Monday, April 12, 2004

இந்த வார ஸ்பெஷல் - கும்மோணம் கொத்து பரோட்டா
=====================================================

கனடா வெங்கட் தன் வலைப்பதிவிலும், ராயர் காப்பி கிளப்பிலும் என் மூக்கை ஏகத்துக்கு சேதாரப்படுத்தி இருக்கிறார். என்மீது கோபப்பட அவருக்கு உரிமை இருப்பது போலவே அவருக்கு பதில் சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. என் பதிலினால் அவருக்கு கோபம் ஏற்பட்டால் அதற்கு நான் வருந்துவதை தவிர ஏதும் செய்ய இயலாது.

அவர் பெரிய விஞ்ஞானி. படிக்கும் காலத்திலிருந்தே ஏக காலத்தில் ஏகப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய ஆர்வமும், அதீத சக்தியும் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஒரு சராசரியின் வலைப்பதிவில் எழுதி இருக்கக்கூடிய விஷயங்களை முழுதாக, சரியாக படிக்காமல், வேக வேகமாக வார்த்தைகளை வீசி இருக்கிறார்.

புரட்சி வெடிக்கிறது..?? என்று தலைப்பிட்டால் இளப்பமா..?? எள்ளலா..?? இது எந்த ஊரில்..? நான் எழுதும்போது எனக்குத் தோணாத விஷயம், படிக்கும்போது ஒருவருக்குத் தோன்றி இருந்தால் அது அவர் பார்வைக் கோளாறு என்றுதான் நினைக்க முடியும். அந்தக் கேள்விக்குறிகள் என்னுடைய ஐயத்தை, சந்தேகத்தை, மட்டுமே வெளிப்படுத்துவதாக நினைத்து நான் எழுதினேன்.

முதற்கண், வலைப்பூ என்னுடையது. கருத்துக்கள் என்னுடையவை. ' என் மூக்கு' என்ற தலைப்பின் கீழே ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் வார்த்தையும், அதன் 'ஒரிஜினல்' அர்த்தமும் அவருக்கு தெரிந்திருக்கும்.

அது போகட்டும். குறிப்பிட்ட பதிவின் கடைசி பத்தியையாவது ஒழுங்காய்ப் படித்தாரா
என்பது தெரியவில்லை. வேணுமானால் இப்போது படிக்கட்டும். அதோடு அந்தப் பதிவுக்கு
பின்னூட்டம் தந்திருக்கும் நண்பர்களுக்கு நான் அளித்த பதில்களில் இருந்த நடுநிலைமையையும் ....

கவிதை எழுதுபவர்களை, கதை எழுதுபவர்களை ' சில்லுண்டி ஆசாமிகள் ' என்று வர்ணித்த பிரகாஷ¤க்கு பதில் சொல்வதே அந்தப் பதிவின் நோக்கம். என்னுடைய விருப்பங்களை, என்னுடைய நம்பிக்கைகளை , என்னுடைய பெரும்பாலான நண்பர்களின் பதிவுகளில் வருகின்றவறை ஒருவர் சில்லுண்டி சமாசாரம் என்று சொல்லுகின்றபோது, அதற்கு பதிலாக அவர் உசத்தி என்று நினைக்கின்ற விஷயங்களில் என் கருத்தை
சொல்ல வேண்டுமல்லவா...அதைத் தான் செய்தேன்.

அதை உறைக்கிற மாதிரி சொல்லி விட்டேன் போலிருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால் இதற்கு பிரகாஷின் எழுத்தாள நண்பர்கள்தான் பதில் தந்திருக்க வேண்டும். ஏனென்றால் ' சில்லுண்டி' என்ற கமெண்ட்டுக்கு என்னைவிட அதிகமாக கோபப்பட அவர்களுக்குத்தான் தகுதி அதிகம்.

அவர்கள் கேட்க மாட்டார்கள்.

மற்றபடிக்கு, என் பதிவில் என் விருப்பத்துக்கு தகுந்த விஷயங்கள்தான் வரும். ஏனென்றால்
வலைப் பின்னல்களையும் , ப்ரோட்டோகால்களையும் பற்றி படிக்கவோ, அறிவை விருத்தி செய்வதற்கோ ஏகப்பட்ட ஆங்கில புத்தகங்கள் இருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பாடங்கள் உள்ளன. அவை என்ன புத்தகங்கள் என்று சொல்ல google இருக்கிறது. ஆங்கிலமே படிக்கத் தெரியாதவர்கள் இதை எல்லாம் என் மூலமாக படிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு இதை எல்லாம் என் வலைப்பதிவில் எழுதி, குன்றேறி மண்டைக்குப் பின் ஒளிவட்டத்தோடு காட்சி தரவும், பின் அதை எல்லாம் தொகுப்பு கட்டுரைகளாக போட்டு ' தமிழில் சுஜாதாவுக்கு பின், முருகனுக்குப் பின் விஞ்ஞானம் எழுதுபவர் ' என்று பேர் வாங்கும் உத்தேசம் எதுவும் எனக்கு இல்லை. எனக்கு என் தொழில் கடந்து , என் பிழைப்பு கடந்த ஆர்வங்கள் பல உண்டு. எழுத, பகிர்ந்து கொள்ள செய்திகள் உண்டு. விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று நான் படித்தவனில்லை. " சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் முழு நேர பத்திரிக்கையாளரகவும், எழுத்துத் தோழில் செய்பவனாகவும், கலை சார்ந்த துறைகளிலேயே ஈடுபட்டிருப்பேன்" என்று வலைப்பூவிலேயே பல முறை எழுதி இருக்கிறேன். விருப்பமும் தொழிலும் ஒன்றாய்ப் போகும் அதிர்ஷ்ட்டம் வெங்கட்டுக்கும், தங்கப்பல் ரெங்கய்யனுக்கும் இருக்கிறது. எனக்கு அது இல்லை . அதற்காக தவச மந்திரம் ஓதுவது மாதிரி என் வேலையை செய்கிறேன் என்ற பொருள்பட அவர் எழுதி இருப்பதும் உண்மை இல்லை. அது எனக்குத் தெரியும். கல்லூரி முடித்த காலத்திலிருந்து இன்றுவரை மேலே மேலே போய்க் கொண்டிருக்கும் என் career graph க்கு தெரியும்.

Networking is my Bread winner. Literature is my soul winner.அதில் நான் தெளிவாக இருக்கிறேன். விஞ்ஞானமானலும் இலக்கியமானாலும், உண்டு உறங்கி புணர்ந்து எழுவத தவிர மனிதனை இயக்கும் எல்லா விஷயங்களும் வாழ்வின் பால் அக்கறையும், சக மனிதர்கள் மீதான நேசத்தையும், மரணபயம் மூலமாகவும் விளைந்தவையே. இதில் விஞ்ஞானம் சார்ந்ததும், அதை பகிர்ந்து கொள்வதும் அற்புதம் என்றும் கலையையும் இசையையும், சராசரிகளே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று விஞ்ஞானிகளுக்கு தோன்றுமானால், அது அவர்களோடு இருக்கட்டும்.

என் நம்பிக்கைகளும், ஆதர்சங்களும் என்னோடு. அவை சில்லுண்டி சமாசாரங்கள் என்றாலும்....


No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...