Friday, September 30, 2005

அழகாய் இருக்கிறாய்..பயமாய் இருக்கிறது

ங்கொப்புரானே..சத்தியமான உண்மைங்க இது.

ஏதோ தமிழ்ப் படத்தோட பேரு இந்தப் பதிவோட தலைப்பு . வெச்சவனுக்கு சத்தியமா லவ்வுன்னா என்னான்னு தெரிஞ்சுருக்குங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி சுஜாதாவோட பிரிவோம் சந்திப்போம் முதல் பாகம் படிச்ச சமயத்தில - " கையை அப்பா உட்கார்ந்த நாற்காலியின் முதுகில் முட்டுக் கொடுத்து நின்று கொண்டிருந்தாள் மதுமிதா. நிலவின் தயவில் அழகாகத் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்து ரகுவுக்கு வயிற்றுக்குள் திடுக் என்றிருந்தது" என்று எழுதி இருந்த வாத்தியாரோட கைக்கு முத்தா குடுக்க வேண்டும் போல இருந்தது. அனுபவிச்சவனுக்கு தெரியுமே..!! மாட்டிக்கப்போறோமேன்னு நினைச்சுகிட்டே கிட்டக் கிட்ட போயி உழுவுற விஷயமுள்ள இது. அதனால்தான் மேற்சொன்ன படத்தலைப்பை கேட்டதும் அப்...புடி இருந்தது.

விஷயம் என்னன்னா, இப்போ பிரிவோம் சந்திப்போம் கதையே படமா வருதாம். "செல்லமே" காந்திகிருஷ்ணா எடுக்கறார்னதும் கொஞ்சம் கவலையா இருந்தது. செல்லமே சுவாரஸ்யமான படமென்று ஒத்துக் கொண்டாலும், நல்ல படமென்று சொல்ல முடியாதபடிக்கு கமர்ஷியல் ஜரிகை கொஞ்சம் தூக்கல்தான்.
பிரிவோம் சந்திப்போம் ஜீவன் கெடாதபடிக்கு எப்படி எடுக்கப் போறார்னு தெரியலை. முதல் பாகம் மட்டுமா..?? இல்லை ரகுபதி அமெரிக்கா வந்து மறுபடியும் மதுமிதாவை பாக்கற இரண்டாம் பாகமும் உண்டா..?? யார் யார் நடிப்பார்கள் என்று ஒரே ஆவல்.

என் Casting இது :

ரகுபதி - பரத் ( அல்லது தனுஷ்)
மதுமிதா - ஸ்ரீதேவி விஜயகுமார் ( அல்லது சந்தியா)
மதுமிதா அப்பா - தலைவாசல் விஜய்
ரகுபதி அப்பா - நாஸர்
ரகுபதி ஃப்ரெண்ட் ( கலா) - விவேக்
ரகுபதி அப்பாவின் செவிலி ( செல்வி..??) - ஈஸ்வரி ராவ்
ராதாகிருஷ்ணன் - "கனாக் கண்டேண்" பிருத்விராஜ்
ரத்னா - அஸின் அல்லது த்ரிஷா
ரத்னா அப்பா - டெல்லி கணேஷ்

உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா..??

இந்தப் பதிவு புரியவில்லை என்றால், "பிரிவோம் சந்திப்போம்" படிக்காத நண்பர்கள் மன்னிக்க என்றெல்லாம் சொல்ல மாட்டேன். மொதல்ல போய் படிங்கய்யா..:-)

Monday, September 26, 2005

கிழட்டு அனுபவங்கள்(4) - மலேசியா ராஜசேகரன்

இருபது வருடங்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப் பட்ட NEW ECONOMIC POLICY சொன்ன காலத்தில் முடிவடையவில்லை. வெவ்வேறு காரணங்கள சொல்லிக்கொண்டு, அவ்வப்போது பெயர் மாறறம் கண்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தோடு இனப் பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதாகச் சொன்ன கூற்று சட்டமாக்கப் பட்டதோடு நின்றுவிட்டது. மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே அரசாங்கத்தில் எல்லா நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறிவிட்டது.

அரசாங்க வேலைகளில் தொண்ணூறு சதவீதம் மலாய்க்காரர்களுக்கு என்று ஆகி விட்டது. ஆரம்பத்தில் அரசாங்க டென்டர்களில் மலாய் நிறுவனங்களின் விலை பதினைந்தௌ சதவீதம் வரை கூடுதலாக இருந்தால் பாதகமில்லை, ப்ராஜெக்டுகள் அவர்களுக்கே வழங்கப் பட வேண்டும். விலை வித்தியாசம் அதையும் மிஞ்சினால் மட்டுமே மற்ற இனத்தவருக்கு ப்ராஜக்ட் வழங்கப் படவேண்டும் என்று ஒரு கொள்கை இருந்தது. ஆனால் தற்பொழுது எல்லா அரசாங்க டெண்டர்களுமே மலாய் நிறுவனங்களுக்கு ம்ட்டும்தான் என்று ஆகி விட்டது.

அதேபோல் பல்கலைக்கழக நுழைமுக படிப்பு - மலாய் இனத்தவருக்கு மெட்ரிக்குலேசன் என்ற கல்விமுறையின் கீழ் சொல்லிக் கொடுக்கும் அதே கல்லூரி விரிவுரையாளர்களே பரிட்சைத் தாளைத் தயார் செய்து, அவர்களே மதிப்பெண் போட்டு, அதுவும் போதவில்லை என்றால், மறுபடியும் மாணவரை பரிட்சை எழுதச் சொல்லி, மற்றோரு முறை பரிட்சைத் தாளை திருத்தும் சலுகைமுறை மலாய்க்காரர்களுக்கு. STPM என்று சொல்லப் படும், உலகத்திலேயே மிகக் கடினமான பல்கலைக்கழக நுழைமுகத் பொதுத் தேர்வுகளில் ஒன்று மற்றஇன பிள்ளைகளுக்கு. அப்படியும் சீனக் குழந்தைகள் முண்டி அடித்து படித்து பிரமாதமாகப் பாஸ் பண்ணி விடுவார்கள். இதை முடுக்குவதற்கும் ஏதோ வேலை நடந்து கொண்டுவருகிறார் போல் தோன்றுகிறது..

அரசாங்கத்தை அமைத்துள்ள கூட்டனியில் பெரும்பான்மையுடைய மலாய் கட்சியின் சென்ற ஆண்டுக் கூட்டத்தில், உயர் கல்விஅமைச்சர் (ஒரு மலாய்க்காரர்) "நான் உயர் கல்விக்கான அமைச்சராக இருக்கும் வரையில் மலாய் இன பிள்ளைகளுக்கான போது பல்கலைக் கழக இட ஒதிக்கீடு கூடுமே ஒழிய குறையாது. எக் காரணத்தைக் கொண்டும் குறைய் விடமாட்டேன்" என்று சூளு ரைத்தார். இந்த வருட STPM பரிட்ச்சை முடிவுகள் வெளிவரும்போது பார்த்தால், எல்லா பாடங்களிலும் 'A1 எடுத்த மற்ற இன மாணவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் 700+ லிருந்து, 400+ ஆக குறைந்திருந்தது. மலாய் மாணவர்களுல் மெட்ரிக்குலேசன் முறையில் எல்லா பாடங்களிலும் 'A1' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடி இருந்தது.

மலாய்க்காரர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் வரலாற்றிலேயே இதுதான் பொற்காலமாக இருக்க வேண்டும். NEP என்பது அவர்களுக்கு கிட்டிய வரப் பிரசாதம் என்றே கூறவேண்டும். கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளில் மலாய் இனம் கண்டுள்ள மாறுதல் பிரமிக்கத் தக்கதாய் உள்ளது. உலகிலேயே இவ்வளவு சொற்ப காலத்தில் இத்தகையதொரு பிரமிக்கத் தக்க சமூக - பொருளாதார சீர்திருத்த திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டிருப்பது மலேசியாவில்தான் என்பதை UN, WORLD BANK, IMF போன்ற எல்லா அமைப்புகளுமே ஒருமித்தமாய் ஒத்துக் கொண்டிருக்கின்றன. :-)

ஒரு காலத்தில் பரிதாபப் படும் நிலையில், நலிந்து போய்க் கிடந்தது மலாய் இனம். ஆனால் NEP க்கு அப்புறம் அவர்களுக்கு வந்துள்ள கம்பீரம், மனத் தெம்பு, வாழ்க்கை முறை யாவுமே மற்றவரை பிரமிக்க வைக்கும் நிலையில் உள்ளன. இவற்றை எல்லாம் போகட்டும் என்று நாம் பெருந்தன்மையோடு மனதை தேற்றிக்கொண்டாலும், ஒரு விஷயம் மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. 35 ஆண்டுகளாக எல்லா விதத்திலும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து ஊட்டப் பட்டதின் பின்விளைவு என்னவாகி விட்டது என்றால், 40 வயதுக்கு குறைந்த அத்தனை மலாய்கார குடிமகனும் படிப்பிலிருந்து, வேலைவாய்ப்பிலிருந்து, தொழில்துறை லைசன்சுகளிலிருந்து, வீடுவாசல் வாங்குவதில் சலுகைகளிருந்து, எல்லா விதத்திலும் தங்களுக்கு முதல் சலுகை வழங்கப் பட வேண்டும் என்பதை 'பிறப்பு உரிமையாக' நினைக்கத் தொடங்கி விட்டனர். இவர்களின் எண்ண ஒட்டத்தைக் கண்டு மலாய் இனத்தின் முதிய தலைவர்கள் யாவரும் பயப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் மனதில் என்ன நினைத்தாலும், ஜனத்தொகையில் மலாய் இனத்தவர்கள் 63 சதவீதம் இருப்பதால், இவர்களைத் தட்டிப் பேச இங்கு யாருக்குமே துணிச்சல் இல்லை. அத்தோடு தட்டிப் பேச முற்பட்ட சில ம்லாய் தலைவர்கள் 'இனத் துரோகிகள்' என்று முத்திரை குத்தப் படுகிறார்கள்.

இதற்கு நடுவில்தான் இங்கு உள்ள இந்தியரின் வாழ்க்கை ஓட்டம் தட்டுத் தடுமாறிப் போய்க்கொண்டு இருக்கிறது. சரி சீனர்கள் இதை எல்லாம் எப்படி சாமாளிக்கின்ரார்கள் என்று கேட்டால். அவர்களின் DNA யே வேறு. இத் தொடரில் வரும் அடுத்த பாகம் 5 ம், 6 ம் அவர்களைப் பற்றியதே. அவற்றில் மலேசியாவில் உள்ள சீன இனத்தவரைப் பற்றி விரிவாக சொல்கிறேன்.

இப்போது நம் இனத்தைப் பார்ப்போம். முந்தைய தொடரில் கூறியதுபோல், மலாயா நாட்டிற்கு வந்த இந்திய (குறிப்பாக தமிழ் இன) 'ஸ்டோக்கின் குவாலிட்டி' சிறிது கம்மியானதாகப் போனதால், இங்கு உள்ள தமிழர்கள் கிடைத்த வாய்ப்புக்களை முறையாக பயன் படுத்த தெரியாது, இந் நாட்டில் இருக்கும் இனங்களிலேயே நலிந்த இனங்களின் ஒன்றாக தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர். 30 - 40 வருடங்களுக்கு முன்பாவது இங்கு இருந்த ரப்பர் எஸ்டேடுகளில் கூட்டமாக வாழ்ந்து, ஏழைகளானாலும் ஒரு குறிக்கோளுடனான வாழ்க்கை முறையை கொண்ட ஒரு இனமாக சிறிது கவுரவத்தோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக, எஸ்டேட்டுகளில் 'குறைந்த சம்பளம் வாங்கிக் கொள்வதோடு, கடினமாக உழைப்பவர்கள்' என்ற காரணத்தினால் இந்தோனீசியாவிலிருந்து வரும் கள்ளக் குடியேறிகளுக்கு எஸ்டேட் வேலைகளும் சென்று விடுகின்றன. இதனால் நம் இன இளைஞர்களும் எஸ்டேட் வேலைகளை வெறுத்து ஒதுக்கி, நகர்ப் புறங்களுக்கு வேலை தேடி வந்து விட்டனர்.

***************************

இப் பாகத்தை இன்று முடிக்கலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. ஆதலால் இந்தப் பாகத்திற்கு இன்னொரு பகுதி எழுதிவிட்டு, பாகம் 5 க்கு செல்கிறேன். நான் இவ்வளவு விரிவாக எழுதுவது போர் அடித்தால், வாசகர்கள் தயவு செய்து எனக்கு உங்கள் கருத்தை சொல்லுங்கள். விரும்பினால் என்னை தனிமடலிலும் தொடர்பு கொள்ளலாம். இதற்கு முன் தமிழில் எதையுமே எழுதி எனக்கு பழக்கமில்லை என்பதால் உங்கள் கருத்தினை வைத்து சொல்லுவதி சற்று இலகுவாக்கிக் கொள்கிறேன். தமிழ்மணத்தில் இப்படி ஒரு தொடருக்கு வரவேற்பு இருக்குமா என்பதே சந்தெகமாக இருந்தது. அது இப்போது நீங்கி இருக்கிறது. உங்களுக்கு எனது நன்றிகள்.

ஹாலிவுட் அபூர்வராகங்கள்

மே-திசம்பர் தம்பதிகள் என்றால், அமெரிக்காவில் வாயைச் சுழித்துக் கொண்டு மர்மப்புன்னகை பூப்பார்கள் வெள்ளைக்காரர்கள். மே மாதம் பிறந்த ஆணும், திசம்பர் மாதம் பிறந்த பெண்ணும் கணவன் மனைவியாக்கும் என்பதன் கூட,
மே மாசம் பிறந்த வயதாகிவிட்ட ஆண், தோற்றத்துக்கும் இளமைக்கும் மட்டுமே மதிப்புக் கொடுத்து ஒரு சின்னப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டான் என்பதும், அந்த சின்னப் பெண் கிழவனாரிடம் இருக்கும் டப்புக்காக, அவரை கல்யாணித்துக் கொண்டாள் என்பதும்தான் அந்த இளக்காரச்சுழிப்புக்கு காரணம்.

இதிலும் இங்கே புரட்சி.



நாற்பத்திரண்டு வயதான பேரிளம்பெண் டெமி மூர் இருபத்தேழு வயதான ஆஷ்டன் கெட்சர் என்ற குட்டி நடிகனை மூன்றாவது கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்களாம். நேற்று லாஸேஞ்சலீசில் கல்யாணம். கல்யாணத்துக்கு இரண்டாவது புருஷன் ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் ப்ரூஸ் வில்லிஸ் மூலம் பிறந்த டீன் ஏஜ் குழந்தைகளுடன் அம்மணி கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.அந்த குழந்தைகளில் ஒன்று தன் புது அப்பாவை MOD ( My other Daddy) என்று கூப்பிடுகிறதாம்.

நாம் அங்கே குஷ்புவை மன்னிப்பு கேட்க வைக்கிறோம். சானியா மிர்சாவை எட்டு கஜம் கட்டிக் கொண்டு டென்னிஸ் ஆடச்சொல்கிறோம். சல்மாவை நக்கலடிக்கிறோம். ஆனால் ராத்திரி ரெண்டு மணிக்கு மேல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு எஃப் டீவி பார்க்கிறோம். கிழவர்கள் லுங்கி கட்டி கொண்டு பலான படம் பார்க்கிறார்கள்.

திருப்தியுறாத காமத்தினால் ஒரு தேசமே
அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது


என்று கணையாழியில் வாசித்ததாக நினைவு. உலகம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதை வெளிப்படையாக விவாதிப்பதில்தான் தயக்கம்.ம்..ஹூம்.

Thursday, September 22, 2005

நாணயமில்லா விகடன்


இப்போதுதான் முதல் இதழ் வந்திருக்கிறது. அதிலேயே பெரிய டுபாக்கூர் கதையை அவிழ்த்து விட்டிருக்கிறது நாணயம் விகடன்.

"செல்போனிலே காமிரா வசதியை கண்டுபிடித்த உசிலம்பட்டிகாரர் சங்கரநாராயணன்" என்ற வரிகளோடு அரம்பிக்கும் ஒரு கட்டுரையை இந்த வசதியை உண்மையிலேயே கண்டுபிடித்த விஞ்ஞானிகள் பார்த்தால் ரத்தக்கண்ணீர் விட்டு விடுவார்கள்.

காரணம்...கண்டுபிடித்த "விஞ்ஞானி" ஷங்கர் நாராயணன் எங்கள் இந்திய கம்பெனியில் பணிபுரிந்த மார்க்கெட்டிங் மேனேஜர் ஷங்கர். அவருக்கும் மல்ட்டிமீடியாவுக்கும் இத்த்னை தொடர்பு இருக்கிறதென்று விகடன் பேட்டி வரை அவருக்கே தெரியாதென நினைக்கிறேன். அவரோடு நான் பேசி இருக்கிறேன். பழகி இருக்கிறேன்.

இங்கு வந்தது கூட எங்கள் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் கம்பெனி முதலாளி கால்யா மூலமே வந்தார். Emuze என்பது கால்யாவின் கம்பெனி. அந்த ஈம்யூஸிலே செல்ஃபோன் காமிராவிலே உபயோக்கப்படும் Compression Software கண்டுபிடித்தார்களென்று தெரியும். அதனால் அந்த நிறுவனத்தை Flextronix என்ற நிறுவனம் வாங்கியதென்று தெரியும் அதில் இவர் துணைத்தலைவரா என்பது கூட கேள்விக்குரியது என்கிறார்கள் அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள்.

யுனிகோட் (தமிழை) கண்டுபிடித்தவர் தமிழா முகுந்தராஜ் என்பவர் என்பது எவ்வளவோ அபத்தமோ, அதை விட ஆயிரம் மடங்கு அபத்தம் "செல்போனிலே காமிரா வசதியை கண்டுபிடித்த உசிலம்பட்டிகாரர் சங்கரநாராயணன்" என்பது.

சங்கர் ..சரி பண்ணிடுங்க..!! இல்லாட்டி நாணயம் ( விகடன்) படுத்துரும்.

கிழட்டு அனுபவங்கள்(3) - மலேசியா ராஜசேகரன்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொடங்கி 1940 வரை இந்தியர்கள் மலாயாவிற்ககு கூலி வேலைக்காகவும், தொழில் புரிவதற்காகவும் சரமாரியாக வந்துகொண்டு இருந்தனர். பிறகு இரண்டாம் உலகப் போர் வந்தது. இந்தியர்கள் இங்கு வருவதும் நின்றது.

ஆரம்பத்தில் இந நாட்டில் இந்தியர்களின் நிலை ஒரளவிற்கு கம்பீரமானதாகத் தான் இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் ரப்பர் எஸ்டேட்டுகளிலும், ரயில்வேதுறையிலும், சாலை நிர்மாணிப்புத்துறையிலும் கூலி
ஆட்களாக வேலை செய்து வந்தனர், சிறிது படித்ததவர்கள் அரசாங்க வேலைகளில் - ஆசிரியர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், டெக்னிஷியன்களாகவும் பணி புரிந்தனர். பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்கள் டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், இஞ்சினியர்களாகவும் செயல் பட்டு வந்தனர். வர்த்தகர்களாக வந்தவர்கள் வாணிபம், வர்த்தகம் என்று இருந்தனர். ஆக எல்லா நிலைகளிலும் இந்தியர்களுக்கு இந் நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறந்த பங்கு, என் காலத்திலேயே நான் பார்க்க இருந்தது.

பிறகு 1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி, இங்குள்ள இந்தியர், மலாய்க்காரர், சீனர் அனவரது தலைஎழுத்தும் என்றென்றும் நிரந்தரமாக மாறும் வகையில் ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வு நடந்தது. பெரும்பான்மை மலாய் இனத்தவருக்கும், அடுத்த பெரும்பான்மை கொண்ட சீன இனத்தவருக்கும் இடையில் ஒரு பயங்கர இனக் கலவரம் நடந்தது. கோலாலம்பூரிலும் பினாங்கிலும் சுமார் 3,000 பேர் (சீனர்களும், மலாய்க்காரர்களும்) வெட்டிக் கொல்ல பட்டனர். அரசாங்கம் பார்லிமண்டைக் கலைத்து எமர்ஜன்சியை ஆட்சிமுறையை அமல் படுத்தியது.

அதன் பிறகுதான் நான் முன்பு சொன்ன BUMIPUTRA பாலிசி அமுல் படுத்தப் பட்டது. அதாவது "மலாயா மண்ணுக்கு உரிமையாளர்களான மலாய் இனத்தவர்கள், அவர்கள் நாட்டிலேயே பொருளாதார பலத்தை மற்ற இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டு, ஒன்றும் இல்லாது பிச்சைக் காரர்கள் போல் இருக்கின்றனர். இந்த நிலை நீடிக்கும் வரை மலாயாவில் நிரந்தர அமைதியை எதிர் பார்க்க முடியாது" என்ற கூற்றை மலாய் இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அன்றைய அரசாங்கம் முன் வைத்ததோடு அல்லாமல், "NEW ECONOMIC POLICY" என்ற ஒரு புதிய மலேசிய பொருளாதாரத் திட்டத்தை பார்லிமெண்டின் முன் சமர்ப்பித்தது. இத்திட்டத்தின் கீழ் 1970 ல் தொடங்கி 20 வருடங்களுக்கு மலாய் இனத்தவருக்கு பலவிதமான பிரதான சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்பதும், இந்த காலக் கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்குரிமை 30% எட்ட எல்லா முயற்சிகளும் மேற்க் கொள்ளப் படவேண்டும் என்பதும் சட்டமாக்கப்பட்டது. இச் சட்டம் வேலை வாய்ப்பு, பல்கலைக் கழகப் படிப்பு, தொழில்துறை உரிமங்கள், அவர்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு யாவற்றையும் உள்ளடிக்கிய ஒரு காம்ப்ரிஹன்சிவ் மாடலாக உரு எடுத்தது.

இந்த திட்டத்தை சீனர்களும், இந்தியர்களும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இத்திட்டத்தோடு வேறு ஒரு துணைத் திட்டமும் அதே சமயத்தில் பார்லிமெண்டின் முன் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக்கப் பட்டது. அதாவது, மலாய்காரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முனையும் அதே வேலை, இனப்பாகுபாடு அன்றி மலாயாவில் உள்ள எல்லா எழை மக்களின் நிலைகளையும் மேம்படுத்துவது அரசாங்கத்தின் தலயாய குறிக்கோள் என்பதாகும்.

"நியாயம் தானே, அவர்கள் நாட்டிலேயே மலாய்க் காரர்கள் சிறுமைப் படுத்தப் படுவது முறை இல்லைதானே ! வெறும் 20 வருடங்களுக்கு தானே. மலாய் காரர்கள் எவ்வளவு பெரிய சோம்பேறிகள் என்பது நமக்குத் தெரியும். இவர்களுக்கு எவ்வளவு ஊட்டி விட்டாலும் இவர்கள் பெரிதாய் ஒன்றும் சாதித்துவிடப் போவது இல்லை. என்ன ஆகிவிடப் போகிறது. சட்டத்தை ஒத்துக் கொள்வோம்." என்று மற்ற எல்லா இனத்தவருமே ஒரு தப்புக் கணக்குப் போட்டு, NEW ECONOMIC POLICY யை சட்டமாக்க துணை புரிந்தனர்.

ஆனால், அதற்கு அப்புறம் நடைமுறையில் நடந்தது என்ன என்று நினைக்கிறீர்கள் ?? அடுத்த பகுதியில் கூறுகிறேன்

Wednesday, September 21, 2005

வானளாவிய ரைஸ்

காந்தலீசா ரைஸ் என்ற பெயரை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கன்சர்வெட்டிவ் கட்சி மற்றும் சிவில் லிபர்ட்டியில் அந்தளவு நம்பிக்கை அற்ற குடியரசுக் கட்சியில் ஒரு கறுப்பின மாது, இத்தனை உயரங்களுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்து நான் ஆச்சரியப்படுவதுண்டு.

ஜார்ஜ் புஷ் மூச்சா போக வேண்டுமென்றால் கூட இவரைத்தான் கேட்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வழக்கம்போல, அதிபருக்கு சங்கடமூட்டும் இந்த சேதி அமெரிக்க ஊடகங்களால் மழுப்பப்பட்டது.

Tuesday, September 20, 2005

சொரணை

இந்த நெளிவு சுளிவுன்னு ஒரு சமாசாரம் இருக்கு. எல்லா சைடையும் தட்டி விட்டுகிட்டே, எல்லா சமரசத்தையும் பண்ணிகிட்டே, அப்படியே சைடுல பொழப்பையும் பாத்துக்கிறது. இலக்கியத்தோட வேற "ஏதும்" கலக்கும் முன்னாடி, இலக்கியவாதிகளும் எழுதுபவர்களும் நெளிவு சுளிவு இல்லாத ஏமாளியாகத்தான் இருந்தார்கள். எப்போ, மத்த கேட்டகிரி எல்லாம் இதுல எறங்கிச்சோ, அப்பவே தந்திரமும், ஆள்காட்டித்தனமும், தனக்குன்னு ஆள் சேத்துகிடுறதுக்காக எந்த லெவலுக்கு வேணா இறங்கறதும், மனசாட்சியைக் கயட்டி வெச்சுட்டு அதுக்கு விரோதமா ஜல்லி அடிக்க இறங்கறதும், இன்னமும் மத்த அலங்காரங்களும் சேந்துடுச்சி

கெவின், கெவின்னு எங்க ஆபீஸ்ல ஒரு ஆள். சரியான மண்டைன்னு மக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நான் அந்தளவு பழகினது இல்லை. நான் வரதுக்கு முன்னயே வேற டீமுக்கு போய்ட்டாராம். ஆனா பாக்கும்போதே கொஞ்சம் ரிசர்வ்டு டைப்புனு - முசுடுக்கு Euphemism - தோணற முகம். அவர் எழுதிவெச்ச ஷெல் ஸ்க்ரிப்டுதான் இன்னைக்கு வரை ஜே ஜேன்னு ஓடிகிட்டு இருக்கு.

ஆனா பாருங்க..அவருக்கு மேலே சொன்ன சமாசாரம் ப்ராப்ளம். நெளிவு சுளிவுங்கறதே சுத்தமா கிடையாது. அவருகூட சண்டை வராத ஆட்களை எங்க ஆபிஸ்ல வெரல் உட்டு எண்ணிடலாம். அதும் சாதாரண சண்டை கூட இல்லை. மனசுல வடு வர்ற மாதிரி சண்டை போடற ஆளு.

என்னாச்சு..எங்காபீஸ்ல ப்ராஜெக்ட் முடிஞ்சு வேற எடத்துக்கு வேலை தேடிப் போனார். இவருடைய மண்டை பவர் தெரிஞ்சாலும், attitude மகாத்மியம் தெரிஞ்சு யாரும் வேலை குடுக்காம கெவின்னாலே தலை தெறிக்க ஓட ஆரமிச்சுட்டாங்க.
நடுவுல இந்தாள் வீட்டை வித்து, பர்னிச்சர் வித்து, கார் எல்லாம் வித்து சாப்பிடற நிலைக்கு போய், இப்போ எங்கேயோ வால் மார்ட்டில வேலை பாக்கிறாராம்.

அதிகபட்சமா சொரணை இருந்தாலும் தப்பு, முதுகெலும்பே இல்லாம புழு மாதிரி அலையறதும் தப்பு. எனக்கு இப்பலாம் கோபம் அதிகமா வந்தா கெவினைத்தான் மனசுல நினைச்சுக்கிறது.

என்ன அறிவு இருந்து என்ன பண்ண..? மனசு தெளிவா இருக்கணும்ல...??

பலாப்பழம் - இதயக்கனி..??


சந்தேகமே இல்லை. அரசியலில் கண்டிப்பாக ஜெயித்து விடுவார்.

இதுவரை கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகங்களையும் எல்லாரும் களைந்து விடலாம். பின் என்ன..?? பண்ருட்டி ராமச்சந்திரன் அ.கொ.தீ.....ச்..சீ.. தே.மு.தி.கவில் இணைந்து விட்டாராம்..!! அதிமுகவில் எம்.ஜி.ஆர் சகல செல்வாக்குடன் இருந்த காலகட்டங்களிலேயே டெல்லி வேலைகளுக்கு பண்ருட்டியாரைத் தான் நம்பி இருந்தாராம். திமுகவுக்கு நாஞ்சில் மனோகரன் போல, அதிமுகவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் என்று சொல்லப்பட்டது அந்தக் காலத்தில்.

அது சரி..ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கும் நம்ம கப்பித்த்தான் எதற்கு பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கிறார்..?? காரணம் ரொம்ப சிம்பிள். எதை (கி)ஒழிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தாலும், முதலில் அரசியல் தரகர்கள் - பச்சையாக புரோக்கர்கள் - முக்கியம். பவுடர் மூஞ்சிகளை வைத்துக் கொண்டு வசனம் பேசலாமே ஒழிய பாலிட்ரிக்ஸ் பண்ண முடியாது என்பது கப்பித்தானுக்குத் தெரியும். இதே காரணத்துக்காகத்தான் "காலத்தின் கட்டாயம்" புகழ் ஆர்.எம்.வி சூப்பரை சூடேற்றிக் கொண்டிருந்தார். அவரை நம்பியதற்கு இவரை நம்பி இருந்தாலாவது.......பொறுங்கள் ...... பொறுங்கள்..பவுடர் மூஞ்சிக்குப் பின்னிருந்து அரசியல் செய்த- செய்கின்ற அத்தனை அரசியல் அநாமதேயங்கள் எல்லாம் இவரிடம் தான் கடசியில் வருவார்கள் போல.

இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். நாட்டை மாத்தப் போறாராம். !!!

ஹெஹ்..ஹெஹ்..ஹே...!! தமிழனின் தலையத் தடவ இன்னொரு சந்தன வியாபாரி.

கிழட்டு அனுபவங்கள் - மலேசியா ராஜசேகரன்



இதுவரை படிக்காதவர்களுக்காக - முதல் பகுதி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தான் இந்தியாவிலிருந்து தமிழ் பேசும் மக்கள் மலாயாவிற்கு பிரிட்டீஷ்காரர்களால் இங்கு உள்ள ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வற்காக கொத்தடிமைகளாக கொண்டுவரப் பட்டனர். ஒரு மேஜயை போட்டு 'விருப்ப பட்டவர்கள் மலாயா போவதற்கு பதிந்து கொள்ளலாம்' என்று பிரிட்டீஷ்காரர்கள் தங்களின் முதல் ஆள்சேர்ப்பு வேலையை மேற்கொண்டதே மதராஸ் துறைமுகத்தில்தான்

இப்படி வந்தவர்கள் எத்தகைய மக்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? பொருளாதாரம் என்று எதுவுமே இல்லாதவர்களும், தாழ்த்தப் பட்டவர்கள் என்று ஒதுக்கப் பட்டவர்களும், குடும்பம் குட்டி என்று பாரம்பரியம் எதையும் சுட்டி காட்ட முடியாதவர்களும் தான் வந்தவர்களில் பெரும்பாலோர். அதனால்தான் இன்றளவிலும் இந்தியர்கள் உலகம் முழுவதிலும் 96 நாடுகளில் குடியேறி நல்ல பொருளாதார நிலைகளில் இருந்தாலும், மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மட்டும் நலிந்து போய் கிடக்கிறார்கள். காரணம் அடிப்படையிலேயே இங்கு வந்து சேர்ந்த தமிழ் இனத்தின் தரம் சிறிது கம்மியானதாகப் போனதனால் தான்.

மலேசியாவில் சிறையில் உள்ளவர்களில் 45% இந்தியர்கள், டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்களில் 20% இந்தியர்கள், போதைப் பித்தர்களில் சுமார் 20% இந்தியர்கள், பிச்சைக்காரர்களில் 45% இந்தியர்கள், கொடுர குற்றங்கள் புரிபவர்களில் 40% இந்தியர்கள், கேங்க்ஸ்டர்களில் 55% இந்தியர்கள், விகிதாச்சாரப் படி அதிகமான தற்கொலைகளும் இந்திய சமூகத்தில்தான் நடக்கின்றது.

ஆனால் மலேசியப் ஜனத்தொகையில் இந்தியர்கள் எத்தனை விகிதம் என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 7.7 % மட்டும்தான். மலேசியப் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்குரிமை எத்தனை விகிதம் என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 1.5 % மட்டும்தான். அதிலும் Twin Tower கட்டிய ஆனந்த கிருஷ்ணன் ஒருவரை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இந்தியரின் பங்குரிமை இங்கு 1.0 % குறைவாகத்தான் இருக்கும்.

இங்கு சராசரியாக இந்தியன் என்பவனை மற்ற இனத்தவர் யாருமே மதிப்பதுமில்லை, சட்டை செய்வதுமில்லை. நான்கு அல்லது ஐந்து இந்திய இளஞர்கள் ஒன்றாக ஒரு பொது இடத்திற்குச் சென்றால், மற்ற இனத்தவர்கள் அவர்களைப் பார்த்து ஒதுங்கி விடுவார்கள். இதுதான் தமிழர்களின் நிலை. இதுவரை நான் சொன்னதெல்லாம் தமிழ் இனத்தவருக்கே பெரும்பாலும் பொருந்தும். இந்தியர்களில் இவர்கள் 80% விழுக்காடு இருக்கிறார்கள்.

தமிழர்களைப் போலவே மலையாளிகலும், தமிழ் பேசும் சிலோன் காரர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், பிரிட்டீஷ்காரர்களால் கொண்டு வரப்பட்டார்கள். ஆனால் இவர்கள் கொத்தடிமைகளாக வரவில்லை. கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்களை மேய்த்து மேற்ப்பார்வை செய்வதற்காக, இயல்பான சம்பளத்திற்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக கொண்டு வரப்பட்டார்கள். இப்படி கொண்டு வரப்பட்டவர்கள் படித்தவர்களாகவும், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களாகவும், மேல் ஜாதிக் காரர்களாகவும் இருந்தார்கள். இதனால் இந்த நாட்டில் இருக்கும் மலையாளிகளுக்கும், தமிழ் பேசும் சிலோன் காரர்களுக்கும் இன்றளவிலும் ஒரு 'சுப்பிரியோரிட்டி காம்ப்ளெக்ஸ்' இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் தமிழர்களை விட இந்த இரண்டு பிரிவினர்களும் எல்லா வகையிலும் சிறப்பாகவே இருக்கின்றனர். (TWIN TOWERS கட்டிய ஆனந்த கிருஸ்ணன் ஒரு சிலோன் காரர்).இந்தக் கோஷ்டிகளெல்லாம் போக பஞ்சாபி இனத்தவர்கள் போலீஸ்காரர்களாகவும், நாட்டுக் கோட்டை செட்டியார்கள், குஜராத்திகள், சிந்திக்கள், தமிழ் முஸ்லீம் இனத்தினர் ஆகியோர் வியாபாரிகளாகவும் இந்த நாட்டுக்கு வந்தார்கள். இவர்கள் எப்படி உள்ளார்கள் என்பதை பிறிதொரு நாள் கூறுகிறேன்.

அடுத்த கிழட்டு அநுபவங்கள் தொடரில் மலேசியாவில் தமிழ் இனத்தவர் இவ்வளவு பின் தங்கி இருக்க பூர்வாங்க காரணங்களை அலசி பார்க்க முயலுகிறேன்.


ஏதோ சொல்லத் தொடங்கி ராஜசேகரன் வேறு ஏதோ சொல்லிக் கொண்டு போகிறார் என்று நினைக்காதீர்கள். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை அறிந்தால்தான், எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும். ஆதலால் பொருத்திருங்கள் ..... நான் முன்பு சொன்னதுபோல் உங்களின் 'அமெரிக்காவா..இந்தியாவா' என்ற டிலைமாவை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து ஆராய என் அநுபங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

Monday, September 19, 2005

கிழட்டு அனுபவங்கள் - மலேசியத் தொடர்

பெற்றோர்கள் ஊருக்குப் போன அலுப்பில் இருந்த நான், அமெரிக்க வாழ்க்கை ஏற்படுத்தும் தம்னிமை உணர்வையும், ஊருக்குப் போய் விடலாமா என்று தோன்றுவது பற்றியும் எழுதி இருந்தேன். கடந்த நூறு வருடங்களாக மலேசிய மண்ணில் செட்டில் ஆகி இருக்கும் என் நண்பர் அதற்கு எழுதிய பதில், அவர் வார்த்தைகளிலேயே "கிழட்டு அனுபவங்கள்" என்ற தொடராக உருப்பெற்று விட்டது.

இனி " மலேசியா" ராஜசேகரன் பேசுகிறார் .....

நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் (நானும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த, மலேசியாவில் உள்ள 500 உறவினர்களில், 90 விழுக்காட்டினரும்) இங்கு NRI ஆக இருப்பதில் ஒன்றும் பெரிதாய் பெருமிதம் கொள்ளவில்லை.

மலேசியாவில் இன்னமும் நாங்கள் second class citizens தான். இங்கு முதல் சலுகை bumiputra என்று அழைக்கப் படும் மலாய் இனத்தவருக்குத் தான். ஆனால் சமீப காலமாக அவர்களுக்கு கொடுக்கப் படும் சலுகை அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. யுனிவர்சிட்டி நுழைவுத்தேர்வில் துவங்கி , கல்லூரி பரிட்சை வரை, அவர்களுக்கு வேறு படிப்பு முறை வேறு பரிட்சை, மற்ற இனத்தவருக்கு வேறு பரிட்சை. இரண்டு பரிட்சையின் தரங்களிலும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். எங்களது மலை, அவர்களது மடு.

அதேபோல் அரசாங்க உத்தியோகம். அரசாங்க உத்தியோகத்தில் 90 விழுக்காட்டினர் மலாய் இனத்தவர். அப்படியே மற்ற இனத்தவர் அரசாங்க ஊழியராக இருந்தால், அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அவருக்கு் பதவி உயர்வு ஒர் அளவுவரைதான். போலீஸ் ஆபிசராக இருந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் Deputy Commissioner of Police வரை செல்லலாம். நீங்கள் முட்டி மோதி, வருடக்கணக்கில் அலைந்து திரிந்து, ஒரு கம்பெனியை நிறுவி, கஷ்டப்பட்டு்் பப்ளிக் லிஸ்ட்டிங் வரை கொண்டு வந்து விட்டீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்கள் கம்பெனி பப்ளிக் லிஸ்ட்டிங் ஆகவேண்டுமேயானால், உங்கள் கம்பெனியில் ஒரு bumiputra பங்குதாரரை் 30% ்ஸ்டாக் ஷேர்ஹோல்டராக முதலில் நீங்கள் சேர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். இது சட்டம்.

வீடுகள் வாங்கையில்் bumiputra க்களுக்கு 5% லிருந்து 7% வரை டிஸ்கவுண்ட் வீட்டுப் ப்ரமோட்டர் கொடுத்து ஆக வேண்டும். இதுவும் சட்டம். உங்கள் லிஸ்டட் கம்பனியில், தலைமைத்துவத்திலிருந்து, பியூன் வேளை வரை 30% ஸ்டாஃப் bumiputra க்களாக இருக்க வேண்டும். இல்லையேல் லேபர் டிபார்ட்மெண்டிலிருந்து உங்களுக்குத் தொல்லை வரும். யுனிவர்சிட்டியில் 75% ம், அரசாங்க ஸ்காலர்சிப்களில் 95% bumiputra க்களுக்கு கொடுக்கப் படுகிறது. திறமைக்குத்தான் யுனிவர்சிட்டியில் இடம் என்ற நிலை இருந்தால், bumiputra ்க் க்களுக்கு 20% ் இடம்கூட கிட்டாது. இதன் காரணமாகத்தான் எங்களைப் போன்றோர், சொந்த செலவில் (சில சமயங்களில் வீடு வாசலை விற்று) பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறோம்.

ஆனால் இவ்வளவிலும், மலேசியாவில் உள்ள சீன இனத்தவர்களோடு ஒப்பிடுகையில், நாங்கள் (மலேசியாவில் உள்ள இந்திய இனத்தவர்கள்) எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள். இங்குள்ள இந்தியரைவிட , சீனர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் (ஏன் என்பத்ற்கு ஒரு புத்தகமே எழுதலாம். வேறோரு நாள் இதனை விவாதிக்கிறேன்). நம்மில் 10ல் இருவர் தகுதியானவராக இருந்து bumiputra பாலிஸியால் பாதிக்கப் படுவோம். ஆனால் சீன இனத்தவரில் 10ல் எட்டுப் பேர் தகுதியானவர்களாக இருப்பார்கள். பாதிக்கப் படுவார்கள்.

என்ன இந்த மனுஷன், சம்மந்தமில்லாத எதை எதையோ எழுதுகிறாரே என்று நினைக்காதீர்கள். இதுவும், இனி நான் எழுதப் போகும் பல விசயங்களும்், நீங்கள் கூறினீர்களே "கடைசியாக அமெரிக்காவிலேயே இருப்பதா, இந்தியா திரும்புவதா என்ற டிலைமாவில் மாட்டிக் கொண்டு இருப்பதாக". அது குறித்தவைதான். 100 வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வந்துள்ள ஒரு சிந்திக்கக் கூடிய இந்திய குடும்பத்து அங்கத்தினன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது் ் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சிறந்த முடிவுகள் எடுக்க உறுதுணையாக இருக்கும்

பார்வையின் மறுபக்கம்

தலைமுறை இடைவெளியின் விளைவால் என் தகப்பனாருடன் சிறு சிறு ஊடல் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா, அது வேறு ஒன்றும் அல்ல. தமிழ்நாட்டின் பழமையான சைவமடத்தில் தன் ஓய்வுக்காலத்தில் பணிபுரியும் அவர், அந்த மடத்தின் விழுமியங்களை சுவீகரித்து, பழைய நம்பிக்கைகளின் பாற்பட்டு சில - எனக்கு அபத்தமாகப் படும் - விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய, சாதி சம்பந்தமான, சைவம் சம்பந்தமான பெருமிதங்களின் மூலத்தை குறித்து தமிழிணைய பாதிப்பில் அவருடன் பேசப்பேச தீப்பொறி பறந்து விட்டது

அவ்வளவே ...

அவர் மட்டுமல்ல. நமக்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் எல்லாருமே பெருவாரியாக இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் தான் என்பது தெரிகிறது. இணையம் மூலம் எனக்கு பரிச்சயமான என் மலேசிய நண்பர் ஒருவர் தன் மலேசிய ( இந்திய) அனுபவங்களை தனிமடலில் என்னுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். அதிலும் சாதியம் சார்ந்த நம்பிக்கைகள், மலேசியாவில் இந்தியர்களின் நிலை என்று சுவாரசியமான -அதிர்ச்சியான விஷயங்கள். அவர் அனுமதியுடன் அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என எண்னுகிறேன்.

ரெடி..ஜூட்....

பாட்டுக்கதை

1999ம் வருடம் வரை ஆடியோ சிடிகளை கன்ணால் கூட பார்த்ததில்லை. வெறும் கேசட்டுகள்தான் அதற்கு முன்பு வரை. படம் பார்த்து விட்டோ, அல்லது புது கேசட் வாங்க முடிந்த செல்வச்சீமான்கள் யாராவது சொல்லியோ, நல்ல பாடல்களை கேட்டு, அதை மெனக்கெட்டு எழுதி, மியூசிக் கடையில் கொடுத்தால், அவன் அதை பதிவு செய்து கொடுக்க நான்கு நாட்கள் ஆகும். அந்த நான்கு நாட்களிலும், அவன் சொல்லும் " இன்னம் ஆகலை சார்" என்கிற பதில்களே எண்ணிக்கையில் நாற்பதை தாண்டி விடும். பாட்டு மீது - குறிப்பாக - சினிமாப் பாட்டு மீது பைத்தியமாக இருந்த காலங்கள் அவை. போகும் பஸ்ஸை கூட "பாட்டு பஸ்" என்று செல்லமாக வகைப்படுத்தி வைத்திருந்த தோழ/தோழியர் கூட்டம். ஏதாவது புது படம் வந்தால், வாஞ்சையுடன் ஹாஸ்டலுக்கு எடுத்து வந்து, கூட்டத்தினின்று என்னை கடத்தி ரூமுக்கு கூட்டி வந்து உட்கார வைத்து, தனிமையில் பாட்டு கேட்க வைத்து மகிழ்ந்த சக லூஸுகள். பிரியப்படவர்களுடனான என் அந்தரங்கத் தருணங்களை கூட நான் பாட்டு வடிவத்திலேயே ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறேன் - தென்றல் வந்து என்னைத் தொடும் -- etc etc

சிங்கப்பூர் வந்து இறங்கியவுடன் முதலிரண்டு நாட்களுக்குள் முஸ்தஃபாவில் வாங்கியது என்னுடைய முதல் சிடி ப்ளேயர். வாங்கிய ஹரிஹரன் ஹிட்ஸ் சிடி கேட்டுக் கேட்டு தேய்ந்தது. சிங்கப்பூரில் மலிவு விலைக்கு கிடைக்கும் ஆடியோ சிடிகளில் என்னுடைய பழைய கால இளையராஜா பாடல்களை எல்லாம் "புத்தம் புதிய காப்பி" ரேஞ்சுக்கு கேட்டுக் கேட்டு மகிழ்ந்தேன்.

ஆச்சா..... அப்புறம் கல்யாணம் ஆச்சு. பாட்டு கேட்பது குறைஞ்சு போய் சம்சார சாகரத்தில் தொபாலென்று குதித்து நீச்சல் அடித்ததில் தினப்பாடே பெரும்பாடாச்சு. இதில் பாட்டெங்கோ போனது..??

இன்டர்நெட் பயன்பாடு சினிமா, பாட்டு, எம்.பி3 என்று வளர்ந்தோங்கி விட்ட இத்தனை காலம் கழித்து, மறுபடியும் பாட்டுகளில் கொஞ்சம் ஆர்வம் வந்திருக்கிறது. அம்பிகா அப்பளக்கட்டை விட குறைந்த விலைக்கு வால்மார்ட்டில் கிடைக்கும் ரெகார்டபிள் சிடிக்களும், அ(வ)திவேக இனையத்தொடர்புமூலம் "கவர்ச்சிகரமான விலைகளில்" கிடைக்கும் mp3 வடிவத்தில் தமிழ்ப்பாடல்களும் வேலையை சுலபமாக்கி விட்டது.

coolgoose.com என்றொரு தளம். தமிழிலே பாட்டுத்தளம் வைத்திருக்கும் எல்லாருமே இங்குதான் சேமித்து வைத்திருக்கிறார்கள் போல. கிடைக்காத பாட்டில்லை. மொழியில்லை. எதுவானாலும், தேடும் சாமர்த்தியம், கீ வேர்ட் ஜகஜ்ஜாலங்கள் தெரிந்தால் போதும், சட்டென்று வந்து நிற்கும். அதை டவுன்லோடி கொஞ்சம் சேர்ந்த பிறகு, Music match அல்லது Roxio மூலமோ ம்யூசிக் சீடிகளில் எழுதி விட்டால், சொர்க்கம்தான்.

நேற்றுத்தான் ஒரு ஈடு இறக்கி வைத்து இருக்கிறேன். தொட்டி ஜெயாவில் ஒரு பாட்டு ( உயிரே என்னுயிரே) , ஒரு கல்லூரியின் கதை ( காதல் என்பது) மற்றும் ஒரு நாள் ஒரு கனவு ( கஜுராஹோ), கஜினி (ஒரு மாலை...) போன்ற பாடல்கள் நேற்றில் இருந்து ஓ...ஓ..ஓடிக்கொண்டே இருக்கின்றன. இளையராஜா விட்டால் கங்கை அமரன் என்ற காலகட்டத்தில் இருந்து வித்யாசாகர், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ்,பரத்வாஜ் மற்றும் ரகுமான், இளையராஜா என்று நமக்கு இத்த்னை வெரைட்டி கிடைத்திருப்பதே ரொம்ப ஆரோக்கியமான சந்தோஷமான விஷயம்.

ஆனால், கடைசியாய் வாங்கிக் கொண்டு போன அந்த நாலு கேசட்டுகளும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. எத்த்னை யோசித்தாலும், அந்தப் பாடல்கள் அதே சீக்வென்ஸில் நினைவுக்கே வரமாட்டேன் என்கிறது

தவறிப்போதல் என்பது நிஜமாகவே இதுதானோ..??

Friday, September 16, 2005

Monster-in-Law


Meet the parents பார்த்து இன்ஸ்பயர் ஆகிப் போய் எடுத்த படம் போல ஒரு படம் இது. அதில் மாமனார் மருமகன் என்றால் இதில் மாமியார்-மருமகள் குடுமிபிடி. அவ்வளவே. ஆனால் அதைப் போலல்லாமல், கொஞ்சம் நம்பமுடியாத காட்சிகளும், நிறைய ஓவர்-ஆக்டிங்கையும் போட்டு தாளித்து விடுகிறார்கள்.

கொடிகட்டிப்பறந்த ஒரு புகழ்பெற்ற பெண்மணியை வயதைக் காரணம் காட்டியும், இளைய தலைமுறையை உள்ளே விட்டும், வேலையை விட்டுத் துரத்தி விடுகிறார்கள். பாட்டியம்மா (ஜேன் ஃபாண்டா) படா டென்ஷனாகிப் போய், கடைசியாக இண்டர்வியூ எடுத்த பாட்டுக்கார குட்டியை பேட்டி எடுக்கும்போதே பாய்ந்து கடித்து எடுக்கும் அளவுக்கு கொலாப்ஸ் ஆகி விடுகிறார். ஏற்கனவே நாலுமுறை விவாகரத்தாகி, இப்போது வேலையும் போய் இருப்பவருக்கு, புள்ளாண்டான் தான் ஒரே பற்றுக்கோல். விதி விடுகிறதா..??

அவனும் ஒரு சோக்கான நாய் வாக்கரை( ஜெலோ) கண்டதும் காதலாகி, முதன் முதலாக அவளை அம்மாவிடம் அறிமுகப்படுத்த அழைத்துவரும்போதே, அவள் முன்னிலையிலேயே ப்ரபோஸ் பண்ணுகிறான். போச்சு. இவனும் நம்மை விட்டு விடுவான் போல என்று பயந்து கொண்டு, மகனின் காதலை உடைக்க தாயம்மா பேயம்மா ஆகி நாயம்மாவை அவுட் ஆக்க ஆடும் நாடகம் சொச்ச படத்தில்.
முடிவில் இளமை ஜெயிக்கிறது

ஜேன் ஃபாண்டா ஓவர் ஆக்டிங்கை மன்னித்து விட்டால், படம் ஜாலிதான். அதிலும் ஜெ.லொ வேறு. விட்ட ஜொள்ளில் காற்று மண்டலம் பிசு பிசுப்பானது நிஜம். டைட் க்ளோஸப்பில், முகத்தில் வயது தெரிந்தாலும், மற்ற "சமாசாரங்கள்" ஈடு கட்டி விடுகின்றன. ஹி..ஹி.

ஜெலோவுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

யப்பா ...மாண்டீ, இந்த கொடுமையை எல்லாம் ஆவணப்படுத்த வாண்டாம். நான் ஏதோ எம் போக்குல பாத்து/எழுதுன படப்பதிவு இது.

Sunday, September 11, 2005

மாற்றம்




911ல் பாதிக்கப்பட்ட அத்தனை ஜீவன்களுக்கும் அஞ்சலிகள்.

சமீபத்திய நியூயார்க் பயணத்தின்போது நேராக பார்த்த உலகவர்த்தக மையம் - இருந்த இடம் என்னுள் ஏற்படுத்திய சலனங்கள் சொல்ல முடியாதவை

Saturday, September 10, 2005

இரவில் சூரியநமஸ்காரம்


தலைக்கு தேய்க்கும் எண்ணை சிந்தி
பாத்ரூம் டைல்ஸ் பிசு பிசுக்கவில்லை
பக்கெட் வைத்திருந்த பாட்ரூம் Tub
காலியாயிருக்கிறது
"கால் கழுவ" வைத்திருந்த mug ம் இல்லாமல்
பேப்பர் டிஷ்யூ பார்த்து சிரிக்கிறது எனை
சன் டீவி சீரியல்களின் கொடுமை
இல்லை சாயங்காலங்களில்
எப்போதாவது தென்படும் அரிசி
சாதமும் குழையாமல்
கொஞ்சம் விதையாகவே இருக்கிறது
எனக்குப் பிடித்த மாதிரி
கார்ப்பெட்டில் காப்பிக்
கறைகள் இல்லை
வாசலில் காவிவேட்டியுடன்
கையில்லா பனியனோடு
காத்திருக்க ஆளில்லை
பறிக்க ஆளில்லாமல்
செம்பருத்திப் பூக்களும்...

படுத்திருந்த முன்னறை கார்ப்பெட்டும்
நீங்கள் கஷ்டப்பட்டு சீட் பெல்ட்
போட்டுக் கொண்ட
என் காரின் முன் சீட்டும்
துணிகளை நீங்களே நிதமும்
துவைத்து அலசிக் கொண்ட
கொல்லையும்
கட்டிய துணி கொடியும்
பாட்டா செருப்பு பரவிக்கிடந்த
ஷூ ஸ்டாண்டும்
வெறுமையாக இருக்கிறது
என் மனதைப் போலவே

எப்போதும் போல நான்
என் சோகத்தை
டமாரமடித்துக் கொண்டிருக்கிறேன்



அப்பா அம்மா ஜூலை 5 ஆம் தேதி வந்துட்டு நேத்தி ரரத்திரிதான் ஊருக்குப் போனாங்க.வழக்கம்போல நான் ...

மிஸ் பண்ணிட்டேன்...






என்னை மட்டும் விட்டுட்டேளே..??

இது ஞாயமா..??

ஆதிகேசவன், செரினா, சதுர்வேதி, ஜெயலட்சுமி, ராமர்பிள்ளை, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ், ஜீவஜோதி மற்றும் குட்டி சாமியார் பரணிதரனை விட நான் என்ன குறைஞ்சுட்டேன்..சொல்லுங்கோ...!!!!

Wednesday, September 07, 2005

சானியாவுக்கு இந்த சோதனை தேவையா..?


இந்திய டென்னிஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் இப்படி விளையாடினால் சரியா போகுமா பிரச்சினை..??

மும்தாஜ், சதா, ஜீனத் அமன், நக்மா, போன்ற கவர்ச்சி நடிகைகளின் உடை(இல்லா) க்கு வராத எதிர்ப்பா சானியா மிர்ஸாவுக்கு..??

என்னவோ போங்க. ஒண்ணியும் பிரியலை..!!!!

Tuesday, September 06, 2005




ப்ளாக்கருக்குள் வந்து கால காலமாகி விட்டது போல ஒரு பிரமை. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பெற்றோருடன் மல்லுக் கட்டுவதற்கே நேரம் சரியாக இருந்தது.

கொஞ்சம் தெளிந்து எழுந்து பார்த்தால் ஏகப்பட்ட மாற்றங்கள். புது முகங்கள். அதே பிரச்சினைகள். (ஆனால், வேறு வசனங்கள் )

பாப்போம்..இனிமேலாவது ஏதும் எழுத முடியுதான்னு. இல்லாட்டி தமிழ்த்தாய் உய்ய வழி ஏது..?

ப்ளாக்கரின் புது புகைப்பட சேவையை உபயோக்கப்படுத்த அப்லோடிய போட்டோ நம்ம ஜூனியரோடது.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...