கோவில் - ( சிம்பு சினிமா விமரிசனம் அல்ல)
===================================
கும்பகோணம் கோயில்களுக்கு பேர் போனது என்றாலும் , பொதுவாகவே பழைய தஞ்சை மாவட்டத்து ஊர்கள் எல்லாமே பாடல் பெற்ற ஸ்தலங்கள் தான். சீர்காழி சட்டையப்பர், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமி, திருவாரூர் கமலாலயம், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி, தஞ்சை பிரகதீஸ்வரர் , வைணவத் தலங்களில் ( 108 திருப்பதிகளில்) பெரும்பான்மை, நவக்கிரக ஸ்தலங்கள், அட்ட வீரட்டாணங்கள் என்று எங்கெங்கு காணினும் கோயில்கள் தான். எனவே சின்ன வயசில் அப்பாவுடன் போனது பாதி நேரம் கோயில்களுக்குத்தான்.
ஆனாலும், அடிக்கடி போய் வந்தாலும் அலுக்காதது மாயவரம் மாயூரநாத ஸ்வாமி கோயில்தான். வருடம் முழுமைக்கும் ஏதாவது நடந்து கொண்டிருந்தாலும், ஐப்பசி மாதம் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுவிடும் கோயில் அது. ஐப்பசி மாதம் முதலாம் தேதி கோயிலில் கொடி ஏறியதுமே, லேசாக மழை தூறி விடும். அன்று தொடங்கி, ஐப்பசி 30, கடைமுழுக்கு வரை, கோயில் புறப்பட்டு, ச்ந்நித்த் தெரு, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக, எங்கள் தெருவான மேலவீதி வந்து, பிறகு பட்டமங்கலத் தெரு வழியாக நேராக லாகடம் ( துலாக்கட்டம்) போய் காவேரி ஆற்றில் தீர்த்தம் கொடுத்து விட்டு , பிறகு கோயிலுக்கு போவது தினப்படி நடக்கும்.ஒவ்வோரு நாளும் ஒவ்வொரு வாகனம், ஒவ்வொரு அலங்காரம் என்று அம்பாளும் , ஸ்வாமியும்,வழியில் சாத்தப்படும் பட்டுத்துண்டுகளையும் அர்ச்சனைகளையும் ஏற்றுக்கொண்டு விதியுலா போவதைக் காணக் கண்கோடி வேண்டும். மாயவரம் கோயிலில் உற்சவர் ஸ்வாமி அலங்காரத்துக்கு பேர் போனது என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தமிழக அரசிலிருந்து கோயிலுக்கு சரியாக நிதி வராதபோது, உள்ளுர் ஆட்கள் சேர்ந்து கோயிலுக்கு நிரைய செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் பாழ்பட்டுக் கிடந்த கோயில் பகுதிகள் எல்லாம் சீர் செய்யப்பட்டு, இந்த முறை ஊருக்கு போனபோது கோயில் சுத்த்மாக இருந்தது. கற்பூர வாசமும், கதம்ப வாசமும், விபூதி வாசமும், பத்தி வாசமும், அபிஷேக நீர் தரையில் ஓடி கல்தரையில் பிடித்த பாசி வாசமும், கோயில் யானையின் கொட்டகையைக் கடக்கும்போது வரும் 'அந்த' வாசமும், நெக்குருகி இந்திரதீபம் பார்க்கையில் ஏற்படும் மெய்யுணர்வும் கலவையான அனுபவம்.
சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் பிஸினஸ் செய்யும் இடம் போல , பள பளத்துக் கொண்டு , நாசுக்கான ஆங்கிலத்தில் பக்தர்களை வழிகாட்டும் கோயில்களில், 'இறைவன் தன் பாதத்தில் ஈடுபடும் சொல் அல்லால் பிற வார்த்தை யாதொன்றும் பேசற்க ஆலயத்துள் ' என்று அழகு தமிழில் வழிப்படுத்திய ஆலயங்களை ஒப்பிடவே முடியவில்லை.
இது சம்பந்தமாக ராயரில் ஒரு திரி ஓடிக்கொண்டிருந்தபோது, தமிழ்மாது கீழ்வரும் கவிதையை முன்னிப்பு செய்தார்.
எண்ணைய்ச் சிக்கு நாற்றமும்,
குறுக்கே ஒடும் மூஞ்சூருகளும்,
வௌவ்வால் புழுக்கைகளும்,
வேர்க்கும் கர்ப்பக்கிரகங்களும்,
இருட்டுப் பிரகாரங்களும்,
பயமுறுத்தும் துவாரபாலகர்களும்,
மூலவர் பின்னால் காப்பி குடிக்கும் அர்ச்சகரும்,
மடிசார் மாமிகளும்
இல்லாத கோவிலா ?
நான் வரவில்லை
ஸ்வாமி.
கடைசி இரண்டு வரிகளுக்கு நடுவே இடைவெளி விட்டு படித்துப் பார்த்தேன்.
சுவாரஸ்யமாக இல்லை..??
No comments:
Post a Comment