Thursday, April 28, 2005

(க)சளைப்பா..??

இன்று காலை எனக்கு ஒரு மின்மடல் வந்தது.

தாய்மையுற்றிருக்கும் என் நண்பனின் மனைவி பேறுகால சோம்பலைப் போக்கவும், தினப்படி வாழ்க்கையில் கொஞ்சம் ஸ்பைஸ் சேர்த்துதுக்கொள்ளவும், சுஜாதாவின் கதைப் பட்டியல் - உங்கள் சிபாரிசுப் பட்டியல் - எனக்கு அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். கண்டிஷன் - எல்லாக் கதைகளில்ம் கணேஷ்/வஸந்த கட்டாயம் இருக்க வேண்டும்.இணையத்தில் தேடியபோது ஸாருக்கு ஒரு விக்கி பீடியா இருப்பது தெரிய வந்தது. அங்கு பிடித்து நம்ம தேசிகனின் சுஜாதா பக்கம் போனபோது சப்ஜாடாக அத்தனை கதைகளின் பட்டியல் கிடைத்தது. அத்தனையிலும் தேடி அனுப்பிய லிஸ்ட் கீழே. பதிலில் " இந்த அத்தனை கதைகளிலும் கணேஷ்/வசந்த வருகிறார்களா என்பது நினைவில் இல்லை. ஆனால், வராவிட்டாலும் பாதகமில்லை - மற்ற கதைகளும் சுவாரசியமானவைதான் என்ற குறிப்போடு அனுப்பி வைத்தேன்.

நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
ப்ரியா
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
கொலையுதிர் காலம்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
கரையெல்லாம் செண்பகப்பூ
அனிதா இளம் மனைவி
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வசந்த் வசந்த்
வைரம்
ஜன்னல் மலர்
பிரிவோம் சந்திப்போம் 1
பிரிவோம் சந்திப்போம் 2
மேறெகே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு

யோசித்துப் பார்த்தால் - நான் உள்பட பெருவாரியான வாசகர்கள் கணேஷ்/வசந்தைப் பிடித்துதான் உள்ளே போனோம். கொஞ்ச நாள் கழித்து இந்த இலக்கியக் கடத்தல்காரர் என்னை வேறு பிரதேசங்களுக்கு கடத்திவிட, அவருடைய க்ரைம் கதைகளை விட சமூகக்கதைகளே அதிகம் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு அதுவும் குறைந்து அவரின் விஞ்ஞான சிந்தனைகள் மற்றும் கட்டுரைகள் பால் அதிகம் ஈர்க்கபட்டேன். யவனிகா படித்த போது கோபம் கோபமாய் வந்தது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் மறுபடி எழுதியபோது துள்ளல் குறைந்திருந்தது. ச ரி...தாத்தா மெல்ல நமத்துப் போகிறார் என்று எண்ணிக் கொண்டே அவருடைய கதைப் பட்டியலை எதையோ இழந்து விட்ட ஏமாற்றத்துடன் துழாவிக் கொண்டு, இன்றைய விகடனில் கற்றதும் பெற்றதும் படித்துக்கொண்டே மானிட்டர் ஸ்க்ரீனைப் பார்த்து அரைப் பைத்தியம் போல சிரித்துக் கொண்டிருந்தேன்.

இவருக்கா களைப்பு..?? ம்ஹூம்.

15 comments:

 1. ஒருகாலத்தில் ஸ்ரீதேவியைத் திருமணம் செய்ய ஆசை இருந்தது என்றிருப்பார் சுஜாதா (அந்த சைக்கிள் கைப்பிடி மீசை வைத்திருந்த இளங்காலங்களில்) ;-)

  பெரும்பாலும் சுஜாதா ஒரு springboard மாதிரிதான். இளவயதிலேயே பூசாரிகளால் இலக்கிய வேப்பிலை அடிக்கப்படாமல் ஆர்வத்தில் தானாக முட்டி மோதிப் படித்து வருபவர்கள் அனைவரும் சுஜாதாவைப் படிக்காமலிருக்க வாய்ப்பே இல்லை. "இருள் வரும் நேரம்" போன்ற புத்தகங்களிலெல்லாம் இருப்பது ஏமாற்றும் எளிமையா, அல்லது 'இது போதும் உனக்கு' என்ற அலட்சியமா என்று இன்றுவரை புரிந்துகொள்ளமுடியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த சுஜாதா கதைகளில் (நகரம், நில்லுங்கள் ராஜாவே, இன்னும் பல) அதுவும் ஒன்று. இதே வேறு ஊராயிருந்தால், கணேஷ்-வசந்த்தை ஃப்ராஞ்ச்சைஸ் செய்து, ஸ்டிக்கர்கள், brand cinema, கார்ட்டூன் தொடர்கள்/புத்தகங்கள், விடியோகேம்கள், டிஃபன்பாக்ஸுகள், முதுகில் மாட்டும் பைகளில் பொம்மைப் படங்கள் என்று ரணகளம் செய்திருப்பார்கள். வெங்கட் தனது முந்தைய பதிவுகளிலொன்றில், ஜப்பானில் முத்து படம் franchise செய்யப்பட்டபோது, எப்படி லாபம்பார்த்தவர்களனைவரும் ஜப்பானியர்கள், நம் ஆட்கள் எப்படிப் புறங்கையை நக்கிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்களென்று குறிப்பிட்டிருப்பார். அதே போல்தான் இதுவும். வெளிநாடுகளின் சாதாரண வெகுஜனக் கலாச்சாரம் hype செய்யப்பட்டு, அது ஒரு elite culture என்ற ரீதியில் நமது கலாச்சாரம் பார்த்துக்கொண்டிருக்க, நமது கலாச்சாரத்திலிருந்தும் அதுபோன்ற ஆளுமைகளை உருவாக்கமுடியுமென்ற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கிறதென்று தெரியவில்லை. ப்ராட் பிட்டைப் பார்க்க போலீஸ் லத்திகளையும் தாண்டிப் பெண்கள் துள்ளிக் குதித்துக்கொண்டும் தடுப்புவேலியை உடைத்துக்கொண்டும் பாய்ந்துகொண்டிருப்பதை ஒரு நாகரீகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பெரும்பாலானோர், சிலுக்கு கடித்து ஏலம்போன ஆப்பிளை அதே கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள் எனமுடியாது. E! தொலைக்காட்சி சேனலுக்கு உள்ளதுபோன்ற ஒரு பார்வையாளர் கூட்டம் நம் ஊரில் இல்லையா என்ன? இருக்கிறது தான். யார் செய்வது அதெல்லாம். கணேஷ்-வசந்த்தை அத்தனை பேர் படிக்கிறார்கள் எனும்போது ப்ரியா (அந்தக் கொடுமை வேறு), காயத்ரி (கணேஷாக தொந்தி வைத்த ஜெய்சங்கரைப் போட்டு மகா இம்சை செய்திருப்பார்கள்) தவிர வேறு திரைப்படங்களோ, ஏன் தொலைக்காட்சித் தொடர்களோ கூட இல்லாததற்கு என்ன காரணம் என்றுதான் புரியவில்லை!! இதை, yuck, popular culture crap என்பவர்கள் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தால் விளங்கவரும்: தத்துவங்களையும் சிந்தனைகளையும் idealism என்பதை மட்டும் கொண்டு "உடல் வளராமல் பூதாகரமாக வளர்ந்த தலை" போன்ற கலாச்சாரங்கள் இருக்க, இருப்பின் நிலைத்திருக்க தற்காலத்தில் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. "நீ பல ஊரு தண்ணி குடிச்சவன் ஜேம்ஸ்பாண்ட்" (அட, நிசமாத்தாங்க, If tomorrow comesஐ தமிழில்தான் பார்த்தேன்) என்று வசனம் கேட்கமுடியுமளவு நமது துப்பறிவாளர்களும் கணேஷ்-வசந்த்தும், நரேந்திரன்-வைஜயந்தி-ராமதாஸ்-ஜான்சுந்தர்-அனிதாவும், விவேக்-கோகுல்நாத்தும் ஏன் எடுபடாமல் போனார்கள் என்றுதான் தெரியவில்லை!! காரணங்கள் சொல்லலாம் எனினும், குறைந்தபட்ச சாத்தியங்களை வைத்துப் பார்க்கும்போதுகூட இது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.

  மத்தபடி, தாத்தா நமத்துப் போனார் என்று தோன்றவில்லை - கதை மட்டுமே அவர் எழுதவில்லை இல்லையா? இன்னும் போகவேண்டிய ஸ்டேஷன்கள் நிறைய இருக்கிறது என்று அவரை நாம் தாண்டி வந்துவிட்டோமா என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டும். "சாம்யுவெல் பெக்கட்டா ஸாம்பு வெல் பக்கெட்டா" என்று Samuel Beckettஐக் குறித்து அவரது ஒரு புத்தகத்தில் படித்த நினைவில்தான் ஒரு சமயத்தில் Watt படிக்கத் தூண்டியது. நடிகை லட்சுமியும் சுஜாதாவும் நிகழ்த்திய ஒரு உரையாடலில் கொதார் (Jean Luc Godard) பற்றியும் பேசியிருப்பார்கள் (அது இலக்கியத்தரத்தில் இல்லை எனும் பஜனை கோவிந்தசாமிகளால் அனைவரையும் சென்றடையமுடியாது எனும்போது, சுஜாதா போன்றவொரு பிரக்ருதி அவசியம் அல்லவா?). 'படிகள்' பத்திரிகை எடுத்ததுதான் எனக்குத் தெரிந்த உருப்படியான சுஜாதாவின் பேட்டி. 'இலக்கிய'ப்பத்திரிகைகள், குறைந்தபட்சம் ஒரு unavoidable cultural specimen என்ற ரீதியிலாவது சுஜாதாவைப் பேட்டியேதும் எடுத்ததாக நினைவில்லை. வெகுஜனப் பத்திரிகைகள்? ஹிஹி? நாலு பக்கம், பத்து பாய்ண்ட் எழுத்து, நாலு துணுக்கு, நகைக்கடை விளம்பரம் இத்தனைக்கும் நடுவில் என்னத்த, பேட்டியாவது இழவாவது!! இப்போது சற்று நிலைமை பரவாயில்லை. தீராநதி மாதிரியாவது ஒரு 'ஒதுக்கப்பட்ட' பத்திகளாவது இருக்கிறது.

  தாத்தா போலப் பலர் ஆங்கிலக் கலாச்சாரங்களில் இருக்கின்றனர். தமிழில் அவரும் இல்லாமல் போயிருந்தால், தாத்தா இப்போது இருக்கும் இடத்தில் பெரிய பொந்து தான் இருந்திருக்கும் என்ற ரீதியில், சுஜாதாவுக்கு ஒரு ஜே!!

  ReplyDelete
 2. 1.நைலான் கயிறு : கணேஷ் தோன்றும் முதல் கதை. பெருசுகள் பலரால் பாராட்டப் பட்டது.
  2.ஒரு நடுப்பகல் மரணம் : நடுவில் கொஞ்சம் தொய்ந்து போகும் whodunnit. கணேஷ¤ம் வசந்தும் இல்லை. கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் கடைசி அத்தியாயம் செமை விறுவிறுப்பு
  3.ப்ரியா: வசந்த் தோன்றும் முதல் கதை. படமாக எடுத்துத் கொலை செய்தார்கள்.
  4. காயத்ரி : கணேஷ¤ம் உண்டு, வசந்தும் உண்டு. சுஜாதாவும் கதையில் வருவார். போரடிக்காமல் செல்லும். காயத்ரியை, திரையில் பார்த்து வெறுத்தே போய்விட்டேன். ப்ளூ·பில்ம் எடுக்கும் புருஷனிடம் மாட்டிக் கொண்ட காயத்ரியை, அவளது டைரி மூலமாக கண்டுபிடித்துக் காப்பாற்றும் கதை. டைரியின் முதல் பக்கத்திலே " bought on the day i lost my virginity" என்று எழுதி இருக்கும்.
  5. கணேஷ் x வசந்த் : இதிலே கணேஷ¤ம் வசந்தும் எதிர்கட்சிக்காரர்கள். சுஜாதா பீக்கில் இருந்த சமயத்தில், குமுதத்தில் தொடராக வந்தது.
  6.கொலையுதிர்காலம் : ஹோலோகிராம், ராமபத்ரவியாசன், பழைய நீலி., பேய், ஐஐடி, ஷாம்பேன் கோப்பை போன்ற ....வேண்டாம் விடுங்க...
  7. அப்சரா : சென்ஸஸ் காகிதத்தில் இருந்து, ரேண்டமாக, 'அ' வுக்கு, 'ப்'க்கு, 'ச'வுக்கு, 'ரா'வுக்கு என்று ஒவ்வொருதராகத் தேடிப் பிடித்துக் கொலை. இதிலே கணேஷ் வசந்த் இருக்கிறார்களா என்று ... யோசித்து...பார்த்துச் சொல்கிறேன்.
  8.மறுபடியும் கணேஷ் : படிச்சிருக்கேன். நினைவுக்கு வரலை. ஷைலஜா வருவாரே அதுவா?
  9.விபரீதக் கோட்பாடு : சாமிநாதன், ஹேலஜ்ர பூசை, கணேஷ், வசந்த். லெட்டர் ஹெட்டில் இருந்து அட்ரசை கண்டு பிடிக்கிற டெக்னிக் சூப்பார்.
  10.கரையெல்லாம் செண்பகப்பூ : இது எல்லாருக்கும் தெரியும், இளையராஜா புண்ணியத்தில்

  ReplyDelete
 3. 11.அனிதா இளம் மனைவி : ரொம்ப பழைய கணேஷ் கதை. வசந்த் கிடையாது. " இது எப்படி இருக்கு? " என்று படமாகக் கூட வந்தது. " ஜெய்சங்கர் தான் கணேஷ். கொடுமைடா சாமி,
  12. காந்தளுர் வசந்த குமாரன் கதை : கணேச பட்டரும், காந்தளுர் வசந்த குமாரனும் , கலாய்க்கும் கதை. அடுத்த பகுதி வரும் என்ற அறிவிப்போடு முடிந்த தொடர்கதை. இன்னும் எழுதுகிறார் :-)
  13.எப்போதும் பெண் : ராஜி, பொய்யே பேசும் புருஷன்... ·பேமிலி டிராமா? கணேசும் வசந்தும் இல்லை
  14.என் இனிய இயந்திரா? : ஹ¥ம்ம்ம்ம்...அந்த ஆனந்த விகடன் நாட்களும் வந்திடாதோ?
  15.பாதிராஜ்யம் : படிச்சிருக்கேன். சட்டுன்னு நினைவுக்கு வரமாட்டேங்குது
  16.24 ரூபாய் தீவு : பத்திரிகை உலகை பின்புலமாக வைத்து வந்த கதை. கன்னடத்தில் திரைப்படமாக வந்தது. மலையாளத்தில் தழுவினார்கள். சுஜாதாவின் பெஸ்ட் கதைகளில் ஒன்று.
  17.வாய்மையே சில சமயம் வெல்லும்: ஸ்கூல் பெண், பணக்காரனின் தறுதலைப் பிள்ளை, ரேப், முப்பத்து ஐந்து வயசு ஹீரோ, குடும்பக் கஷ்டம், கண்ணீர் என்று போகும். விகடனில் வந்தது. தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது.
  18.கனவுத் தொழிற்சாலை : அருண்குமார் தான் ஹீரோ என்று நினப்பார்கள்,. நிஜ ஹீரோ பாஸ்கர்தான். ஐசக் அருமைராசனும், பசுமார்த்தி சத்யநாராயணாவும், டக்கென்று நினைவுக்கு வருவார்கள்.
  19. வசந்தகாலக் குற்றங்கள் : நாலு கேஸ்களின் ·பாலோ அப். அப்போது பெங்களூரின் துணைக் கமிஷனராக இருந்த டி.ஆர் கார்த்திகேயனின் டைரியைப், படிப்பது போல இருக்கும். நேர்த்தியாக திரைக்கதை அமைக்க ஏற்ற கதை.
  20.ரத்தம் ஒரே நிறம் : சிப்பாய் கலகம் நடந்த சமயத்தை பின்புலமாக வைத்து, அங்கே சில கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு , சுவாரசியமாக எழுதப்பட்ட கதை. அத்தனை பெரிய புத்தகத்தை, ஒரே, மூச்சில் படிக்க முடியும் என்று எனகு அன்று தான் தெரிந்தது. முத்துக் குமரனையும், பைராகியையும், மக்கின்ஸி துரையையும் மறக்க முடியுமா?

  ReplyDelete
 4. 21.மேகத்தைத் துரத்தினவன் : பேங்க் கொள்ளைக் கதை. கதையில் வசந்த் மட்டும் உண்டு
  22.நிர்வாண நகரம் : நகரத்தை பழி வாங்கப் புறப்பட்ட ஒருவன் செய்யும் புத்திசாலித்தனமான சிலுமிசத்தை, கணேசும் வசந்தும் கடைசி அத்தியாயத்தில் கண்டு பிடிக்கும் கதை
  23.வசந்த், வசந்த் : ராஜராஜன் கிணறு, கள்ள நோட்டு என்று கொஞ்சம் ஜல்லி அடிப்பார் சுஜாதா
  24.வைரம் : ஞாபகம் வரவில்லை
  25.ஜன்னல் மலர் : அற்புதமான கதை. விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை. பெண்ணுக்கு யார் காவல் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. சின்ன வயசில் படித்த போது, கடைசி அத்தியாயத்தில், கண் கலங்கின ஞாபகம் இருக்கிறது.
  26.பிரிவோம் சந்திப்போம் I & II : பாப்புலர் நாவல். ஆனால் எனக்குப் பிடிக்காது.
  27.மேற்கே ஒரு குற்றம் : தொண்டையிலேயே நிக்கிது. வரமாட்டேங்குது
  28.உன்னைக் கண்ட நேரமெல்லாம் : ப்ரியாவின் இரண்டாம் பாகம் தானே இது? எகாலஜி, ரீசைக்ளிங் எல்லாம் வரும். வழக்கம் போல, whodunnit.
  29.நில்லுங்கள் ராஜாவே : " மாடுமனை போனாலென்ன, மக்கள் சுற்றம் போனால் என்ன..." புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட உடான்ஸ் கதை.
  30.எதையும் ஒருமுறை : try anything once. இதுதான் அவனுடைய பாலிசி. அந்த அடிப்படையில், ரோட்டோரத்தில் வசிக்கும் பாலியல் தொழிலாளியை, உபயோகப் படுத்திக் கொண்டு, கொலையும் செய்வான். கணேஷ¤ வசந்தும் தோற்றுப் போகும் கதை. சுகாசினியின் உபயத்தில், தொலைக்காட்சித் தொடராக, கேவலமாக உருவாக்கப்பட்டது.
  31.செப்டம்பர் பலி : " வணக்கம் முதலாளி..."
  32.ஹாஸ்டல் தினங்கள் : வாத்தியாரின் எம்.ஐடி. அனுபவங்கள் சேர்ந்த செமி ஆட்டோபயாக்ரபி
  33.ஒருத்தி நினைக்கயிலே : நினைவுக்கு வரலை
  34.ஏறக்குறைய சொர்க்கம் : சினிமாவின் க்ரீன் ரூமை, படம் பிடித்துக் காட்டியது. சுஜாதாவின் கதைகளில், அழகான 35.மனைவிகள் சோரம் போவார்கள். இதுவும் விதிவிலக்கல்ல
  36.என்றாவது ஒருநாள் : படிச்சிருக்கேன் சட்டுன்னு நினைவுக்கு வரலை.
  37.நில்கவனி தாக்கு : உளவுத்துறை சாகசம். புத்திசாலித்தனமான கதை. எழுத்தில் நிறைய சிலுமிசங்கள் இருக்கும்.

  ReplyDelete
 5. அண்ணாச்சி, பதிவை விட கமெண்டு சூப்பர். என்னை விட பெரிய சுஜாதா பைத்தியமா இருப்பிங்க போல..:-)

  //தாத்தா போலப் பலர் ஆங்கிலக் கலாச்சாரங்களில் இருக்கின்றனர். தமிழில் அவரும் இல்லாமல் போயிருந்தால், தாத்தா இப்போது இருக்கும் இடத்தில் பெரிய பொந்து தான் இருந்திருக்கும் //

  சத்தியமான வார்த்தைகள். விவாதங்கள் விமர்சனம்க்களிலோ, படிப்பது எப்படி புத்த்கத்திலோ நானும் அவருடைய படிகள் பேட்டியைப் படித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வெகுசன ஊடகத்தில் அவருடைய "தெரிந்த" பக்கம் கொஞ்சமே கொஞ்சம். வேறு எங்காவது பிறந்திருந்தால், அவரை இதற்கு மேல் பல மடங்கு கொண்டாடி இருக்கிறார்கள். நம்ம ஊரில் பதினாறு வயசுப் பசங்களுக்கு ஏத்த மதிரி பய்ஸ் வசனம் எழுதினால், உதைக்க வருகிறார்கள். சந்தேகமில்லாமல் அவர் ஒரு சூப்பர் தாத்தாதான். :-}

  ReplyDelete
 6. த பார்றா..பிரகாஷூ...

  அடங்க மாட்டீங்களா சாமி...:-)

  மாடுமனை போனாலென்ன
  மக்கள் சுற்றம் போனாலென்ன
  கோடிச் செம்பொன் போனாலென்ன..??
  உந்தன் குறுநகை போதுமடி...

  நன்றாக ஞாபகம் இருக்கிறது.

  எப்போதும் பெண் - மங்கையர் மலரில் வந்தது. கதாநாயகி சின்னு. ஒரு பெண் பிறந்ததைல் இருந்தௌ இறப்பு வரை, "எல்லாமே" சொல்லி இருப்பார். பெண்களையே வெட்கப்பட வைத்த கதை.

  பேசி ஆகிற காரியமா இதெல்லாம்..

  ReplyDelete
 7. //எப்போதும் பெண் - மங்கையர் மலரில் வந்தது. கதாநாயகி சின்னு. ஒரு பெண் பிறந்ததைல் இருந்தௌ இறப்பு வரை, "எல்லாமே" சொல்லி இருப்பார்//

  ஆமாம்... தப்பு உட்டேன். சாவியில் தொடராக வந்த ஒரு கதையுடன் ( துரோகம்/பொய் ன்னு ஏதோ தலைப்பு வரும்) குழப்பிக் கொண்டேன்.

  ReplyDelete
 8. இதைத் தவிர 'விதி' என்ற ஒரு குறுநாவல் நீளத்திலுள்ள கதையிலும் கணேஷ்,வசந்த் வந்திருப்பார்கள். கதை வழக்கம் போல அழகான மனைவியின் துரோகம், கணவன் செய்யும் கொலை என ஆரம்பித்து, ஒரு உட்டாலக்கடி தியரியுடன் கணேஷ் குற்றவாளியைக் கண்டுப்பிடிப்பார்.

  சுந்தர், உங்கள் பட்டியலில், 'ஆ' விட்டு விட்டீர்களே?

  ReplyDelete
 9. மெக்ஸிகோவையும், உலகத்திலேயே மென்மையான இடத்தையும் அறிமுகம் செய்தது சுஜாதா தான்.
  கணையாழியின் கடைசிப்பக்கங்களை , கல்லூரியில் "Integrated Circuits" பாடவேளையில் மறைத்து வைத்து படிக்க ,
  பக்கத்திலிருந்து ராம்மோகன் சிரித்து வைத்தது ஆட்டோகிராப் பாடலாய்....

  ReplyDelete
 10. //இளவயதிலேயே பூசாரிகளால் இலக்கிய வேப்பிலை அடிக்கப்படாமல்
  ஆர்வத்தில் தானாக முட்டி மோதிப் படித்து வருபவர்கள்
  அனைவரும் சுஜாதாவைப் படிக்காமலிருக்க வாய்ப்பே இல்லை. //

  சத்தியமான நிஜம்!!!!

  என் பொண்ணு பேரு 'மதுமிதா' வயசு இருவத்தொன்னரை!

  புரிஞ்சிருக்குமே!!!

  ReplyDelete
 11. "மேற்கே ஒரு குற்றம்" ஜெர்மனியில் கதை. காலினில் சிலம்பு கொஞ்ச" என்றப் பாடலுக்கு அபிநயம் பிடித்த போது கணேஷுக்கு க்ளெஊ கிடைக்கும்.
  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 12. Mookkan Thanks for the post..

  Icarus - thanks for your synopsis!

  manasukkulle ella kathaiyum orumurai marupadiyum ooduthu.

  Vairam - Settukku kidaikkuk vairangal ulla nilam- athanal saagum oru siruvan - touching story (no ganesh vasanth)

  ReplyDelete
 13. //24.வைரம் : ஞாபகம் வரவில்லை//


  ஒரு சின்ன பொண்ணு கல் ஒன்ன எடுத்து விளையாடும். அது அம்மா கைக்குப் போய் பின் ஒரு லாரி டிரைவர் கை மாறி பின் பல கை மாறி கடேசியா ஒரு பெரிய மனுசன் அது வைரம்ன்னு கண்டு பிடிப்பான். பிறகு அந்த குழந்தை வீட்டுக்கு பக்கத்தில் வைரச்சுரங்க வாய் இருக்குன்னு எல்லா ரும் தேட அந்த ஏழைக்குழந்தை குடும்பம் பல தொல்லைகளுக்கு ஆளாகி வேறு இடத்துக்கு துரத்தப் படுவார்கள். அங்கே அந்த குழந்தை பழையபடி சில கற்களைப் பார்க்கும். ஆனால் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வர உடனே அதை வீசிவிடும். ஆனால் அந்த இடம் தான் எல்லாரும் தேடும் சுரங்க வாய் என்று முடித்திருப்பார்.

  13-14 வருடங்களுக்கு முன் படித்தது. Hம்ம்ம் இன்னும் நினைவில் இருக்கிறது...

  ReplyDelete
 14. அன்புள்ள மூக்கன்,

  இந்த பதிவை இப்போது தான் படித்தேன். எனக்கு ஒரே ஒரு கவலைதான். அந்த பட்டியலில் "எப்போதும் பெண்" என்ற நாவலும் இருக்கிறது. இந்த நாவல் தாய்மையுற்றிருக்கும் உங்கள் நண்பனின் மனைவிக்கு அவ்வளவு உகந்தது இல்லை என்பது என் கருத்து. முடிந்தால் அதை படிக்காமல் இருக்க சிபாரிசு செய்யுங்கள்.
  இரண்டு மாதம் முன்பு எனக்கு ஒரு பெண்மணி போன் செய்திருந்தார். போனை எடுத்தவுடன் 'ஓ' என்று அழுதாள். அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து திரும்பவும் போன் செய்து 'ஓ' என்று அழுதாள். கிட்டத்தட்ட 6 முறை போன் செய்து என்னுடன் பேச முயற்சி செய்தாள். கடைசியாக அழுதுக்கொண்டே அவள் கூறியது "நான் எப்போது பெண் படித்துக்கொண்டிருக்கிறேன்" , என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை, "நீங்கள் சுஜாதாவை அடுத்த முறை சந்திக்கும் போது... " என்று சில கேள்விகளை கேட்டாள். நான் அவளுக்கு சொன்ன ஒரே அறிவுரை, அந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்காதீர்கள்".

  --
  /ராஜி, பொய்யே பேசும் புருஷன்... ·பேமிலி டிராமா? கணேசும் வசந்தும் இல்லை../ - ஒரே ஒரு துரோகம்.

  தேசிகன்

  ReplyDelete
 15. ///ராஜி, பொய்யே பேசும் புருஷன்... ·பேமிலி டிராமா? கணேசும் வசந்தும் இல்லை../ - ஒரே ஒரு துரோகம்.//

  thanks desikan

  ReplyDelete

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...