Thursday, April 01, 2004

ஜூனியர் விகடன் நினைவுகள்
======================

சமீபத்தில் அமீரக ஷேக் ஆசிஃப் மீரான் எழுதிய ஒரு மடலில் , தான் ரமேஷ்பிரபாவை, விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்ட கூட்டத்தில் எடக்கு மடக்காக மடக்கியதை எழுதி இருந்தார். அட , இவரும் முன்னாள் ஜூ.வி நிருபர்தானா என்று சந்தோஷப்பட்டேன்.

மடற்குழுவிலும், பத்திரிக்கைத் துறையிலும், சினிமா டைட்டில்களிலும், விகடன் ஆசிரியர் குழு பட்டியலிலும்
மாணவப்பத்திரிக்கையாளர்களாக இருந்து , எழுத்துத் துறையிலேயே தொடர்கிறவர்களின் பெயர்களைப் பார்த்தால் ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கும் - பிழைத்துக்கொண்டார்களே என்று. இன்னொரு பக்கம் வருத்தமாக இருக்கும் - நாம் விட்டுவிட்டோமே என்று.

மற்ற கல்லூரிகளில் எப்படியோ, எங்கள் கல்லூரியில் ஜூ.வி பத்திரிக்கையாளர் என்பது ஒரு கவுரவம். நான் படித்த காரைக்குடி அழகப்பச்செட்டியார் கல்லூரி பசும்பொன் மாவட்டத்தில் உள்ளது என்பதால், அந்த மாவட்டத்தை ரெப்ரசண்ட் செய்ய விகடனால எடுக்கப்படும் மாணவர் அதே மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து விண்ணப்பம் செய்திருக்கும் மாணவர்களை முதல்கட்ட எழுத்துத்தேர்வுகளில் வெற்றி கொண்ட பிற்கே இறுதிச்சுற்றுக்கு செல்ல வேண்டி இருக்கும். எனக்கு முன்னே மூன்று ஆண்டுகள் எங்கள்
கல்லூரியிலிருந்தே மாணவ நிருபர்கள் தெரிந்தெடுக்கப் பட்டிருந்தார்கள். அது வேறு எனக்கு ஒரு கூடுதல் திக் திக் .

வி.பி.சிங் ஆட்சி பிழைக்குமா என்பதுதான் முதல்கட்ட எழுத்துதேர்வுக்கு தரப்பட்ட தலைப்பு. அதில் தேர்வாகி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அடுத்த கட்ட தேர்வு. அதில் ஒரு ரயில் விபத்தை கவர் செயவது மாதிரி எழுத்ச்சொல்லி இருந்தார்கள். அடுத்த்கட்டம் சென்னையில் நேர்முகத்தேர்வு. காலையில் விகடன் அலுவலகத்தை விட்டுக் கிளம்பி, மாலை நாலு மணிக்குள் திரும்பி , பார்த்த ஏதாவது ஒரு செய்தியை எழுதி தரவேண்டும். முடித்த்பின் ஆசிரியர் பாலனுடனும், இணையாசிரியர் மதனுடனும் கூட்டுச் சந்திப்பு.

இதெல்லாம் முடிந்து நான் தேர்வான செய்தி, போட்டோவோடு விகடனில் வந்ததும் தரையிலேயே கால்கள் பாவவில்லை. பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவகள் அனைவருக்கும் சென்னை தி.நகரில் மூன்றுநாள் பயிற்சிக்கூட்டம். பெரிய பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், விகடன் குழும சீனியர்கள் கலந்து கொள்ளும் அந்தக்கூட்ட முடிவில் பத்திரிக்கையாளர் அடையாள அட்டை, இன்னபிற அயிட்டங்களோடு நெஞ்சு நிறைய பெருமிதமும் , நம்பிக்கையுமாய் வழியனுப்பும் விகடன். எழுதும் கட்டுரைக்கான சன்மானத்தோடு, செய்யும் செலவுகளுக்கான பணவிடைத்தாள்களுமாய், வாராவாரம் விகடன் குழுமப் பத்திரிக்கைகளை இலவசமாக அனுப்பி வைத்து, கல்லூரிக்குள் நிறைய காசும் கொஞ்சம் கர்வமுமாய், வலம் வரச்செய்த விகடனை இப்போது நன்றியோடு நினைவுகூரத் தோன்றுகிறது

எனக்குத் தெரிந்த வட்டங்களில் மாணவப்பத்திரிக்கையாளர்கள் :

ஆசிஃப் மீரான், விகடன் சீனியர் எடிட்டர் ரா.கண்ணன்/ம.கா.சிவஞானம், ஜி.கெளதம், ஆனந்தராகவின் ஹாங்காங் நண்பர் மாயவரம் ஜி.ரமேஷ்குமார் , (ஷங்கர் அசிஸ்டெண்ட்) அ.ஜெரால்டு , எஸ்.பி.ஹோசிமின், சிஃபிராயர் வெங்கடேஷோடு பணிபுரியும் எம்.பி.உதயசூரியன், காலமாகிப் போன திருப்பதிசாமி, காலமாகிப்போன தமிழன் எக்ஸ்பிரஸ் நிருபர் வி.வேல்பாண்டியன், ஜூவி எடிட்டோரியல் விகேஷ் என்கிற வெங்கடேஷ் , பார்த்திபன கனவு டைரக்டர் கரு.பழனியப்பன், விரும்புகிறேன் டைரக்டர் கணேசன், மற்றும் எனக்குத் நெருக்கமாகத் தெரியாத எண்ணிலடங்காத விகடன் குழும நிருபர்கள் என்று, அது ஒரு பெரிய லிஸ்ட்.

அவர்கள் அனைவரின் சார்பாகவும் , விகடன் தாத்தாவுக்கு ஒரு 'ஓ' ..............


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...