Tuesday, May 04, 2004

ரசனைக்குறைவு
============

பிரபலங்களை பார்த்தது பற்றி நான் எழுதிய பதிவு , பல எதிர்வினைகளை உண்டாக்கி, திண்ணை இணைய இதழ் வரை எதிரொலித்திருக்கிறது. என் பதிவில் தான் ரசித்த கமெண்ட்டை , காசி தன் பதிவில் எழுதியதும், அதை அங்கேயே எழுதப்பட்டதாய் நினைத்து ( லிங்க் கொடுக்க மறந்து) , மதுவந்தி என்பவர் திண்ணையில் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய கட்டுரையை நேற்று திண்ணையில் தேடித் தேடி இளைத்தேன். நண்பர்கள் கண்டால் எனக்குச் சொல்லவும்.

மேற்படி விஷயத்தில் காசியின் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளைப் பற்றி ஏதும் சொல்லாமல் வாளாவிருந்ததற்கு காரணம், எழுதுவது மட்டும் தான் என் வேலை என்று நினைத்ததால். நறுமணம் கமழும் என் மூக்கைப் போலவே அவர்களுக்கும் உண்டென்பதால். ஆனால் நேற்று காசியின் சமீபத்திய பதிவில், திண்ணைக்கு எழுதியதாய் அவர் சொன்ன அவர் விளக்கத்தைப் படித்த பிறகு, நான் என்ன நினைத்து அதை எழுதினேன் என்று சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

முதலாவது கழுவும் கமெண்ட் பற்றி சொன்னது நான் தான். சொன்னது 'பெரிசு' என்றாலும், அதை ஞாபகம் வைத்து என் பதிவில் போடுகிறேன் என்றால் என்னை அந்த அளவு பாதித்திருக்கிறது என்று அர்த்தம். எனவே அது என் கமெண்ட என்றுதான் கொள்ள வேண்டும். அதை 'ரஸனைக் குறைவு " என்று யாராவது சொன்னால் எனக்கு ஆட்சேபம் இல்லை. அப்படிப் பார்த்தால் சித்தர்களின் மெய்ஞானப் புலம்பல்களே ரசனைக் குறைவுதான்.

காதலில் கண்மண் தெரியாமல் , படிப்பை மறந்து அலையும் ஒருவனிடம் போய் காதலின் மேன்மையையும், மனிதனின் மிருக குணத்தை தெய்வீகமாக்கி அது பண்படுத்தும் மாயாஜாலத்தையும் , அழகியல் உணர்ச்சியோடு யாரும் பேச மாட்டார்கள். அப்படி பேசினால அது முட்டாள்தனம். அவனை அந்த உணர்விலிருந்து விடுவிக்க வேண்டுமானால் "நட்ட ... தொட்ட .... " என்றுதான் பேச முடியும். பேச வேண்டும். அழகியல் வேறு . யதார்த்தம் வேறு. இரண்டும் பின்னிப் பிணைந்தும், ஒன்றை ஒன்று மிகாமலும் போவது தான் வாழ்க்கை.

பிரபலங்களை,முக்கியமாக நடிகர்களை, தான் தந்த அவன் பிரபல்யத்துக்காக ஆராதித்து அவன் பின்னால் அலைந்து, நெக்குருகி, புல்லரித்து, புளகித்து அவன் பின்னால் அலையும் ரசிக மகா குஞ்சுகளின் மண்டையில் போட விழைவதே, அந்தப் பதிவின், முக்கியமாக, அந்த வாசகத்தின் நோக்கம்.

நோக்கம் நிறைவேறி விட்டதாகத் தான் தோன்றுகிறது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...