ஒரு வாசகமென்றாலும் திருவாசகம்தான்
=====================================
'என் புள்ள இந்த வீட்டுல சாப்பிட்டே 15-20 வர்சத்துக்கு மேல ஆச்சுய்யா..ஒத்த பிள்ள ஒரு பிள்ளைய பெத்துட்டு அதயும் இந்த ஊருக்கே கொடுத்துட்டேன்" என்று வெள்ளைப்புடைவை உடுத்திய அந்த மூதாட்டி படுக்கையில் படுத்தபடி தீனமாக சொல்ல சொல்ல மனசு கனத்துப் போகிறது.
கருப்பு வைரம் காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகி இருக்கிறது.அந்தப் படத்தில் இருந்துதான் மேற்கண்ட காட்சி.
காலம் சென்ற தலைவர்களைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன. அதில் மிகுதியும் அவர்களைப் பற்றி உயர்வாக சொல்லப்படுபவன. இறந்து போனவர்களைப் பற்றி ஏதும் மோசமாகப் பேசக்கூடாது என்ற மரபு வழியின்படி பேசினாலும், அந்தக் காலகட்டத்தில் உள்ள பத்திரிக்கைகள், பழைய பேட்டிகள் என்று பார்க்கும்போது இப்போது உயர்வாக பேசப்படும் தலைவர்களின் பொது வாழ்வு அத்தனை சிலாக்கியமாக இல்லை என்பது விளங்கும்.பொதுவாழ்வில் எளிமைக்குப் பேர்போன காங்கிரஸ் மந்திரி கக்கனைப் பற்றிக்கூட டி.என்.சேஷன் ஒருமுறை மோசமாக சொல்லி இருந்தார். ஆனால் விருதுப்பட்டி வைரத்தைப் பற்றி இதுவரை நான் ஒருமுறைகூட, ஒருவரிடம் கூட கெட்ட விஷயங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் எளிமை, தான் படிக்காது போனாலும் தமிழ்நாடு படிக்க ஏற்பாடு செயத தீர்க்க தரிசனம், தொழில் முன்னேற்றத்துக்கான முனைப்பு என்று இத்த்னை பண்புகளையும் ஒருங்கே, ஏதாவது தற்கால அரசியல்வாதிகளிடத்தில் தேடினால ஏமாற்றமே மிஞ்சும். எத்தனை அறிவிருந்தாலும் யாரையும் மதிக்காதவர்களாக, எத்தனை திற்மை இருந்தாலும் தான்,தன் குடும்பம், தன் பேரன் என்று குறுகிய நோக்கில் சிந்திக்கும் குடும்ப ஆர்வலர்களாக, இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கொள்கையில் நாட்டம் கொண்டவர்களாக, ஏகப்பட்ட தகுதிகள் இருந்தாலும் பவுடர் மூஞ்சிகளுக்கு வால் பிடிக்கும் சிவகங்கைப் பிள்ளைகளாத் தான் தற்காலத்தவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள்.
அத்தனை நற்பண்புகளமையப் பெற்ற குணசீலன், இந்தியாவின் பிரதமரையே தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றிருந்த அந்த நல்லவர், அரசியலுக்கு தேவைப்படும் திறமைகள் இல்லாமல், சாமர்த்தியசாலியாக இல்லாது போனதுதான் காலக்கொடுமை.நேர்மையாளர்கள் நெளிவு சுளிவு இல்லாமல் தோற்றுபோவதால்தான், புல்லுருவிகள் சாம்ர்த்தியமாக பிழைத்துக் கொண்டு காலம் கடத்துகிறார்கள்.
காமராஜர் விஷயத்தில் எனக்கு ஒரு வருத்தம் உண்டு.
ஊரே போற்ற வாழ்ந்தாலும், தாயை சரிவர கவனிக்காமல், அவர்களை தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க வைத்துக் கொண்டு, வறுமையில் வாட விட்டுக் கொண்டு வறட்டு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று நான் நினைக்கிறேன். இதே எண்ணம் மகாகவியின் விஷயத்திலும். வீட்டில் சோறு இருக்கிறதா என்று பார்க்காமல் வந்தவர்க்கெல்லாம் சோறு போட்டு மனைவியை வறுமையில் வாட விட்டதுவும், தன் செல்வ மகளின் திருமணத்துக்குக்கூட போகாமல் வெளியிருந்ததுவும் என்னைப் பொறுத்தவரை மிக கொடுமை. ஊருக்கே நிழல் தரும் ஆலமரம், தன்னில் ஒதுங்கிய மைனாக்குஞ்சை வெளியே தள்ளும் செயலாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். என் நண்பனுடன் இது பற்றி இருநாள் கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான்.
"பாரதியும் காமராஜும் நம்மைப்போல தனக்கும் தன் குடுமபத்துக்கும், என வாழ்ந்து இறந்து போயிருந்தால் நாம் இன்னும் இவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போமா..சாதாரணர்கள் ஆயிரம் பேர் இருக்கும் உலகில், இதைப் போல அசாதாரணர்களும் தேவை - அவர்களை சார்ந்தோருக்கு ரணமாயிருந்தாலும் "
உண்மைதான்.
No comments:
Post a Comment