“ஆகாரத்திற்காக தடாகத்தில் உள்ள அழுக்கைச் சாப்பிட்டு சுத்தப்படுத்துகிறதே மீன்.
அதுபோலத்தான் நான். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்து இருக்கிறது”
இது கலைஞரின் வசனம் அல்ல. அவர் வாழ்க்கையின் சுருக்கம் என்றே நினைக்கிறேன்.தமிழ் பிடித்தவனுக்கு கலைஞர் கருணாநிதியைப் பிடிக்கும். மற்றதெல்லாம் பிறகுதான்.
எவனைக் கண்டால் எதிர்முகாமுக்கு எட்டிக்காயாய் இருக்கிறதோ, எவனைக் கண்டால் எதிரிக்கு பீதி பெருகுகிறதோ - அவனே உன் தலைவன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் பெரியாரை அல்ல, அண்ணாவை அல்ல - கருணாநிதியைக் கண்டால்தான் என் எதிர்முகாம் நண்பர்களுக்கு கிலி வருகிறது. அவர்களுக்கெல்லாம் கடந்த ஒரு வருடமாக கொண்டாட்டம். தன் கரகரத்த குரலில் கழகக் கண்மணிகளை மட்டும் அல்ல, தமிழகத்து மக்களை எல்லாம் கட்டிப் போட்டிருந்த அந்த காந்தக் குரல், கூர் வாளினையொத்த அந்த மூளை களைத்துக் கிடக்கிறது. தமிழக அரசியல் கலகலத்துக் கிடக்கிறது. பட்டத்து இளவரசன் பலவீனப்பட்டு நிற்கையில், சிஸ்டமும், மய்யமும், எடுபிடிகளும், கரன்(சி)களும், சே(வ)கர்களும், கூஜாக்களும் நாளொரு அறிக்கையும் பொழுதொரு பேச்சுக் கச்சேரியுமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் எதிர்ப்பாட்டு பாடி சிக்ஸர் அடிதத தலைவன், பேரக்குழந்தைகளுக்குபந்து போட்டுக் கொண்டிருக்கிறான் -கோபாலபுரத்தில். ”முதுமையில் அனைவருக்கும் வரும் நிலை” என்பதான நிதர்சனத்தையும் மறந்து விட்டு, “பாரு.. இந்தாளுக்கு இன்னும் சாவு வரலை. பண்ணின பாவம்” என்று கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
எப்போது என்று நினைவில்லை. அப்பா கலைஞர் கூட்டங்களுக்கு சிறுவயதில்கூட்டிப் போக ஆரம்பித்தார். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழார்வலர். அரசு ஊழியர்களுக்கு நல்லது செய்தவர் என்று அப்பாவுக்கு கலைஞரைப் பிடிக்க பல காரணங்கள். ”டோப்பா” தலையனால் தமிழ்நாடு கெடுகிறது என்பார் அடிக்கடி. அப்போதெல்லாம் மயிலாடுதுறையில் நகரப்பூங்கா அருகே அரசியல் பொதுக்கூட்டங்கள் நடக்கும். அரசியல் தாண்டி கலைஞர் பேச்சினைக் கேட்க வேண்டியே கூட்டம் வரும். ”உடன்பிறப்பே” என்று அந்தக் கரகரத்த குரலில் அவர் துவங்கும்போதே கூட்டம் ஆர்ப்பரிக்கும். அந்த வயதில் மொத்தக் கூட்டத்தையும் கட்டிப் போடும் அவர் ஆளுமை வியப்படைய வைக்கும். இத்தனைக்கும் அந்தக் காலங்களில் அவர் ஆட்சியில் இல்லை.
வயது வளர வளர அவர் மேடைப் பேச்சு தாண்டி அவர் யார், பின்புலம் என்ன? திமுக என்ற கட்சி மற்ற
கட்சிகளிலிருந்து வேறுபட்டு எப்படி உட்கட்சி ஜனநாயகத்தை பேணுகிறது. சினிமா பின்புலம் இருந்தாலும் கருணாநிதி எப்படி அதையும் தாண்டி எல்லாரிடமும் ஒரு மரியாதையை பெற்றிருக்கிறார் போன்ற விஷயங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. சிறுவயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததால் ஜூனியர் விகடனும் துக்ளக்கும் அரசியல் செய்திகளை கொடுத்துக் கொண்டே இருந்தன. இதன் மூலமே அதிமுகவில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடந்த குழப்பங்கள், கூத்துகள், ஜெயலலிதாவின் வளர்ச்சி போன்ற போக்குகள் உடன் தெரிநதன. கருணாநிதி ஜெயலலிதாவுடனும் அரசியல் செய்ய ஆரம்பித்தார். இப்போது ஜெயலலிதாவின் அரசியல் சரித்திரமும் முடிந்த நிலையில் கோபாலபுரத்தில் மறுபடியும் குழந்தை போல அமர்ந்து இருக்கிறார்.
கருணாநிதியின் சுயநலம் பற்றி, அவர் ஊழல் பற்றி, அவர் சந்தர்ப்பவாதம் பற்றி பேசுவோர் உண்டு. அப்படி பேசுபவரில் எப்படியாவது அவர் ஆளுமையை கறைப்படுத்தி விடலாம் என்று பேசுபவரை பற்றி கவலை கொள்ளாவிடினும், நடுநிலையோடுஅவரை விமரிசிப்பவர்களிடம் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். கக்கனைப் போலவும், நல்லகண்ணுவைப் போலவும்
இருந்திருந்தால் அவருக்கு நல்லவர் என்ற பேர் கிடைத்திருக்குமே ஒழிய, அரசியல் அதிகாரத்தோடு தமிழக மக்களுக்காக அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் செய்திருக்க முடியாது. தவிரவும்- அவர் வானத்திலிருந்து இறங்கி வந்து விடவில்லை. இந்த சமுகத்திடம் இருந்துதான் தலைமைப் பதவி நோக்கி போனார். அவரிடம் இருப்பதாக சொல்லப்படும் குறைபாடுகள்
யாவும் இந்த சமூகத்திடம் உண்டு. இந்தக் காலத்தில், இப்படிப் பட்ட மக்களுக்கு இவனே தலைவனாக இருக்க வாய்க்கும். தேனை எடுததவன் புறங்கையை நக்கியதை பற்றியே பேசாமல், அந்தத் தேனை எடுத்து யாருக்கு ஈந்தான். அவனால் வெகுமக்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணுகையில் புரிய வேண்டியது புரியும்.
கலைஞர் தனக்கு வரும் எதிர்ப்புகளையும் விமரிசனங்கலையும் பற்றி, அது தன் சாதிய பின்புலத்தினால் தன் மீது அதிகமாக ஏவப்படும் அடக்குமுறை என்று சொல்லும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் ஏற்படும். நான் பிறந்த மாயவரத்தில், என் பள்ளி நட்களில் அனைத்து சாதியினரும், மதத்தினரும் வித்தியாசமில்லாமல் நன்றாகத்தான் பழகுவார்கள். அக்ரஹாரங்களிலும் மகாதான/ பட்டமங்கல தெருக்களிலும் இருக்கும் நண்பர்கள் எந்த வேற்றுமையும் பாராட்டி பழகியதில்லை. இப்படி இருக்கையில் அவர் கூற்று எனக்கு ஆச்சரியமளித்தது உண்மை. ஆனால் அவர் விஷயத்தில் இது ஓரளவு உண்மைதான் என்று இப்போது தோன்றுகிறது.அவருடைய அரசியல் எதிரிகள் அவர் பிறந்த சாதியை பற்றி மட்டமாக பேசி அவரை தாழ்த்த நினைப்பதை கேட்கும் போது வரும்
கோபத்துக்கு அளவில்லை. அவரை எதிர்கொள்ள இதை விட்டால் அவர்களுக்கு வேறு விஷயமா இல்லை என்று அயர்ச்சியாகிறது. ஆனால் இதையும் தாண்டி தன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் சின்னக் குத்தூசி தியாகராஜன் போன்றவர்களையும், தன் யோகா குருவையும் வைத்திருந்தார். நட்புக்கும், கொள்கைக்கும் நடுவே கோடு போட்டுக் கொண்டு, எதற்கும் பங்கம் வராமல் வாழ்வதிலும் என் போன்றவர்களுக்கு அவரே முன்மாதிரி ( என்பது என் நண்பர்களுக்குத் தெரியும் :-) )
ஈழ விஷயத்தில் கலைஞர் மீதுள்ள குற்றச்சாட்டுகள், அவர் மீதிருந்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வீணான விரக்தியில் சொல்லப்படுபவை. தீவிரவாதத்தின் மீதான 9/11க்குப் பிறகான உலகநாடுகள் பார்வை, இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு வர முடிவதற்கான பாதைகள் மூடிய சூழல், 2009 ல் இலங்கை அரசின் போர்த்தந்திர வியூகங்கள் போன்ற காரணிகள் காரணமாக, கலைஞர் என்றில்லை, அப்போது வேறொரு முதல் அமைச்சர் இருந்தாலும், எதுவும் செய்திருக்க இயலாது. ஆனால் செய்ய முடியாத சூழலில் இருந்தவர் தமிழினத் தலைவர் என்று சொல்லப்படுவதால் ஏச்சும் பேச்சும் இன்றும் தொடர்கின்றன. ஒருபுறம் இயக்கங்களை முட்டுக் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டுக்காக இந்திய அரசால் நிந்திக்கப்படுவது, இன்னொருபுறம் தமிழினத்தலைவர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழினத்துக்காக ஏதும் செய்யாதவர் என்று பழிச்சொல் பெறுவது - என்று மத்தள வாழ்க்கை அவருக்கு வாய்த்திருக்கிறது.
வயதும் மனமும் முதிர்ந்து யோசிக்கும் இந்தக் காலங்களில், கலைஞரின் சிறப்பு - திராவிட சித்தாந்தங்களை தன் அரசியல் அதிகாரத்தின் மூலம் அரசு முறை கொள்கைகளாக்கி, சமூக நீதி என்பதை முன்னேறிய வகுப்பினர்கூட ( சற்றே முணுமுணுப்போடு ) ஒத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதுதான். இதன் நீட்சியே ஜெயலலிதாவின் 69% இட ஒதுக்கீடும், அதன் காரணமாக அவர் பெற்ற பெயரும். வெகுமக்கள் அரசியலை கையில் எடுக்காவிட்டால் தன் அறிவும், பலமும், எத்தனை தினமணிகளும், தினமலர்களும் முட்டுக் கொடுத்தாலும்
தவிடு பொடியாகும் எறு அவருக்குத் தெரியும். இன்றைக்கும் வட மாநிலங்களில் சமூகநீதி படும் பாட்டை பார்க்கையில், தமிழ் நாட்டு வெகுமக்கள் திராவிட கட்சிகளுக்கு எந்தளவு நன்றிக்கடன் பட்டு இருக்க வேண்டும் என்பது விளங்கும். விவரம் தெரியாத சில பேர் முக-வை வசைபாடும்போது
“ நீங்கள் குரலுயர்த்தி பேசும் இந்த அறிவும், சுதந்திரமும் அதன் பின்புலமாக நீங்கள் பெற்றிருக்கக்கூடிய கல்வியும், இந்த இயக்கம் தந்த பிச்சை. உங்கள் சோற்றுப் பருக்கைகள் ஒவ்வொன்றிலும் இவர்கள் பெயர்கள் எழுதி இருக்கிறது” என்று வாய் விட்டு கூவத் தோன்றுகிறது. ”வலிமையுள்ளது எஞ்சும் ” என்று சொல்லி கானக சித்தாந்தம் பேசாமல், மனிதத்தனமையோடு திராவிட இயக்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் புரிய வெகுநாட்கள் ஆகும்
ஆனால் ஒன்று - தமிழ்நாட்டில் இன்று, அன்றிருந்தது போல சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. ஓரளவு எல்லா வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது. எனவே வெகுமக்களிடம் 1960-1970 களில் இருந்த கோபம் இல்லை. சமூகத்தில் பெருவாரியாக எல்லா வகுப்பினரிடையேயும் ஒற்றுமை நிலவுகிறது - அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சாதி சண்டைகளை தவிர. இன்றிருக்கும் சூழ்நிலையில் திராவிடக் கட்சிகளின் தேவை இல்லை என்று தோன்றலாம். ஆனால் மக்கள் போராடி பெற்ற உரிமையையும் சுதந்திரத்தையும் பேணுவதற்காவவாது அந்தக் கட்சிகளின் இருப்பும், அவர்களின் அரசியல் அதிகாரத் தேவையும் இன்றும் உள்ளது. இந்தியா ஒரு ஃபெடரல் அமைப்பு என்பதையே மறந்து விட்டு மாநிலங்களையும் அதன் அடையாளங்களையும் ஒழித்து, மைய நீரோட்டம் என்ற பெயரில் நம் தனித் தன்மைகளை காணாது ஆக்க டெல்லி கட்சிகள் முயன்று, அதன் காரணமாக ஒவ்வொரு விதமாக தமிழகததை நசுக்கும் முயற்சிகளில் இறங்கும்போது, பிரதேசக் கட்சிகளின் ஒற்றுமையும் வீரியமும் இன்னும் ஓங்க வேண்டும்.
இந்தக் காலத்தின் தேவைக்கு இன்னும் ஒரு கலைஞர் வேண்டும்..
மு.க களைத்துக் கிடக்கையில் எங்கள் ஆவலாதியை தீர்க்கப் போகும் அந்த தலைவன் யார் என்று காத்துக் கிடக்கிறோம்.
முன்னர் எழுதியவை :
குப்பத்து ராஜா - http://mynose.blogspot.com/2016/05/blog-post_15.html
கவனம் - தி.மு.க - http://mynose.blogspot.com/2016/05/blog-post.html
கருவின் கவிதை - http://mynose.blogspot.com/2011/05/blog-post.html
வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவை வாசித்தது நிறைவு.
ReplyDeleteநன் பதிவு! கடந்த காலத்தை வாசித்த உள நிறைவு!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletevery nice post. amazing article. thanks for update.
ReplyDeletegarmin map updates
garmin express download
garmin gps update
Thanks for sharing this amazing blog.KEEP POSTING
ReplyDeleteweb design companies in vizag
best website designers in vizag