கார்மேகம்
=========
" நம் எல்லோரிடமும் ஆண்/பெண் என்ற இரு குணங்களும் நிரம்பிக் கிடக்கிறது. எனவே பெண் குழந்தைகளிடம் ஆண் குணங்களையும், ஆண் குழந்தைகளிடம் பெண் குணங்களையும் ஊக்கி வளர்த்தால் வாழ்க்கையில் பாதி குழப்பங்கள் ஒழிந்து விடும் " என்றாராம் ஓஷோ. குழந்தைகள் வளர்வதைப் பார்க்கும்போது இது உண்மைதான் எனத் தோன்றுகிறது. பெண் குழந்தைகள் என்றால் 'பார்பி டால், சமையல் சாமான், மைக்ரோவேவ் அவன், குழந்தை பொம்மைகள், டோரா கார்ட்டூன் என்று ஒதுங்க, ஆண் குழந்தைகள் கார், ட்ரக், பைக் , சைக்கிள் என்று வேறு திசையில் பயணிக்கின்றன. க்ரோமோசோமில் இதையெல்லாம் ஹார்ட்கோட் பண்ணிவிட்ட கடவுள், இதையெல்லாம் சில குழந்தைகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே வைத்து விட்டான் போலும்.
டீ.வில் வரும் கார் விளம்பரத்தில் " உங்கள் குழந்தை மம்மி என்ற வார்த்தையையோ, டாடி என்ற வார்த்தையையோ முதலில் சொல்வதில்லை. அவன் கார் என்பதை தான் முதலில் சொல்கிறான். எனவே எங்கள் காரை வாங்குங்கள் " என்கிறான்.எங்கள் வீட்டில் எங்கு போனாலும், எதை எடுத்தாலும், எதையாவது தேடினாலும் புளியங்கொட்டை சைஸிலிருந்து , பூத சைஸ் வரை கார்கள்...கார்கள்...கார்கள். டீ.வி பார்த்தால் கார், புத்தகம் படித்தால் கார், நாங்கள் பேப்பர் படிக்கும்போது எங்களுடன் உரசிக்கொண்டு அவனும் படிக்கையில் பேப்பரில் கார் , காரில் போகையில் கார், ஸ்கூலுக்கு போகயில் கார், அங்கே போனதும் கார் என்று சூர்யா சரியான கார் பைத்தியம். ஸ்கூலில் பெரிசாக சொல்லிக் கொடுத்து கிழிக்கவில்லை என்றாலும், அட்லீஸ்ட் அவர்கள் சொல்லித்தரும் சின்னச்சின்ன விஷயங்களை சிரத்தையாக செய்ய விடாமல் , கார் பைத்தியம் அவனைத் துரத்திக் கொண்டிருக்கிறதே என்று ஒருநாள் வீட்டில் உள்ள எல்லா கார்களையும் மூட்டை கட்டி ஓரமாகப் போட்டேன். "மனநிலை பாதித்து விடப் போகிறது ...அப்படி செய்யாதீர்கள் ' என்கிறாள் சூர்யாவின் மம்மி.
போன வாரம் குழந்தைக்கு "தனந்தரும் கல்வி தரும் ...தளர்வறியா மனம் தரும் " சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தபோது அவனாக " கார் தரும் " என்ற வார்த்தையையும் சேர்த்து விட்டான் என்றால்....
அவன் கார்மோகம் எந்த அளவிற்கு போயிருக்கிறது என்று விளங்குகிறதா..??
காரை எடுக்காதே என்று கட்டளை போட நல்லதொரு பரமசிவம்பிள்ளையை தேடிக்கொண்டிருக்கிறேன்.
அதட்டுவதற்கு ஒரு அடியாள் இருப்பது நல்லதுதானே..
No comments:
Post a Comment