Friday, July 16, 2004

பொய்யாய் பழங்கதையாய் போன புனிதக் கணங்கள்
=================================================
 
babies
 
  பயத்தோடும் மனப்படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித்துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள்.  ' பாத்து..பாத்து' என்றார் அம்மா. மங்கலான மருத்துவமனை விளக்கொளியில் மயங்கிக் கிடக்கும் ராட்சசப் புழுப்போல அது நெளிந்தது.  சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டி சிதறிவிடும் போல இருந்தது.  எனது வலது உள்ளங்கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெது வெதுத்ததை உணர முடிந்தது
 
       இமையிலும், கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ்சிவப்புச் சாயம் பூசினாற்ப்போல தெரிந்தது.  உடலிலிருந்து பச்சை மண்ணிண் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னுமிருந்தன போலும்.  தலையின் ரோமங்களில் இன்னமும் கூட பிசுபிசுப்பு.  உதடுகள் விரிநது கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல நிகழ்ந்தது.  எங்கள் அனைவரின் வாய்களும் பிளந்து மூடின.
 
   யார் உருவாக்கினார்கள்.? நானா..? என்னால் எப்படி முடிந்திருக்கும்.? களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா..?? பென்சிலால் நேராக கோடு போடத் தெரியாத நானா..??
 
   இவளா..? தலைமுடி கலைந்து சோர்ந்துபோய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட ஆணவத்தில் கட்டிலில் சாய்ந்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே இவளா..? எப்படி.?இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா.? தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ணவண்ணமாக க்ராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா?
 
   நாங்கள் இருவரும் சேர்ந்தா..? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி ஒரு அற்புதம்..? எந்த இரவில் , எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும் ?ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது..??
 
 - பாக்கியம் பிறந்திருக்கிறாள் சிறுகதையில் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு.
 
  குடந்தை விபத்தில் குருத்துக்களைத் தொலைத்த பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்.
 
babies1
 

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...