Tuesday, June 01, 2004

ஜூரி ட்யூட்டி
=============

அமெரிக்கர்கள் மிக வெறுக்கும் வேலை இது. நம்மூரில் சாதாரண கோர்ட்டில், வக்கீல்கள் எல்லாம் பேசப் பேச, ஒரே நீதிபதி உட்கார்ந்து சுத்தியலை தட்டிவிட்டு தீர்ப்பு சொல்லிவிட்டு போய்விடுவார். ஆனால் அமெரிக்காவில் வரி கட்டும் எல்லாருக்கும், கோர்ட்டிலிருந்து இந்த வேலைக்காக ஓலை வரும். நேரில் போய் இதற்கான குவாலிஃபிகேஷன் எல்லாம் இருக்கிறதா என்று கோர்ட் ஆசாமிகளால் சரி பார்க்கப்பட்டால், இந்த வேலையை 16$ தினசரி சம்பளத்தில் இரண்டு வாரம் பார்க்க வேண்டும்.அமெரிக்க குடிமகன்களாக இருக்க வேண்டியது இதற்கான தகுதி என்றாலும், வரி கட்டுவதால் இமிக்ரண்ட்டுகளுக்கும் இந்த ஓலை வரும். 'அய்யா..நான் சிட்டிசன் இல்லை' என்று பதில் கொடுத்தால் போதும். விட்டுவிடுவார்கள். இந்த ஜூரி சிஸ்டம் நம் ஊரில் அந்தக் காலத்தில் இருந்ததாம். கொள்ளுத்தாத்தா ஜகந்நாதன் மாயவரம் முனிசிபல் சேர்மனாக இருந்ததோடு, நாகப்பட்டினம் கோர்ட்டில் ஜூரியாகவும் இருந்ததாக அப்பா சொல்லுவார். உண்மையா..உடான்ஸா என்று தெரியவில்லை.

இதை வைத்து எடுத்த Runaway Jury என்ற படத்தை நீள்வாரயிறுதியில் ( Long weekend :-) ) பார்த்தேன்.

படம் சரியான மசாலாதான். சொன்ன விதம் தான் அசத்தல். ஜான் க்ரீஷாம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இது. ஜான் க்யூசாக்,டஸ்டின் ஹாஃப்மன் மற்றும் ஜீன் ஹாக்மன் நடித்த இப்படம் சொல்லப்பட்ட ஸ்டைல் ஷங்கர் படங்களை ஒத்து இருந்தது. வெளிப்பார்வைக்கு சாதாரணனாக இருக்கும் நாயகன், மறைவில் கொலை செய்பவனாக, பயமுறுத்துபவனாக, அதைச் செய்ய தேவைப்படும் கரிய கடந்த காலத்தோடு...etc etc. நிறைய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் பின்புலங்கள், அமெரிக்க சமூகத்தின் அடிப்படை பிரச்சினையான ஸ்கூல் ஷூட்டிங்/துப்பாக்கி கலாசாரம், சம்பந்தப்பட்ட வழக்குகள், வக்கீல்கள் என கதை சுழற்றி சுழற்றி அடிக்கிறது.படம் பார்க்கும்போது கொஞ்சம் அசந்தாலும், கதையின் ஏதாவது ஒரு நுனி மிஸ் ஆகி விடும் அபாயம் இருக்கிறது. ஆனால், டாகுமெண்டரி வாடை அடிக்காமல், வெகுஜன விருப்பங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இந்த முக்கியமான விஷயத்தை சொன்னதற்கு ஒரு ஷொட்டு.

runaway_jury


நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரைப் பற்றி மேல் விவரங்கள் தெரிந்தால் சந்தோஷம். கிழக்குக்கரை நகரங்களில் இது வித்தியாசமானதாகவும் ( வெஸ்ட் கோஸ்ட் கலாசாரம் இருக்கிறது - more liberal ), பல படங்களில் குற்றம்/சதி வடிவமைக்கப்படும் இடமாகவும் இருக்கிறது. இதோடு 'மார்டிக்ரா' என்று கொண்டாடப்படும் நியூ ஆர்லியன்ஸ் திருவிழாவைப் பற்றியும் யாரேனும் எழுதினால் , மகிழ்ச்சி.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...