Wednesday, June 15, 2005

என்னுயிர்த் தோழன்

அவருடைய கண்கள் கலங்கி தத்தளிக்கின்றன. குரல் கம்முகிறது.நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல், தூங்காமல் ஏற்பட்ட வயிற்று உபாதையின் விளைவாக பக்கத்து க்யூபிக்கிளில் அடிக்கடி "சத்தம்" செய்கிறார். சாதாரண நாட்களில் இதெல்லாம் நடக்கவே நடக்காது. அவருடைய வயசுக்கு, நிமிர்ந்து விடு விடென்று நடப்பவர், எங்கும் எழுந்தே செல்வதில்லை. தன் தோழனுக்காக கடந்த பதினைந்து நாட்களாக ஓடியும், அவனை இழந்த வருத்தத்தை அடி அடியாக சொல்கிறவரைப் பற்றி யாராவது ரெண்டு வருஷம் முந்தி சொல்லியிருந்தால், தொப்பை குலுங்க சிரித்திருப்பேன்.

இப்போது முடியவில்லை. காரணம், வற்றத் தொடங்கி இருக்கும் தொப்பை மட்டுமல்ல, மாறியிருக்கும் மதிப்பீடுகளும்.



தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் மிகக்குறைவு. நாய் வளர்ப்பது தான் அதிகம் என்றாலும், என் இயற்பியல் ஆசிரியை வீட்டில் மட்டுமே நான் பூனையை செல்லப் பிராணியாக கண்டிருக்கிறேன். உறிஞ்சி உறிஞ்சி தயிர்சாதம் சாப்பிடும் பூனை அது. என் தாயாரின் அதீத சுத்தம் ( பற்றிய உணர்வு) காரணமாக, நாய் பூனை போன்ற பிராணிகளுக்கு எங்கள் வீட்டில் அனுமதி இல்லை. நாய் என்றால் கடித்துவிடும். கண்ட இடத்தில் பிஸ் அடிக்கும். பூனை மயிர் உதிர்ந்தால் ஆகாது. ஆஸ்துமா வரும். தவிரவும் பூனை அழுக்கு பிராணி போன்ற உபரி ஆலோசனைகள் நிறையவே கிடைக்கும்.

பெற்றவர்களை வயது வந்த பிள்ளைகள் விட்டுவிட்டு விலகிப்போகும், வயதான காலத்தில் பெரியவர்களை பெரும்பாலும் ஹோமுக்கு அனுப்பும், இருபத்து மூன்று வருஷ மணவாழ்க்கையை தடாலென்று அறுத்துவிட்டு புத்தம் புதுசாக கல்யாணம் பண்ணிக் கொண்டு வெட்கப்படும் அமெரிக்க சமூகத்தில், பிராணிகளை போற்றும் குணம் ஆச்சரியமளித்தது முதலில். ஆனால் இப்போதுதான், மற்ற இடங்களின் தாங்கள் எதிர்கொள்ளும் வெறுமையை ஈடுகட்ட இவர்கள் பிராணிகளை நாடுகிறார்களோ என்ற சம்சயம் வருகிறது

முதல் பாராவின் நாயகன் ஜீன் க்லாட்ஸ் ஒரு பூனையை பதினாறு வருடங்களாக வளர்ந்து வந்தார். அவருகே வயசு அறுபத்தி நாலு. அந்தத் தாத்தா, உடல் உபாதை ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனால் பூனைக்கு ஏகப்பட்ட தொந்தரவு - அதுக்கும் வயசாயிப் போச்சே. அதற்கு டயாபட்டீஸ் என்பதால், தினம் இருவேளை இன்சுலின் ஊசி போட்டு விட்டு, காலை மாலை வேளைகளில் வாக்கிங் கூட்டிப் போய் விட்டு, அதற்கு சரியான சிசுருஷை செய்து வந்தார். நடுவில் வேறு பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ள, நுரையீரலில் நீர் கோர்த்துக் கொண்டு, முன்று நாள் பெட் ரெஸ்டில் இருந்து வந்தது. அதற்கு ஜன்னி வந்தபோது இவர் ஆடிப்போனார். எல்லா கவனிப்புகளையும் தாண்டி போன வாரம் ஞாயிறு அன்று அது இறந்து போனவுடன்தான், தாத்தா நொந்து போய்விட்டார். கிட்டத்தட்ட $ 10,000 செலவு செய்ய தயாராய் இருந்தவர், ஏற்கனவே அதன் சிகிச்சைக்காகவே $3000 செலவு பண்ணி இருப்பார்.

இந்தப் பணத்தில் எத்தனை குழந்தைகளுக்கு பால் தரலாம் என்று யோசிக்க நேர்ந்தாலும், அந்தப் பூனை இல்லாமல் ஜீன் தாத்தாவும் ஒரு விதத்தில் ஏழை என்று தோன்றுவதால் அப்படியெல்லாம் மட்டையடியாக இப்போது யோசிக்கமுடியவில்லை.

"இந்தப் பூனைக்கு இவ்வளவு செய்கிறீர்களே. இந்தியாவில் மனிதர்கள் கூட தன்னை இப்படி பார்த்துக் கொள்வதில்லையே" என்றேன் ஒருமுறை.

" நான் பின்னே வேறு என்னதான் செய்வது வீட்டில் " என்றார் அவர்.

வயசான காலத்தில் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைகள் ஏதும் இல்லாமல்
மனைவியுடனும் மனஸ்தாபத்துடன் தனித்தீவாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், நிஜமாகவே இனி என்ன செய்வார் வீட்டில்..??

"இன்னொரு பூனை ..? என்றேன்.

"சான்ஸே இல்லை. எனக்கு என் கிட்டி கேட்டை மறக்கவே முடியாது" என்றார்

புதுப்பூனையோ இல்லை புதுப்பெண்ணோ, தாத்தா சந்தோஷமாயிருந்தால் சரிதான்.

( போட்டோவில் தாத்தாவின் தோழன் கிடி காட் ( kitty cat) . இரண்டரை வ்ருடங்களுக்கு முன்பு எடுத்ததாம். அப்பவே கிழடு தெரிகிறது பாருங்கள். )

8 comments:

  1. சுந்தர்
    சமீபத்தில் காரில் தன் நாயை விட்டு எதிரில் உள்ள கடைக்கு சென்ற 70 வயதுக்காரரின் காரை திருடி விட்டார்கள். கார் வேண்டாம் என் நாயை மட்டும் திருப்பி கொடுங்கள் என்றும் நாயை கண்டால் சொல்வோருக்கு 10,000$ தருவதாகவும் இங்கே செய்தி வந்தது. அவருடைய கார் லெக்ஸஸ். அன்பு வைக்கும் போது மிருகங்கள் என்றாலும் குழந்தைகளை போல்த்தான்.

    ReplyDelete
  2. நன்றி பத்மா. ஆனால், எனக்கு இதெல்லாம் புதிசு.

    வாங்க சார்..வாந்தி. நியூசிலாந்து எப்படி இருக்கு. துளசி அக்காவப் பாத்தீங்களா..??க்மெண்டுக்கு தாங்க்ஸ் சீனியர்.

    ReplyDelete
  3. மூக்கன்,
    ஜெர்மனியிலும் முதியவர்கள் பலரும், தெருவோரத்தில் வாழ்க்கையைக் கழிப்போரும் நாய், பூனையைக் கண்போலக் கவனித்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இப்போது ஓரளவு புரிகிறது ஏனென்று.

    ReplyDelete
  4. சுந்தர்,

    நாயோ பூனையோ அல்லது வேறு எந்தப் பிராணியோ, அதுங்க நம்ம மேலே காட்டுற
    பாசம் இருக்கே அதைச் சொல்லி மாளாது!!!

    நம்ம வீட்டுலேயும் ஒரு பூனை 16 வயசாகுது. இன்னோன்னு 13தான் . ஆனா சக்கரை வியாதி!
    இதுங்களோட மாரடிக்கறது ஒரு 'சுகமான சுவை'

    அதுலேயும் இந்த மிட்டாய்( அதான் சக்கரைகுட்டி) இருக்கே அது 'பையன்'
    அதன்காரணமோ என்னவோ பயங்கர 'ஜொள்ளூ'பார்ட்டி!!!!
    அதும் பேரு 'கோபால கிருஷ்ணன்.' ஜி.கேன்னு செல்லமாக் கூப்புடறது. இங்கே வாடான்னு
    கூப்பிட்டாப்போதும் ஜொள்ளிக்கிட்டே ஓடிவருவாரு!!!

    இதையெல்லாம் விவரிக்க முடியாது. அனுபவிச்சாத்தான் விளங்கும்!

    பாவம் உங்க நண்பரின் 'கிட்டி கேட்'

    நண்பருக்கு எங்கள் அனுதாபத்தைச் சொல்லுங்க.

    'வாந்தி'கூடயும் அவரோட மனைவி கூடவும் சில தடவை ஃபோன் பேசினேன். ஒரு முறை
    கோபால் அவுங்க ஊருக்குப் போனப்பச் சந்தித்தார். நல்லா இருக்காங்க!

    குளிர் முடிஞ்சாவுட்டு இந்தப் பக்கம் டூர் வரேன்னு சொல்லியிருக்கார்!

    பார்க்கலாம், சந்தர்ப்பம் கிடைச்சால் நானும் போய்வருவேன்!

    என்றும் அன்புடன்,
    துளசியக்கா

    ReplyDelete
  5. சொல்ல மறந்துட்டேனே,

    நம்ம பூனைங்க 'தமிழ்ப் பூனைங்க.

    இங்கிலீஷ் தெரியாது!

    தமிழ்தான் புரியும்:-)))))

    ReplyDelete
  6. துளசியக்கா,

    வாங்க. வாங்க. நீங்களும் பூனை விரும்பியா..?? அடி சக்கை. நாயோட பூனையை கம்பேர் பண்ணி நம்மாளு அரை மணி நேரத்துக்கு ஒரு லெக்சர் குத்தாரு பாருங்க. கேட்டுட்டு, ஆ...டிப் போயிட்டேன்.

    ReplyDelete
  7. Mookan, one recent study at the State Univ of New York at Buffalo Medical School suggests that a dog (pet) will be of more comfort to one in a given stressful situation than his/ her spouse.

    In this study, which gave people problems to solve or placed them in anxiety-provoking situations, subjects were most stressed out with their spouses and most relaxed with their dogs.

    ReplyDelete
  8. Hello Sundar

    Nice post. Have experienced the pain of losing a cat to a dog bite when I was in my teen years back in India.

    Brought back those painful memories.

    Murali

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...