Friday, May 14, 2004

நாள்தோறும்

============

பெருக்கத்துவங்கி மின்விசிறி நிறுத்த
பகல்தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க
காபி தந்து காய்கறி நறுக்கி காலையில் கட்டடுக்க
தோசைக்கரைத்து முகம் கழுவி வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்கவைத்து
சமையல் செய்து பரிமாறி தரை துடைத்து
பாத்திரம் ஒழித்துப் போட்டு
பசங்களை படுக்கையில் விட்டு
மேயப் பாக்கி இல்லாத பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து, இருட்டில்
மாடியேறி உலர்ந்த துணியும், விரிப்பில்
வடகமும் மொத்தமாக சுருட்டிவந்து
வாசல் கதவடைத்து, கூடம் விளக்கனைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள் , பெய் என்றாள்.


(நன்றி : தினம் ஒரு கவிதை இணையக்குழு )


கவிதையை எழுதினவர் யார் என்று சொல்லத் தேவை இல்லை. கவிஞர், படிப்பவர்களை கடைசி வரிக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்று விட்டிருக்கிறார்.... சரியான அறை.

சோகம் - இவர் இப்போது கவிதை எழுதுவது இல்லையாம்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...