Tuesday, July 06, 2004

டக்கீலா..டக்கீலா
================

மெக்ஸிகன் சாராயத்தின் செல்லப் பெயர் இது. டக்கீலா ஷாட் என்றால் சிலபேருக்கு பளிச் என்று புரியும்.சனிக்கிழமை சாயங்காலம் ஏழு நாற்பத்தைந்து வரை எனக்கு இதன் மகிமை புரியாது இருந்தது. Jose carvos என்று எழுதப்பட்ட ஒல்லி பாட்டிலில் அந்த தங்க நிற திரவம் அசைந்தாடிக் கொண்டிருக்க, எதிரே என் நண்பர் எலுமிச்சம்பழத் துண்டுகளை அடுக்குக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தட்டில் உப்பு. ஷாட் க்ளாஸ் என்று சொல்லப்படும் அளவை ஒரு பக்கம். கலப்பதற்கு எதுவும் தேவை இல்லை என்று சொல்லி விட, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போல ஒரு நெடுங்காலக் குடியனிடம், இப்படி 'பிலிம்' காட்டுகிறாரே என்று உள்ளூர எரிச்சல் வேறு.

கையிலே க்ளாஸை எடுத்துக் கொள்ளச் சொன்னார். இன்னோரு கையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவே எலுமிச்சம்பழத்தை தேய்க்கச் சொன்னார். மேலே அவரே கொஞ்சம் உப்புப் பொடி தூவினார். ஷாட் க்ளாஸில் அளந்த சரக்கை, கடக்கென்று என் தம்ளரில் ஊற்றி மடக்கென்று விழுங்கிய சூட்டோடு, கயில் உப்பு / எலுமிச்சை தேய்த்த இடத்தை நக்கிக் கொள்ள சொன்னார்.

taquila


மஜாவாக இருந்தது. கிக்கை விட அதற்கான முஸ்தீபுகள் தான் அதிகம் போலும் என்று தோணிப்போக, "அட சின்னப் பையனே" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மடமடவென்று வேகமாக மூன்று க்ளாஸ் அடித்து விட்டேன். டக்கீலா வேறு ஜாதி சரக்கு போல. முதலில் லேசாக இளித்துக் கொண்டு பேசிய நான், கொஞ்ச நேரத்தில் நவரச நாயகனாகி சகல பாவங்களையும் காட்டி இருக்கிறேன் போல. வாசலில், கராஜ் முன் ஒரு பெஞ்சை போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். பின் உள்ளே வந்து, சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்க முயன்றவர்களை படம் பார்க்க விடாமல். சாப்பிட விடாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்திக்கிறேன். கழுமலம் என்றும் திருஞானசம்பந்தர் என்றும் ஏதோ தமிழ் அலம்பல்கள் வேறு.

திடீரென்று விழிப்பு வந்தபோது, சோஃபாவில் கிடந்தேன். கண்ணில் கண்ணாடியோடு தூக்கம். இரவில் சாப்பிடாமல் நெஞ்செரிந்த ஏப்பம். தாகம். எழுந்து மடக் மடக் கென்று ( சாதா) தண்ணீரைக் குடித்து விட்டு காலை நாலரைக்கு, கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு பெட்ரூமில் போய் படுத்துக் கொண்டேன்.

காலை எழுந்தவுடன் எல்லாரும் லேசாக சிரித்துக் கொண்டே என்னிடம் பேசினார்கள். மனைவி பேசவே இல்லை. "அடே..அற்பப்பதரே ' என்ற பார்வையில், யோசனையுடன் இட்லி வைத்தாள். பிறகு மெது மெதுவாக முந்தைய இரவில் எப்படி கோமாளி மாதிரி நடந்து கொண்டேன் என்று சொன்னாள். தண்ணி அடித்து விட்டு இதை விட பயங்கரமாக லூட்டி அடித்த காலம் எல்லாம் உண்டு. வீடியோ காமிராவில் என் நண்பன் அதை எல்லாம் ரெகார்ட் பன்ணி மறு நாள் போட்டுக் காட்டி இருக்கிறான். சேர்ந்து உட்கார்ந்து சிரித்தபடி பார்த்து மறந்திருக்கிறோம்.

ஏனோ தெரியவில்லை..இனிமேல் அது மாதிரி நடக்காது போலிருக்கிறது.

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...