Friday, April 23, 2004

முரட்டு இலக்கியம்
==============

குமுதம் நண்பர் பாபா வலைப்பதிவில் மரபுஇலக்கியம் யாஹூ குழுவின் விளம்பரம் பார்த்தேன். லிங்கைப் பிடித்து போய் நான்கு மடல்கள் வாசித்து விட்டு வந்தேன். மற்ற மடற்குழுமங்களில் வெண்பா வடித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் மொத்தமாக செர்ந்து அங்கேயே வடித்துக் கொள்ளலாம் இனிமேல். கவிதை பிடிக்காது என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்ட நம்ம பாரா சார் கூட ஒரு வெண்பா வடித்து உள்ளே நுழைந்திருந்தார். ஹரி அண்ணா மிரட்டி இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.' அடேங்கப்பா..பெரியாளுக புழங்கும் இடம் ' என்று ஓடி வந்து விட்டேன்.

தமிழாசிரியர்களுடனும், தமிழ் இலக்கணத்துடனும் என்னுடைய உறவு பள்ளி நாட்களில் எல்லாம் இணக்கமாகவே இருந்திருக்கிறது. என்னுடைய தமிழ் விடைத்தாள்களில், ' அழகரசரே...கதை விட வேண்டாம். வினாவுக்குரிய விடையை மட்டும் எழுதினால் போதும் ' என்று என் தமிழாசிரியர்கள் பர்சனல் கமெண்ட்டோடு மார்க் போட்டிருப்பார்கள். தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் இருப்பதனால் தான் இவ்வளவு காலம் கழித்தும் , தட்டச்சு கூட சரிவரத் தெரியாமல் தப்பும் தவறுமாக இணையத்தில் தமிழ் எழுதி கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஹரி அண்ணா வேறு வகையான தமிழ் ஆர்வலர். தமிழ் மீது முரட்டு பக்தி. ஏன் , வெறி என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எல்லாம் அவர் எழுதும்போது மனசு நெகிழ்ந்து போகும். நனறாக உள்ளது என்று நாலு வார்த்தை எழுதினால் ஏதாவது விநோதமாக பதில் சொல்வாரோ என்று பயந்து கொண்டே வாளாவிருந்து விடுவது வழக்கம். கம்பனையும், பாரதியையும் கரைத்துக் குடித்த அவர் நெஞ்சில் சில பேரைக் கண்டால் கனிவு மட்டும் எட்டிக் கூடப் பார்க்காது. புதுக்கவிதை எழுதுபவர்களை எல்லாம் பொத்தாம் பொதுவில் போட்டுத் தள்ளுவார். ஒரு பிரச்சினையை விவாதித்து முடித்து , எவ்வளவு நாட்கள் ஆனாலும், அதை மறக்காது , நினைவில் கொண்டு, சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் ஜாடை மடையாக குத்திக் கொண்டே இருப்பார். மாலனுடன் நடந்த ஒரு விவாதத்தில் , மாலன் ' படிவநிரப்பி ' என்று சொன்னதை ஒரு நூறு முறையாவது மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருந்தார். ஏதாவது ப்ரூவ் பண்ண வேண்டுமென்றால் " நான் சொன்னது தப்பானால் புத்தகத்தை தீயிட்டு கொளுத்துகிறேன் " என்று சவால் விட்டு விட்டு, பிறகு அது தப்பு என்று தெரிந்தாலும் ' இப்ப என்ன பண்ணனுங்கிறீங்க அதுக்கு" என்பார். தனி மடலில் சாபங்கள் பறக்கும். மரபு வழிச் சார்ந்த கலைகளை நிலைப்படுத்தும் பெருங் காரியத்தை செய்யும் அவர், சற்று கனிவுடன் இருக்க வேண்டும் என்று எத்தனையோ முறை தனி மடலில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். திரு.இரா.மு விடமும் " ஹரி அண்ணாவின் கடுமையை குறைத்துக் கொள்ள சொல்லுங்கள் ' என்று தனி மடலில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ம்..ஹூம். இதுவரை என் முயற்சி ஜெயிக்கவில்லை.

இந்தக் குழுவை இப்போது அவர் நண்பர் மதுரபாரதியுடன் துவக்கி இருக்கிறார். பொறுமையும், நிதானமும் உள்ள மதுரபாரதியாவது, ஹரி அண்ணாவை , இளைஞர்களை பயமுறுத்தி விடாமல் , நல்ல தமிழ் சொல்லித் தந்து வழி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இதை வேறு யாராவதென்றால் முகமூடிப் பெயரில் வேறு ஒரு வலைப்பூவிலோ, அல்லது அதே மரபிலக்கியம் குழுமத்திலோ எழுதி இருப்பார்கள் . எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

இதை படித்து விட்டு , ஹரி அண்ணா விடும் சாபங்களில் இருந்து கடவுள் என்னைக் காப்பாற்றட்டும். இதை சரியான முறையில் அவர் புரிந்து கொண்டால் அவருக்கு என் மானசீக நமஸ்காரங்கள். நன்றிகள்.வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...