இரண்டு படங்கள் - ஒரு அபத்த விமர்சனம்
=========================================
வார இறுதியில் இரண்டு படங்கள் பார்த்தேன். அது அப்புறம். ஏனெனில் பழைய படத்துக்கு பலநாள் கழித்து எழுதப்படும் விமரிசனம் வெஓநிகே எனபது என் எண்ணம்.
குமுதம் தீராநதியில் ஆய்தஎழுத்துக்கு ஒரு விமரிசனம் வந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இப்படியெல்லாம் கூட விமரிசனம் எழுதவேண்டுமா..?? என்று யோசிக்க வைத்த விமரிசனம் அது. இருவர் படத்தையும், ஆய்தஎழுத்தையும் ஒப்பிட்டு, இரண்டு படங்களுமே திராவிட ஆட்சியை எதிர்த்து, பிராமணியத்தை மறூயிர்ப்பு செய்ய வந்த படங்களாக சொல்கிறார் விமரிசனம் செய்த ( யார்..??) பிரகஸ்பதி. என்ன அபத்தம் இது..?? அதோடு , இந்த இரண்டு படங்களையும் வாசகன் சரியாக "பார்க்க"வில்லை என்றும் சொல்கிறார். அதாவது, தோண்டித் துருவி, குடைந்து பார்த்ததால் தனக்கு புலப்பட்ட அந்த "உண்மை" தமிழ்நாட்டில் பாக்கி இருக்கும் அத்தனை சனத்துக்கும் தெரியாது போயிற்றாம்.
கதை எளிய கதை. நிகழ்காலத்திலிருந்து உருவி, அதை தன் ஸ்டீரியோடைப் காட்சி அமைப்புகளோடும், வசனங்களோடும் ( இருநூறு மில்லி சாராயத்துகாக முழு சாராயக்கடையை வாங்குவானா என்ற அந்த இன்பாவின் வசனத்தை அந்தக் கால வசந்த் " ஒரு கேக் சாப்பிட பேக்கரியையே வாங்குவேனா பாஸ் " என்பான் கணேஷிடம்), மணிரத்ன டிபிகல் ஹீரோயின்கள் முதுகு/மார் காட்டி கொஞ்சிப்பேச, தன் கல்லாப்பெட்டி ரொப்பிக்கொள்ள மணி அரசியலை களமாக்கியிருக்கிறார். ஷங்கர் எடுக்கும் அரசியல் படங்களில் இருக்கும் சூடும் சுவையும் இதில் ரொம்பவே மிஸ்ஸிங். அதைப் போய் விபரீத உள்ளர்த்தம் எடுத்துக் கொண்டு, இந்த டப்பா படத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்திருக்கிறார் தீராநதிக்காரர். சுஜாதா வேறு இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஸ்பானிஷ் படத்தை உல்டாவாக்கி இருக்கிறார்கள் என்று நம்மாட்கள் ஏற்கனவே நாஸ்தி பண்ணின ஆய்தஎழுத்து பிறந்த கதையை புதுசாக கற்பனை செய்து கொடி கட்டி இருக்கிறார். நமக்கு அல்வா கொடுப்பதில் எல்லோரும் இந்தப் போட்டா போட்டி, காட்டா குஸ்தி போடுகிறார்கள்.
இதைப் போலவே எல்லா இடங்களிலும் ஏறுமாறாக விளாசப்பட்ட "தென்றல்" படமும் பார்த்தேன். பறை தான் தமிழனின் கலாச்சாரம் என்பது தொட்டு, இன்னம் பல பிரச்சார நெடி அடிக்கும் வாசகங்களும் அடங்கிய படத்தில் ஜீவன் இருந்ததால், மற்ற குறைகள் மறந்துபோய் கொஞ்சம் ஒன்ற முடிந்தது. டைரக்டர் மூடுக்கு வித்யாசாகரும் மாறி, BGM மே பல இடங்களில் பறைதான் என்று வலிந்து உட்புகுத்தி, இளையராஜா இல்லாத குறையை வெளிச்சம் போட்டு காட்டினார். விலைமாதுக்களுடன் சல்லாபம் செய்யும் எழுத்தாளர் பாத்திரம் ஒரு காட்சியில் அதற்கான நியாயங்களை ஒத்துக்கொள்கிற மாதிரி சொல்வதை சிலாகித்தாலும், மலையாள விலைப்பெண் எழுத்தாளருடன் இருக்கும் காட்சிகளிளும், இருவரும் கூடி மதுவருந்துவதை காண்பிக்கும் காட்சியிலும் இருந்த நாடகத்தனமை, இந்த மாதிரி காட்சிகளில் கையாளப்பட்ட கே.பாலசந்தரின் நாசுக்கையும் நினைவுக்கு கொண்டுவந்தது. படத்தின் எல்லா குறைகளையும் பட்டியல் இட்டாலும், ஜீவன் குறையாமல், யதார்த்தத்தோடு அழகியலயும் சரிபாதியாக கலந்து கொடுத்ததில் தங்கர் பச்சான் ஜெயித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தங்கருக்கு யாராவது ரெகுலராக பான்பராக் சப்ளை செய்தால் தேவலை...மெல்லுவதற்கு ஏதோ ஒன்று வாயிலிருக்கும் பட்சத்தில் ஏதாவது உளறாமல் இருப்பார் என்று தோன்றுகிறது. அவர் பேசாமல் இருந்தால் அவர் படம் இன்னமும் பேசும்.
No comments:
Post a Comment