Sunday, September 12, 2004

காந்தி - பெனகல் பார்வையில்

gandhi1

சின்ன வயசில் ரிச்சர்ட்டு அட்டன்பரோவின் "காந்தி" பார்த்தது நினைவிருக்கிறது. தனக்கும், தன் பிள்ளைக்கும் புரிகிறதோ இல்லையோ, படத்தைப் போய் பார்க்க வேண்டும் என்று மாயவரம் விஜயா தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போன என் தாயாரை இப்போது நினைத்தாலும் வியக்கத் தோன்றுகிறது.

நெடுநாள் கழித்து, நேற்று ஷ்யாம் பெனகலின் " The making of Mahathma" என்ற ஆங்கிலப் படத்தை பார்க்க நேரிட்டது. பெனகல் ஸ்டைல் ரொம்ப ஆச்சரியமூட்டவில்லை. இந்த உத்திகள் எல்லாம் ஏற்கனவே கமலஹாஸனால் அவருடைய தமிழ்ப்படங்களில் எடுத்தாளப்பட்டிருந்ததால் அத்தனை வித்தியாசமாக இல்லை. விவரணப்படத்திற்குரிய களமாக இருந்தாலும், மற்ற படங்களைப் பார்ப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தது . அதற்குக் காரணம், ஷ்யாமின் அநாயாசமான டைரக்ஷனாக இருக்கலாம்.

முழுக்க முழுக்க காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று பிறகு எங்கோ படிக்க நேரிட்டபோதுதான் தெரிந்தது. இது முன்னமே தெரிந்திருந்தால் படம் ஆரம்பித்த கணத்திலிருந்து இந்திய சுதந்திர போராட்ட காலத்தை பற்றிய விவரணைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை தவிர்த்திருக்கலாம். ஓரளவில் பின்னாளில் நிகழக்கூடிய சம்பவங்களுக்கெல்லாம், ஒரு ஒத்திகை மாதிரி தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட போராட்டங்கள் அமைந்திருந்தன என்று தோன்றுகிறது. சத்யாகிரஹம் என்றால் passive resistance என்று படத்தில் பல இடங்களில் காந்தி சொல்கிறார். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டம் ஏன் வன்முறையற்றதாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு, சமீபகால உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னளவில், ஆக்கிரமிக்க வெறி கொண்டு அடக்க நினைக்கும் மாற்றானுக்கு எதிராக Non-Violence என்னும் ஆயுதத்தை பயன்படுத்த நிறையவே violence வேண்டும். ரயிலிருந்து தள்ளி விடப்படும்போதும், வண்டியில் போகும்போது அடிக்கப்படும் போதும்,
கோர்ட்டில் தலைப்பாகை எடுக்குமாறு அறிவுறுத்தப்படும் போதும், நடு ரோடில் குண்டர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு விழும்போதும், காந்தியாக நடித்தவர் கண்ணில் அந்த வயலன்ஸ் தெரிந்தது.

அதே போல விடுதலை யாரிடமிருந்து வேண்டும் என நினைக்கிறாரோ, அவர்களுடன் இணக்கமான முறையில் உறவு கொண்டு சில அதிரடி முடிவுகளை எடுக்கவும் காந்தியார் தயங்கி இருக்கவில்லை. கூட இருக்கும் நண்பர்கள் காந்தியை துரோகி என்று கூறியபோதும், பணம் பெற்றுக் கொண்டு வாக்கு மாறி விட்டார் என்று இழித்துரைக்கப்படும்போதும் அதே non-violence அவருக்கு கை கொடுத்திருக்கிறது. எடுத்த முடிவில் பிடிவாதமாகவும், உறுதியாகவும் இருந்தாலும், எதிர்ப்புகளுக்கு அயராமல், முன்செல்ல அவருக்குள் இருந்த ஜோதி அவருக்கு வழிகாட்டி இருக்கிறது.

GANDHI

மற்ற தலைவர்களின் மனைவிகளைப் போலவே கஸ்தூரிபாயும் அலைக்கழிக்கப் பட்டது தனிக்கதை. அதை எத்தனை படம் எடுத்தாலும் சொல்லத் தீராது. சின்ன வயசில் "சத்திய சோதனை" படித்திருக்கிறேன். இத்தனை வருடம் கழித்து, மகாத்மாவின் புனிதத்தைப் பற்றி கேள்விகள் எழுப்பும் நவகால பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், கட்சிகள் தூண்டி எழுப்பும் மீள்பார்வைகள் தாண்டி அந்தப் புத்தகத்தை மறுபடியும் புரட்ட வேண்டும் என ஆவலாயிருக்கிறது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...