Monday, April 05, 2004

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் கெய்க்வாட்...?
=======================================

"அண்ணாமலை" யில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். தன்னுடைய நிலத்தை அடைய விரும்பும் லோக்கல் எம்.எல்.ஏ வின் வீட்டு ஹாலில் மாடுகளை கட்டி விட்டு, வியர்த்த முகத்தோடு ' நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டு இருக்கேன். தேவையில்லாம என் வழியில வந்தீங்கன்னா, நான் சொன்னதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன் " என்று அவர் பேசப் பேச மாநில ஆட்சியின் மீது வெறுப்புற்றிருந்த மக்கள் தியேட்டரில் ஆவேசமாக விசிலடித்துக் கைதட்ட , படமும் ஓட்டமாக ஓடியது. அன்று ஆரம்பித்தது ரஜனியின் அரசியல் ஆசை....இல்லை..இல்லை..அரசியல் வசனங்கள்.

எதைக்கண்டாலும் பயந்து கொண்டு, ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, எதிரியை வேகமாக வளரவிடும் பலவீனம் நமது அரசியல்வாதிகளுக்கு "ரிக்ஷாக்காரன்' காலத்திலிருந்தே இருந்து வருகிறது.அப்போதைய முதல்வரும் விதி விலக்கா என்ன..?? சும்மா இருந்த சங்கை,அவரும் ஊதிக்கெடுத்தார் தன் பேச்சினால்...!. எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆசை இருந்ததை தனது பத்திரிக்கையில் எழுதி, அவருடைய ஆரம்பகால நம்பிக்கைகளுக்கு ஒரு வித உந்து சக்தியாக இருந்த தமிழ்நாட்டின் "க்ளெவர் ராஸ்கல்" இங்கும் தன்னுடைய வேலையை ஆரம்பித்தார். ஜெ வின் தலைமையினால் ஒதுக்கப்பட்டு வாழ்விழந்து கிடந்த சத்யா மூவிஸ் கணக்கப் பிள்ளை, 'காலத்தின் தூதுவனாக நீ வந்திருக்கிறாய்' என்று கூர் தீட்ட ஆரம்பித்தார். முத்துவேலர் மகனோ, சினிமா கவர்ச்சியை தான் எதிர்த்து வாழ்வின் பாதி நாள் அடிபட்டதை நினைவில் கொண்டு, 'இம் முறையாவது' இந்தக் கவர்ச்சியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தூது விட்டார். 'ஜெய் ஹிந்த்' என்று இவர் சொல்வதால் , தேசியக் கட்சியில் அமுக்கிவிடலாம் என்று நம்ம கபிஸ்தலம் மிராசு, வாசனைப் பாக்குடன் யோசித்து யோசித்து, கடைசியில் ஸ்தாபன கட்சி ஆரம்பிக்கும் ஸ்டைலில் ஆவது காமராஜர் போல இருப்போம் என்று ரஜினையை நம்பியே சைக்கிள் கட்சி ஆரம்பித்தார். அரசியல் ஆசையுடனும், சொந்த அபிலாஷைகளுடனும் ஆளாளுக்கு சூப்பரை மொய்க்க, சூப்பர் தன் வசனகர்த்தாக்களுக்கு இங்க் பாட்டிலும் , பேனாக்களும் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் - படங்களை ஓட வைக்க.

பொது ஜன அதிருப்தி அலையும் , வலுவான கூட்டணியும் சாதகமாக இருக்க, அதுவே ஜெ. வீழ்ச்சிக்கு அப்போது காரணமாக, ' வாய்ஸ்' புகழ்பெற்றது. வேறு சில படங்களும் ஓடியது.நடுவில் வாய்ஸ் தடுமாறியது. பிறகு சாப்பிடுவதற்கு மட்டுமே வாய்(ஸ்) திறந்தது

baba_announce


இப்போது ரஜினிக்கு வந்திருப்பது உண்மையான அரசியல் சோதனை. வெறுமனே ஒதுங்கி இருந்து, வசனம் பேசி, அரசியலின் லாபத்தை மட்டுமே அறுவடை செய்து என்ஜாய் செய்து கொண்டிருந்தவர், ராமதாஸ் கட்சியனரால் தாக்கப்பட்டிருக்கிறார். அரசியல் என்றால் ரத்தம் என்பதும், அரசியல் என்றால் கலாட்டா என்பதும், கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தால் கூட எதிராளியினர் ரத்தக்களறி ஆக்குவார்கள் என்பதும் முதன் முறை அவரால் எதிர்கொள்ளப்படும் கசப்பான நிஜங்கள்.

இதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும், இதற்காகவாவது அவர் வெளியே வந்து தன் ரசிகர்களுக்கு வழியும், ஆறுதலும் காண்பிக்கிறாரா என்பதை வைத்துத்தான் ரஜினியின் எதிர்காலம் தமிழ்நாட்டில் நிச்சயிக்கப்படப் போகிறது. அப்படி இல்லாது இம்முறையும் வெண்டைக்காயில் விளக்கெண்ணை ஊற்றியது போல அவர் பேசிக் கொண்டிருந்தால், இனி அவர் என்ன பேசினாலும், எங்கே பேசினாலும் எடுபடாது - சினிமா, அரசியல், ஆன்மீகம்,ரத்ததானம் உள்பட

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...