Wednesday, July 28, 2004

கவசம்

======

mask

முகமூடி கிழித்து
முகமது பார்த்தால்
முகமே தேவலை
என்று தோன்றுமோ
இருப்பினும்
எந்த வதனம் எதிர்வந்தாலும்
முகத்திரை மெலிதாய் அசைவதேன்..?
உடனே கிழித்து எறிந்திட
கைகளும் பரபரப்பதேன்..?

விடு.
முகமூடியில்லா முகம் என்பது'
குழந்தையின் வசமின்றி எங்குமில்லை
எவரும் என்றும் அணிந்தே உள்ளனர்
அவரவர்க்கு ஏற்ற கவசம்
வெவ்வேறு நிறத்தில் கவசம்
நீயும் நானும் விலக்கல்ல

ஆனால் கவசம் கழற்றிக் களைப்பாற
ஒரு உயிராவது உடன் வேண்டும்
மூடியற்ற முகம் பார்த்தும்
நேயமுற்றிடும் துணை வேண்டும்

நன்றி : கவிஞர் சிவசுந்தரிபோஸ், தினம் ஒரு கவிதை

சீனிஅபு, சரவணபவன், சுமா உப்பிலி, சா.கணேசன், பரமசிவம்பிள்ளை, அபிராமிபட்டர், குட்டி ஹமாம், ஆப்பு, இட்லிவடை, காயாம்பூ, கவிதா மாரிமுத்து, டைனோ பாய், திராவிட், இணையக் குசும்பன் முதலாக நாட்டாமை வரைக்கும் அத்த்...த்த்னை முகமூடிகளுக்கும் சமர்ப்பணம்.

கவிதை இன்னும் கொஞ்சம் உள்ளேயும் போகிறது....

உங்களுக்கு புரிகிறதா..??

Tuesday, July 27, 2004

இரண்டு படங்கள் -  ஒரு அபத்த விமர்சனம்
=========================================

  வார இறுதியில் இரண்டு படங்கள் பார்த்தேன். அது அப்புறம். ஏனெனில் பழைய படத்துக்கு பலநாள் கழித்து எழுதப்படும் விமரிசனம் வெஓநிகே எனபது என் எண்ணம்.

     குமுதம் தீராநதியில் ஆய்தஎழுத்துக்கு ஒரு விமரிசனம் வந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இப்படியெல்லாம் கூட விமரிசனம் எழுதவேண்டுமா..?? என்று யோசிக்க வைத்த விமரிசனம் அது.  இருவர் படத்தையும், ஆய்தஎழுத்தையும் ஒப்பிட்டு, இரண்டு படங்களுமே திராவிட ஆட்சியை எதிர்த்து, பிராமணியத்தை மறூயிர்ப்பு செய்ய வந்த படங்களாக சொல்கிறார் விமரிசனம் செய்த ( யார்..??) பிரகஸ்பதி. என்ன அபத்தம் இது..??  அதோடு , இந்த இரண்டு படங்களையும் வாசகன் சரியாக "பார்க்க"வில்லை என்றும் சொல்கிறார். அதாவது, தோண்டித் துருவி, குடைந்து பார்த்ததால் தனக்கு புலப்பட்ட அந்த "உண்மை" தமிழ்நாட்டில் பாக்கி இருக்கும் அத்தனை சனத்துக்கும் தெரியாது போயிற்றாம்.

aaytha         

  கதை எளிய கதை.  நிகழ்காலத்திலிருந்து உருவி, அதை தன் ஸ்டீரியோடைப் காட்சி அமைப்புகளோடும், வசனங்களோடும் ( இருநூறு மில்லி சாராயத்துகாக முழு சாராயக்கடையை வாங்குவானா என்ற அந்த இன்பாவின் வசனத்தை அந்தக் கால வசந்த் " ஒரு கேக் சாப்பிட பேக்கரியையே வாங்குவேனா பாஸ் " என்பான் கணேஷிடம்), மணிரத்ன டிபிகல் ஹீரோயின்கள் முதுகு/மார் காட்டி கொஞ்சிப்பேச, தன் கல்லாப்பெட்டி ரொப்பிக்கொள்ள மணி அரசியலை களமாக்கியிருக்கிறார். ஷங்கர் எடுக்கும் அரசியல் படங்களில் இருக்கும் சூடும் சுவையும் இதில் ரொம்பவே மிஸ்ஸிங்.  அதைப் போய் விபரீத உள்ளர்த்தம் எடுத்துக் கொண்டு, இந்த டப்பா படத்துக்கு  ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்திருக்கிறார் தீராநதிக்காரர். சுஜாதா வேறு இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஸ்பானிஷ் படத்தை உல்டாவாக்கி இருக்கிறார்கள் என்று நம்மாட்கள் ஏற்கனவே நாஸ்தி பண்ணின ஆய்தஎழுத்து பிறந்த கதையை புதுசாக கற்பனை செய்து கொடி கட்டி இருக்கிறார்.  நமக்கு அல்வா கொடுப்பதில் எல்லோரும் இந்தப் போட்டா போட்டி, காட்டா குஸ்தி போடுகிறார்கள்.

breeze         

       இதைப் போலவே எல்லா இடங்களிலும் ஏறுமாறாக விளாசப்பட்ட "தென்றல்" படமும் பார்த்தேன். பறை தான் தமிழனின் கலாச்சாரம் என்பது தொட்டு, இன்னம் பல பிரச்சார நெடி அடிக்கும் வாசகங்களும் அடங்கிய படத்தில் ஜீவன் இருந்ததால், மற்ற குறைகள் மறந்துபோய் கொஞ்சம் ஒன்ற முடிந்தது. டைரக்டர் மூடுக்கு வித்யாசாகரும் மாறி, BGM மே பல இடங்களில் பறைதான் என்று வலிந்து உட்புகுத்தி, இளையராஜா இல்லாத குறையை வெளிச்சம் போட்டு காட்டினார். விலைமாதுக்களுடன் சல்லாபம் செய்யும் எழுத்தாளர் பாத்திரம் ஒரு காட்சியில் அதற்கான நியாயங்களை ஒத்துக்கொள்கிற மாதிரி சொல்வதை சிலாகித்தாலும், மலையாள விலைப்பெண் எழுத்தாளருடன் இருக்கும் காட்சிகளிளும், இருவரும் கூடி மதுவருந்துவதை காண்பிக்கும் காட்சியிலும் இருந்த நாடகத்தனமை, இந்த மாதிரி காட்சிகளில் கையாளப்பட்ட கே.பாலசந்தரின் நாசுக்கையும் நினைவுக்கு கொண்டுவந்தது. படத்தின் எல்லா குறைகளையும் பட்டியல் இட்டாலும், ஜீவன் குறையாமல், யதார்த்தத்தோடு அழகியலயும் சரிபாதியாக கலந்து கொடுத்ததில் தங்கர் பச்சான் ஜெயித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

   தங்கருக்கு யாராவது ரெகுலராக பான்பராக் சப்ளை செய்தால் தேவலை...மெல்லுவதற்கு ஏதோ ஒன்று வாயிலிருக்கும் பட்சத்தில்  ஏதாவது உளறாமல் இருப்பார் என்று தோன்றுகிறது. அவர் பேசாமல் இருந்தால் அவர் படம் இன்னமும் பேசும்.

 

Monday, July 26, 2004

பிரசவக்காட்சி
============

   அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்கள் கொடுத்து வைத்தவர்கள். நம்மூர் போல அல்லாமல், இங்கே லேபர் ரூம் உள்ளே கணவனுக்கும் அனுமதி உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கூட இருந்து, பிரசவ அனுபவத்தில் அவளுக்கு உதவி செய்யவும், அவளுடைய வலியை பகிர்ந்து கொள்ளவும், உணர்வு ரீதியாக ஒத்தாசை செய்வதும் தான் இதன் குறிக்கோள். என்னுடைய பல நண்பர்கள் தங்கள் குழந்தை பிறந்தவுடன் மூன்று நாளைக்கு பேயறைந்தது போல கிடப்பதை பார்த்திருக்கிறேன்.

ammaa         

   என்னளவில் இது அநியாயம். தேவையற்ற வீண்வேலை. என்னுடைய தமக்கைகளின் பிரசவத்தின்போது,  பிரசவ வார்டுக்கு வெளியே நின்று அவர்களின் குரல்களைக் கேட்பதற்கே அடி வயிறு கலங்கிப் போனது. அதற்குப் பிறகு அம் மாதிரி விஷப்பரீட்சைகளில் இறங்குவதில்லை என முடிவெடுத்து விட்டேன். என் சூர்யா பிறந்தபோது நான் இந்தியாவிலேயே இல்லை.

    நான் சொலவதை கேட்பதற்கு ரொம்ப பிற்போக்குத்தனமாகவும், அரக்கத்தனமாகவும் தான் தோன்றும். ஆனால், ஒரு ஆணின் மனநிலையையும், பெண்ணின் மனநிலையையும் ஒப்பிட்டால், பெண்கள் பன்மடங்கு திடசித்தம் கொண்டவர்கள். இது தெரிந்துதான்  இயற்கை அவர்களுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை தந்திருக்கிறது. தவிரவும் குடும்பத்தில் ஆணின் கடமைகள் என்றும், பெண்ணின் கடமைகள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகள் இன்னமும் அந்தளவு மாறிவிடாத பட்சத்தில், பெண்ணின் பிரசவ அனுபவத்தையும் ஆண் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று கூறுவது, கொஞ்சம் அதிக பட்சம்தான். இதை இங்கு வீடியோ காமிராவில் படம் பிடித்து பின்னால் போட்டுப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். தாய்மைக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றாலும், லேபர் வார்டின் ரத்தச் சொத சொதப்பை வீடியோ காமிராவில் படம் பிடித்துத் தான் மதிப்பு கொடுக்க வேண்டுமோ..??. இன்னமும் ஒன்று, குழந்தை வயிற்றுள் இருக்க்ம்போது ஸ்கான் செய்த ஃபோட்டொவை அமெரிக்க நண்பர் தன் க்யூபிக்களில் மாட்டி வைத்திருந்தார். வெல்லக் குழம்பினுள், சப்பாத்தி மாவு உருண்டையை  போட்டது மாதிரி இருந்த அந்த படத்தில் தன் "குழந்தையை" எப்படி பார்த்தாரோ..??

"It was a Great Experience" என்று இதையே அரைக் கண்ணோடு சிலாகித்துச் சொன்ன நண்பர்களையும் நான் கண்டிருக்கிறேன். என்ன எஞ்ஜாய் செய்தார்களோ நானறியேன். மேலை நாட்டினர் செயல்களுக்கெல்லாம் ஏதெனும் அர்த்தம் இருக்கும் என்று தாங்களே நினைத்துக் கொண்டு அதைப் பாவிப்பதில் பெருமை கொண்டவர்களோ இவர்கள் என்று கூட நான் நினைப்பதுண்டு.

       இது மாதிரி பக்கத்தில் இருந்து பார்த்து சூர்யா பிறந்திருந்தால், " இந்த மாதிரி படுத்தறியேடா " என்று அவன் பிறந்தவுடன், ப்ருஷ்டத்தில் ரண்டு வைத்திருப்பேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மனரீதியாகக் கூட எக்கச்சக்கத்துக்கு பாதிக்கப் பட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

  


Tuesday, July 20, 2004

"மணி"யானவர்கள்
================
 
   நண்பர் சுந்தரவடிவேலின் முயற்சிகளைப் போலவே பலரும் இணையத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்தும்,  குடந்தை தீ விபத்துக்காகவும் பெருமளவில்
உதவி செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழைந்துள்ளனர்.
 
இன்று குடாப்பகுதி தமிழ்மன்றத் தலைவர்  மணி.மு.மணிவண்ணன் அவர்களிடம் இருந்து கீழேயுள்ள மடல் வந்தது.
 
உங்கள் பார்வைக்கும், பங்குக்கும் இங்கே பகிர நினைத்தேன்.
 
Dear Friends,
 
We are grateful to the generous members who have already responded to this appeal from the Tamil Manram by sending in their checks. The Collector of Thanjavur has responded to our offer of support (see http://www.bayareatamilmanram.org ).  One of the first life-members of Tamil Manram, Dr. S. S. Rajaram, is currently in Tamil Nadu and he is sending in his first-hand reports.  According to him, the burn victims are being treated by first rate hospitals like JIPMER-Pondicherry, CMC-Vellore, Apollo Hospitals of Madras, MMC-Madras in addition to Thanjavur Hospital.
 
 Right now, the medical care is quite adequate.  But Dr. Rajaram cautions that more serious care will be need once the burn injuries start healing.  The children will be needing skin grafting (Plastic surgery) and  intense physio and psycho therapy.   Each child will need to be evaluated to see what percentage of skin surface has been affected and only then the true cost will be known.
 
As communicated earlier, we are working with FeTNA (Federation of Tamil Sangams of North America), a non-profit charity and is an umbrella organization of most of the Tamil associations in America and Canada in this effort.  FeTNA has announced its plan of action and the agencies through which service will be delivered in India.
 
1.
 
What is the plan of action?
 
Short term
 
To provide all possible help for the surviving children who are burn victims - to bring them to the normal life condition as much as possible. (About 10 to 15 with 5 of the children in critical condition according to Tanjore Medical College).
 
Long term
 
Provide help to survey the rest of the schools in and around Kumbakonam as the first step for safety standards and procedures with qualified, trained and experienced paid volunteers based on funding. Utilize the obtained information along with the recommendations from Technical professionals and recommend the same to the local, state and central govt. of India to prevent future mishaps. Follow up with local NGOs or some of the Tamil Charitable organization - our counter parts in USA already involved in charitable and volunteer work in Tamil Nadu
 
2. 
 
   Through whom the funding will be spentContacts were made with local medical group (Tanjore Medical College) and Charitable organizations (Lions Club, Rotary Club) in Kumbakonam regarding this mishap and their recommendations.Further efforts will be made to contact few of the local NGOsFunding will be distributed to these organizations and plan to follow up through our fraternal charitable organization in USA, already involved in charitable and volunteer work in Tamil Nadu
 
3.
 
To whom the donations have to be addressed and sent:
 
Please make out a check for FeTNA, specify "Fire Relief - Kumbakonam" in theMemo and mail the check to:
 
Mani M. Manivannan
President,
Bay Area Tamil Manram,
38871 Jonquil DriveNewark,
CA 94560
 
Donations to the Fire Relief fund is tax deductible and you will receive an acknowledgement from FeTNA.  To speed up relief plans, please e-mail your "Pledge amount" and send your contributions ASAP. (We thank all those individuals  who have already pledged to help the victims). 
 
Send your pledge e-mails to president@bayareatamilmanram.org
 
Thanks,Regards,
 
Mani M. ManivannanPresident,
Bay Area Tamil Manram
http://www.bayareatamilmanram.org 
Serving the community since 1980
 
 

Monday, July 19, 2004

தருணங்கள்

===========

kumbax

மனைவியோடு
பயணிக்கிறபோதுதான்
பழைய காதலியை
பார்க்க நேர்கிறது

இங்கு
மாதக் கடைசியில்தான்
புத்தகக்கண்காட்சி
நடத்தப்படுகிறது

கடைசிக் காசில்
சிகரெட் பற்றவைத்துத்
திரும்பும்போதுதான்
கை நீட்டுகிறார்கள்
பிச்சைக்காரர்கள்

வெகுநேரமாகியும்
வராத பேருந்து
பழைய நண்பர்கள்
எதிர்ப்படுகிற
பொழுதிலெல்லாம்
வந்து தொலைக்கிறது

எப்பொழுதாவது
கவிதை எழுத
உட்காரும் பொழுதுதான்
எங்கிருந்தாவது
காதில் விழுகிறது
மரணச்செய்தி

கவிஞர் காற்றுத்தேவன் தி.ஒ.கவிதை யில் எழுதியது.

மரணம் பற்றியே மூன்று நாட்களில் எத்தனை கவிதை எழுதிவிட்டார்கள் நம் கவிஞர்கள்..!!!

கவிதையோடு காரியமும் தேவை என்று காசி சொன்னதை அருண் தவறாக புரிந்து கொண்டு இருப்பார் போல.

Friday, July 16, 2004

பொய்யாய் பழங்கதையாய் போன புனிதக் கணங்கள்
=================================================
 
babies
 
  பயத்தோடும் மனப்படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித்துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள்.  ' பாத்து..பாத்து' என்றார் அம்மா. மங்கலான மருத்துவமனை விளக்கொளியில் மயங்கிக் கிடக்கும் ராட்சசப் புழுப்போல அது நெளிந்தது.  சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டி சிதறிவிடும் போல இருந்தது.  எனது வலது உள்ளங்கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெது வெதுத்ததை உணர முடிந்தது
 
       இமையிலும், கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ்சிவப்புச் சாயம் பூசினாற்ப்போல தெரிந்தது.  உடலிலிருந்து பச்சை மண்ணிண் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னுமிருந்தன போலும்.  தலையின் ரோமங்களில் இன்னமும் கூட பிசுபிசுப்பு.  உதடுகள் விரிநது கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல நிகழ்ந்தது.  எங்கள் அனைவரின் வாய்களும் பிளந்து மூடின.
 
   யார் உருவாக்கினார்கள்.? நானா..? என்னால் எப்படி முடிந்திருக்கும்.? களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா..?? பென்சிலால் நேராக கோடு போடத் தெரியாத நானா..??
 
   இவளா..? தலைமுடி கலைந்து சோர்ந்துபோய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட ஆணவத்தில் கட்டிலில் சாய்ந்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே இவளா..? எப்படி.?இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா.? தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ணவண்ணமாக க்ராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா?
 
   நாங்கள் இருவரும் சேர்ந்தா..? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி ஒரு அற்புதம்..? எந்த இரவில் , எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும் ?ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது..??
 
 - பாக்கியம் பிறந்திருக்கிறாள் சிறுகதையில் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு.
 
  குடந்தை விபத்தில் குருத்துக்களைத் தொலைத்த பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்.
 
babies1
 

இந்தியா ஒளிர்கிறது
==================
 
    பிள்ளைகறி கேட்டிருக்கிறார் கடவுள். வாரிக் கொடுத்துவிட்டு, மறந்துபோக மற்றொரு விபத்து. எரிந்த தீ ஜுவாலையில் எத்தனை கலாம்களோ..?? எத்தனை சிதம்பரங்களோ..??  கரிக்கட்டைகளாய் கிடக்கும் இந்தியாவின் பிஞ்சுகளை உலகம் அதிர்ச்சியோடு பார்க்கிறது. புத்தகம் வாங்கவும், இலக்கியம் படைக்கவும் முனையும் எம்மில் எத்தனை பேருக்கு ஓலைக்கூரை பள்ளிகளை காங்க்ரீட் கட்டிடமாக்க சித்தமிருக்கிறது..??
 
 முதல்வர் ஜெ பள்ளிகளுக்கெல்லாம் ஓலைக்கூரை மாற்றும் திட்டம் கொண்டுவருவாரா..அல்லது மதிய உண்வுக்கான சமையறைளை பள்ளியினின்று விலக்கி கட்டப்போகிறாரா..
 
எழுத வேறொன்றுமில்லை..உள்ளே ஓலமிடுவதைத் தவிர... 
 

Wednesday, July 14, 2004

தொழுத கையுள்ளும்...
======================

சண்டியர் படத்தைப் பார்க்கும்போது மனதில் எல்லோருக்கும் ஒரு இனம்புரியா சோகம் இருந்து கொண்டிருந்தது. விருமாண்டியின் கோபம், அவன் வெறி, மனதில் பட்டதை பளிரென்று எதிராளியிடமே போட்டுடைக்கும் தன்மை, நம்பினவர்கள் தனக்கே குழி பறித்ததும் அவன் பதைப்பு, என்று அவன் பாத்திரத்தன்மை அழகாக வடிக்கப்பட்டிருந்தது. குழந்தை மனசு கொண்ட அவன் அலைக்கழியும் தருணங்களில், "ஆஹா...எல்லாமே இவன் வாயால் தானே வந்தது " எனு தோன்றினாலும், கள்ளமில்லா உள்ளத்துக்கு சொந்தக்காரனான அவன், சதி வலைகளினின்றும் தப்பிக்க வேண்டும் என்று தோன்றிக்கொன்றே இருந்தது. உங்களுக்கும் தோன்றி இருக்கும்.

மனிதர்கள் பல வகைப் பட்டவர்கள்.உணர்ச்சிக் குவியலாய் வெடித்து, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், படாலென்று பேசி விட்டு , பிறகு சட்டென்று அதை மறந்து, குழந்தை போல குதிப்பவர்கள் ஒரு வகை. கோபம் இவர்களின் ஊனமென்றாலும் நம்புதற்கு உரியவர்கள். இவர்கள் ஒரு வகையில் அனுதாபத்துக்கு உரியவர்கள். இன்னோரு வகை எல்லா உணர்ச்சிகளையும் சரியாக கையாண்டு, தேவையானவற்றை , தேவையான தருணங்களில் வெளிப்படுத்தி, எமோஷனல் இந்டெலிஜன்ஸ் என்ற பொக்கிஷத்தை கை வரப் பெற்றவர்கள். இதை எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதை வைத்துத் தான், இவர்களுடைய இந்தக் குணத்தால் அவர்களின் நண்பர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

இணையக் குமுதத்தில் நான் கீழ்க்கண்ட வாசகங்களைப் பார்த்தேன். Stupid Quote of the day என்று போடப்பட்டிருக்கும் அது வெகு நாட்களாக அங்கிருப்பதால், நாட்கள் நகரவில்லையா..இல்லை...what I see is what you Get என்ற வாக்கியத்தின் இடத்தை அது எடுத்துக்கொண்டதா ..நானறியேன்.

ATT00847

"இதன்படி பார்த்தால், பிற்பாடு தேவையாக இருப்பார்கள் என்ற ஜாக்கிரதை உணர்வில் யாருடனும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் பாதங்களை மிதிக்கக்கூடாது " என்ற அர்த்தம் வருகிறது.

அப்படியானால் எப்போதும் எல்லோர் பின்புறங்களிளும் முத்தமிட்டுக் கொண்டே இருக்க வேணுமா....??

கேட்கவே நாராசமாய் இல்லை...??

காற்றுப்போல சுதந்திரமும், கவிதைபோல் தனிக்குணமும் சண்டியர் சொத்தா..?? வெகுஜனம் லோகாதாயக் குழியில்தான் புரண்டு வளர வேண்டுமா..?? அதுதான் வளர்ச்சியா..??

அதுதான் வளர்ச்சி என்றால் கேன்சர் கூட வளர்ச்சிதான்....!!!


Monday, July 12, 2004

கருணை காட்டுங்கள்
===================

சமீபத்தில் என் சகோதரியுடன் தொலைபேசிக்கொண்டிருந்த போது கேட்டேன் "என்ன படிக்கிற லல்லி இப்போ " என்று. "கீழ்வீடுப் பாட்டி நேத்து ஒரு புக்கு கொடுத்தாங்கடா..அந்தப் புத்தகத்தைத் தான் படிக்கிறேன் . பேர் "ப்ரதோஷ மகிமை" என்றாள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இது மாதிரியான புத்தகங்கள் படிப்பது பாபமல்ல என்று எனக்குத் தெரியும் :-). ஆயினும் என் தமக்கையின் டேஸ்ட் இந்த மாதிரி அத்தை பாட்டி புத்தகங்களின் பக்கம் போய் விட்டதா என்று கேட்டபோது, "போடா..திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைகளைப் படிச்சு எனக்கு போரடிச்சுப் போச்சு... சரி.கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். விஷயம் தெரிஞ்சாற்போலவும் இருக்கும் அப்டீன்னுதான் இதைப் படிக்கிறேன் இப்போ" என்று சொன்னாள். உடனே நான் கடந்த மூன்று வருடங்களாக நான் இணையத்தில் தெரிந்து கொண்டவற்றில் (நல்ல விஷயங்களை...) கொஞ்சம் சொல்லி, "முற்றிலும் புது மாதிரியான தளத்தில், உயர்ந்த ரசனையோடு எழுதும் எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் புத்தகங்களை நான் உனக்கு வாங்கி அனுப்பி வைக்கிறேன்" என்று வாக்குறுதி கொடுத்து விட்டு வைத்து விட்டேன்.

மூன்று நாளாக தலையினால் தண்ணீர் குடித்தும் கூட பார்த்து விட்டேன்....இணையத்தில் ப்ளாஸ்டிக் அட்டை வைத்து புத்தகம் வாங்கி, இந்திய முகவரிக்கு டோர் டெலிவரி செய்ய ஒரு ஜந்துவும் இல்லை. எழுத்தாளர் பாரா சபரிக்காக ஒரு தளம் வைத்திருந்த போது அந்த வசதி இருந்தது. அதற்குப் பிறகு ...மூச். சபரி என்ன ஆச் ..???

அது போகட்டும் ... இப்போது அவர் இருக்கும் கிழக்கு, வெறும் புத்தகப் பேர்களை அடுக்கிக் காட்டி, ஜிலேபி கடைக்கு முன்னே நின்று கண்ணாடிக்குல் இருக்கும் அயிட்டங்களைப் பார்த்து நா ஊற வைக்கும் பட்டிக்காட்டான் போல என்னை ஆக்கி விட்டது. கிரெடிட் கார்டு வசதி இதோ வருகிறது..அதோ தெரிகிறது என்கிறார்கள்...அவ்வளவே. அங்கும் மூச்.

அட சரிப்பா...ஒரு பேபால் அக்கவுண்ட் ஆவது வைத்துக் கொண்டு ஆர்டர் எடுத்துக் கொள்ளக் கூடாதா..??

காந்தளகத்தில் ஒரு பெண், "டி.டி எடுத்து அனுப்பவும். எங்கள் தளத்தில் இவ்வசதி இல்லை" என்று தெளிவாக சொல்லி விட்டாள்.

ஏன்..?? இணையத்தில் தமிழ் புத்தகம் வியாபாரம் ஆவதில்லையா..?? ஆரம்பிக்கும் ஆசாமிகள் அதிக லாபம் எதிர்பார்ப்பதால் வியாபாரம் சரியாக நடப்பதில்லையா..?? என்ன பிரச்சினை..??

சென்னையில் இத்தனை புத்தககக் கடைகள் இருக்கின்றன. இப்போதைய தேவை ஒரு ஆஃபிஸ் ரூம் மட்டும். வேலை செய்ய ஒரு மேலாளர். இரண்டு பணியாளர்கள் (டெஸ்பாட்ச் கிளர்க்). ஒரு கம்ப்யூட்டர் - இணைய இணைப்போடு. இங்கே ஒரு தளம் தடங்கி, வடிவமைத்து விட்டு - ஷாப்பிங் கார்ட் அப்ளிகேஷனோடு, புத்தகப் பட்டியல்களை , சிறிய அறிமுகங்களோடு வலையேற்றி விட வேண்டியதுதான். யார் யார் ஆர்டர் பண்ணுகிறார்களோ, அதை சென்னைக்கு தொடர்பு கொண்டு, கடைகளில் இருந்து தருவித்து டெலிவர் செய்வது...அல்லது அங்கேயே, இந்திய முகவரிக்கு அனுப்புவது. என்ன கஷ்டம் இதில். சொல்வதற்கு ரொம்ப எளிதாக இருக்கிறதோ..நஷ்டம் வருமோ..?? புத்தகம் மசால்வடை மாதிரி ஊசிப் போகாதே..??

பின் ஏன் தாமதம்..தயக்கம்....நேரடியாக தகிரியமாக, "இணையத்தில் புத்தகக்கடை வைக்கப்போகிறேன்" என்று சொல்லிச் செய்யலாமே. பம்மிப் பம்மி, எதற்கு இந்தத் தயக்கம்.

பசியோடு சாப்பிட வந்தவனை, ஓட்டல் ஆரம்பிக்க செய்து விடுவார்கள் போலிருக்கிறதே..!!!!!

எனக்கு கீழ்க்கண்ட புத்தகங்கள் தேவை. டி.டி எடுத்து அனுப்ப பொறுமை இல்லை. க்ரெடிட் கார்டு மூலமோ, பேபால் மூலமோ தான் பணம் செலுத்த முடியும். இத்தனை புத்தகங்களையும் நான் சொல்லும் இந்திய முகவரிக்கு அனுப்ப வேணும்.

யார் தயார்..??

லிஸ்ட் இதோ


காகித மலர்கள் - ஆதவன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
வேடந்தாங்கல் - ம.வே.சிவக்குமார்
ஜே.ஜே.சில குறிப்புகள். : சு.ரா
தரையில் இறங்கும் விமானங்கள் : இந்துமத
கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
கொரில்லா - ஷோபா சக்தி
நந்தலாலா- மாலன்
ரத்த உறவு - யூமா வாஸுகி
குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
புலிநகக் கொண்றை - பி.ஏ.கிருஷ்ணன்
புவியிலோரிடம், பா.ராகவன்
பறவை யுத்தம், மெல்லினம் - பா.ராகவன்
சைக்கிள் முனி - இரா.மு
தேர் - சிறுகதைத் தொகுப்பு - இரா.மு
ஆதம்பூர்க் காரர்கள் - சிறுகதைத் தொகுப்பு - இரா.மு
சிலிக்கன் வாசல் - சிறுகதைத் தொகுப்பு - ஸ்நேகா வெளியீடு - இரா.மு
பகல் பத்து, ராப்பத்து - குறுநாவல்கள் - இரா.மு
தகவல்காரர் - குறுநாவல்கள் - இரா.மு
முதல் ஆட்டம் - சிறுகதைத் தொகுப்பு - நர்மதா பதிப்பகம் - இரா.மு
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் - இரா.மு
மந்திரவாதியும், தபால் அட்டைகளும் - - இரா.மு
ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் - சிறுகதைத் தொகுப்பு - இரா.மு
நெவர் பி·போர் - சுஜாதா கவிதை தொகுப்பு
இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் - ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன் கதைகள் - சிந்துவெளி நாகரிகம்
மாயநதிகள், சூரியன் மிக அருகில், அது ஒரு நிலாக்காலம் - ஸ்டெல்லா ப்ரூஸ்
சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் கள்ளிக்காடு
தீ, சடங்கு, நனவிடை தோய்தல் - எஸ்.பொன்னுதுரை
ர.சு.நல்லபெருமாள் - கல்லுக்குள் ஈரம்
யுகபாரதியின் 'மனப்பத்தாயம்',
சுதேசமித்திரனின் 'அப்பா',
சாரு நிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்', ஸீரோ டிகிரி
பெருமாள் முருகனின் 'நிழல் முற்றம்'
தஞ்சை பிரகாஷின் 'கள்ளம்'
எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்',
வண்ண நிலவனின் 'எஸ்தர்
இருளப்பசாமியும், இருபத்தேழு கிடாய்களும் - வேல.ராமமூர்த்தி
கோபல்ல கிராமம், கரிசல் காடுக் கடுதாசி - கி.ரா
ஜெயமோகனின் 'ரப்பர், சங்கச்சித்திரங்கள்
அசோகமித்திரனின் 'பதினெட்டாவது அட்சக் கோடு',
பெ.கருணாகரமூர்த்தியின் 'அகதி உருவாகும் நேரம்
நீல.பத்மனாமனின் 'பள்ளி கொண்டபுரம்'

Friday, July 09, 2004

குணா - கோதண்டராம பிரசாத் கொல்லிப்பாரா
==========================================

"நானும் நீங்களும் நம் வீட்டில் நிறைய பூச்செடிகள் வளர்க்கலாம். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விதமாக சமூக சேவை புரியலாம். இதை உன்னோடு செய்தால் என் வாழ்க்கை ஒளிரும்" என்று ஒரு பெண்ணிடம் பேசி தன் நேசத்தை வெளிப்படுத்தியவனை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..??

நெற்றியில் எப்போதும் திருநீறு போல குங்குமத்தை இட்டுக் கொண்டு, பெரிய மீசையோடும்,முரட்டு உடம்போடும் அதற்கு சம்பந்தம் இல்லாமல் குழந்தை போல சிரித்துக் கொண்டு, கூடப் படிப்பவர்களையே "வாங்க..போங்க " என்று படித்த நான்கு வருடமும் மரியாதை தவறாமல் பழகியவனை, "இத்தனை வெகுளித்தனம் இருக்கவே சாத்தியமில்லை..இவன் நடிக்கிறான்" என்று என்னைப் போன்றவர்களை சந்தேகிக்க வைத்த அந்த நல்லவனை, கல்யாணமான பின்னால் பழைய கல்லூரி (ஆண்) நட்புகளை தொடரக்கூடாது என்று மிகுதியும் நினைக்கும் பெண்களே தொடர்ந்து நட்பு வைத்திருந்த அந்த எளியன், விதிவசத்தால் நேற்று இங்கே, பாஸ்டன் அருகே உயிரிழந்தான்.

அடுத்த வாரத்தில் குழந்தை பிறக்கப்போகும் தன் மனைவியையும், அவள் தாயாரையும் வீட்டில் விட்டு விட்டு, தன் ஐந்து வயது முதல் குழந்தைக்கு நீச்சல் சொல்லித்தர, நீச்சல் குளம் போயிருக்கிறான். கூடவே துணைக்கு மாமனாரும். குழந்தைகள் நீச்சல் பயிற்சி நடத்தும் இடத்திற்கு அருகிலேயே இவனும் நீச்சல் அடித்துப் பழகி இருக்கிறான்

குழந்தை நீச்சல் க்ளாஸ் முடித்தவுடன், தந்தையைக் காணாது அழுது இருக்கிறான். பிறகு ஃலைப் கார்ட்ஸ் 911 அவசர உதவியை அழைத்து விட்டு தேடத்துவங்க, கொஞ்ச நேரம் கழித்து நீருக்கு அடியே அவனைக் கண்டிருக்கிறார்கள். நாடித் துடிப்பு அப்போதே இல்லையாம். பிறகு ஆம்புலன்ஸில் போகும்போது இதயம் துடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆயினும் டாக்டர்கள் பார்த்து விட்டு 'மூளைச்செல்கள் இறக்க ஆரம்பித்து விட்டன. இனி பிழைப்பது துர்லபம்' என்று வென்டிலேஷன் உதவியோடு வைத்து இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே உடலின் முக்கிய பாகங்கள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பிக்க, இனி பிரயோசனம் இல்லை என்று அவன் கர்ப்பிணி மனைவியின் அனுமதியோடு செயற்கை சுவாச கருவிகளை அகற்றி இருக்கிறார்கள்.

அந்த இனியவனின் கதை முடிந்து விட்டது.

என்ன நடந்தது..?? என்ன நடக்கிறது ..??

இத்தனை படித்து கஷ்டப்பட்டு, வாழ்க்கையில் முன்னுக்கு வருகிற வேளையில் இம்மாதிரி மரணம் நிகழ்வது எத்த்னை கொடுமை..?? என்ன அஜாக்கிரதை..?? எதற்கு..?? எனக்குத் தெரிந்து வேகமாக கார் ஓட்டுவதையும், மலை ஏற்றத்தையும், ஆறுகளில் அருவிகளில் குளிப்பதையும் ஆண்மையோடு சம்பந்தப்படுத்திக் கொண்டு என் நண்பர்கள் ஆட்டம் போடுவதை பார்த்திருக்கிறேன். பிரசாத் அப்படிப்பட்ட ஆளும் அல்ல. மேலும், அவன் உடலைத் தூக்கி மேலே வரும்போது பாம்பு ஒன்று அவ்விடத்திலிருந்து அகன்றதாக பணியாளர்கள் இப்போது கூறுகிறார்கள். இது மட்டுமல்ல, இத்ற்கு முன்பே இக் குளத்தில் இதைப் போல வினோத மரணங்கள் சில நிகழ்ந்ததாக இப்போது சொல்கிறார்கள். எல்லாவற்றையும் சீரணித்து, ஏப்பம் விட்டு குளம் சலனமற்றிருக்க, மறு நாளே குழந்தைகள் மறுபடி நீச்சல் பயிற்சிக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்...

என் இனிய நண்பர்களே, தயவு செய்து புது இடங்களுக்கு போகும் போது ஜாக்கிரதையாக இருங்கள். முன் ஜாக்கிரதை இல்லாமல் எதிலும் இறங்காதீர்கள். தடால் புடாலென்று இருப்பது ஆண்மைக்கு அழகென்று ஏதாவது எசகு பிசகாக செய்து, உங்கள் உயிர்களையும், உறவுகளயும், நண்பர்களயும் கண்ணீர் சிந்த வைக்காதீர்கள். இளவயதில் தந்தையை இழப்பது அந்த ஐந்து வயசு பையனுக்கு, வாழ்க்கையின் மீது எத்தனை அவநம்பிக்கையை கொண்டு வந்திருக்கிறது என்று பாருங்கள். தனியே வந்து அயல் தேசத்தில் இருக்கும்போது, யாருக்கு யாரும் காவல இல்லை. என்பதை அழுந்த நினைத்துக் கொள்ளுங்கள்.

kkrp


ஜாக்கிரதை...ஜாக்கிரதை...ஜாக்கிரதை..


Wednesday, July 07, 2004

உயர்தனிச் செம்மொழி
=====================

அபிப்ராயங்களைக் கட்டமைக்கும் பணியிலும், பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் நம்மாட்கள் கை தேர்ந்தவர்கள். எந்த மாதிரி அபிப்ராயங்களை உருவாக்கவும், எந்த வகையிலான பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் இவர்கள் தன் எழுத்துத் திறமையும், புகழையும் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி.

ராயர் காப்பி க்ளப்பிலே பெரிய எழுத்தாளர்கள், கவிஞர்களது கவிதைகளை, ( எஸ்.வைத்தீஸ்வரன், பி.ஏ.கிருஷ்ணண், சுஜாதா) கடிதங்களை முன்னிப்பு செய்வது வழக்கம். தேர்ந்த எழுத்தாளரும், நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரையை சிஃபிராயர் இப்போது இட்டிருக்கிறார் இப்போது. "தமிழ செம்மொழி ஆகி விட்டதால் புதிதாக ஒன்றும் விளைந்து விடவில்லை. மாறாக சின்னச் சின்ன தொந்தரவுகள்தான் வந்துள்ளன ' என்று அவர் எழுதப்போக, மதுரபாரதி "உவகை பெருவெள்ளத்தில் அடித்துப் போகப் படாமல் உணர்ச்சி வசப்படாமல்" இதை எழுதிய இ.பா வுக்கு ஒரு ஷொட்டு கொடுத்திருக்கிறார். வக்கீல் பிரபுவோ இந்த ஆட்டத்திற்கெல்லாம் மயங்காமல், படாரென்று ஒரு எசப்பாட்டு பாடியிருக்கிறார்.கிட்டத்தட்ட உவகைப் பெருவெள்ளத்தில் அகப்படாது அவரும் இந்தக் கேள்வியை எழுப்பியிருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. அத்துடன் இது ஓவர். வேறு யாரும் மூச்சு விடவில்லை. நமக்கெதுக்கு பொல்லாப்பு என்று நினைத்தார்களோ நானறியேன்..

முன்னரே பத்ரி, மெய்யப்பன் முதலானோர் வலைப்பதிவில் வைக்கப்பட்ட விஷயம்தான் இது.ஒருவேளை தி.மு.க பங்கு பெறும் மைய அரசினால் நிறைவேற்றப்பட்டது என்பதால் இது இப்படி இழுபடுகிறதோ தெரியவில்லை. ' மழை வந்ததினால் வந்த காவிரி' என்றும் 'கபினி தண்ணீர்' ஆன காவேரி ஆகவும் ஆனது போல இதை ஆக்க முடியாததால் , இதில் உள்ள குறை குறைகளை உணர்ச்சி வசப்படாமல் ஆராய்ந்து கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம். பெற்ற தாய்க்கு எத்தனை சேலை இருந்தாலும் திருநாளுக்கு புதுச்சேலை தராமலா இருப்பார்கள் இவர்கள்..அல்லது கிடைத்தால் வேண்டாமென்று சொல்லி விடுவார்களா..??

நல்லவேளை பாரதியார் சமஸ்கிருதத்தில் எழுதாமல் போனார். தமிழ் பிழைத்தது.

அதனால்தான் எழுதுவதற்கும், புகழ் பெறுவதற்கும், இணைய ஊடாட்டத்துக்குமாவது இவர்கள் தமிழைப் பயன்படுத்துகிறார்கள்.


Tuesday, July 06, 2004

டக்கீலா..டக்கீலா
================

மெக்ஸிகன் சாராயத்தின் செல்லப் பெயர் இது. டக்கீலா ஷாட் என்றால் சிலபேருக்கு பளிச் என்று புரியும்.சனிக்கிழமை சாயங்காலம் ஏழு நாற்பத்தைந்து வரை எனக்கு இதன் மகிமை புரியாது இருந்தது. Jose carvos என்று எழுதப்பட்ட ஒல்லி பாட்டிலில் அந்த தங்க நிற திரவம் அசைந்தாடிக் கொண்டிருக்க, எதிரே என் நண்பர் எலுமிச்சம்பழத் துண்டுகளை அடுக்குக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தட்டில் உப்பு. ஷாட் க்ளாஸ் என்று சொல்லப்படும் அளவை ஒரு பக்கம். கலப்பதற்கு எதுவும் தேவை இல்லை என்று சொல்லி விட, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போல ஒரு நெடுங்காலக் குடியனிடம், இப்படி 'பிலிம்' காட்டுகிறாரே என்று உள்ளூர எரிச்சல் வேறு.

கையிலே க்ளாஸை எடுத்துக் கொள்ளச் சொன்னார். இன்னோரு கையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவே எலுமிச்சம்பழத்தை தேய்க்கச் சொன்னார். மேலே அவரே கொஞ்சம் உப்புப் பொடி தூவினார். ஷாட் க்ளாஸில் அளந்த சரக்கை, கடக்கென்று என் தம்ளரில் ஊற்றி மடக்கென்று விழுங்கிய சூட்டோடு, கயில் உப்பு / எலுமிச்சை தேய்த்த இடத்தை நக்கிக் கொள்ள சொன்னார்.

taquila


மஜாவாக இருந்தது. கிக்கை விட அதற்கான முஸ்தீபுகள் தான் அதிகம் போலும் என்று தோணிப்போக, "அட சின்னப் பையனே" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மடமடவென்று வேகமாக மூன்று க்ளாஸ் அடித்து விட்டேன். டக்கீலா வேறு ஜாதி சரக்கு போல. முதலில் லேசாக இளித்துக் கொண்டு பேசிய நான், கொஞ்ச நேரத்தில் நவரச நாயகனாகி சகல பாவங்களையும் காட்டி இருக்கிறேன் போல. வாசலில், கராஜ் முன் ஒரு பெஞ்சை போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். பின் உள்ளே வந்து, சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்க முயன்றவர்களை படம் பார்க்க விடாமல். சாப்பிட விடாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்திக்கிறேன். கழுமலம் என்றும் திருஞானசம்பந்தர் என்றும் ஏதோ தமிழ் அலம்பல்கள் வேறு.

திடீரென்று விழிப்பு வந்தபோது, சோஃபாவில் கிடந்தேன். கண்ணில் கண்ணாடியோடு தூக்கம். இரவில் சாப்பிடாமல் நெஞ்செரிந்த ஏப்பம். தாகம். எழுந்து மடக் மடக் கென்று ( சாதா) தண்ணீரைக் குடித்து விட்டு காலை நாலரைக்கு, கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு பெட்ரூமில் போய் படுத்துக் கொண்டேன்.

காலை எழுந்தவுடன் எல்லாரும் லேசாக சிரித்துக் கொண்டே என்னிடம் பேசினார்கள். மனைவி பேசவே இல்லை. "அடே..அற்பப்பதரே ' என்ற பார்வையில், யோசனையுடன் இட்லி வைத்தாள். பிறகு மெது மெதுவாக முந்தைய இரவில் எப்படி கோமாளி மாதிரி நடந்து கொண்டேன் என்று சொன்னாள். தண்ணி அடித்து விட்டு இதை விட பயங்கரமாக லூட்டி அடித்த காலம் எல்லாம் உண்டு. வீடியோ காமிராவில் என் நண்பன் அதை எல்லாம் ரெகார்ட் பன்ணி மறு நாள் போட்டுக் காட்டி இருக்கிறான். சேர்ந்து உட்கார்ந்து சிரித்தபடி பார்த்து மறந்திருக்கிறோம்.

ஏனோ தெரியவில்லை..இனிமேல் அது மாதிரி நடக்காது போலிருக்கிறது.

Thursday, July 01, 2004

இதற்கென்ன அவசியம்..அதுவும் இங்கு..??
========================================

காலை வேலையில் எழுந்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சமீபகாலங்களில் மனநிறைவைத் தரும் விஷயமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் சூர்யாவுக்குத் தான் இம்மாதிரி கவனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது அவனுடன் சேர்ந்து வீடும் தோட்டமும்.

அம்மாதிரியான ஒரு காலை நேரத்தில், அதைச் செய்தவாறு வீட்டு வாசல்புறம் நின்றிருந்தேன். திருமலை நாயக்கர் தூண் மாதிரி மெகா சைஸில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரும், அவர் சிநேகிதியும் "ஹாய்..ஹவ் ஆர் யூ..? " என்றார்கள். இந்தியர்களைப் பார்த்தால் கடுவன் பூனை போல வைத்துக் கொண்டும், இங்குள்ளவர்களைப் பார்த்தால் காது வரை விரியும் வாயோடும் பேசும் நமது தேசி மனப்பான்மை எனக்கும் கொஞ்சம் ஒட்டிவிட்டது போலும்... நானும் சந்தோஷமாக வார்த்தையாட ஆரம்பித்தேன். கொஞ்சம் கூட சந்தேகமே வரவில்லை. ஒரு ஐந்து நிமிடம் பேசிய பின்னர். 'பாவிகளை ரட்சிக்க பூமிக்கு வந்தவரைப் பற்றியும், அவரது பிரதாபங்கள் பற்றியும் பேச பேச ஓ...இது தினகரன் ( பெரியகுளம் தினகரன் அல்ல..காருண்யா தினகரன்....காலை வேளையில் ராஜ் டீவியில் " ஏஸ்ஸூ..உங்களை ஆஸ்ஸிவதிப்பார் " என்பாரே ..அவர்தான்..... ) கேஸ் என்று புலனாயிற்று. லேசாக படபடப்பு வந்து விட்டது. வியர்த்துப் போனது. ஏதேதோ புத்தகம் கொடுத்தார். எதுவும் எனக்கு காதில் விழவில்லை.கடைசியாக அவரை ஒருமாதிரி பேசி அனுப்பி வைத்தேன்.

edv


என்ன நேர்ந்தது எனக்கு..?? என் ஹிந்து ரத்தம் விழித்துக் கொண்டதா..?? கடவுளைக்கூட தலைவலி மாத்திரை மாதிரி உபயோகப்படுத்துக் கொள்ளும் எனக்குள் என் மதம் சார்ந்த படபடப்பு ஏன்..??ஒரு ஏமாற்றுக் காரரிடம் இருந்து விடுபடுவதைப் போல அவர் போனவுடன் எனக்கு ஏன் நிம்மதி உண்டானது...பிற கருத்துக்களுக்கு மனதை திறந்து வைக்காத கட்டுப்பெட்டியா நான்..??

இந்தியா மாதிரியான நாடுகளில்தான் கிறித்துவத்தைப் பரப்ப இவ்வளவு யத்தனங்களைப் பார்க்கிறோம். இந்துக்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஊடுருவ வேண்டும் என்று போப் சொன்னார் என்று இது நடக்கிறது என்கிறோம். அமெரிக்கா மாதிரி , மிகுதியும் கிறித்தவர்கள் உள்ள இடங்களில் இது ஏன் நடக்கிறது..? மதம் இப்படித்தான் பேணப்பட வேண்டுமா..?? அழியாமல் இருக்க இம்மாதிரியான ஆட்களும் ஒவ்வொரு மதத்துக்கும் வேண்டுமோ..??

அப்புறம் ஏன் ப.ஜ.க மேல் கோபம் வருகிறது..?? பள்ளிப் பாடங்களில் இந்து சமயம் பற்றி வந்தால் கோபம் வருகிறது...சரஸ்வதி வந்தனம் பாடப்பட்டால் ஏன் கண்டனம் கிளம்புகிறது..??
மதமும் , கடவுள்களும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரால் சொந்தம் கொண்டாடப் பட்டதுதான் இந்துக்களுக்கு , தன் மதத்தின் மீது வெறுப்பு வரக் காரணமா..?? கடவுள் பேரைச் சொல்லி ஆலயப் பிரவேச மறுப்பும், பிரவேசம் செய்தாலும் சட்டையை கழற்றிப் பார்ப்பதும், மறைமுகமாக தன் மேலாதிக்க வெறியை நிலைநாட்டியதும் தான் பெரியாரைப் போன்றவர்களை உருவாக்கியதோ..??

ஆழமும், அர்த்தமும், நல்ல பல விஷயங்களும் அடங்கிய இந்து மதத்தினை முழுதாய் பாவிக்க விடாமல் நம் சமூக அமைப்பு கெடுத்ததா..??

கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...

கட்டாயம் பதில் காணப்பட வேண்டிய கேள்விகள்....

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...