Thursday, April 22, 2004

சாப்பாட்டு வரிசையில்
================

இன்று மேஷ ராசி, அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு, பட்டினி என்று எழுதி இருக்கிறது போல.

மாதாந்திர அலுவலக மீட்டிங் நடக்கும்போது வரும் எங்கள் வைஸ் பிரசிடெண்டுக்கு மஸ்கா அடிக்க , வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நாங்கள், அந்தந்த நாட்டு உணவு வகைகள் கிடைக்கும் ரெஸ்டாரெண்டை தெரிவு செய்வது வழக்கம்.இந்த மாதம் மீட்டிங் இன்சார்ஜ் சோழிப் பல்லோடு சிரிக்கும் என் பிலிப்பினோ நண்பன் டானி பர்னாஹா.

இதற்கு முன் மெக்ஸிகன், தாய், இத்தாலி, மெடிட்டரேனியன், இந்தோனேசியன், சைனீஸ் உணவு வகைகளை ருசி பார்த்திருக்கிறேன். அமெரிக்காவில் இந்திய ரெஸ்டாரெண்டுகளுக்கு போவது ரொம்ப அபூர்வம். அப்படியே போனாலும், சுவை ஒரே மாதிரி இருப்பதாய் ஒரு எண்ணம். தவிரவும், பஃபே டைப் அயிட்டங்கள் ரீசைக்கிள் பண்ணப்பட்டு இன்னொரு ஹோட்டல் அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.

விஷயத்துக்கு வருகிறேன்.

இன்று போன இடம் பிலிப்பினோ ரெஸ்டாரெண்ட். வட்ட வடிவ டேபிள் போட்டு நடுவில் மரத்தில் செய்யப்பட்ட ஒரு சக்கரம் இருந்தது. அதில் ஒரு பிளேட்டில் , 20 சுருட்டு மாதிரி சமாசாரங்களை வைத்திருந்தான். அது பசியூட்டி ( ஹி..ஹி..அப்படைஸர்) யாம். உள்ளே பன்றி இறைச்சி. மக்கள் எல்லாம் ஆனந்தமாக சாப்பிட ஆரம்பிக்க,இந்தியர்கள் மட்டும் திரு திரு என்று விழித்தபடி உட்கார்ந்திருந்தோம்.அசைவம் சாப்பிட எனக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை எனினும் கோழியோடு நிறுத்திக் கொள்வது வழக்கம். அடுத்து சூப் வந்தது. நம்மூரில் மாடுகளுக்கு கழுநீரில் புண்ணாக்கு , பருத்திக் கொட்டை கல்ந்து ஒரு பானம் கொடுப்பார்கள்.பார்ப்பதற்கு அதே கலர். அதில் என்ன இருக்கிறது என்று டானிக்கே தெரியவில்லை. அதையும் தவிர்த்து விட்டு எல்லாரையும் பராக்கு பார்த்தபடி உட்கார்ந்திருதேன். பிறகு ப்ராகெல்லி ( Brocelli) , வெங்காயம், கேரட் கலந்து ஒரு வெஜிட்டேரிய ஐட்டம். பிறகு கொஞம் நூடுல்ஸ். டம்ளர் டம்ளராக கோக். இதற்கு நடுவில் குஷியாகப் போன என் V.P யின் சேல்ஸ் டாக்.

ஒரு மார்க்கமாக சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது, பிலிப்பினோ உணவுக்கு மானசீகமாக முழுக்கு போட்டுவிட்டு வெளியே வந்தேன். நம்மூரு சுகன்யா ஸ்டைலில், சிரித்து சிரித்து ஒடியாடி, குறுகலான சேர்களின் நடுவே நெளிந்து உபசரித்த BMW பிலிப்பினோ பெண்கள் மட்டும் ஒரே ஆறுதல்.

வயிற்றுக்கில்லாத உணவு, தாராளமாக கண்களுக்கு ஈயப்பட்டது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...