தேடிச்சோறு நிதந்தின்று
==================
வெகுநாட்கள் கழித்து விகடன் வெப்சைட் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் விகடன் அட்டைப்படத்தில் விஜயகாந்தை கொண்டுவந்து அடுத்த பரபரப்புக்கு அடிகோலியிருக்கிறது
ரஜினிகாந்த் திமுக-பாமக கூட்டணிக்கு எதிராக போவதைப் பார்த்து , கருணாநிதி விஜயகாந்தை அரசியலுக்கு இழுக்கிறாராம். மக்கள் சப்போர்ட் தனக்கு இருக்கிறதா , இல்லையா என்று நாடி பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கேப்டன், ஜெயிக்கும் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து களமிறங்குவாராம்.
சிரிப்பதா , அழுவதா என்றே தெரியவில்லை. முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் இளைஞன் முதல் சீனில் க்ளாப் அடிக்கும்போது "கடவுளே...நல்லா நடிச்சு, பணம் சம்பாதிச்சி, காரும் பங்களாவும் வாங்கணும் ' என்று வேண்டிக்கொள்வான். இப்போதெல்லாம் ' கடவுளே...நடிச்சி, தமில்நாடு முதலமைச்சரா ஆகணும் ' என்று வேண்டிக்கொள்வான் போலிருக்கிறது. சரி...அவனுக்குத்தான் ஆவலாதி என்றால், வெட்கங் கெட்ட மீடியாக்களும் ( என்னயும் சேர்த்துதான்.....) இந்த மாதிரி கொம்பு சீவிவிட்டு தமிழ்நாட்டை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தன்னுடைய விகடன் பேட்டியில் " ' 'பாய்ஸ்' படத்தில் ஒரு வசனம் வரும். அதில் செந்தில் இன்ன தேதியில் இங்கே சோறு கிடைக்கும் என்று சொல்லும்போது வியாழக்கிழமை விஜயகாந்த் வீட்டில் சாப்பாடு போடுவார்கள். போய் வாங்கி வா ' என்று ஒரு பையனிடன் ஏவுவார். அதுதான் என் கணவர் சேர்த்து வைத்த சொத்து ' என்று புளகித்துப் போய் பேட்டி கொடுத்திருந்தார்.
காறித் துப்பலாம் போலிருக்கிறது.
தமிழனுக்கு ஓசியில் சோறு போட்டு, அவனை கையாலாதாகவன் ஆக்கி, பிச்சைக்கார வேஷம் கொடுக்கும் முயற்சி அது என்று ஏன் இவர்களுக்கு விளங்கவில்லை. ' ஒருவனுக்கு நீ ஒரு மீனை கொடுத்தால் அவனுக்கு அவ்வேளைக்கு சோறிடுகிறாய். அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் நீ ஆயுசுக்கும் சோறிடுகிறாய் ' என்பதெல்லாம் இவர்களுக்கு விளங்குவதில்லையா..?? சோறு போடும் செலவை மூன்று மாசத்துக்கு சேர்த்து வைத்தால், ஒரு பஞ்சாலை வைக்கலாமே, ஒரு அரிசி மில் துவங்கலாமே, அட..குறைந்தபட்சம் ஒரு மளிகை கடை வைக்கலாமே...!! வைத்து அதில் கொஞ்சம் பேருக்கு வேலை கொடுத்தால், அது எல்லோர்க்கும் உதவுமே..
பயம்...வீணாப்போன பயம்.
' விஜயகாந்து சும்மாவா குடுக்கிறாரு. வேலை செஞ்சேன் . குடுக்கிறாரு' என்று சொல்லி விடுவார்களே. சும்மா குடுத்தாத்தான் பேர் வாங்கலாம். சோறு போட்டாத்தான் கட்சி ஆரம்பிக்க்லாம். ஒட்டு வாங்கலாம். பிறகு ஆட்சியைப் பிடிக்கலாம். பிறகு
அம்மைக்கு முண்டும்
அப்பைக்கு ச்சாராயமும்
குஞ்ஞினுக்கு சோறும்
என்று ஜனநாயக முறையில் சோறுபோட்டு வள்ளலாகவும், பொன்மனச்செம்மலாகவும் உருவெடுக்க்லாம்.
கருமம்.....நினைக்கவே கேவலமாக இருக்கிறது.
அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வரவிழைவோரும், மக்களை சோத்தாலடிச்ச பிண்டங்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவன்களுக்கெல்லாம், திமிர் எடுத்து திரிந்தாலும் ஜெயலலிதா தேவலாம்.
No comments:
Post a Comment