Friday, April 23, 2004

பிரபலங்களின் அருகே
======================

சினிமாவிலும், டீ.வி யிலும் வரும் பிரபலங்களை நேரில் பார்ப்பது தமிழனுக்கு ஒரு பரவச அனுபவம். தான் பிரபலமாகி, புகழ் பெறாத ஆற்றாமையை , இப்படிப்பட்டவர்களிடம் ஆட்டோகிரா·ப் பெற்றாவது தீர்த்துக் கொள்வோம் என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு.

கல்லூரியில் படிக்கும்போது ரொம்ப அறிவுபூர்வமாக பேசும் என் நெருங்கிய நண்பன் ஒருவன் சூப்பர் ஸ்டாரைப் பார்க்கப் போய்விட்டு, அவரைப் பார்த்தவுடன் தன்னுள் நிகழ்ந்த பரவச உணர்ச்சியை கண்கள் மின்ன சொல்லிக் கொண்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. ரஜினி ராம்கியின் வலைப்பூவிலும் அவர் அத்தகையதொரு அனுபவத்தையே எழுதி இருக்கிறார்.

நான் முதன் முதலில் டைரக்டர் டி.ராஜேந்தரை என் தெருவில் பார்த்தேன். மாயவரத்தை ( என் சொந்த ஊர்) சேர்ந்த அவர் அவர் பிரபலமாவதற்கு முன், மகாதானத்தெரு வீட்டு திண்ணைகளில் எல்லாம் தாளம் தட்டி பாட்டு பாடிக் கொண்டே இருப்பாராம். கோதண்டபாணி என்ற ஜோசியர் வீட்டில் தன் டிரேட்மார்க் தாடியோடு உட்கார்ந்து கொண்டு " என்னடா...சினிமா டைரக்டரை பாக்க வந்தீங்களா" என்றார் கர கர குரலில் . டவுசர் வயசில் இருந்த நான் வெட்கப்பட்டுக் கொண்டு ஓடியே வந்து விட்டேன்.

collect


பிறகு டெல்லி கணேஷையும் ( தணியாத தாகம் ஷ¥ட்டிங்) , அதே படத்தில் நடித்த கவிதாவையும் எங்கள் ஊர் கோயில் அருகே பார்த்தேன். அதே கோயிலில்தான் "மைக்" மோகனையும் , ஸ்ரீபிரியாவையும். திடீரென்று ஒருநாள் சரிதா சாமி கும்பிடுகிறார் என்றார்கள். ஓட்டமாக ஓடி பார்த்தபோது, அபயாம்பாள் சந்நிதியில்
பேர் கேட்ட குருக்களுக்கு 'சரித்..தா" என்று பவ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். குளித்து முடித்து கோடாலி முடிச்சிட்டு இருந்தை கவனிக்கும் வயசு அப்போது எனக்கு. என் நண்பனின் அக்காவை, "முழி" தியாகுவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தபோது, அவர்கள் ரிசப்ஷனில் , அதே முழியோடு, கொஞ்சம் அசட்டுக் களையையும் சேர்த்துக் கொண்டு தியாகு உட்கார்ந்திருந்தார்.

காலேஜ் படிக்கும்போது பாலகுமாரன், இளந்தேவன், மு.மேத்தா, ஜெய்சங்கர் போன்றவர்கள் கல்லூரி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள். மு.மேத்தா அருமையாக கவிதை படித்தார். ஜெய்சங்கர் வேக வேகமாக பேசி விட்டு, தான் எடுத்து வந்திருந்த பிள்ளையார் பொம்மைகளை ஏலம் விட ஆரம்பித்தார். ஏதோ அனாதைப் பள்ளிக்காக அதை செய்வதாக சொன்னாலும், எங்களுக்கெல்லாம் கடுப்பாக இருந்தது. பாலகுமாரன் வந்தபோது, அவர் எழுத்தில் இருந்த முதிர்ச்சி பேச்சில் இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்து போனேன். தத்தக்கா..பித்தக்கா என்று பேசி விட்டுப் போனார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் விகடன் அனுபவம். விகடன் பயிற்சி முகாமில் வந்தவர்கள் வேறு விதம். அவர்கள் வெறும் பவுடர் ஆசாமிகள் அல்ல. சுதாங்கன், ரவிசங்கரன்( ·போட்டோகிரா·பர்), நியூஸ் வீக் பன்னீர் செல்வம், சுஹாசினி, ஆசிரியர் பாலன், இணையாசிரியர் மதன், அவர்கள் நிழல் போல சுற்றிக் கொண்டிருந்த (காலம் சென்ற) ப.திருப்பதிசாமி என்று மூன்று நாட்களிலேயே ஏகப்பட்ட அறிமுகங்கள். பிறகு மதனுடன் நடக்கும் தனிப்பட்ட சந்திப்புகளில் ஜாலி டைமில், "சரோஜாதேவி" யைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருப்பார். ஹெக்ஸாவேரில் நான் பணி புரிந்தபோது, நடிகர் கிட்டி அங்கே பிஸினஸ் கன்சல்டன்ட் ஆக இருந்தார். "நீங்கதான் கிட்டியா " என்று கேட்டபோது , இல்லைப்பா நான் அவர் தம்பி " என்று இடி இடி யென்று சிரித்தார். எரிச்சலாக இருந்தது எனக்கு .

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஒருமுறை வெள்ளை உடையில் , அதே ·போட்டோ புன்னகையோடு தேனிசைத் தென்றலைப் பார்த்தேன். எழுத்தாளர் திரு.ஜெயகாந்தனுடன் ஏற்பட்ட சந்திப்பைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதி இருக்கிறேன். வயலின் குன்னக்குடி வைத்தியநாதனை அதே ஏழு இஞ்ச் இளிப்போடு சிங்கப்பூர் கோமள விலாஸில் ஒரு முறை பார்த்தேன்.

ஆனால் டவுசர் காலம் தவிர, பிற்காலங்களில் யாரைப் பார்த்தும் எனக்கு புல்லரிக்கவெல்லாம் இல்லை. " எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவனுதை அவந்தான் கழுவிக்கொள்ளனும் " என்று மூஞ்சியில் அறைகிற மாதிரி ஒரு "பெரிசு" எனக்குச் சொன்னது அத்தருணங்களில் எனக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...