Friday, July 09, 2004

குணா - கோதண்டராம பிரசாத் கொல்லிப்பாரா
==========================================

"நானும் நீங்களும் நம் வீட்டில் நிறைய பூச்செடிகள் வளர்க்கலாம். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விதமாக சமூக சேவை புரியலாம். இதை உன்னோடு செய்தால் என் வாழ்க்கை ஒளிரும்" என்று ஒரு பெண்ணிடம் பேசி தன் நேசத்தை வெளிப்படுத்தியவனை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..??

நெற்றியில் எப்போதும் திருநீறு போல குங்குமத்தை இட்டுக் கொண்டு, பெரிய மீசையோடும்,முரட்டு உடம்போடும் அதற்கு சம்பந்தம் இல்லாமல் குழந்தை போல சிரித்துக் கொண்டு, கூடப் படிப்பவர்களையே "வாங்க..போங்க " என்று படித்த நான்கு வருடமும் மரியாதை தவறாமல் பழகியவனை, "இத்தனை வெகுளித்தனம் இருக்கவே சாத்தியமில்லை..இவன் நடிக்கிறான்" என்று என்னைப் போன்றவர்களை சந்தேகிக்க வைத்த அந்த நல்லவனை, கல்யாணமான பின்னால் பழைய கல்லூரி (ஆண்) நட்புகளை தொடரக்கூடாது என்று மிகுதியும் நினைக்கும் பெண்களே தொடர்ந்து நட்பு வைத்திருந்த அந்த எளியன், விதிவசத்தால் நேற்று இங்கே, பாஸ்டன் அருகே உயிரிழந்தான்.

அடுத்த வாரத்தில் குழந்தை பிறக்கப்போகும் தன் மனைவியையும், அவள் தாயாரையும் வீட்டில் விட்டு விட்டு, தன் ஐந்து வயது முதல் குழந்தைக்கு நீச்சல் சொல்லித்தர, நீச்சல் குளம் போயிருக்கிறான். கூடவே துணைக்கு மாமனாரும். குழந்தைகள் நீச்சல் பயிற்சி நடத்தும் இடத்திற்கு அருகிலேயே இவனும் நீச்சல் அடித்துப் பழகி இருக்கிறான்

குழந்தை நீச்சல் க்ளாஸ் முடித்தவுடன், தந்தையைக் காணாது அழுது இருக்கிறான். பிறகு ஃலைப் கார்ட்ஸ் 911 அவசர உதவியை அழைத்து விட்டு தேடத்துவங்க, கொஞ்ச நேரம் கழித்து நீருக்கு அடியே அவனைக் கண்டிருக்கிறார்கள். நாடித் துடிப்பு அப்போதே இல்லையாம். பிறகு ஆம்புலன்ஸில் போகும்போது இதயம் துடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆயினும் டாக்டர்கள் பார்த்து விட்டு 'மூளைச்செல்கள் இறக்க ஆரம்பித்து விட்டன. இனி பிழைப்பது துர்லபம்' என்று வென்டிலேஷன் உதவியோடு வைத்து இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே உடலின் முக்கிய பாகங்கள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பிக்க, இனி பிரயோசனம் இல்லை என்று அவன் கர்ப்பிணி மனைவியின் அனுமதியோடு செயற்கை சுவாச கருவிகளை அகற்றி இருக்கிறார்கள்.

அந்த இனியவனின் கதை முடிந்து விட்டது.

என்ன நடந்தது..?? என்ன நடக்கிறது ..??

இத்தனை படித்து கஷ்டப்பட்டு, வாழ்க்கையில் முன்னுக்கு வருகிற வேளையில் இம்மாதிரி மரணம் நிகழ்வது எத்த்னை கொடுமை..?? என்ன அஜாக்கிரதை..?? எதற்கு..?? எனக்குத் தெரிந்து வேகமாக கார் ஓட்டுவதையும், மலை ஏற்றத்தையும், ஆறுகளில் அருவிகளில் குளிப்பதையும் ஆண்மையோடு சம்பந்தப்படுத்திக் கொண்டு என் நண்பர்கள் ஆட்டம் போடுவதை பார்த்திருக்கிறேன். பிரசாத் அப்படிப்பட்ட ஆளும் அல்ல. மேலும், அவன் உடலைத் தூக்கி மேலே வரும்போது பாம்பு ஒன்று அவ்விடத்திலிருந்து அகன்றதாக பணியாளர்கள் இப்போது கூறுகிறார்கள். இது மட்டுமல்ல, இத்ற்கு முன்பே இக் குளத்தில் இதைப் போல வினோத மரணங்கள் சில நிகழ்ந்ததாக இப்போது சொல்கிறார்கள். எல்லாவற்றையும் சீரணித்து, ஏப்பம் விட்டு குளம் சலனமற்றிருக்க, மறு நாளே குழந்தைகள் மறுபடி நீச்சல் பயிற்சிக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்...

என் இனிய நண்பர்களே, தயவு செய்து புது இடங்களுக்கு போகும் போது ஜாக்கிரதையாக இருங்கள். முன் ஜாக்கிரதை இல்லாமல் எதிலும் இறங்காதீர்கள். தடால் புடாலென்று இருப்பது ஆண்மைக்கு அழகென்று ஏதாவது எசகு பிசகாக செய்து, உங்கள் உயிர்களையும், உறவுகளயும், நண்பர்களயும் கண்ணீர் சிந்த வைக்காதீர்கள். இளவயதில் தந்தையை இழப்பது அந்த ஐந்து வயசு பையனுக்கு, வாழ்க்கையின் மீது எத்தனை அவநம்பிக்கையை கொண்டு வந்திருக்கிறது என்று பாருங்கள். தனியே வந்து அயல் தேசத்தில் இருக்கும்போது, யாருக்கு யாரும் காவல இல்லை. என்பதை அழுந்த நினைத்துக் கொள்ளுங்கள்.

kkrp


ஜாக்கிரதை...ஜாக்கிரதை...ஜாக்கிரதை..


No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...