Friday, September 24, 2004

தனியே..தன்னந்தனியே...

மாயவரம் பக்கத்தில் உள்ள கோமல் என்ற என் சொந்த கிராமத்துக்கு போகும்போதெல்லாம் அங்குள்ள வீடுகளில் மாமனார், மாமியார், பிள்ளைகள், மருமகள்கள் மற்றும் குழந்தைகளோடு வாழும் குடும்பங்களைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். என் இளமைப் பருவத்திலேயே, மாயவரம் மாதிரியான ஊர்களிலேயே, அம்மாதிரியான பெருங்குடும்ப வாழ்க்கைகள் அருகி வந்த காலம். இத்தனை கூட்டத்தில் இருக்கும் கோப தாபங்களையும், பிரச்சினகளையும் சகித்துக் கொண்டும், ச்ந்தோஷமாக வாழ்ந்தது மட்டுமல்ல, மெரினாபீச் போல கூடம், சமையலறை என இருந்த வீடுகளிலிருந்தே இனிய "இல்லறமும்" நடத்தி இருக்கிறார்கள். மிகப் பெரிய காரியம் இது. கொஞ்சம் அசந்தாலும், மானம் போய் விடக்கூடிய சூழலில், பருவயதில் உள்ள குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, யாருக்கும் எந்த பிரச்சினையும் வராமல் கணவன் மனைவியாக வாழ்வதென்பது சவால்தான்.

அவள் விகடனில் என் டைரி என்ற பக்கத்தில் ஒரு நகர்ப்புற வாசகி எழுதி இருக்கிறார்.

நாங்கள் குழந்தையாக நினைக்கும் எங்கள் மகள் இப்போது பத்தாவது படிக்கிறாள். எப்போதும் அவள், நான், என் கணவர் மூவரும் ஒரே படுக்கையில்தான் படுப்போம். அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகுதான் எப்போதாவது நானும் என்னவரும் நெருக்கமாக இருப்போம். அன்றும் அப்படித் தான்... ஆனால், அவள் தூங்கிவிட்டாள் என்று நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது. இடையில் விழித்துப் பார்த்திருக்கிறாள். அதனால் வந்ததுதான் அந்த வெறுப்பு. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் தொடர்கிறது. வீட்டில் நிம்மதியே இல்லை. எங்கள் மகள் பழையபடி எங்களுக்குக் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? ஜடமாக உலவிக்கொண்டிருக்கும் எனக்கு நல்ல வழி சொல்லுங்கள் தோழியரே...’’


தானும் தன் கணவனும் நெருக்கமாக இருக்கும்போது, பார்த்துவிட்ட தங்கள் பதின்ம வயது மகள், தன் கூட பேசவே பேசாமல் முரண்டு பிடிப்பதாக புலம்பி இருக்கிறார். மிக அவஸ்தையான அனுபவம் இது. குழ்ந்தைகளுக்கு வெளியுலகில் இருந்து கிடைக்கும் செய்திக் கடலின் நடுவே இது மாதிரியான விஷயமும் சரியாக வந்து சேர்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் தவறாக வந்திருந்தாலோ, அல்லது அடிப்படை அறிவே இல்லாதிருந்தாலோ, தன் தாயும் தந்தையும் "இப்படி" ஏன் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று நினைக்கவே வாய்ப்பிருக்கிறது. அரைகுறையாக தெரிந்தாலோ, இன்னமும் மோசம். பிஞ்சு மனசில் அந்தக் காட்சி பதிந்து, மாறாத வடுவை ஏற்படுத்தி விடும்.

aval

( மாடல் : ஸ்ரீதேவி விஜயகுமார் ..ஹி..ஹி..)

இந்தியாவில் குழந்தைகள் தன் தந்தை தாயுடன் தூங்குவதுதான், மத்யமர் குடும்பங்களில் இன்றும் காணப்படுகிறது. தனி ரூம், தனி பெட், பக்கத்தில் கரடி பொம்மை, போஸ்டர் சுவர்கள் எல்லாம் சினிமாவில் மட்டும் காணக்கிடைக்கும் காட்சிகள். ஆனால் அமெரிக்காவில் குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களிலேயே தனியாக போட்டு விடுகிறார்கள். பக்கத்தில் "சைல்ட் மானிட்டர்" பொம்மைகள் போன்ற சமாசாரங்களினை வைத்து விட்டு, அப்பா அம்மா மாஸ்டர் பெட்ரூமில்தான் தூங்குகிறார்கள். சிலவீடுகளில் இதற்காகவே ஆயாக்கள் வேறு.

" இவர்களுக்கு குழந்தையை விட தங்கள் வாழ்க்கைதான் முக்கியம். அவர்களைப் பார்த்துக் கொள்வதை விட்டு வேறு என்ன வேலை இவர்களுக்கு...??? சின்ன வயதில் இவர்களே தன் குழந்தைகளை தனி ரூமில் தள்ளுகிறார்கள். பருவ வயதில், குழந்தைகள் தங்கள் ரூமில் நுழைந்து தனியே இருக்க விரும்பினால் சந்தேகப்படுகிறார்கள். இப்படி ஒட்டுறவில்லாமல் இருப்பதால்தான் வயதானதும், அமெரிக்கர்கள் எல்லாரும் தங்கள் கடைசிக் காலத்தில் முதியோர் இல்லத்துக்கு விரட்டப்படுகிறார்கள்" போன்றவைகளைக் கூறும் இந்தியர்கள், குழந்தைகளின் நன்மைக்காக அவர்களை தனியே விட்டு, வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று தோன்றுகிறது. குழ்ந்தைகளை தனியே விட யோசிப்பவர்கள், மேற்கண்ட தாயாரைப் போலத்தான் தானும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் - கவனம் இல்லாவிட்டால்.


No comments:

Post a Comment

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...