Monday, December 28, 2009

வீட்டுமிருகம்


இடுபெயரின் கடைப்பகுதி
சாதி சொல்லி சதி செய்யா
தூரதேசம்
வளமை பொதுவானதால்
வேற்றுமைகள் மறந்தே போன
அயலகம்
பிறப்பில் உயர்வு தாழ்வை
திருமணங்களில் மட்டும் காத்து
மற்றபோழ்தில் ஒதுக்கியே
கிறங்கிப்போன கிளரொளி இளமை.
பணியிட ஸ்நேகம் அழைக்க
விருந்தாட வேண்டி சென்றோம்
சூழ்நிலை குதூகலம் கூட்ட
பாடல்கள் இளக்கிய மாலை
இனிமை இனிமை எனவும்
சூலுற்ற நண்பன் மனையாள்
ஓடியாடி சமைக்க விழைய
ஊர்க்கதை கூடத்திலிறைந்தது
உண்ணத் துவங்கையில்
சற்றே பார்வை எட்டி
சமையலுள் புத்தனை அண்ட
மனசுக்குள் சொல்லொணா
உணர்வொன்று பற்றியெழ.....
வாய் கசந்து உமிழ்நீர் சுரந்து
வயிறு குமட்டி
என் அக வித்தியாசங்களை
எனக்குள் வெளிச்சமாக்க
வளர்ப்பு நாய் கடித்தாற்போல
பதறிப்பொன மனதுக்குள்
கள்ளம் உறைவ துலங்கியதே
முகரவும் ருசிக்கவுமான
என் மிருகத்தன எச்சங்களாலே
நாசுக்கும் நாகரீகமும்
கல்வியும் கடவுளும்
மாசில்லா மனிதம் வேண்டுமென
பேசிப்பேசி உரைப்பினும்
உள்ளுக்குள் கசடென்பது
இன்னமும் மிச்சமாச்சே
என வெம்மி விசும்பி
சோர்ந்து போக
இன்னமும் வேகமாய்
வெல்லவேண்டுமந்த விலங்கையென
இந்நாளில் வன்மம் கொண்டேன்
முன்னிலும் வேகத்தே.

Wednesday, December 23, 2009

விகடன் - கவிதை

நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்! ( தமிழ்நதி)

குறுக்கித் தறித்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது
'காட்டுப் பூபோல மலர வேண்டும் கவிதை'
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது.
காற்றில் தனித்தசையும் காட்டுப் பூவை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது
வெளிச்சம்!

புளிய மரங்கள் கிளையுடல் வளைத்து
கூடல் நிகழ்த்தும்
சாலையின் வழியே
மிதந்து செல்கிறார்கள்
கார் காலத்தில்
மானசியும் ஜான்சனும்.
இளவேனிலில்
மானசியும் மௌலியும்.
ஆகஸ்ட்டின் கொதி வெயிலில்
மானசியும் தாமோதரனும்
ஒன்றிற்கொன்று குறைவிலாத
புதிர்ப் பெண்ணின் காதலின் மேல்
படர்ந்துகொண்டிருக்கிறது வெயில்
பொழிந்துகொண்டிருக்கிறது மழை!

ழல் சாந்து குழைத்த கட்டட
இடிபாடுகளினின்று
தப்பிப் பிழைத்த பால்புட்டியைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் தாயருத்தி.
சட்டத்தில் ஒரு கொலையின் விலை
ஒரு மாத வாடகையிலும்
மலிவானதெனச் சொல்லியபடி
காற்சட்டைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறான்
பதினெட்டு வயதுப் பையனொருவன்
எப்போதும்
வெட்டரிவாள் சின்னத்துக்கே
விழுந்துகொண்டிருக்கிறது ஓட்டு.
நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்
வண்ணத் தொலைக்காட்சியை வாங்க!

'ன்னை மறந்தால் இறப்பேன்'
என்றவனை
நீண்ட நாட்களின் பின்
நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்
கருநீலமும் சிவப்பும் அழுத்தமாய்
மேலும் கீழும் ஓடும் மேற்சட்டையும்
காக்கி கலர் காற்சட்டையும்
தோள் தொங்கும் ஜோல்னாப் பையுமாய்
அழகாகத்தானிருந்தது
ஆவி!


ரு சொல் உதிர்க்கும் வரை
தேவதை
கண்ணிறங்கிக் கலந்தால்
மானுடத்தி
முயங்கிக் களித்துச் சலித்த பின்னே
ராட்சசி
தாபித்துத் தொடர்ந்தாலும்
காதலித்துக் கரைந்தாலும்
மணந்து புணர்ந்தாலும்
உனக்கென்ன
நீ மட்டும்
எப்போதும் தேவகணம்!

கொலைகாரர்கள்
நீதிமான்களாக இருக்கும் தேசத்திலும்
அடித்துப் பொழிகிறது மழை
பட்டாம்பூச்சிகள்
வண்ணங்களை உதிர்த்துவிடவில்லை
குழந்தைகள் சீவிக்கிறார்கள்
உனது காதல்
ஆன்மாவிலிருந்து புறப்பட்டு வருவதாக
நீ கண்ணீர் வழியச்
சொல்லிக்கொண்டிருக்கிறாய்!

ணவனைப் பின்னிருத்தி
இரு சக்கர வண்டியை ஓட்டிச் செல்லும்
தாட்டியான பெண்ணை
வினோதரசம் மிதக்கும் விழிகளால் ஏறிடுகிறீர்கள்.
மது விடுதிக்குள் சுவாதீனமாக நுழையும்
இளம்பெண் குறித்த சித்திரமும்
உவப்பானதாக இல்லை.
'அவள்' எழுதும் கெட்ட வார்த்தைகளை மட்டும்
அவளை மறந்துவிட்டு வாசிக்க முடிவதில்லை.
நண்பரின் வீட்டில்
அதிசயமாக அரசியல் பேசுகிற பெண்
சமையலறைக்குள் எழுந்து போகும் வரை
மனஅவச மௌனம் காத்துப்
பின் விட்ட இழையிலிருந்து
விவாதத்தைத் தொடர்கிறீர்கள்
அடைபடலுக்குப் பழக்கப்பட்ட விலங்குகள்
கை மறதியில் திறந்திருக்கும்
கூண்டுக் கதவை
விசித்திரம் படர்ந்த கண்களால்
வெறித்துக்கொண்டிருக்கின்றன!


வசரமாய் கவிதையன்றைத்
தயாரிக்க வேண்டியிருக்கிறது.
அனுப்பிவைக்கக் கேட்டவரின் அனுக்கமும்
வாசிப்பவள்/ன்
கைவண்டி இழுத்துக் களைத்தவனா
சமையல் விடுமுறையில்
கூடத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்து படிப்பவளா
இலக்கிய நுணுக்குக்காட்டி அணிந்தவனா
சன்னல்களும் பூட்டப்பட்ட அறையினுள்
புத்தகங்களோடு மட்டும் வசிப்பவனா
இக்கவிதை
திறந்த இடுப்பருகில் இடம்பெறுமா
கொலைப் படுகளத்தைச் சித்திரிக்கும் கட்டுரைக்கு
எதிர்ப் பக்கத்தில் வெளிவருமா
இறக்குவதா ஏற்றுவதா
இருண்மை செய்வதா
வெளிச்சம் விழுத்துவதா
ஏதேதோ கேள்விக் கொக்கி
பிடித்திழுக்கப் பிடித்திழுக்க
பொறாமல் முகம் சிணுங்கி
தெருவிறங்கிப் போகிறதே என் கவிதை
என் செய்வேன்
இல்லாத என் தெய்வமே!

மாடியை ஒட்டிய
புத்தக அறையினுள் எப்படியோ
சேர்ந்துவிடுகின்றன சருகுகள்
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட
கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள்
இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்!

வாக்குப் பெட்டிகளுக்காக
பணப் பெட்டிகள்
பணப் பெட்டிகளிலிருந்து
ஆயுதப் பெட்டிகள்
ஆயுதப் பெட்டிகளிலிருந்து
சவப் பெட்டிகள்
சவப் பெட்டிகளிலிருந்து................
எந்தப் பெட்டியை
எந்தப் பெட்டி
முதலில் குட்டி போட்டதென்று
உங்களுள் எவராவது
சொல்ல முடியுமா நண்பர்களே?

Sunday, November 22, 2009

எமக்குத் தொழில்....




கொள்கையேதுமில்லை
பிறந்தபோழ்து என்னிடத்தே
வயிற்றுப்பாட்டுக்கும் கதகதப்புக்கும்
அண்டிக் கொள்வதன்றி.
வளர வளர
சுற்றமும் நட்பும்
கண்டதும் கல்வியும்
இளமையும் செலுத்திய திசை
குறுகுறு பயணங்கள் ...
கம்யூனிஸ்ட் என்றார்கள்
மதவாதி என்றார்கள்
இடது சாரியோ வலது சாரியோவென
இரகசியம் பேசினார்கள்.
பொருள்முதல்வாதி என்றுகூட
பொருமினார்கள் வறியர்கள்
இனவெறியன் என்றார்கள்
ஒரு சாரார்.
ஆணவமும் அகந்தையுமே
ஆன்மீக போர்வையில் கொலுவிருக்கிறது
என்றோரும் உண்டு.
குழந்தையாகவே இருக்கிறேன்
இன்னமும் நான்
மாற்றங்கள் ஏதும் இல்லை
வருடங்கள் கழிந்ததைத் தவிர
எழுத்தை மதிக்கின்ற
இடத்திலா இருக்கிறேன்
கொள்கைக்கு தாலி கட்டிக் கொள்ள..??


Wednesday, November 18, 2009

கண்ணதாசன் எழுத்து....


தன்னுடைய ஆளுமையை தனக்குப் பின்னும் கூட பிறர் வழியே இணையமெங்கும் விசிறியடிக்கும் சுஜாதாத்தாவின் அணுக்கமான விசிறியின் கிறுக்கலிருந்து வேட்டைக்காரன் பாட்டு லிங்கைப் பிடித்தேன். போனதேன்னவோ “ ”ஏன் உச்சி மண்டைய்ல சுர்ருங்குது..” என்கிற பாட்டைக் கேட்கத்தான்.


என்னவோ என் நேரம் எல்லா பாட்டையும் டவுன்லோடினேன். அதிலிருந்து காரில் இதே பாட்டுத்தான் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. ”கரிகாலன் குழல் போல” என்று ஆரம்பித்து காதில் கரையும் அந்தப் பாடல் பிடித்திருப்பதற்கு காரணம்...


பாட்டில் உள்ள அருந்தமிழா..?

கொஞ்சலும் சிருங்காரமும் நிரம்பிய பெண்குரலா..?

இசையா..?

தாளக்கட்டா..?

படத்தின் நாயகி அனுஷ்காவின் சன் டீவி பேட்டியை நான் பார்த்ததாலா..?

பாடலில் நிரம்பி வழியும் ஏகப்பட்ட ரொமான்ஸா..?


ஏதோ ஒன்று ... சரியாகப் படமாக்கப்பட்டால், எல்லா டீவியிலும் டாப் டென்னில் தமிழ் கூறும் நல்லுலகம் குறைந்தது நான்கு மாதம் பார்க்கப் போகிறது. காதலர்கள் ரகசியமாக ப்ளூ டூத்திக் கொள்ளப் போகிறார்கள். கல்லூரி மேடைகளிலும் கன்னிகளும், தமிழ்ச்சங்க விழாக்களில் ஆன்டிகளும் இன்னம் ஒரு வருடத்துக்கு தங்கு தங்கென்று குதிக்கப் போகிறார்கள். என்னைப் போன்ற மாமாக்கள் கார்களில் கேட்டுக் கொண்டே கன்னம் சிவந்து அபத்தமாக சிரித்துக் கொண்டே அடுத்தவன் ட்ரங்கில் புதிதாக வாங்கிய மஸ்டாங்கை செருகப்போகிறார்கள். :-) :-)


வாழ்க.. வாழ்க. !!

சங்கிலி


சந்திக்கின்ற சந்தர்ப்பங்களை
தொலைபேசி நினைவூட்டுகிறாய்.
உடல்நலம் விசாரித்தால்
விசாரிக்காது போனவனை
அலுத்துக் கொள்கிறாய்
சாதாரணப் பேச்சைக்கூட
மர்மமான பார்வையால்
அழகாக்குகிறாய்.
உன் தோழிகளிடம் பேசினால்
உனக்கு அவர்களைப் பிடிப்பதில்லை.
என்னிடம் பேசுகையில்
காரணமில்லாமல் சிடுசிடுக்கும்
உன்னவனின் பதட்டம்
புரிய புன்னகைக்கிறேன்.
சந்திக்கும்போதெல்லாம் உன்
அணைப்பில் இறுகும்
என் பிள்ளையைப் பார்க்க
கொஞ்சம் பொறாமையாயும்
கூச்சமாயும் இருக்கிறது.
அன்பு செலுத்துவதைக்கூட
ரகசியப்படுத்திவிட்டன
பிணைத்துக்கொண்ட உறவுச்சங்கிலிகள்...
.....முன்பே பார்த்திருக்கலாம்



Saturday, August 22, 2009

ஜெயமோகன் வருகை- Report


சாக்ரமெண்டோ இன்டெல் (Intel) வளாகத்தில் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய உள்ளரங்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் e-vite புண்ணியத்தில் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டவர்களோ வெறும் நாற்பது பேர். மயிலாப்பூர் ரெஸ்டாரெண்டில் இருந்து தேநீரும் சூடான வடைகளும், கொஞ்சம் வாசகர்களும் காத்திருந்தனர்.
நான் சென்னையில் இருந்து இறக்குமதியாகி இருந்த கதர் ஜில்பா மற்றும் சாயம்போன ஒரு உள்ளூர் நீல ஜீன்ஸ் சகிதம் ஒரு இந்திய ஹோட்டல் வாயிலில் காத்திருந்தேன். ஜெயமோகன் முன்னிரவே சாக்ரமண்டோ வந்து எங்கோ திருமலைராஜனின் நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். முதல் நாளிரவே வீட்டுக்கு அழைக்கலாம் என்று எண்ணமிருந்தாலும், இந்தியாவிலிருந்து வந்திருந்த அன்னை மற்றும் தந்தையை கருத்தில் கொண்டு மறுநாள் சந்திக்கலாம் என்று முடிவு செய்து கொண்டு காத்திருந்தேன்.
இருமுறை அல்லது மூன்றுமுறை தொலைபேசி அழைப்புக்குப் பின் கார் வந்து நின்றது. இறங்கியவுடனேயே கதவைத் திறந்து “ நான் ஜெயமோகன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உண்வு உண்ணச் சென்றோம். கொஞ்சமே கொஞ்சம் சோறு சாப்பிட்டார்- கோழி கொறிப்பது போல. ஆனால் கோழியை ஒதுக்கவில்லை. சாளேஸ்வரக் கண்ணாடிக்காரர்களுக்கே உரிய அச்சப்படத் தேவை இல்லாத கீழ்ப்பார்வை. குழந்தைகளைப் போல தாடையை வேகமாக அசைத்து விளையாட்டாக சாப்பிட்டார். சமீபத்தில் தியாகம் செய்த மீசை பல்வரிசையை முழுமையாய் காண்பித்தது. சற்றே கரிய கோடுள்ள பற்கள் புகைப்போதைப் பிரியரோ என்று யோசிக்க வைத்தன. கேட்கவில்லை.

உணவு முடிந்தபின் கூட்ட அரங்கம் நோக்கிய பயணம் தொடங்கியது. தன் புத்தகங்களில் கொற்றவையைப் பற்றி பேசினார். மாயவரம் வந்திருப்பதாக சொன்னார். ஜெயகாந்தனைப் பற்றி பேசினோம். சுந்தரராமசாமி மலேசியாவில் வீட்டுக்காவல் வைக்கப்ட்டதைப் பற்றி பேசினார். சரளமான பேச்சாக இருந்தாலும் சலசலவென்ற பேச்சாக இல்லை. இடையூடும் மெளனங்கள் செறிவாக இருந்தன.
கூட்டம் துவங்கியது. வரவேற்புரை வாசித்த அம்மணி ஜெயமோகனை டாக்டர் என்றும் ப்ரொபஸர் என்றும் விளித்தார். சிறிய புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். நான் ஒரு சிறிய (எழுத்தாளர் அறிமுகம்) கட்டுரையை எழுதி வாசித்தேன். இலக்கியமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் அவரை பேச அழைத்தேன்.
சுருக்கமான பேச்சு. முதல் நாள் பார்த்த மவுண்ட் சாஸ்தா மலையை, திருவண்ணாமலையையும், கயிலாய மலையையும் போல அல்லாமல், அதன் தத்துவ வரலாற்று முக்கியத்துவத்தை மறந்து அமெரிக்க சமூகம் எப்படி நுகர்ச்சிப் பொருளாக ஆக்கி விட்டது என்று சொன்னதோடு, பிழைப்பு/ வாழ்வு மற்றும் இருப்பு இவற்றுக்குமான நுண்ணிய வேறுபாடுகளை புரியுமாறு சொன்னார். அதற்கே கொஞ்சம் பேர் எழுந்து டீ குடித்து விட்டு வந்தார்கள். மொழி இல்லாமல், இலக்கிய பரிச்சயம் இல்லாமல் போனால் வாழ்வு எத்தனை மொண்ணையாக, தட்டையாக உயிரற்றதாக இருக்கும் என்று சொன்னார். இயற்கையையே கடவுளாய் மாற்றி மொழியின் மூலம் ஆன்மிக/தத்துவ செழுமையூட்டிய திருவண்ணாமலையின் வரலாறு சொன்னார். ஐம்பூதங்களில் திருவண்ணாமலை ஏன் அக்னிக்கான ஸ்தலமாக ஆனது என்று என் முக்கண் திறந்தது :-) . அருணகிரிநாதர் இல்லாத அண்ணாமலை தரிசனம் நிறைவாகவே இருந்தது.
வாசகர் கேள்விகள் தொடங்கின.

அவரது எழுத்தின் பாதிப்பு பற்றி, அவர் மலையாளத்தில் முழுக்க எழுதாமல் ஏன் தமிழில் எழுதுகிறார் என்பது பற்றி, கம்யூனிசம் கேரளத்தின் வளர்ச்சியை தடுப்பது பற்றி, எழுத்தாளர்களின் குடுமிபிப்பிடி சண்டையைப் பற்றி, இணைய எழுத்துக்களைப் பற்றி, அவர் என்ன எழுதுகிறார் என்பது பற்றி, எங்கு அவர் புத்தகங்கள் கிடைக்கும் என்பது பற்றி, இலங்கைப் போரின் முடிவு பற்றி, அவருடைய நீண்ட இந்தியப் பயணம் பற்றி, தமிழ்நாட்டின் மேடைப்பேச்சைப் பற்றி, கிரிமினலகள் கல்வித்தந்தை ஆனதால் ஆன பயனைப் பற்றி, பெண் கல்வி பற்றி....
கூட்டம் குறைவாக இருந்தாலும், Intellectual arrogance இல்லாமல், ஜெயமோகனுடன் ஜல்லிக்கட்டு விளையாடாமல், ஜெயமோகனுடன் நெருக்கமான நடிகைகளைப் பற்றிக் கேட்காமல் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் கலந்து கொண்ட வாசகர்கள் நன்றிக்குரியவர்கள். சிறிய நினைவுப்பரிசு வழங்கியபின் விழா இனிதே முடிந்தது. சிற்றுண்டியை புறக்கணித்துவிட்டு வேக வேகமாக குடாப்பகுதி சென்றார்.
குடாப்பகுதி கூட்டங்கள் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் ஐந்து தேதிகளில் நடக்கின்றன. முடிந்தால் போகலாம் என்று ஒரு தோணல். பார்க்கலாம்.

Friday, August 14, 2009

எழுத்தாளர் ஜெயமோகன் வருகை

சாக்ரமண்டோ தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்கள் இங்கே

சாக்ரமண்டோ தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுந்தர் சுதத தமிழில் பேசினாலே sub title போடுப்பா என்று சொல்வார்கள். :-) ஜெயமோகன் ரேஞ்சுக்கு தாங்குவார்களா என்று தோன்றினாலும் எதிர்பார்ப்பு நிறைந்த படபடப்பு இருக்கிறது.

மற்றவை கூட்டம் முடிந்த பின்பு..

Monday, July 27, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு


நான் பொதுவாக த்ரில்லர் படங்களை விரும்புவதில்லை. காரணம் பயந்து கொண்டே, ஒரு திடுக்கிடலுடன் படம் பார்க்க என் சுபாவம் ஒத்துழைக்காது. ”நூறாவது நாள்” படம் பார்க்கும்போது பய்ந்துகொண்டு பககத்தில் இருந்த சித்தப்பா பையன் மடியில் கண்களை இறுக மூடிக்கொண்டு தலையைப் பதித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.
இத்த்னையும் மீறி நேற்று Bay Area IMC6 ல் அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்தேன். பரிச்சயப்பட்ட மனிதர் எடுக்கும் முதல் முழுநீளப்படம் எப்படி வந்திருக்கிரது என்ற ஆர்வம் முக்கிய காரணம். நண்பர் அருண் வைத்தியநாதன் தமிழ் வலைப்பூவின் ஆரம்ப காலத்தில் மிக பாபுலரான தமிழ் வலைப்பதிவர். http://arunviews.blogspot.com/ என்ற வலைப்பதிவு நடத்தி வந்தார்.

ப்டத்தைப் பார்த்தபின், தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் வன்முறை குறைந்த, வக்ரம்/பயங்கரம் குறைந்த, யதார்த்தம் மிகுந்த இன்னொரு கெளதம் மேனன் கிடைத்துவிட்டார் என்று சொல்லும் வகையில் படம் இருந்தது. எல்லா வயதினரும் பார்க்கத் தகுந்த முறையில், புதுமையான பின்புலத்தில், யாரும் தொடாத ஒரு சப்ஜெக்டை கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்வதால் கதையோடு இந்த அளவு ஒன்ற முடிந்ததா என்று தெரியவில்லை. சென்னை/தமிழ்நாட்டில் வாழும் நண்பர்கள் கருத்துக்ளை தெருந்து கொள்ள ஆவல். முதல் பார்வைக்கு மனதில் தங்கியவை.

* பரசன்னா சூப்பர். செம ஸ்மார்ட். குரல் மாடுலேஷனும், அடங்கிய - சற்றே தலையை பின்னிழுத்துக் கொண்டு சிரிக்கிற - சிரிப்பும் அவ்வப்போது கமலஹாஸனை நினைவு படுத்துகிறது. அமெரிக்காவில் வசிக்கிற தமிழ்நாட்டுப் பையனை அழகாக பிரதிபலித்து இருக்கிறார். இதற்கு முதலில் ஸ்ரீகாந்த் தேர்வாகி இருந்ததாக நினைவு. நல்ல வேளை.. :-)

* ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார். அடிக்கடி மயங்கி விழுகிற பயந்தாங்கொள்ளி குடும்பத்தரசிகளை ம்யூசியத்திலும், இம்மாதிரி படங்களிலும்தான் பார்க்க முடிகிறது. பளபளப்பு கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனாலும் ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கு கங்கிராட்ஸ். காரணம் பிரசன்னாவோ என்று நினைக்க வைக்கிறது அவர்களது கொஞ்சல் மற்றும் நெருக்கம். :-)

* ஜான் ஷே - படத்தின் வில்லன். ஏயப்பா. கிட்டத்தட்ட படத்தின் நாயகனே இவர்தான் என்று சொல்லுமளவுக்கு இங்க்லீஷ் சத்யராஜ். இவர் வரும் காட்சிகள் குருரம் கலந்த இவர் நடிப்பால் மிளிர்கின்றன.

* கார்த்திக்ராஜா இசை ஓக்கெ என்று சொல்லுமளவுதான் இருக்கிறது. பல காட்சிகளில் பின்னனி இசை மிஸ்ஸிங். படத்தின் தீம் சாங் ( செளம்யா) தவிர மற்றவை படு சுமார். பிரசன்னா , ஸ்நேஹா குளு குளு டூயட் ஒன்றும், ஹிட்டான ஒரு பாட்டும் படத்துக்கு கொஞ்சம் வலு சேர்த்திருக்கும்.

* ஆரம்பக் காட்சிகளில் வரும் நகைச்சுவை பிற்பாடு அறவே இல்லை. படத்தின் இறுக்கம் குறைக்க வேண்டாம் என்று இயக்குநர் நினைத்து இருக்கலாம். அலுவலக நண்பன் மற்றும் அலுவலக் இந்தியக் குதிரைப் பெண் சம்பந்தமாக ஒரு லைட் / ஜொள் காமெடி ட்ராக் வைத்திருக்கலாம்

* மிக subtle ஆன ஒரு விஷயத்தையும் படத்தில் தொட்டு இருக்கிறார். அமெரிக்கா வரும் நம்மவர்களுக்கு நம்மவர்களை விட வெள்ளைக்காரர்களை ரொம்ப பிடிக்கும். வெள்லைத்தோலுக்கு அபிமானம் உள்ள ஏகப்பட்ட நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்களது பின்புலம் , கலாச்சாரம், மனநிலை தெரியாமல் அவர்களை 100% நம்பும் நம் வியாதியை படம் கோடிட்டுக் காட்டுகிறது.

* படம் கையைக் கடிக்காது . அமெரிக்கத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு ஏ செண்டர்களில் கண்டிப்பாக ஓடும் . படத்தின் பட்ஜெட்டுக்கு சேதமில்லை.

* அருண் த்ரில்லர் படங்கள் மட்டுமே என்று முடிவு கட்டிவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் மற்ற கதைக்களன்களிலும், தமிழ்நாட்டு பின்புலத்திலும் படம் எடுத்தால் தமிழ்நாடு ரசிகர்களின் மனதுக்கு(ம்) நெருக்கமானவராக ஆகலாம். திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதோடு , ஓவ்வோரு தமிழனின் மனத்திரையிலும் இவர் படம் ஓடினால் கனவு நிஜமாகும். வானம் வசப்படும்

அச்சமுண்டு அச்சமுண்டு - உச்சமுண்டு உச்சமுண்டு

Sunday, July 19, 2009

ஆனந்த தாண்டவம்




அமரர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை கோலிவுட் கோதண்டபாணிகளின் புண்ணியத்தில் சிதையாமல், முடமாகாமல் படமாகி இருக்கிறது. உயிரோடு இருந்திருந்தால் வாத்தியார் கொஞ்சம் சந்தோஷப்பட்டு இருப்பார். அவருடைய பழைய கதைகளை கோலிவுட் தோய்த்து காயப்போட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்


முதல் பார்வைக்கு மனதில் தங்கியவை:


1. ஹீரோ வேஸ்ட். புது பையன். ரகு கேரக்டருக்கு உயிர் கொடுக்க தவறிவிட்டார். தனுஷை முயன்றிருக்கலாம்.


2. ஹீரோ அப்பா கிட்டி வேஸ்ட். கதையில் முக்கிய கேரக்டர் இது. பூர்ணமோ அல்லது நாசரோ பின்னி பெடல் எடுத்திருப்பார்கள். கிட்டி இயந்திரம் போல நடித்திருக்கிறார்.


3. தமன்னா .. ஹி..ஹீ . ஓகே. மதுமிதாவின் வெகுளித்தனமும், குழப்பமும், பின்னாளைய சோகமும் அவ்வளவு ரியலிஸ்டிக்காக வராவிட்டாலும் நிஜ கேரக்டருக்கு கொஞ்சம் அருகில் வரக்கூடிய நடிப்பு அவருடையதே. இந்த ஸ்டேட்மெண்டுக்கும் எனக்கு கல்லூரிக்கு அப்புறம் பர்சன்லாக தமன்னாவை பர்சனலாக பிடித்திருப்பதற்கும் சம்பந்தமில்லை.மீரா ஜாஸ்மின் இன்னமும் பெட்டராக செய்திருப்பார்.


4. தமன்னாவின் அமெரிக்க கணவனாக வரும் கேரக்டர் ஓகே. மில்லியன் தனம்/குரூரம்/மானிபுலேஷன் மூளை கொஞ்சம் மிஸ்ஸிங். யாங்கி பாஷை பேசுகிறேன் என்று செளகார்பேட் பாஷை பேசி இருக்கிறர்.கதையில் அந்தக் கெரக்டர் உச்சந்தலை சொட்டையை மறைத்திருப்பதாக வரும். படத்தில் இதற்காகவே சைட் டிஷ் தட்டு அளவுக்கு பின் மண்டையில் செயற்கையாக சிரைத்திருக்கிறார்கள் . அமெரிக்கா வந்த இந்திய மண்டையில் சொட்டை இப்படி இருக்காது. ;-)


5. ரத்னா கேடக்டர் அம்சம். அவள் ரகுவை கொஞ்சம் கொஞ்சமாக கரைப்பதை அழகாக எடுத்து இருக்கிறார்கள். அவள் வீடும், தமிழ்ச்சங்க விழாவும், நாட்டியமும் படு யதார்த்தம்.


6. ஜெயந்தி கேரக்டருக்கு சன் டிவியில் சைட் போஸில் காம்பியர் செய்யும் அம்மு. ஈஸ்வரி ராவ் / ராஜஸ்ரீ அசத்தி இருப்பார்.


7. இஞ்சினியர் கோபிநாத் அசல். அவரை ஏன் படத்தில் ”பறைய” விட்டார்கள் என்று தெரியவில்லை. கதையில் அவர் மலையாளி இல்லை. நடிப்பு பாந்தம்


மற்றபடி திரைக்கதை அமைப்பு தேவலை. லொகேஷன் சூப்பர். ரகுவுக்கும் மதுமிதாவுக்கும் இடையில் ஏற்படும் உடல் ரீதியான அட்ராக்‌ஷன் அவர்கள் காதல் ஏற்படும் ஆரம்ப கட்டங்களில் கதையில் ஊடுபாவாக பின்னி இருக்கும். திரையில் அதற்கான காட்சி அமைப்புகளை பாலுமகேந்திரா அழகாக பின்னி இருக்கலாம். - அது ஒரு கனாக்காலத்தில் செய்ததைப் போல். மேலும் கதையின் இரண்டு பாகங்களை ஒரே படத்துக்குள் சுருக்கியதால் கொஞ்சம் விரிவாக எடுக்க/ சொல்ல முடியாமல் போனது அதிகம். ட்ரீட்மெண்ட் பிசகி விட்டது.


இந்தக் கதையையே படித்திராத, சுஜாதவை தெரியவே தெரியாத எங்கள் குடும்ப நண்பர் படத்தினை பார்த்து விட்டு சொன்னார் - என்னயா படம் இது. அந்தப் பொண்ணு லூசு மாதிரி நடந்துக்குது” என்று


சிரித்துக் கொண்டேன்.







Saturday, May 16, 2009

தேர்தல் 2009 முடிவுகள்





முடிவுகள் மகிழ்ச்சியா, வருத்தமா என்று சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. என்னுடைய சில அவதானங்கள்




* காங்கிரஸ் அகில இந்திய அளவில் பெற்ற வெற்றிக்கு பா.ஜ.க பலமான் கூட்டணியை அமைக்காதது காரணம். பல மாநிலங்களில் நல்ல வாய்ப்புகள் நழுவின.

* முடிவு பற்றிய பயம் பல காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தனித்து தேர்தலை சந்திக்க தூண்டியது. அவை யாவும் மறுபடி வரும். பழைய மதிப்பு கிடைக்குமா..??


* இந்திய மக்களின் மனோபாவம் தன் நாட்டு தேசிய நலன் மட்டுமே சார்ந்து, தன் பொருளாதார நலன் மட்டும் சார்ந்த கிட்டத்தட்ட அமெரிக்க மக்களின் மனோபாவத்தை ஒட்டி அமைந்து விட்டது.


* எம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.


* ஆளுங்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும் எல்லாக் கட்சியும் பணபலத்தை தேர்தலில் உபயோகப்படுத்தும். கோடிகளில் இம்முறை பணமிறங்கியதற்கு காரணம் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம். :-)
இங்கு யாரும் உத்தமர்கள் அல்ல.


* பா.ம.க அய்யாவின் கொட்டம் கொஞ்சம் அடங்கும். அடுத்தமுறை அணி மாறும்போது யோசிப்பார்.

* புரட்சிப்புயல் சுருண்டு விட்டது. கூடாரம் கலகலக்கும்.

* கேப்டன் அடுத்தமுறை தைரியமாக பேரம் பேசுவார். கண்டிப்பாக கட்சி வளர்ந்திருக்கிறது. அம்மாவோ, தாமரையோ அடுத்தமுறை கேப்டனை மதித்துப் பேசுவார்கள். தமிழ்நாட்டில் மு.க எதிப்பின் மையம் இவரிடம் மாறலாம். அம்மா ஜாக்கிரதை.

* சிதம்பரம் ஜாக்கிரதை கார்த்திக் வளர்கிறார்

* என் கவலை ஜெயித்த கட்சி பற்றியது : இனி என்னென்ன அராஜகங்கள் நடக்குமோ..? தாத்தா லகானை பிடிப்பது நல்லது.

* அஞ்சா நெஞ்சன் கொஞ்சம் பொறுக்கித்தனத்தை குறைத்துக் கொண்டால் அவருக்கும் கட்சிக்கும் நல்லது. இளையவர் பாணி அரசியல் இலை அம்மாவிடம் எடுபடாது. திமுகவின் எதிர்காலம் அஞ்சா நேஞ்சன் மற்றும் அன்புவின் கைகளில்தான்.
* ஈழத்தின் பாதிப்பு பெரிதாக இல்லாததற்கு காரணம் மாவீரர்களின் பக்குவமற்ற அரசியல் அணுகுமுறை. தன் நிழலை தானே நம்பாதவர்கள் போரின் போக்கைப்பொறுத்து இந்தியா சமரசம் செய்ய வேண்டும் என்று கோருவதும் மற்ற சமயங்களில் இந்தியாவின் இலங்கை சம்பந்தமான அக்கறை அவர்கள் தேசிய நலன் சார்ந்தது. அவர்களின் பெரியண்ணன் மனோபாவம் மாற வேண்டும் என்று அறிக்கை விடுவதும் நல்ல கூத்து. பாதிப்படைவது அப்பாவி மக்கள்.

Thursday, April 30, 2009

தமிழ் மன்ற விழா - 2009

சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மன்றத்தின் பத்தாவது ஆண்டுவிழாக் கொண்ட்டாட்டமும் சேர்ந்து கொண்டதால் விழா ஜெகஜ்ஜோதியாக களை(லை) கட்டியது.

புகைப்பட்ங்கள் உங்கள் பார்வைக்கு :

ஆல்பம் ஒன்று

ஆல்பம் இரண்டு


அதிர்ஷ்ட்டவசமாக குறைகள் ஒன்றும் இல்லாமல் விழா இனிதே நடந்தது,

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...