Thursday, September 22, 2005

கிழட்டு அனுபவங்கள்(3) - மலேசியா ராஜசேகரன்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொடங்கி 1940 வரை இந்தியர்கள் மலாயாவிற்ககு கூலி வேலைக்காகவும், தொழில் புரிவதற்காகவும் சரமாரியாக வந்துகொண்டு இருந்தனர். பிறகு இரண்டாம் உலகப் போர் வந்தது. இந்தியர்கள் இங்கு வருவதும் நின்றது.

ஆரம்பத்தில் இந நாட்டில் இந்தியர்களின் நிலை ஒரளவிற்கு கம்பீரமானதாகத் தான் இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் ரப்பர் எஸ்டேட்டுகளிலும், ரயில்வேதுறையிலும், சாலை நிர்மாணிப்புத்துறையிலும் கூலி
ஆட்களாக வேலை செய்து வந்தனர், சிறிது படித்ததவர்கள் அரசாங்க வேலைகளில் - ஆசிரியர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், டெக்னிஷியன்களாகவும் பணி புரிந்தனர். பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்கள் டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், இஞ்சினியர்களாகவும் செயல் பட்டு வந்தனர். வர்த்தகர்களாக வந்தவர்கள் வாணிபம், வர்த்தகம் என்று இருந்தனர். ஆக எல்லா நிலைகளிலும் இந்தியர்களுக்கு இந் நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறந்த பங்கு, என் காலத்திலேயே நான் பார்க்க இருந்தது.

பிறகு 1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி, இங்குள்ள இந்தியர், மலாய்க்காரர், சீனர் அனவரது தலைஎழுத்தும் என்றென்றும் நிரந்தரமாக மாறும் வகையில் ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வு நடந்தது. பெரும்பான்மை மலாய் இனத்தவருக்கும், அடுத்த பெரும்பான்மை கொண்ட சீன இனத்தவருக்கும் இடையில் ஒரு பயங்கர இனக் கலவரம் நடந்தது. கோலாலம்பூரிலும் பினாங்கிலும் சுமார் 3,000 பேர் (சீனர்களும், மலாய்க்காரர்களும்) வெட்டிக் கொல்ல பட்டனர். அரசாங்கம் பார்லிமண்டைக் கலைத்து எமர்ஜன்சியை ஆட்சிமுறையை அமல் படுத்தியது.

அதன் பிறகுதான் நான் முன்பு சொன்ன BUMIPUTRA பாலிசி அமுல் படுத்தப் பட்டது. அதாவது "மலாயா மண்ணுக்கு உரிமையாளர்களான மலாய் இனத்தவர்கள், அவர்கள் நாட்டிலேயே பொருளாதார பலத்தை மற்ற இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டு, ஒன்றும் இல்லாது பிச்சைக் காரர்கள் போல் இருக்கின்றனர். இந்த நிலை நீடிக்கும் வரை மலாயாவில் நிரந்தர அமைதியை எதிர் பார்க்க முடியாது" என்ற கூற்றை மலாய் இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அன்றைய அரசாங்கம் முன் வைத்ததோடு அல்லாமல், "NEW ECONOMIC POLICY" என்ற ஒரு புதிய மலேசிய பொருளாதாரத் திட்டத்தை பார்லிமெண்டின் முன் சமர்ப்பித்தது. இத்திட்டத்தின் கீழ் 1970 ல் தொடங்கி 20 வருடங்களுக்கு மலாய் இனத்தவருக்கு பலவிதமான பிரதான சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்பதும், இந்த காலக் கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்குரிமை 30% எட்ட எல்லா முயற்சிகளும் மேற்க் கொள்ளப் படவேண்டும் என்பதும் சட்டமாக்கப்பட்டது. இச் சட்டம் வேலை வாய்ப்பு, பல்கலைக் கழகப் படிப்பு, தொழில்துறை உரிமங்கள், அவர்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு யாவற்றையும் உள்ளடிக்கிய ஒரு காம்ப்ரிஹன்சிவ் மாடலாக உரு எடுத்தது.

இந்த திட்டத்தை சீனர்களும், இந்தியர்களும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இத்திட்டத்தோடு வேறு ஒரு துணைத் திட்டமும் அதே சமயத்தில் பார்லிமெண்டின் முன் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக்கப் பட்டது. அதாவது, மலாய்காரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முனையும் அதே வேலை, இனப்பாகுபாடு அன்றி மலாயாவில் உள்ள எல்லா எழை மக்களின் நிலைகளையும் மேம்படுத்துவது அரசாங்கத்தின் தலயாய குறிக்கோள் என்பதாகும்.

"நியாயம் தானே, அவர்கள் நாட்டிலேயே மலாய்க் காரர்கள் சிறுமைப் படுத்தப் படுவது முறை இல்லைதானே ! வெறும் 20 வருடங்களுக்கு தானே. மலாய் காரர்கள் எவ்வளவு பெரிய சோம்பேறிகள் என்பது நமக்குத் தெரியும். இவர்களுக்கு எவ்வளவு ஊட்டி விட்டாலும் இவர்கள் பெரிதாய் ஒன்றும் சாதித்துவிடப் போவது இல்லை. என்ன ஆகிவிடப் போகிறது. சட்டத்தை ஒத்துக் கொள்வோம்." என்று மற்ற எல்லா இனத்தவருமே ஒரு தப்புக் கணக்குப் போட்டு, NEW ECONOMIC POLICY யை சட்டமாக்க துணை புரிந்தனர்.

ஆனால், அதற்கு அப்புறம் நடைமுறையில் நடந்தது என்ன என்று நினைக்கிறீர்கள் ?? அடுத்த பகுதியில் கூறுகிறேன்

1 comment:

  1. நல்ல பதிவு! நன்றி!

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...