Thursday, July 01, 2004

இதற்கென்ன அவசியம்..அதுவும் இங்கு..??
========================================

காலை வேலையில் எழுந்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சமீபகாலங்களில் மனநிறைவைத் தரும் விஷயமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் சூர்யாவுக்குத் தான் இம்மாதிரி கவனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது அவனுடன் சேர்ந்து வீடும் தோட்டமும்.

அம்மாதிரியான ஒரு காலை நேரத்தில், அதைச் செய்தவாறு வீட்டு வாசல்புறம் நின்றிருந்தேன். திருமலை நாயக்கர் தூண் மாதிரி மெகா சைஸில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரும், அவர் சிநேகிதியும் "ஹாய்..ஹவ் ஆர் யூ..? " என்றார்கள். இந்தியர்களைப் பார்த்தால் கடுவன் பூனை போல வைத்துக் கொண்டும், இங்குள்ளவர்களைப் பார்த்தால் காது வரை விரியும் வாயோடும் பேசும் நமது தேசி மனப்பான்மை எனக்கும் கொஞ்சம் ஒட்டிவிட்டது போலும்... நானும் சந்தோஷமாக வார்த்தையாட ஆரம்பித்தேன். கொஞ்சம் கூட சந்தேகமே வரவில்லை. ஒரு ஐந்து நிமிடம் பேசிய பின்னர். 'பாவிகளை ரட்சிக்க பூமிக்கு வந்தவரைப் பற்றியும், அவரது பிரதாபங்கள் பற்றியும் பேச பேச ஓ...இது தினகரன் ( பெரியகுளம் தினகரன் அல்ல..காருண்யா தினகரன்....காலை வேளையில் ராஜ் டீவியில் " ஏஸ்ஸூ..உங்களை ஆஸ்ஸிவதிப்பார் " என்பாரே ..அவர்தான்..... ) கேஸ் என்று புலனாயிற்று. லேசாக படபடப்பு வந்து விட்டது. வியர்த்துப் போனது. ஏதேதோ புத்தகம் கொடுத்தார். எதுவும் எனக்கு காதில் விழவில்லை.கடைசியாக அவரை ஒருமாதிரி பேசி அனுப்பி வைத்தேன்.

edv


என்ன நேர்ந்தது எனக்கு..?? என் ஹிந்து ரத்தம் விழித்துக் கொண்டதா..?? கடவுளைக்கூட தலைவலி மாத்திரை மாதிரி உபயோகப்படுத்துக் கொள்ளும் எனக்குள் என் மதம் சார்ந்த படபடப்பு ஏன்..??ஒரு ஏமாற்றுக் காரரிடம் இருந்து விடுபடுவதைப் போல அவர் போனவுடன் எனக்கு ஏன் நிம்மதி உண்டானது...பிற கருத்துக்களுக்கு மனதை திறந்து வைக்காத கட்டுப்பெட்டியா நான்..??

இந்தியா மாதிரியான நாடுகளில்தான் கிறித்துவத்தைப் பரப்ப இவ்வளவு யத்தனங்களைப் பார்க்கிறோம். இந்துக்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஊடுருவ வேண்டும் என்று போப் சொன்னார் என்று இது நடக்கிறது என்கிறோம். அமெரிக்கா மாதிரி , மிகுதியும் கிறித்தவர்கள் உள்ள இடங்களில் இது ஏன் நடக்கிறது..? மதம் இப்படித்தான் பேணப்பட வேண்டுமா..?? அழியாமல் இருக்க இம்மாதிரியான ஆட்களும் ஒவ்வொரு மதத்துக்கும் வேண்டுமோ..??

அப்புறம் ஏன் ப.ஜ.க மேல் கோபம் வருகிறது..?? பள்ளிப் பாடங்களில் இந்து சமயம் பற்றி வந்தால் கோபம் வருகிறது...சரஸ்வதி வந்தனம் பாடப்பட்டால் ஏன் கண்டனம் கிளம்புகிறது..??
மதமும் , கடவுள்களும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரால் சொந்தம் கொண்டாடப் பட்டதுதான் இந்துக்களுக்கு , தன் மதத்தின் மீது வெறுப்பு வரக் காரணமா..?? கடவுள் பேரைச் சொல்லி ஆலயப் பிரவேச மறுப்பும், பிரவேசம் செய்தாலும் சட்டையை கழற்றிப் பார்ப்பதும், மறைமுகமாக தன் மேலாதிக்க வெறியை நிலைநாட்டியதும் தான் பெரியாரைப் போன்றவர்களை உருவாக்கியதோ..??

ஆழமும், அர்த்தமும், நல்ல பல விஷயங்களும் அடங்கிய இந்து மதத்தினை முழுதாய் பாவிக்க விடாமல் நம் சமூக அமைப்பு கெடுத்ததா..??

கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...

கட்டாயம் பதில் காணப்பட வேண்டிய கேள்விகள்....

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...