Monday, June 13, 2005

Closer

மாண்டீயின் பதிவிலோ பின்னூட்டத்திலோ இந்தப் படத்தைப் பற்றிய சிபாரிசைப் பார்த்தேன். எடுத்தேன்.



டைட்டான படம் என்று சொல்வார்களே. அப்பேர்ப்பட்ட படம். வசனங்கள் முஞ்சைக் கிழித்து உள்ளிருக்கும் உண்மையை ரத்தமும், நிணமுமாக அறிமுகப்படுத்துகிறது. நல்லவனாக இருக்கும் ஒருவன், அநியாயமாக சீண்டப்பட்டு குதறப்பட்டால், எந்த அளவுக்குப் போகிறான் என்பதை பார்க்கையில் அய்யோ என்று வருகிறது. சில படங்களின் காட்சி அமைப்புகளில் தெரியும் அதீதமான விஷயங்கள், அது செக்ஸோ/ வன்முறையோ கொஞ்சம் ஜீரண பிரச்சினையை உண்டு பண்ணும். ஆனால் சில படங்களில் காட்சிகளின் துணையற்று வெறும் வசனங்களும், முகபாவங்களுமே திகைப்பை உண்டுபண்ணி அடி வயிற்றில் கல்லைக் கட்டிப் போட்டது போல இருக்கும். க்ளோஸர் இரண்டாம் வகை.

செய்தித்தாளின் ஆபீச்சுவரி எடிட்டர் லாரி என்ற ஒருவன் லண்டன் தெருக்களில் ஆலிஸ் என்றொரு இளம்பெண்ணை சந்திக்கிறான். பழக்கத்தில் காதலாகி மணந்து கொள்கிறான். கொஞ்ச நாளில் அன்னா என்ற இன்னொருத்தியை சந்திக்கிறான். போட்டோகிராஃபரான அவள் மேலும் இவனுக்கு ஒரு "இது". அவள் ஏற்கனவே விவாகரத்தானவள். எடிட்டர் கல்யாணமானவன் என்று தெரிந்த அவள் மறுக்கிறாள்.

இதற்கிடையில், எடிட்டர் இனையத்தில் பெண் பெயரில், சாட் பண்ணிக் கொண்டிருக்கும்போது, எவனோ ஒருத்தனை ( டான்), சீண்டி விட்டு, போட்டோகிராபரின் பெயரை தன் பெயராகச் சொல்லி, நேரில் சந்திக்க அழைக்கிறான். துரதிருஷ்டவசமாக சந்திக்க வரச் சொன்ன அந்த இடத்தில் போட்டோகிராபர் இருக்க, தேடி வரும் இணைய ஆசாமி டான் போட்டோகிராபரை மணந்து கொள்கிறான்.

கொஞ்ச நாள் கழித்டு ஒரு புகைப்பட கண்காட்சியில் இரு ஜோடிகளும் ( பரஸ்பரம் அறிமுகப்படுத்தப்படாமல்) தனித்தனியே சந்திக்கிறார்கள். எடிட்டருக்கும், போட்டோ அம்மணிக்கும் தீப் பிடிக்கிறது. விஷயம் இரண்டு பக்கமும் தெரிந்து விட, இரண்டு ஜோடிகளும் நாலு ஆசாமிகளாகி, பிறகு மூன்றாகிறார்கள் - எடிட்டரும் போட்டொ அம்மணியும் ஈருடல் ஓருயிர் ஆவதால். சோகத்தில் டான் தண்ணி அடித்துக் கொண்டு ஸ்ட்ரிப் க்ளப், பார் என்று அலைய, ஆலிஸ் தன்னுடைய பழைய தொழிலான ஸ்ட்ரிப்பர் வேலைக்குப் போய் விடுகிறாள். யதேச்சையாக ஒரு க்ளப்பில் அவளை சந்திக்கும் டான், அவளுடைய சோகம் தன் சோகத்தை ஒத்ததென்று சொல்லி அவளை மணக்க விருப்பம் தெரிவிக்கிறான். " I dont want to be your revenge fuck" என்றவள் மறுக்க, இவன் அல்லாடுகிறான். டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்க வரும் மாஜி மனைவியான போட்டொ அம்மணியை மறுபடியும் சேர்ந்து வாழ வற்புறுத்த, அவள் கையெழுத்து வாங்குவதிலேயே குறியாக இருக்கிறாள். "சரி .. For old times sake, கட்டக் கடேசியா ஒரு முறை படுத்துக்கலாம். அப்பதான் சைன் போடுவேன்" என்றவன் பிடிவாதம் பிடிக்க, பரிதாபப்பட்ட அவள் சம்மதிக்கிறாள். பேச்சுவாக்கில், சந்தேகப்பட்ட எடிட்டரிடம், படுத்துக் கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்ள, அவன் அவளை சந்தேகப்படுகிறான். " அட போடா ஜாட்டான் ( நன்றி: டோண்டு ஸார்) என்று வீசிவிட்டு மறுபடியும் டாக்டருடன் போய் செட்டிலாகி விடுகிறாள் இவள்.

கண்ணீரும் கம்பலையுமாக வரும் எடிட்டரிடம், "உனக்கு ஃபோட்டோ அம்மணி கிடையாது. நீ அலிஸிடம் போ. நான் அவளை ஸ்ட்ரிப் க்ளப்பில் பார்த்தேன். அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள் என்றவன், எடிட்டர் கிளம்பும் தருணம் அவனுடைய மிச்ச சொச்ச வாழ்க்கையயும் காலில் போட்டு நசுக்க
" ஆலிஸை நான் அனுபவித்தேன்" என்று சொல்லி ஒரு பொய் குண்டைப் போட்டு அனுப்புகிறான். இந்த விஷம் எடிட்டர் மனசில் அடி வண்டலாய் இருந்தாலும், ஆலிசை அவன் மறுபடி ஏற்றுக் கொள்கிறான். ஆனால் கொஞ்ச நாள் கழித்து சந்தித்த விஷயத்தைப் பேசுகையில், டான் உடனான ஸ்ட்ரிப் க்ளப் சந்திப்பில் ஒன்றுமே நடக்கவில்லை என்றவள் சொல்ல, மறுபடியும் அவளை சந்தேகப்பட்டு ஆபிச்சுவரி எடிட்டர் ரோட்டுக்கு வருகிறான்.ஆலிஸ் எல்லாவற்றையும் புறங்கையால் துடைத்து விட்டு, அமெரிக்கத் தெருக்களில் அக்கம்பக்கத்து ஆண்களை எல்லாம் ஜொள் வெள்ளத்தில் நனைய விட்டு நடந்து கொண்டு புது வாழ்க்கையை தொடங்குகிறாள்.

நடாலி போர்ட்மேன், பர்ஸூ( ஜூலியா ராபர்ட்ஸ்),ஜூட் லா, க்ளைவ் ஓவன் நடித்த இந்தப் படம் சமீப காலங்களில் பார்த்ததில் மிகச் சிறந்த படம். ஃபேமிலி சப்ஜெக்டிலேயே ஹாரர் எஃபக்ட் கொட்ண்டு வந்து, படம் முழுதும் வயிற்றில் ஆட்டோ ஓடும் உணர்வு வந்த படம். மொத்த பாத்திரங்களிலும் அசத்தோ அசத்தென்று அசத்தியவர் ஆலிஸாக நடித்த நடாலி. நேரில் இந்த மாதிரி பெண்களைப் பார்த்தால் நான் டவுசரிலேயே சூச்சு போய் விடுவேன் என்றாலும் எனக்கு அவளை ரொம்பப் பிடித்தது. அவளின் உறுதியும், ஒற்றைச் சொல்லில் அநாயாசமாக நிராகரிக்கும் coldness ம், ம்...கலக்குகிறார் அம்மணி.

எனக்கு ஒன்று புரியவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் கேள்விப்பட்ட சம்பவங்களிலும், சினிமாவிலும் அம்மணிகள் யாருடனாவது ஓடிப்போனால், ஆண்பிள்ளைகள் பின்னாலேயே போய், அழுது கதறி, மறுபடியும் தன்னுடன் வாழ வருமாறு அழைக்கிறார்கள். கொஞ்சம் கூட தன்மானமும், சுய கெளரவமும் இல்லாமல், இப்படிப் போய் அழைப்பதற்கு காரனம் லவ் என்கிறார்கள்.இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன்னை மதிக்காத இன்னொரு உயிரை, இப்படி வெட்கங்கெட்டத்தனமாக பின்னே போய் கெஞ்சுவதற்கு பெயர் லவ்வா..?? அது பரஸ்பர மரியாதையிலும் நெருக்கத்திலும் ஏற்படுவதில்லையா..?
தன்னை உதாசீனப்படுத்தி, இன்னொருவனை தெரிவு செய்யும் - பெண்கள் அத்தனை சீக்கீரம் இம் மாதிரி முடிவுகள் எடுப்பதில்லை - அவளை லவ் பண்ணுவது அத்தனை தேவையா..?? பெண்கள் வீக்கர் செக்ஸ் அல்ல. ஆண்களதான் என்று சொல்வதை ஆணித்தரமாக நிரூபணம் செய்யும் உதாரணம் இது.

குழந்தைகளுடன் பத்திரமாக தூங்க வைத்து விட்டு பார்க்க வேண்டிய படம் இது.

1 comment:

  1. நல்ல விமர்சனம், சுந்தர். எனக்கும் பிடித்த படங்களில் ஒன்று. 4 பேரில் க்ளைவ் ஓவனின் நடிப்பு ரொம்பப் பிடித்திருந்தது.

    //வயிற்றில் ஆட்டோ ஓடும் உணர்வு வந்த படம். //

    இங்கும் அதே. அதிலும் க்ளைவ் ஓவன், ஜூலியா ராபர்ட்ஸிடம், அவருக்கும் ஜூட் லா-விற்குமிடையே படுக்கையில் நிகழ்ந்தவற்றைப்பற்றி தோண்டித் தோண்டி கேட்கும் காட்சிகள் முகத்தில் அறைகின்றன.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...