Monday, September 19, 2005

பாட்டுக்கதை

1999ம் வருடம் வரை ஆடியோ சிடிகளை கன்ணால் கூட பார்த்ததில்லை. வெறும் கேசட்டுகள்தான் அதற்கு முன்பு வரை. படம் பார்த்து விட்டோ, அல்லது புது கேசட் வாங்க முடிந்த செல்வச்சீமான்கள் யாராவது சொல்லியோ, நல்ல பாடல்களை கேட்டு, அதை மெனக்கெட்டு எழுதி, மியூசிக் கடையில் கொடுத்தால், அவன் அதை பதிவு செய்து கொடுக்க நான்கு நாட்கள் ஆகும். அந்த நான்கு நாட்களிலும், அவன் சொல்லும் " இன்னம் ஆகலை சார்" என்கிற பதில்களே எண்ணிக்கையில் நாற்பதை தாண்டி விடும். பாட்டு மீது - குறிப்பாக - சினிமாப் பாட்டு மீது பைத்தியமாக இருந்த காலங்கள் அவை. போகும் பஸ்ஸை கூட "பாட்டு பஸ்" என்று செல்லமாக வகைப்படுத்தி வைத்திருந்த தோழ/தோழியர் கூட்டம். ஏதாவது புது படம் வந்தால், வாஞ்சையுடன் ஹாஸ்டலுக்கு எடுத்து வந்து, கூட்டத்தினின்று என்னை கடத்தி ரூமுக்கு கூட்டி வந்து உட்கார வைத்து, தனிமையில் பாட்டு கேட்க வைத்து மகிழ்ந்த சக லூஸுகள். பிரியப்படவர்களுடனான என் அந்தரங்கத் தருணங்களை கூட நான் பாட்டு வடிவத்திலேயே ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறேன் - தென்றல் வந்து என்னைத் தொடும் -- etc etc

சிங்கப்பூர் வந்து இறங்கியவுடன் முதலிரண்டு நாட்களுக்குள் முஸ்தஃபாவில் வாங்கியது என்னுடைய முதல் சிடி ப்ளேயர். வாங்கிய ஹரிஹரன் ஹிட்ஸ் சிடி கேட்டுக் கேட்டு தேய்ந்தது. சிங்கப்பூரில் மலிவு விலைக்கு கிடைக்கும் ஆடியோ சிடிகளில் என்னுடைய பழைய கால இளையராஜா பாடல்களை எல்லாம் "புத்தம் புதிய காப்பி" ரேஞ்சுக்கு கேட்டுக் கேட்டு மகிழ்ந்தேன்.

ஆச்சா..... அப்புறம் கல்யாணம் ஆச்சு. பாட்டு கேட்பது குறைஞ்சு போய் சம்சார சாகரத்தில் தொபாலென்று குதித்து நீச்சல் அடித்ததில் தினப்பாடே பெரும்பாடாச்சு. இதில் பாட்டெங்கோ போனது..??

இன்டர்நெட் பயன்பாடு சினிமா, பாட்டு, எம்.பி3 என்று வளர்ந்தோங்கி விட்ட இத்தனை காலம் கழித்து, மறுபடியும் பாட்டுகளில் கொஞ்சம் ஆர்வம் வந்திருக்கிறது. அம்பிகா அப்பளக்கட்டை விட குறைந்த விலைக்கு வால்மார்ட்டில் கிடைக்கும் ரெகார்டபிள் சிடிக்களும், அ(வ)திவேக இனையத்தொடர்புமூலம் "கவர்ச்சிகரமான விலைகளில்" கிடைக்கும் mp3 வடிவத்தில் தமிழ்ப்பாடல்களும் வேலையை சுலபமாக்கி விட்டது.

coolgoose.com என்றொரு தளம். தமிழிலே பாட்டுத்தளம் வைத்திருக்கும் எல்லாருமே இங்குதான் சேமித்து வைத்திருக்கிறார்கள் போல. கிடைக்காத பாட்டில்லை. மொழியில்லை. எதுவானாலும், தேடும் சாமர்த்தியம், கீ வேர்ட் ஜகஜ்ஜாலங்கள் தெரிந்தால் போதும், சட்டென்று வந்து நிற்கும். அதை டவுன்லோடி கொஞ்சம் சேர்ந்த பிறகு, Music match அல்லது Roxio மூலமோ ம்யூசிக் சீடிகளில் எழுதி விட்டால், சொர்க்கம்தான்.

நேற்றுத்தான் ஒரு ஈடு இறக்கி வைத்து இருக்கிறேன். தொட்டி ஜெயாவில் ஒரு பாட்டு ( உயிரே என்னுயிரே) , ஒரு கல்லூரியின் கதை ( காதல் என்பது) மற்றும் ஒரு நாள் ஒரு கனவு ( கஜுராஹோ), கஜினி (ஒரு மாலை...) போன்ற பாடல்கள் நேற்றில் இருந்து ஓ...ஓ..ஓடிக்கொண்டே இருக்கின்றன. இளையராஜா விட்டால் கங்கை அமரன் என்ற காலகட்டத்தில் இருந்து வித்யாசாகர், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ்,பரத்வாஜ் மற்றும் ரகுமான், இளையராஜா என்று நமக்கு இத்த்னை வெரைட்டி கிடைத்திருப்பதே ரொம்ப ஆரோக்கியமான சந்தோஷமான விஷயம்.

ஆனால், கடைசியாய் வாங்கிக் கொண்டு போன அந்த நாலு கேசட்டுகளும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. எத்த்னை யோசித்தாலும், அந்தப் பாடல்கள் அதே சீக்வென்ஸில் நினைவுக்கே வரமாட்டேன் என்கிறது

தவறிப்போதல் என்பது நிஜமாகவே இதுதானோ..??

4 comments:

  1. பழைய தமிழ்பாடல்கள் 89இல் கொண்டு வந்ததும் ஹிந்தி பாடல்களும் நிறைய ஹிந்துஸ்தாணி, கர்னாடக சங்கீத சிடிக்களும் இருந்தது. 10 வருட இடைவெளிக்கு பின் திரும்பி பார்த்தால் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது புரிகிறது. புதிய பாடகர்கள் வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான விஷயம்.

    ReplyDelete
  2. எத்த்னை தலைமுறைகள் மாறினாலும் இசை ரசனை நம் மக்களிடத்தில் குறையாதது மிகுந்த திருப்தி அளிக்கும் விஷயம் .Music is the one which refines the soul and makes them better human beings என்பது கண்கூடான உண்மை.
    உங்கள் கருத்துக்கு நன்றி பத்மா.

    ReplyDelete
  3. அப்படியே ஹிந்தி பக்கமும் எட்டிப் பாருங்க சுந்தர். எம்.எம்.க்ரீம், விஷால் ஷேகர், Himesh Reshammiya... எல்லாருடையதும் நல்லாயிருக்கு. ஆல்பம்ல பாகிஸ்தான் பாடகர் Faakhir... காதுல வந்து கொஞ்சும் குரல்.

    நிர்மலா.

    ReplyDelete
  4. கண்டிப்பா கேக்கறேன் டீச்சர். நன்றி

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...