Tuesday, November 16, 2004

இந்த நூற்றாண்டு இளவரசர்கள்

நான் கல்யாணம் செய்து கொள்ளும்போது எனக்கு வரப்போகிற பெண் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்னுடைய பெற்றோர்களுக்கு வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். தெரிந்த வட்டாரத்தில் உள்ள, நல்ல குடும்பத்துப் பெண்ணாக, தன் முசுட்டுப் பிள்ளையோடு அனுசரித்துப் போகிறவளாக, நீளநாக்கு உள்ள பையனுக்கு நன்றாக சமைத்துப் போடக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், மணப்பெண் இவள் என்று முடிவு செய்கையில் இந்த விதமான குணங்கள் முழுதாக உள்ள, அவற்றில் கூடக்குறைய இருந்தாலும் எல்லாமும் கொஞ்சம் இருப்பவளாகத் தான் பார்த்தார்கள். உருவ அமைப்பெல்லாம் அப்புறந்தான். என் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆகும்போது பெண்ணின் படிப்பு கூட தேவையான அம்சங்கள் என்கிற பட்டியலில் வந்திருக்காது. தன் குழந்தைகளுக்கு ஒரு அளவிற்குமேல் படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்று என் தாயார் பட்ட வருத்தம்தான் பட்டப்படிப்பு படித்த பெண்ணாக என்னைப் பார்க்க தூண்டியது. ஏன் தகப்பன் படிப்பு சொல்லித் தரக்கூடாதா என்று கேட்பவர்களுக்கு " கல்வியில்லாத பெண்கள் களர்நிலம். அங்கே புல் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை" என்று பாவேந்தரைத்தான் துணைக்கு அழைக்க முடியும்.

நிற்க. என் தமக்கைகளை வீட்டில் நன்றாக படிக்க வைத்தார்கள். ஆயினும் அதுவும் போதாமல் அவர்கள் திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கணவ்ர்களின் ஒப்புதலோடு தொடர்ந்து அஞ்சல் வழி கல்வி பயின்று, பிறகு அவர்களிடம் சண்டை பிடித்து வேலைக்கும் செல்லத் தலைப்பாட்டார்கள். பெணகளை வேலைக்கு அனுப்பவது கவுரவக் குறைச்சல் என்ற மனோபாவம் உடைய தன் கணவர்களை சமாதானப்படுத்தி, வேலைக்கு செல்ல என் சகோதரிகள் பட்ட பாடு கொஞ்சம் அதிகம்தான். வேலை செய்ய ஆரம்பித்து இத்தனை வருடம் கழித்து, அதனால் விளைந்த பொருளாதார, சமூக பயன்களைப் பார்த்து, தன் குழந்தைகளை பொறியியல் படிக்க வைத்தார்கள் என் சகோதரிகளின் வீட்டில்.

பொறியியல் படித்து முடித்து என் சகோதரியின் மகள் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். முன்னைபோல படித்து முடித்தவுடன் கல்யாணம் என்றில்லாமல் வேலைக்கு சென்று சொந்தக் காலில் நிற்க முயல்கின்ற பெண்களின் காலம் இது என்று என் சகோதரியும் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து கூடத் தங்கிக் கொண்டு இருந்தார். A job is something which keeps you warm between college and marriage என்று பெண்களை பார்த்து பெரியவர்கள் சொல்கின்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.
எல்லா பட்டதாரிகளுக்கும் ஏற்படுகின்ற சிரமங்கள் - வேலையில் முன் அனுபவம் - அவளுக்கும் ஏற்பட்டதால் வேலை கிடைக்காமல் NIIT கோர்ஸ் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். இந்த இடைவெளியில், சரி வேலைதான் கிடைக்கவில்லை. நல்ல பையனாக பார்த்து கல்யானம் பண்ணிக் கொடுத்து விடலாம் என்று விளம்பரம் செய்த போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
பழைய காலத்தில் சொல்லப்பட்ட (பெண்களின்) கல்யாணத் தகுதிகளோடு இப்போது பெண்ணுக்கு கம்ப்யூட்டர் படிப்பு மற்றும் வேலையும் குறைந்த பட்ச தேவையாகி விட்டது. கேட்பவர்கள் தங்கள் தகுதியைக் கூட அதற்கு முன் நினைத்துப் பார்ப்பது இல்லை. பெண்ணின் சுயசார்புக்காக நாம் உபதேசித்த படிப்பும், வேலையும் அவளுடைய சுதந்தரத்தை பாதித்து, அவள் தகுதியையே கீழிறக்குவது நல்லதற்கா, கெட்டதற்கா என்று தெரியவில்லை. வேலைக்குப் போவதும் , போகாததும் அவளுடைய இஷ்டம் என்றில்லாமல், இவையாவும் அவளாய் தேடிப் பூட்டிக் கொண்ட கொள்கின்ற
பொன் விலங்காய் ஆகிப் போகுமோ..??

ஏகத்துக்கும் எல்லாரும் கவலைப் பட்டுக் கொண்டிருக்க நேற்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அந்தப் பெண்ணுக்கு நேற்று வேலை கிடைத்த செய்தி அறிந்தேன். இனி குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்காவது என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தாதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாள் அந்தக் குழந்தை.

இனி வருவார்கள் ....21 ஆம் நூற்றாண்டின் இளவரசர்கள் வரிசை வரிசையாய்.

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...