால் இப்பொழுது இரவி சுப்பிரமணியம் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலத்தைப் பார்க்கும் பொழுது குமட்டிக் கொண்டு வருகிறது. அது உண்மையோ பொய்யோ அதைப் பற்றி நான் இப்படி வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் அண்ணாவின் இரங்கல் கூட்டத்தில் போய் அண்ணாவை முட்டாள், அதி முட்டாள் என்றெல்லாம் தூற்றிய ஜெயகாந்தன் இப்படி ஒரு சாமியாரை பாதுகாக்கிறார் என்ற ஏன் கேள்வியின் அழுத்தத்திற்காகத் தான் அவ்வாறு எழுதினேன்.

    அப்படி எழுத வேண்டிய தேவையில்லாத வேறு சந்தர்ப்பங்களில் எழுத மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  12. //என்றென்றும் குசும்புடன் பாலா சொல்கிறார்:-
    ஹலோ, அண்ணாச்சி இதை விட மோசமால்லாம் பேசுவாருங்க! நீங்க வேற!
    //
    பாலா, கொஞ்சம் உதாரணங்கள் கொடுக்க முடியுமா, எல்லோரும் தெரிந்து கொள்ளட்டுமே!

    ஜெயேந்திரர் பண்ணியதாகச் சொல்லப்படும் இழிசெயல்களுக்கு கழிசடை என்பது மிகக் குறைந்த வசை. ஆனால் திருமா வளவனை எல். எல். தாஸூ சாதியடிப்படையில் இழிவாகப் பேசியதற்கு ரோசா வசந்த் தாஸைத் திட்டிய பொழுது தாஸூக்காக மீண்டும் மீண்டும் வந்து நீங்கள் வக்காலத்து வாங்கியவர்தானே! அப்பொழுது என்ன ஆயிற்று உங்கள் சென்சிடிவிட்ய் நீங்கள் அதற்கு முன்பு என்ன எழுதினீர்கள் என்று தெரியாத படியால் ரோசா வசந்த் உங்களை ஒரு முறை சுட்டிக் காட்டியதோடு விட்டிருக்கலாம் என நினைத்தேன். இப்பொழுது தான் புரிகிறது நீங்கள் பண்ணும் குசும்புகள் என்னவென்று.

    //
    அதை விடுங்க! The most unfortunate thing about these types of dicussions is that they invariably end up in people wanting to show off their intellect OR score some brownie points through sarcasm.
    //

    உங்களை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்களா? மகிழ்ச்சி :-)

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  13. Sankarapandi,

    //பாலா, கொஞ்சம் உதாரணங்கள் கொடுக்க முடியுமா//
    I have read on a couple of occasions. I need to search in the comments you made in diferent blogs. I will get back.

    //தாஸூக்காக மீண்டும் மீண்டும் வந்து நீங்கள் வக்காலத்து வாங்கியவர்தானே!//
    I did it only once! Pl. do not spread canards. Also, I gave an explanation in my blog. Pl. read

    http://balaji_ammu.blogspot.com/2005/03/blog-post_19.html

    One more thing! Pl. come out of the PAST and let the LL Das episode be a BYGONE!!!

    //அது உண்மையோ பொய்யோ அதைப் பற்றி நான் இப்படி வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லைதான். //
    But, anyway, thanks for accepting that the usage was unwarranted.

    என்றென்றும் அன்புடன் (குசும்புடன் அல்ல!)
    பாலா

    ReplyDelete
  14. ஐயா சங்கரபாண்டி,

    //உங்களை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்களா? மகிழ்ச்சி :-)//

    இதற்கு பெயர் குசும்பு இல்லாமல் வேறென்னவாம் ?

    நன்றி - எ.அ.பாலா

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...