Tuesday, June 22, 2004

மெல்ல..மெல்ல
================

முதுகு இன்னமும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இரவில் கனவுகளே இல்லாமல் பெருங்குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறேன். செய்ய வேண்டிய காரியங்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என்று பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறேன். அலுவலக பணி சுமை வேறு. ஆயினும் இன்று உணவு இடைவேளையில் வெகுநாட்கள் கழித்து பூவலம் வந்தேன்.

அப்பப்பா...சந்தோஷமாயிருக்கிறது.

வலைப்பூவில் வாசன் தன் தமிழுலக இணைய அனுபவங்களை பட்டியலிட்டிருந்த பதிவு அருமை. தமிழ் இணையத்தில் "தினம் ஒரு கவிதை" வழியே நுழைந்த என்னைப்போல நடு விடலைகளுக்கு, புதிய செய்திகள் அவை. அழகு தமிழில் நிறைய விடயங்களை எழுதும் அவர் பெயரின் பின்பாதி மட்டும் எனக்கு 'தளை' தட்டுகிறது. எனவே அவரைக் குறிப்பிடும்போது கவனமாக தவிர்த்திருக்கிறேன்.

அட்சரம் அசாத்தியமான ஆழத்தோடு அற்புதமாக வருகிறது. எஸ்.ரா அருமையாக எழுதுகிறார். அவரை வலைப்பூவுக்கு கொண்டு வந்தவர்களுக்கு, தண்ணியில்லாத காட்டிலும் பான் பராக் கிடைக்கட்டும். பழைய பிலிப்ஸ் ரேடியோவில் ஃபேஷன் ஷோ தெரியட்டும்.சூர்ப்பனகையின் மூக்கரிந்த கதையை எச்.ரா வெளிப்படுத்தி இருக்கும் இடமும், அந்தப் பதிவின் வீச்சும் அருமை. அவருடைய ஆங்கில காப்பிப் படங்கள் பற்றிய பதிவின் பின்னூட்டம் வழியாக குமுதம் பாலாஜி பக்கம் சென்றேன். அங்கு அண்ணா கண்ணனின் கவிதாயினி பற்றிய பதிவுகள்.

மாலதி மைத்ரி, சுகிர்தாராணி என்று அறிமுகங்களைப் படிக்க படிக்க தேன் குடித்த நரி ஆகி விட்டேன்.

ஒற்றையாக, பெரும் ஆறாக ஓடி வரும் காவிரி, தஞ்சை மண்ணில் கிளை நதிகளாக ஓடி கடலில் கலப்பதை கல்கி இப்படி வர்ணித்திருப்பார் " நாயகனாகிய சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க காவிரி தன் கைகளை நாலாக, ஆறாக, எட்டாக ஆக்கி அசாத்திய காதலோடு ஓடி வருகிறாள் "

பத்திரிக்கை உலகிலிருந்தும், பதிப்பு உலகிலிருந்தும், கணிணித் துறையிலிருந்தும், இணையத்தமிழை நோக்கி ஓடி வரும் பெருங்கூட்டத்தின் ஆயிரம் கைகளைப் பார்த்து எனக்கு ஏனோ கல்கி சொன்னது ஞாபகம் வந்தது.

வேகமாய்த் தமிழ் இனி வளரும்...


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...