நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இங்குள்ள லக்ஷ்மி நாராயண் கோவிலில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். நண்பரின் மகள் பாடப்போகிறாள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க குழந்தைகளே பாடுகிறார்கள் என்று கீதாபாரதி என்ற அமைப்பு அறிவித்திருந்ததால் இரட்டிப்பு சந்தோஷம் எனக்கு. குழந்தைகள் பேசினாலே மயங்கிப்போய் கேட்டுக் கொண்டிருக்கத் தோன்றும் எனக்கு. அவர்களின் கீச்சுக்குரலை வைத்துக் கொண்டு பாடினால் பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயிலும் விழுந்தது போல் அல்லவோ..?? மேலும் சூர்யாவை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் போனால், புதிதாய் வால் முளைத்த
வானரம் போல் விடாது துள்ளிக்கொண்டிருக்கும் அவன், ஒரு இடத்தில் உட்கார்ந்து பார்க்கவும் கேட்கவும் பழகுவானே என்ற ஆசையும். யாருக்கும் சொல்லாத அப்பாவின் ஆசையும் அதில் இருந்தது. அது அப்புறம்....:-)
குழந்தைகள் குறை வைக்கவில்லை. அவர்கள் பாடுவதே பெரிய விஷயம். அதிலும் அத்தனை பெரிய ஹாலில், வாத்யங்களோடு, ஸ்ருதியை அமைத்துக்கொண்டு, உச்சரிப்பு சிதறாமல், பயப்படாமல், அவ்வப்போது மக்கர் செய்த மைக் முன் அமர்ந்து பாடுவது என்பது உண்மையிலேயே பெரிய காரியம்தான். ஸ்கூலுக்கு போனால் பீட்ஸா/பர்கர்/ ராக்/பாப் என்றும், வீட்டுக்கு வந்தால் பட்டுப்பாவடை/ஜிமிக்கி/கர்நாடக ஹிந்துஸ்தானி என்று இத்தனை சுலபமாக எப்படி மாற்றங்களை சுவீகரித்துக் கொள்கிறார்கள் என்று வியந்தபோது "குழந்தையின் இதயம் வேண்டும்" என்று பராசக்தியிடம் இறைஞ்சிய முண்டாசுக்காரன் நினைவுக்கு வந்தான்.
குழந்தைகள நிகழ்ச்சிக்கு அடுத்து ஒருவர் அருமையாக சிதார் வாசித்தார். பால்குடித்த கன்றுபோல வாத்தியத்தில் மேலும், கீழும் துள்ளி ஓடிய அவர் விரல்களை பார்ப்பதும், அந்த சுநாதத்தில் லயிப்பதும் மிகுந்த பரவசமாக இருந்தது. ஒடிசி ஆடிய இரானியப் பெண், அருமையான பாவங்களுடன் விழிகளால் மொழி பேசிய நபீசா முகம்மது, தபலா வாசித்த ஜில்பா போட்ட அமெரிக்க இளைஞன், மூச்சு விடவே சிரமப்படும் வயதிலும் ஆர்வத்துடன் புல்லாங்குழல் வாசித்த பெரியவர் ஜகந்நாதன், அருமையாக விளக்கு நடனம் ஆடிவிட்டு சடாரென்று ஜீன்சுக்கு மாறிவிட்ட யவதிகள் என்று அது ஒரு இனிய, களேபரக் கலாசாரக் கலவை.
**** புதிதாய் கேம் கார்டர் வாங்கி இருந்த ஒருவர் கண்ணாலேயே பார்க்கவில்லை. மேடையில் கொஞ்சும் குளுவான்களை பாராமல், புது சூடிதார் போட்டு வந்திருந்த தன் மனைவியை ( ?!!!) பல கோணங்களில் எடுத்துக் கொண்டிருந்தார். பாத்ரூமுக்கு போகும்போது அவர் அதை ஆஃப் பண்ணிவிட்டு போக வேண்டுமே என்று நான் லக்ஷ்மி நாராயணனை வேண்டிக்கொண்டிருந்தேன்.
**** வழக்கம்போல வியாபாராதி விஷயங்களும் அவ்வபோது குழந்தைகளின் ஆசிரியர்களால் தெளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. என் முகவரி இது, என் தொலைபேசி எண் இது. கற்றுக் கொள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிக்கை விட்டுப் போனார்கள்
**** தன் குழந்தைகளின் நிகழ்ச்சி முடிந்ததும், பெற்றோர்கள் சடார் சடாரென்று எழுந்து போனது வருத்தமாக இருந்தது
**** பாடிய யுவதிகள் / ஆன்டிகள் ( Aunties) நவநாகரீக உடைகளை விட புடைவைகளிலும், ஆபரணங்களிலும் அழகாக இருந்தார்கள். மூக்கன் கண்ணாடி பவர் போதவில்லை நேற்று. :-)
Monday, September 20, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
No comments:
Post a Comment