Friday, April 30, 2004

குழலூதி மனமெல்லாம்
=================

மகரந்தத்தின் புண்ணியத்தில் தும்மிக் கொண்டே காலையில் கைக்குட்டை சளியனாக அலுவலகம் வந்தேன். வெளியில் நின்று புகையூதிக் கொண்டிருந்த கேத்தி ட்யூபெட்ஸ் " ஹாய்..சுண்டா " என்றாள் வழக்கம் போல் "ர்" தொலைத்து. இங்கெல்லாம் பெண்கள்தான் அதிகம் சிகரெட் குடிக்கிறார்கள். அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். நம்மூரில் சிகரெட் பிடிப்பது ஆண்மையின் அடையாளமோ என்று மெல்லிசாக ஒரு மயக்கம் உண்டு. சீனியர் ஓபராய், சிசர்ஸ் குடித்துக் கொண்டே பைக் ஓட்டுவதைப் பார்க்க அந்தக் காலத்தில் ஒரு கூட்டமே உண்டு. ரஷ்யாவில் நம்மூர் சார்மினாருக்கு ஸ்த்ரீ சம்போகமே சித்திக்குமாம்.

அது மட்டுமல்ல. என் ஸ்நேகிதிகளிலேயே கொஞ்சம் பேருக்கு சிகரெட் வாசனை(?!!) கொஞ்சம் பிடிக்கும் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நிழல் நிஜமாகிறது சஞ்சீவி விடும் வளையங்களை மறக்க முடியுமா.. ... என்று சொல்வார்கள் கண்ணில் கிறக்கத்துடன். "சில நேரங்களில் சில மனிதர்கள்" கங்காவுக்கும் இதே விருப்பம் உண்டு என்று உங்களுக்குத் தெரியும்.

ஆசை யாரை விட்டது......

என் லீலா விநோதங்களில் மேற்சொன்ன ஆறாவது விரலும் சேர்ந்தது தனிக்கதை. மும்பையில் 1992 ல் கொஞ்சநாள் HCL ல் மார்க்கெட்டிங் ஆசாமியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மார்க்கெட்டிங்கிற்கு பேர் போன HCL சேல்ஸ் கூட்டமே துடிப்பான கூட்டம். ஒரு டப்பாவில் பசுஞ்சாணத்தை கொடுத்தால் அதையே ஏகப்பட்ட வேலையில் விற்று விடுவார் என்று HCL அஜய் செளத்ரிக்கு பேர் உண்டு அந்த நாளில். ஆரம்ப நாள்களில் சீனியர்களொடு cold calls போகும்போது ஒவ்வொரு விசிட்டுக்கும் நடுவே காஃபி/சிகரெட்டோடு இளைப்பாறிக் கொள்வார்கள். காப்பி மட்டும் குடித்து விட்டு தேமே என்று உட்கார்ந்திருப்பவனை சிகரெட்டை கொடுத்து வம்புக்கு இழுப்பார்கள். அதையும் தனியாகத் தான் ட்ரை பண்ண வேண்டும் என்று காத்திருந்தேன்.

4square

தனியே ஒரு முறை மும்பை , ஹார்பர் லைன் பகுதியில் உள்ள ரே ரோட் ப்ரித்தானியா ஆபீஸ் சென்றிருந்தேன். மறுபடி அலுவலகம் வருமுன் , " சரி, இன்று ஊதிப் பார்த்து விடுவோம் ' என்று ஒரு Four squares சிகரெட் வாங்கினேன். பைய வாயருகில் கொண்டுபோய், கொளுத்தி புகை விட்டேன். எல்லோருக்கும் வரும் அந்த முதல் முறை ' லொக் லொக் " எனக்கு வரவில்லை. அப்பவே ரொம்ப ப்ரொபஷனலாக அடித்து இருக்கிறேன் போல. லேசாக சுட்ட அப்பளம் வாடை வந்தது. ஆயினும் அது பழக்கமாகவில்லை. மும்பையில் இருந்த வரை தண்ணி அடிக்கும் போது மட்டும் தம அடித்துக் கொண்டிருந்தேன். உணர்ந்தவர்களுக்கு தெரியும்.....சூப்பர் காம்பினேஷன் அது.

பிறகு தமிழ்நாட்டில் நெக்ஸஸ் ஸில் வேலை பார்க்கும்போதுதான் இது அதிகமாயிற்று. திருச்சி கிளையில் பணிபுரிந்த அத்தனை பேரும் ஏறத்தாழ இளைஞர்கள். ஷோக பேர்வழிகள். மேலும் கிளையை நிர்வகித்தவ்ரும் பிரம்மசாரிக் கட்டை. மக்களை இது மாதிரி விஷயங்களில் அட்ஜஸ்ட பண்ணிக் கொண்டு, கம்பெனி கொடுத்தால் எல்லாரையும் நிர்வகிப்பது எளிது என்ற சூத்திரம் தெரிந்தவர். விளைவு...ஆஃபிஸ் மாதிரியே இருக்காது. காலேஜ் மாதிரி ஒரே கலக்கலாக இருக்கும். பகல் முழுக்க கஸ்டமர்..கஸ்டமர் என்று வேட்டையாடி விட்டு , சாயந்திரம் ஏதாவது ஒரு பாரிலோ, அல்லது அவர் வீட்டிலோ இடது கையில் ஒரு கிளாசை பிடித்துக் கொண்டு, வலது கையில் gold kings உடன் உட்கார்ந்து விடுவோம். ஏதாவது படம் ஓடும். பாட்டு ஓடும். அரட்டை ஓடும். சண்டை நடக்கும்...ஜாலியான நாட்கள் அவை. பாட்டுக் கேட்பது, புத்த்கம் படிப்பது, யோசிப்பது , எழுதுவது , தண்ணி அடிப்பது, அரட்டை என்று பிடித்த இன்ன பிற விஷயங்களுடன் சிகரெட் காம்பினேஷன் போட்டுக் கொண்டு என்னை முழுதுமாய் உள்ளே இழுத்துக் கொண்டது. கொடைக்கானல் போனபோது ஃபாரின் உலக்கை சுருட்டு எல்லாம் பிடித்துப் பார்த்தேன்.ஆனாலும் Gold kings Filter தான் பிடித்த பிராண்ட்.

Gold kings


ஒரு நாளைக்கு இருபது சிகரெட் வரை போகும் போது தான் உள்ளே மணி அடித்தது. ஆள்காட்டி விரலுக்கும் சுட்டு வரலுக்கும் நடுவே விரல் முனையில் கறுப்பு தழும்பானது. ரோஜா நிற நகக் கண்கள் நிறமிழந்தன. உதடுகள் கறுத்த்ப் போயின. கண்களின் விழித்திரை (வெள்ளை பகுதி) கலங்கலாயிற்று. பசியில்லாது உடம்பு மந்தம் ஆனது. மூக்கு நுனியில் எப்போதும் எண்ணை வ்ழிந்து, சின்ன சின்னதாய் கறுப்பு புள்ளிகள் வந்தன. எத்த்னை கழுவினாலும் கை விரல்கள் புகையிலை நாற்றமடித்தன. காஃபி குடித்த வாசனையும் சிகரெட் வாசனையுடன் கலந்து விநோத மணம் கமழ்ந்தது. அடிக்கடி சளி பிடித்தது. இருமும்போது , சகோதரிகள் சந்தேகமாக பார்த்தார்கள்.

ஒரு சுபயோக சுப நாளில், கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு, நண்பர் கூட்டம் நடுவே, " இதுதான் கடைசி சிகரெட்" என்று சொல்லிக் கொண்டு கீழே போட்டேன். ஜூலை 8, 1996. எட்டு வருஷமாக மறுபடி தொடவே இல்லை. தொடுவதாகவும் இல்லை. பழக்கம் விட்ட புதிதில் வேகமாக முடி கொட்டியது. தண்ணி அடிக்கும் போது கையில் சும்மாவானும் வெற்று சிகரெட்டை வைத்துக் கொள்ளத் தோன்றியது. இப்போது அதுவும் இல்லை. ஒருவேளை இப்படி " வெளியே வந்து விட முடியும் " என்ற நம்பிக்கை இருப்பதனால்தான் எல்லாவற்றிலும் இறங்கிப் பார்க்கிறேனோ என்னவோ...

கடவுளுக்கே வெளிச்சம்.

ஆனால், சிகரெட்டை பொறுத்தவரை தொடாமல் இருப்பதே உத்தமம். இறங்கி விட்டு அல்லல் படுவதற்கு ஒதுங்கி இருப்பது மேல்.

ஒதுங்கி இருந்தால் தான் Male. ஆம் .....

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...