Tuesday, April 27, 2004

வீடு வாங்கலையோ வீடு
==================

நான் பிறந்த்போது எங்கள் குடும்பம் சென்னை அஷோக்நகரில் இருந்தது. மூன்று சகோதரிகளுடன், கடைக்குட்டியாகிய என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேர். அஷோக்நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். ரொம்பச் சின்ன வீடுதான். நடுவில் கம்பி போட்ட முற்றம் இருக்கும். சுற்றி தாழ்வாரம். தாழ்வாரத்தை ஒட்டி வெவ்வேறு போர்ஷன்கள். கொல்லையில் கிணற்றடி , தென்னை என்று இந்தக் கால மெட்ராஸ் குடித்த்னக்காரர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத லக்ஸூரி.

சொந்த ஊர் மாயவரம் என்றாலும், வேலைவாய்ப்புத்துறையில் பணி புரிந்த என் தந்தையை பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களுக்கு , மூன்று வருடத்துக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டிருப்பார்கள். எனவே எங்கும் வாடகை வீடுகள்தான்.குழந்தைகள் வளர, வளர, எங்காவது ஒரு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர் கட்டிய வீடு மாயவரத்தில்.

அதை வீடு என்று ( இப்போது) சொல்ல முடியவில்லை. குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் உறுப்பினர், நான்கு குழந்தைகளுக்கு தகப்பன், தன்னுடைய குறைந்த பட்ச தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வீடு கட்டினால எப்படி கட்டுவாரோ, அதனை செய்தார். மிகுதியை உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன். தாய் தந்தையர்களிடமிருந்து சரியான ஆதரவு இல்லாமல், லோன் கூட எடுக்காமல் ( கடன் வாங்கக் கூடாது. கெட்ட பழக்கம்..!!!! ), ஓடு போட்ட அந்த வீட்டை 1975 ல் அவர் கட்டி முடிப்பதற்குள் பட்ட பாடு சிவனறிந்து போயிற்று. அதற்கு பிறகு, கடந்த 25 வருடங்களாக ஒரு சிற்பி சிலை செய்யும் லாவகத்தோடு, அதே வீட்டையே மாற்றி, மாற்றி, மா.....ற்ற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார் பாவப்பட்ட பசுபதியார்.

படவேண்டிய துனபம் எல்லாம் அவரே பட்டு விட்டதால், அயல்நாட்டு ஆதரவில் நான் நான்கு மாதத்தில் சென்னையில் போன வருடம் இன்னொரு வீட்டை கட்டி முடித்தேன். அதீத சந்தோஷம் அவருக்கு. ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு தலைமுறை பட்ட அதே கஷ்டத்தை , அடுத்த தலைமுறையும் அனுபவித்தால் வளர்ச்சி ஏது...?? எனவே தன் தலைமுறை வளருகிறது என்ற் சந்தோஷம் அவருக்கு.

அமெரிக்கா வந்து வருஷம் மூணாச்சே என்று ச்மீபத்தில் வீடு வாங்கலாம் என்று கோதாவில் இறங்கினேன். விலை எல்லாம் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. ஒரே வீட்டுக்கு மூன்று பேர் ஆஃபர் கொடுக்கிறார்கள். விறபனை செய்பவர் கேட்கும் விலையை விட $10000/$15000 அதிக விலைக்கு எல்லா வீடுகளும் விற்றுத் தீர்கிறது. சாய்ஸ் இல்லை. தட்டிப் பொறுக்கி கம்பேர் செய்து யோசித்து வாங்க யாருக்கும் அவகாசம் இல்லை.கலிபோர்னியா மார்க்கெட் அப்படி.

ஒருவழியாக , மனசை சமாதானப்படுத்தி, குழந்தையின் எதிர்காலத்திற்காக, வீடு வாங்கலாம் என்று முடிவுக்கு வருவதற்கு செய்துகொண்ட சமரசங்கள், மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள், தள்ளிப் போடும் இந்தியப் பயணங்கள், மனைவியின் பகுதி நேர வேலை, இழந்த மாலைநேரங்கள் ஆகியவற்றை நினைக்கும்போது, இன்னொரு பசுபதியார் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான் தோன்றுகிறது.

நாம் எல்லோரும் அதே வாழ்க்கையைத்தான் திரும்ப திரும்ப வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...??

வளர்ந்து கொண்டே இருக்கும் தேவைகளின், ஆசைகளின் பிடியில் வாழ்க்கையின் முகம் மாறுகிறதே தவிர, லயம் பிசகுவதே இல்லை.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...