Monday, April 26, 2004

சாக்ரமண்டோ தமிழ்மன்றம் - புத்தாண்டு விழா
=======================================

போன வாரஇறுதியில், சாக்ரமண்டோ தமிழ்மன்ற நிகழ்ச்சிக்கு போக நேர்ந்தது. குடாப்பகுதி , லாஸ் ஏஞ்சல்ஸ், நியூஜெர்சீ தமிழ்ச்சங்கங்களோடு ஒப்பிடுகையில் வந்திருந்த கூட்டம் குறைவுதான். சாக்ரமண்டோவில் இருக்கும் தமிழன்பர்கள் எண்ணிக்கையே குறைவு என்பதால்.

ஓக்மாண்ட் ஹைஸ்கூல் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், எல்லா தமிழ்சங்க கூட்டங்களின் கல்யாணகுணங்களை ஒட்டி இம்மி பிசகாமல் நடந்தேறியது. விழா ஏற்பாடுகளை ஜெயந்தி ஸ்ரீதர், முருகேஷ் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் சாக்ரமண்டோவில் அவ்வப்போது தமிழ்ப்படங்களை திரையிட்டு புண்ணியம் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

விழா ஆரம்பித்த முதல் இருபது நிமிடங்கள், காலமாகிப்போன ஆக்டிவ் உறுப்பினர் ஜார்ஜுக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். மக்கள் சரியாக உட்காராமல், ஒரே களேபரம். இறுதியில் ஒரு வழியாக எல்லோரும் உட்கார்ந்து நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இளம்பெண்கள் கலர் கலராக உடுத்திக்கொண்டு , நளினமாக நடனித்து பெருமூச்சு விடச்செய்தார்கள். குழந்தைகள் திரு திரு என்று விழித்துக் கொண்டே மன்மத ராசா பாட்டுக்கு ஆட்டம் போட்டார்கள். தொகுத்து வழங்கியவர்களும் வேஷ்டி சட்டை, அங்கவஸ்திரம் , பட்டுப்புடவை என்று கலாச்சார உடை அணிந்து உடைந்த தமிழில் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, ஸ்பாட்டிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழுக்காக கை நீட்டிய வண்ணம் ஒரு பிஞ்சு வெகுநேரமாக நின்றிருக்க, அதை காத்திருக்க வைக்காமல், ' பேர் மாறிப்போனா பரவால்லை. பினாடி பாத்துக்கலாம். இதோ வச்சுக்க ' என்று கைக்கு கிடைத்த சான்றிதழை எடுத்துக் கொடுத்தார் வழங்கியவர். நிகழ்ச்சிகளை உடனுக்குடன் படம் எடுத்து, ஓவர்ஹெட் ப்ரோஜெக்டரில் சூடாக அங்கேயே டிஜிட்டல் இமேஜை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டின்னரை, ஸ்ட்ரேஃபோர்ம் டப்பாகளில் போட்டு, ஒவ்வொருவருக்கும் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததற்கு பாராட்டுகள். உணவு வீணாய்ப்போவது இதனால் தவிர்க்கப்பட்டது. நிகழ்ச்சி நிரல் பல காரணங்களால் தாமதமானதால், திரையிசை அந்தாக்ஷரி பாதியில் கைவிடப்பட்டு ட்ராமா ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே நேரமாகிப் போய், குழந்தைகள் தூங்க ஆரம்பித்ததால், நிறைய பேர்களுடன் சேர்ந்து நானும் பாதி நிகழ்ச்சியிலேயே கிளம்பி விட்டேன்.

நண்பர் முருகேஷுக்கு சில விண்ணப்பங்கள் :

1. வருடத்தில் மூன்று விழாக்கள்தான் என்று நிறுத்திக்கொள்ளாமல், அடிக்கடி தமிழ்நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

2. உறுப்பினர் அட்டைக்கு ஏற்பாடு செய்து, தமிழ்ச்சங்கத்தில் சேர விரும்புபவர்களுக்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து, சங்கத்தை முறைப்படுத்த வேண்டும்.

3. யாஹூ மடலாடும் குழு ஒன்றை நிறுவி, சங்கம் சம்பதந்மான மடல்களை அதில் அனுப்ப வேண்டும். இதன் மூலம் சாக்ரமண்டோ தமிழ் நண்பரகளின் ஈமெயில் விலாசங்களை திரட்டி வைக்க முடியும்.

4. அடிக்கடி தமிழ்த் திரைப்படம் திரையிட வேண்டும். (ஹி...ஹி..)

இன்னமும் நிறைய செய்யலாம். மேல் விவரங்கள் வேண்டுமாயின், குடாப்பகுதி தமிழ்மன்ற தலைவர் திரு. தென்றல் மணிவண்ணணையும், லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் ஏஞ்சல் ராமையும் தொடர்பு கொண்டு தகவல் தர நானாயிற்று.

No comments:

Post a Comment

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...