Monday, October 17, 2005

End of Affair

நேற்று End of affair என்ற என்ற படம் ஒன்று பார்த்தேன். ஆழமான படம். அமைதியான படம். ஆனால் குழந்தைகளுடன் பார்க்கவே....ஏ முடியாத படம்.
இரண்டாம் உலகப் போர். குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும் பின்னணியில்
ஒரு எழுத்தாளன் திருமணமான மாதுவிடம் காதல் கொள்கிறான். இன்பமாக போய்க் கொண்டிருக்கும் வாழ்வில், திடீரென்று அவள் அவனை விட்டு விலகுகிறாள். காரணங்கள் சொல்லாத இந்த திடீர் விலகல் எழுத்தாளனை மிகவும் பாதிக்கிறது. ஏற்கனவே கணவன் போர் அடித்தததால், தன்னிடம் வந்த அவளுக்கு தானும் போர் அடித்து விட்டேன் போலும் என்று தானாகவே எண்ணிக் குமைந்து கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கிறான்.



கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் அவளை சந்திக்கிறான். அவள் பேச முனைந்தும், வெறுப்பில் அவளுக்கு முகங்கொடுக்காமல் இருக்கிறான். கணவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, " வேறு யாருடனோ அவள் சுற்றிக் கொண்டு இருப்பதாக" நினைத்து கணவன் ச்ந்தேகப்படுவதை சொல்ல, இதுதான் சாக்கு என்று கணவன் சார்பில் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் அமர்த்தி, அவளை வேவு பார்க்க தலைப்படுகிறான்.

விசாரணை முடிவு அவனுடைய மனத்தினை உலுக்க, அவனுடைய மனம் கடவுளின் பக்கம் திரும்புகிறது.

விருமாண்டியில் கமல் பிழிந்த ஜிலேபியை ஹாலிவுட்டில் பல பேர் பல படங்களில் பிழி பிழி என்று பிழிந்து தள்ளி இருக்கிறார்கள். வித்தியாசமான படைப்பாக்கம் என்ற வகையிலும், நல்ல ட்ரீட்மெண்ட் என்ற வகையிலும் கதை/படம் ரொம்ப பிடித்திருந்தது.

படைப்புகளில் வரும் இம் மாதிரியான திருமணத்தை தாண்டிய உறவுகளில்
தாண்டுபவர் ஆணாயிருந்தால் ஒரு மாதிரியும், பென்ணாயிருந்தால் வேறு மாதிரியும் படைக்கப்படுகிறது என்று எண்ணுகிறேன். ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட், தெலிவுட் என்று எதுவுமே இதற்கு விதிவிலக்கில்லாமல் இருக்கிறது.
தவறு செய்யும் ஆண் ஜாலி பேர்வழியாகவும், குறிப்பிட்ட பெண் என்றல்லாது எவர் வந்தாலும் ஜொள் வடிய நிற்பவராகவும், அந்த மூன்றாவது பெண்ணின் குணம் அல்லாது, இளமைக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வேலி தாண்டுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மிகச் சில படங்களில் சொந்தவாழ்க்கை(த்துணை) சரியாக அமையாதவர்கள் வேலி தாண்டுவதைக் கூட மிக குற்றவுணர்வோடு செய்வதாகவும், அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து வாழ்க்கையில் அடி பட்டுப் போவதாகவும் தான் சித்தரிக்கப் படுகிறார்கள்.
ஆனால் திருமன உறவுதாண்டும் பெண்கள் பற்றிய படங்கள் எல்லாம் அதற்கான வலுவான காரணங்களோடும், ஏதோ அதை விட்டால் வேறு வழியே இல்லாததால் தான் அப் பெண் இப்படி முடிவெடுக்க நேர்ந்தது என்றும் வலுவாக நிறுவப்பட்டிருக்கிரது சுருங்கச் சொன்னால், படைப்புகளை பொறுத்த வரையில் வரைவு தாண்டிய உறவுக்கு ஆணுக்கு அளிக்கப்படும் கரிசனத்தை விட பெண் பாத்திரங்களுக்கு அதிகமாக அளிக்கப்படுகிறது.

என் வீட்டம்மாவிடம் இது பற்றி கேள்வியபோது, " ஜொள்ளு விடும் ஆண்களின் விகிதாசாரத்தை ஒப்பிடும்போது, பெண்கள் எண்ணிக்கை இப்போது குறைவாக இருக்கிறது. அதனால்தான் எங்காவது தென்படும் இந்த மாதிரியான விவகாரங்களில் கூட அவளுக்கு இதற்கான சரியான காரணம் உண்மையாகவே இருக்கிறது. படைப்புகளில் இவ்வாறு வலிந்து காட்டப்படுகிறது என்று நீங்கள் நினைப்பது சரியல்ல. அந்தக் காலத்திலிருந்தே ராஜாக்களுக்கு நூற்றுக்கணக்கில் ராணிகள் இருக்கிரார்கள் என்று சொல்லப்படுகிரதே தவிர எங்காவது ஒரு ராணிக்கு அந்தப்புரம் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோமா. எனவே இதுதான் norm என்று ஆண்கள் சரமாரியாக ஜொள் விடுகிறார்கள். விதிவிலக்காக எங்கோ எப்போதோ வரைவு தாண்டும் பெண்களுக்கும் காரணங்கள் வலுவாக இருக்கிறது" என்றாள்.

எனக்கென்னமோ, ஆண்கள் தங்களின் ஒழுக்க விதிகளைப் பற்றி கவலைப்படுவதை விட, தங்களின் ஒழுக்கம் மீதான நம்பிக்கையை விட தங்கள் தாய், சகோதரி, மனைவி என்று நம் வாழ்க்கையில் இருக்கும் பெண்களின் ஒழுக்கம் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அதற்காகத்தான் கதைகளில்/ படங்களில் கூட நமக்கு சகஜமாக/ காரணமே இல்லாமல் வெறும் உடல் ரீதியாக வரும் இச்சைகள் இல்லாம் அவர்களுக்கு வராது என்று நம்ப விரும்புகிறோம். ஆம் ..விரும்புகிறோம். அதனால்தான் குஷ்பு மாதிரி பெண்கள் பேசும்போது நம்முடைய நம்பிக்கைகள் தகர்கிறதே என்ரு பயமாக இருக்கிறது.

வெறும் உரத்த பேச்சால் வரும் மட்டும் பயமல்ல அது.

2 comments:

  1. நல்லா இருக்கு.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...