Monday, April 19, 2004

செஸ்னா - கால்யா - நெக்ஸஸ் - கரீம்நகர்
=================================

மும்பையில் ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் என்ற கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அம்மாவும், அப்பாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். மும்பையின் அவசர வாழ்க்கை, பணிக்கு தினமும் நான் செல்ல வேண்டி இருக்கும் தூரம், மும்பையின் நாகரீகமோகம் நிரம்பிய வாழ்க்கை, 90 ரூபாய்க்கு அபார்ஷன் செய்யப்படும் என்று கூவிக் கூவி அழைக்கும் விளம்பரங்கள் எல்லாம் அவர்களை சஞ்சலப்படுத்த ' மெட்ராஸூக்கு சீக்கிரம் வந்து சேரு ' என்று அன்பாக மிரட்டி விட்டு , ஒரு மழை நாள் இரவில் சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் கிளம்பிப் போனார்கள்.

அவர்களிடம் சொன்னபடி அடுத்த இரண்டு மாதத்தில் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் என்ற சென்னை கம்பெனியில் சேர்ந்தேன். கம்பெனியைப் பற்றிய அறிமுகமே மிரட்டலாக இருந்தது. முப்பதாயிரத்த்துக்கும், இருபதாயிரத்துக்கும் கணிணிகள் மலிவுவிலையில் கிடைத்த அந்தக் காலத்திலேயே நெக்ஸஸ் அறுபது/எழுபதாயிரத்துக்கு விற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் அளிக்கும் வாடிக்கையாளர் சேவைக்காகவும், டெக்னாலஜி உதவிகளுக்காகவும் அந்த விலை கொடுத்தும் கம்ப்யூட்டர் வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். வேலை செய்பவர்களுக்கும் நல்ல ஊதியம், போனஸ், இன்செண்டிவ் என்று பணிசெய்யும் சூழ்நிலையே வித்தியாசமாய் இருந்தது.

தலைமை அலுவலகம் ஆரோவில் பாண்டிச்சேரியில். மைக்கேல் லூமியேர் என்ற ஃப்ரெஞ்சு கனவான் அரவிந்த ஆசிரமத்தில் தங்க வந்தபோது, அங்கு கிடைத்த அமைதியினாலும் , நிம்மதியினாலும் இளகி, கால்யா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு , தன் சகாக்கள் உல்ரிச் ப்ளாஸ் என்ற ஜெர்மானியன், மற்றும் சுனைனா மண்டீன் என்ற் இந்திய பெண்மணியின் உதவியோடு 'அரோலாக் டேட்டா ப்ராஸஸிங் சிஸ்டம்ஸ்' என்று ஆரம்பித்த கம்பெனியே பின்னாளில் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் என்றாயிற்று.

பணிபுரிந்த நான்கு வருடங்களும் நான் திருச்சி கிளையிலும், கும்பகோணம் சர்வீஸ் சென்டரை நிர்வகித்தும், பணிபுரிந்து வந்தாலும், பாண்டிச்சேரியுடனும், எங்கள் மதிப்புக்குரிய கால்யாவுடனும் அடிக்கடி தொடர்பு இருந்தது. தன்னிடம் வேலை செய்தவர்களை போஷாக்குடன் வைத்திருந்ததாலும், உழைப்புக்கு மதிப்பு அளித்ததாலும், தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாததாலும் , கூடிய விரைவிலேயே நெக்ஸஸ் பல்கிப் பெருகியது. வருடம் ஒரு முறை எல்லா கிளைகளுக்கும் அதிரடி விசிட் செய்து எல்லா ஊழியர்களையும் அவர் சந்தித்து அளவளாவுவது வழக்கம். அப்படி வருகையில், தனக்கு சொந்தமான செஸ்னா விமானத்தில், தன் சொந்த பைலட்டுடன் தான் அவர் வருவார். போன வருடத்தில்தான் அந்த விமானத்தை அக்னி ஏவியேஷன் என்ற கம்பெனிக்கு விற்றார் என் மதிப்புக்குரிய மாஜி முதலாளி.


cessna


வார இறுதியில் எல்லோரையும் 'உச்' கொட்டவைத்த சவுந்தர்யா, அக்னி ஏவியேஷனுக்கு சொந்தமான அந்த விமானத்தில்தான் , விமானம் வெடித்து, உடல் கருகி இறந்தார்.

கால்யா எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

இந்தியாவில் இம் மாதிரி விமான விபத்துக்களின் காரணங்கள் தீர்க்கமாக ஆராயப்படட்டும்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...