Friday, April 16, 2004

கார் காலக் கதைகள்
====================

அமெரிக்காவில் ஆடு கூட கார் ஓட்டும் என்று சுஜாதா எங்கோ எழுதி இருக்கிறதாய் ஞாபகம்.

அது ஒருவகையில் உண்மை. நம்ம ஊர் கார்களைப் போல் இங்கு க்ளட்ச் கிடையாது. ஆட்டோ கியர் சிஸ்டம் வேறு. பார்க் மோட், ரிவர்ஸ் மோட் , டிரைவ் மோட் என்று ஹாண்டிலை மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். கார்களும் விலைக்கேற்ப, பாதுகாப்பு வசதிகளுக்கு ஏற்ப, உயர் ரகம்.

கார் ஒட்ட தேவர் ஃப்லிம்ஸ் ஆடு சிரமப்படாது. ஆனால் கார் லைசன்ஸ் வாங்க, என்னைப் போல விளையாட்டுப் பிள்ளைகள் பட்ட பாடு இருக்கிறதே....அதை எழுத ப்ளாக்கர் போதாது. மரணவேதனை. இந்தியாவில் முறையாக கற்றுக்கொண்டு நான் அவ்வளவாக கார் ஓட்டியதில்லை. கார் டிரைவிங் க்ளாஸ் போய்விட்டு, முதல்நாளே அந்தாள் பண்ணின அலட்டல் தாங்க முடியாமல் ஓடி வந்து விட்டேன்.கார் மட்டுமல்ல,எந்த வாகனத்தையும் (சைக்கிளைத் தவிர) நான் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. முதல் முறை ஓட்ட ஆரம்பித்ததே சொந்தக் காரில்தான். முதல் கியர் போட்டுவிட்டு க்ளட்சை விடத்தெரியாமல் விட, ஒரு துள்ளு துள்ளி கார் பெட்ரோல் வாசமடிக்க கார் நின்று போனது. போராடி, அதை ஒருவழியாக தோது பன்ணி விட்டு கனஜோராக ஓட்டினால ஏதோ பொசுங்கும் வாடை வந்தது. பயந்து கொண்டு நிறுத்தி விட்டு , பிறகு பார்த்தால் ஹேண்ட் ப்ரேக் ஆன் ஆகி இருந்தது.

நிற்க.

இவ்வளவு 'அனுபவம்' இருந்ததால், அமெரிக்காவில் ஹாயாக கார் ஓட்டலாம் என்று வந்து சேர்ந்த இரண்டாம் மாதமே கார் வாங்கி விட்டேன். ஹோண்டா அக்கார்ட் - 6 சிலிண்டர் மாடல். டிரைவிங் விதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்துக்காகவாவது ஒரு இன்ஸ்ட்ரக்டரிடம் போக வேணும் என்று சகாக்கள் சொல்லவே, சூசன் என்ற சீனமாதுவிடம் கார் கற்றுக் கொள்ள ஏற்பாடாயிற்று. காரில் உட்கார்ந்து வீதிகளில் பிராக்டீஸ் பண்ணும் முன், கலிஃபோர்னியா ட்ரைவிங் ரூல்களைப் படித்து , ஒரு பரீட்சையில் பாஸ் பண்ண வேண்டும்.
மேனுவலைப் படித்து, ஏற்கனவே ப்ரீட்சை எழுதிய நண்பரகள் கொடுத்த் கொஸ்டின் பேப்பர்களை கடம் அடித்து, பாஸ் பண்ணி விட்டுத்தான் சூசனிடம் போனேன். சூசன் எனக்கு எப்படி சொல்லிக் கொடுத்தாள் என்று நான் சொலவதை விட, அந்த குடாப்பகுதி மக்கள் அந்தக் காலங்களில் என்ன பாடு பட்டார்கள் என்று சுருக்கமாக சொல்லி விடலாம். அவள பேசும் சிங்லீஷ் எனக்கு விளங்காது. அதே போல நான் பேசும் தமிழ் வாசம் அடிக்கும் இங்லீஷும்.

கடைசியாக அடுத்த கட்ட தேர்வு DMV யில். இத்த்னை நாள் சூசனுடன் ஓட்டியவன் அதே காரியத்தை டிரைவிங் இன்ஸ்பெக்டர்களுடன் செய்ய வேண்டும். அந்தாள் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவான். அவன் காட்டும் வழியில் , எல்லா விதிகளையும் அனுசரித்து ஓட்ட வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்து மார்க் போட்டுக்கொண்டே வருவான்.பண்ணும் தவறுகளைப் பொறுத்து பாயிண்ட் குறையும். அதன் அடிப்படையில் பாஸ்/பெயில் என்று இறுதியில் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு சொல்லுவான்.சூசன் சொன்னாலே எனக்குப் புரியாது. டிரைவிங் இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் மிகுதியும் வெள்ளைகாரர்கள். என் நிலையை நினைத்துப் பாருங்கள்.

மூன்று முறை ரோட் டெஸ்டில் ( Road test) மண்ணைக் கவ்வினேன்.

பிறகு எழுத்துத்தேர்வை இன்னொரு முறை எழுதி, நாலாம் முறை ரோட் டெஸ்ட் பாஸ் பண்ணியபோது தான் உயிரே வந்தது. திமிர் சும்மா இருக்க விடுமா...?? லைசன்ஸ் கிடைத்து இரண்டாம் மாதம், ஒரு வெள்ளி இரவில் நண்பன் வீட்டில் லைட்டாய் 'தீர்த்தம் ' தெளித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். அமெரிக்காவில் இது பஞ்சமாபாதகங்களில் ஒன்று. மேலும் போலீஸ்காரர்களிடம் மாட்டிக் கொண்டால் தீர்ந்தது கதை. தொப்பை இல்லாத , லஞ்சம் வாங்காத இந்தப் போலிஸ்காரர்களிடம் தலையை சொரியவும் முடியாது. இருந்தும் , நான் பாட்டுக்கு 'சுதியில்' வேகமாக ஓட்டி விட்டேன் போலிருக்கிறது.

மாமா , பின்னாடி வந்து 'விளக்கு' போட்டு விட்டான். உடனே வலப்பக்கம் ஓரம் கட்டி காரை நிறுத்தி விட வேண்டும். நிறுத்தினேன். கார் கண்ணாடியை இறக்காமல், ஸ்டியரிங் வீல் மேல் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து வெயிட் பண்ன வேண்டும். உட்கார்ந்திருந்தேன்.மாமா வந்து கார் கண்ணாடியில் விரல்களால் தட்டினான். கார் கண்ணாடி இறக்கும் சுவிட்சை தேடி என் விரல்கள் அலைந்த வேகத்தில் ஏதாவது பியானோ கீ போர்ட் மேல் பட்டிருந்தால் , ஒரு பெரிய சிம்பனியே கிடைத்திருக்கும். ஒருவழியாக இறக்கினேன்.
லைசன்ஸ் நம்பரையும், கார் ரெஜிஸ்ரெஷனையும் பரிசோதித்து, Do you think you can Go home safely..?? Because you were over speeding .. என்றான்.

தட்டுத்தடுமாறி Sorry Sir என்று சொல்லி விட்டு , தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்ததை இன்றைக்கு நினைத்தாலும் நம்பவே முடியவில்லை. நிஜமாகவே அங்கே மச்சம் எனக்கு.

பிறகு கடந்த மூன்று வருடங்களாக , எந்த விதி மீறலும் செய்யாமல் சமர்த்தாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னிடம் கற்றுக்கொண்ட என் மாணவியும்..ச்சீ..என் மனைவியும் ஒழுங்காக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாள் முன்பு நண்பர் அருண் அவர் மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதாய் சொன்னபோது மேற்சொன்ன என் பராக்கிரமங்கள் நினைவுக்கு வந்தன.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...