Sunday, April 25, 2004

பழங்கஞ்சி
==========

நேற்று இரவு விருமாண்டி பார்த்தேன். எல்லோரும் படம் பார்த்து, விமரிசனம் எழுதி, திட்டி, சிலாகித்து சொன்னது எல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போன நேரத்தில், நேற்று பார்க்கக் கிடைத்தும் ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று.

படம் பார்த்து முடித்த பின் மனசுள் தேங்கிய மிச்சங்களை நேராக இங்கே தந்திருக்கிறேன்.

23sld1

* பட ஆரம்பம் கொஞ்சம் பழைய பட நினைவுகளை கொண்டு வந்தது. பேய்க்காமனை காட்டியபோது, ' அட இவர்தானா அது என்று நினைத்துக் கொண்டேன். Typical தமிழ்நாட்டு போலீஸ் கண்முன் வந்து நிற்கிரார், அந்த டிரேட்மார்க் தொப்பையோடு.

* பசுபதி. டைரக்டராக கமல் பெரு வெற்றி பெற்றிருக்கும் பாத்திரம். கண்களில் நயவஞ்சகமும், வெறியையும் வைத்துக் கொண்டு ஒரு தென்மாவட்ட கிராமத் தேவனை அநாயாசமாகக் கொண்டு வந்திருக்கிறார்.பாதி நேரம் அவர் பசுபதி என்பதே மறந்து போகிறது

* கதை சொல்லியிருக்கும் உத்திக்காக , எடிட்டிங் அற்புதமாக கையாளப்பட்டிருக்கறது. பசுபதி சொல்லும்போது , எங்கு வெட்ட வேண்டுமோ அப்படி வெட்டி இருக்கிறார்கள். அதே கதையை கமல் சொல்லும்போது விட்ட காட்சிகளோடு , சொன்ன எல்லாவற்றையும் கோர்த்தால் போர் அடிக்குமே என்பதற்காக, லைட்டாக கோடி காட்டி விட்டு கமல் வெர்ஷனை சேர்த்து இருக்கிறார்கள். பொதுவாக சில சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் கடைசி இரண்டு ரீல்களில் கையாளப்படும் இந்த விஷயம் இங்கே படம் முழுக்க தெளிவாக செய்யப்பட்டிருக்கிரது

* வசனம். அருமையான வசனங்கள். தனித்துத் தெரியாமல் , பாத்திரங்களோடு கலந்து அவற்றிற்கு உயிர் கொடுத்திருப்பதிலிருந்தே, வசனகர்த்தா ஜொலிப்பது தெரியும். அன்னலட்சுமி மொபெட்டை உருட்டியபடி நடக்க, அவளுடன் நடந்து கொண்டே விருமாண்டி ஜொள்ளு விடும் காட்சியில் வசனம் படு இயல்பு. அதே போல நாயக்கர் குடும்பம் பேசும் கொச்சைத் தெலுங்கும். சில காட்சியமைப்புகள் மட்டும், ஸ்பீடாக சொல்ல வேண்டும் என்பதற்காக, கிராமத்து அழகியலை சமரசம் செய்து கொண்டு சொல்லப்போக, நகரத்து ·பாஸ்ட புட் வாசனை அடிக்கிரது.

* அந்த "உள்பாடி" வசனம் உறுத்தவே இல்லை. கமல் படங்களில் ரசிக சுவாரசியத்திற்காக அங்கங்கே செக்ஸ் தூவல் வழக்கம்தான். ஆனால் இந்த வசனம் கண்டிப்பாய் அதற்காக சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. பசுபதியின் பார்வையில் இருந்து கமல் பார்வைக்கு படம் நகரும் முதல் சீன் அது. அதை இப்படி வைக்காவிட்டால்தான் தவறு.

* அபிராமி. அருமையாக செய்து இருக்கிரார். குத்துவிளக்கு மாதிரி இருந்து கொண்டு படம் நெடுக அவர் கமலுக்கு இணையாக ஓடி வந்திருக்கும் வேகம் நான் எதிர்பாராதது. ரொமான்ஸ் ஸீன்களில் கமலும் இவரும் இழையும்போது, ஆதி கால சிவாஜி படங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

* நாசர், நெப்போலியன், எஸ்.என்.லட்சுமி, ரோகிணியை பற்றி விசேஷமாக சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. பாத்திர எல்லையை தாண்டாமல் உள்ளேயே இருந்து விளையாடி இருக்கிறார்கள்.

* சிறைக்கலவரம் ஒரு வேஸ்ட். வேறு ஏதாவது வழியில் ஏஞ்சலா தப்பிப்பதாய்க் காட்டி இருக்கலாம். ஆனால் கொத்தாளத்தேவனை கொல்ல வேண்டிய கதாநாயக நிர்ப்பந்தத்துக்கு டைரக்டர் பலியாகி, ஏகப்பட்ட எரிச்சலை சம்பாத்¢த்துக் கொண்டிருக்கிறார். அதிலும் நாசர், தன் துப்பாக்கியையும், தொப்பியையும் கமலுக்கு கொடுத்து வீரத் திலகமிட்டு அனுப்புவது ரொம்பவே ஓவர்.

* இசை. "மொட்டை" க்கு சொல்லியா தர வேண்டும்..? கிராமத்து படம் என்றால் சர்க்கரை கட்டி ஆச்சே அவருக்கு. வசனம் போலவே படம் நேடுக கலந்திருக்கும் இசை. சில அருமையான பாடல்கள். "உன்னை விட ' பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் ஒண்ணாங் க்ளாஸ் ஸாரே. "மாட வெளக்கே " பாட்டு "ஒன்னைப் போல ஆத்தா..என்னைப் பெத்து போட்டா " என்று ராஜ்கிரண் படப் பாடல் ஸ்டைலில் இருக்கிறது

* கமல். கமல் நடிப்பைப் பற்றி புதுசாக சொல்ல ஒன்றும் இல்லை. அதே சிரத்தை. அதே கலக்கல். அதே பாடி லாங்குவேஜ். அதே etc. ஆனால் டைரக்டர் சார் கொஞ்சம் வயலன்ஸ் சமாசாரத்தை கட்டுக்குள் வைப்பது பெட்டர். தியேட்டரில் இதை பார்த்து விட்டு, வீட்டுக்கு போகும்போது பஸ்ஸில் இடப் பிரச்சினை வந்தால் , நம்ம ஜனங்கள் வீச்சரிவாளை எடுத்து வீசி விடுவார்களோ என்று பயம் வந்தது நிஜம். எனக்கே கொஞ்சம் விறு விறு என்று இருந்தது

* கதை உண்மைக்கதையா..?? அப்படி இல்லை என்றால் கதையாசிரியருக்கு ஒரு மெகா ஓ.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...