Friday, May 21, 2004

சாவித்திரிகளுக்கு அஞ்சலி
========================

இன்றைய தினகரன், தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மனைவி சாவித்திரி அம்மாள் தஞ்சை மாவட்டம் மேக்கிரிமங்கலத்தில் இயற்கை எய்தினார் என்று செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த அம்மாள் உயிருடன் இருந்திருந்தால் அந்த செய்தியை பார்த்து விட்டு வறட்டு சிரிப்பொன்றை வெளியிட்டு இருப்பார். கல்யாணம் ஆகி பாதி நூற்றாண்டுக்குப் பிறகு, கோ.சி.மணியின் மனைவியாக அவர் வெளியுலகுக்கு அறியப்பட்ட தருணம் இதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

காரணம், கோ.சி.மணியின் மனைவி அவர் மட்டும் இல்லை.

ko.si.mani


நான் மாயவரத்துக்காரன். மேக்கிரிமங்கலம் எங்களூரிலிருந்து 15 கி.மி தான். என் தமக்கையின் மாமனார் வீடு அங்கேதான் இருக்கிறது. அடிக்கடி அங்கே போய் வந்தமையால், மணியின் பிரபல்யமும், அவருடைய அரசியல்/பர்சனல் வாழ்க்கையும் ஓரளவிற்கு தெரியும். அந்த அம்மாள் உயிருடன் இருந்தவரை மணிக்கும், அவருக்கும் தொடர்பே இல்லை. மேக்கிரிமங்கலத்தில் சிறிய கிராமத்து வீட்டில் மூத்த மனைவி மாடுகளை பார்த்துக் கொண்டு இருக்க, மணி ஆடுதுறை பங்களாவில், தனக்கு பிடித்த ஒரு முன்னாள் நாடக நடிகையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.தன் வாழ்க்கை இப்படிப் போய் விட்ட நிலையில், சாவித்திரி அம்மாள் சற்றே மனம் குழம்பி, இவ்வளவு காலமும் சித்தப் பிரமை பிடித்து சுற்றிக் கொண்டிருந்தார். இந்தியா டுடே ஒரே ஒருமுறை அவரை(யும்) பேட்டி கண்டு எழுதியது.மணியின் அரசியல் பலமும், செல்வமும சாவித்திரி அம்மாளுக்கு பிறந்த பிள்ளைகளை கூட தாய்க்கு ஆதரவாக குரல் எழுப்பாமல் அடக்கி விட்டது.

இத்தனை வருடம் கழித்து அவர் உடல்தான் இறந்திருக்கிறது.

தமிழக அரசியலில் இம் மாதிரியான கதைகள் புதிதில்லை. ஆணாதிக்க சமூகத்தின் மிச்சங்களாக அரசியலிலும், பெருந்தனக்காரர்கள் வீடுகளுகளிலும், பண்ணையார் வீடுகளிலும் இந்த பல(கா)தார வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வெளிவாழ்க்கைக்கு, கொள்கை கோஷங்களுக்கு, தாய்மார்களுக்கு பேராதரவு தரும் கனவான்களும், பெரிய மனிதர்களும் இம் மாதிரி, பல் போன வயதில், பல் முளைக்கும் குழந்தைகளை பெற்று 'பெரு'வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், அரசியல்வாதிகள்....கொடி ஏற்றி கட்சிக் கிளை திறக்கும் ஊரிலெல்லாம் மனைவிமார்கள். அதிலும் இரண்டாவது, மூன்றாவது மனைவியாக வரும் பெண்கள் எல்லாம் அந்த நிலைக்கு எப்படி ஒத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. சாவித்திரி அம்மாளுக்காவது, சாகும்போது பத்திரிக்கையில் பேராவது வரும். அந்த நாடக நடிகை சாகும்போது யாருக்குத் தெரியப் போகிறது. அது ஒரு மனிதப் பிறவியின் சாவாக இல்லாமல், முன்னாள் அமைச்சரினால் வெறும் துவாரமாகப் பார்க்கப்பட்ட ஒரு பெண்ணின் சாவாக அல்லவா இருக்கும்...!!!

இந்தியாடுடே வில் ராஜாத்தி அம்மாளின் பேட்டி ஒரு முறை வந்திருந்தது. மனைவி என்ற சரியான அந்தஸ்து இல்லாமல், கருணாநிதியின் தொடர்பில் இருந்ததில், சமூகத்தில் தானும் கனிமொழியும் சந்தித்த சவால்கள், அவமானங்கள் ஆகியவற்றை, சற்றே தயக்கத்துடன் வெளிப்படுத்தி இருந்தார். மனம் கசிந்து போனது.அந்த வலிதான் கனிமொழியை கவிதை எழுத வைத்திருக்கிறது என்பேன். கோர்ட்டில் எப்போதோ ஒருமுறை கேட்டபோது, " கனிமொழி என் மகள்..ராஜாத்தி அவள் அன்னை' என்று கலைஞர் சொன்னதாய் அவர் அபிமானிகள் புளகாங்கிதப்பட்டுப் போவார்கள். தமிழை வைத்து செய்யும் பொறுக்கித்த்னம், மோசடி, மோடி வித்தை அது என்பேன் நான். 'இருவர்' படத்தில் கூட இந்த இருதார பிரச்சினை தமிழ்ச்செல்வனின் மூத்த மனைவியை எப்படி வாட்டுகிறது என்று தமிழ்செல்வன் கார் இரண்டாம் வீடு போகும்போது காட்டி இருப்பார்கள்.

இந்த விஷயத்தில் இன்னமும் ஆழமாகப் போகலாம். ஆனால் இது போதும். உங்களுக்குப் புரியும்.

இந்த மாதிரி பலதாரங்களை உருவாக்கி, அவர்கள் எல்லோரையும் கேவலப்படுத்துவதற்கு, அந்த கால ஸ்டைலில் அத்தர் தெளித்து, ஜாதிக்காய் மென்று , கையில் மல்லிப்பூ சுற்றிக் கொண்டு , மயில்கண் வேட்டியும், மஸ்லின் ஜில்பாவுமாக அவ்வப்போது சதிர் பார்த்து விட்டு வரலாம்.

குழப்பம் கொஞ்சமாவது குறையும்.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...