Monday, February 14, 2005

இன்றைக்கு போட்டே ஆகவேண்டிய பதிவு



காதலர் தினம் வலைப்பதிவுகளில் தூள் பறந்து கொண்டிருக்கிறது. என்னதான் காதலர் தினம் கொண்டாடுவது நமது கலாசாரத்திற்கு சம்பந்தமில்லையென சொன்னாலும், உண்ணும் உணவு, உடுக்கும் உடை, பருகும் "நீர்" முதற்கொண்டு, மேற்கு நம்மை அண்டி தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், காதலர் தினம் கொண்டாடுவதில் மட்டும் என்ன தவறு வந்து விட்டது..?? . காதலிகளுக்கு கொண்டாட்டம். காதலன்கள் பர்ஸுக்கு அன்று திண்டாட்டம் என்று சொன்னாலும் கூட சுகமான சுமைகள் அவை. வேண்டித்தான் இருக்கிறது. அதுவும் ஆண் பெண் ஈர்ப்புக்கு காரணமான ஒரிஜினல் அர்த்தங்கள், ( It is nature's way of ensuring pregnancy என்பார் சுஜாதா) இளைய தலைமுறைக்கு இத்தனை அப்பட்டமாக தெரிந்து விட்டபிறகு, காதல் போன்ற கனவு கலந்த பொன்னிறமான வஸ்துகள் கண்டிப்பாக வேண்டும்.

ஏனெனில் காதலில் புனைவையும் கனவையும் எடுத்து விட்டால், வெறும் உடம்பு மட்டும்தான். எனவே அவை ஜீவிதமாக இருக்கட்டும். கலந்தே இருக்கட்டும்.

அன்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துகள் - கீழுள்ள பாலகுமாரன் கவிதையோடு

ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம்
தலைநகரில் கொழிக்கின்ற தமையனுக்கு
நியூயார்க்கின் ஒரு கோணம்
மணமாகி மறந்துவிட்ட தங்கைக்கு நினைவோடே
பொக்கை வாய்க் குழந்தைகள்.
காணாத போது
என் கவிதையை,
முன்பல்லை விமர்சிக்கும் நண்பர்க்குக்
கற்சிலைகள்
அதிகார மேனேஜன் பார்வைக்கு ஸீனரிகள்
அடியே - போன ஜனவரியில்
புதுப் படத்து அரையிருளில்
காதோரம் ·நீயிட்ட நீர்த் தடங்கள் காயும் முன்
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப் போய்
மரபைக் காட்டி
கொண்ட ஒரு கனவையும்
குலைத்து விட்ட
உனக் கென்ன அனுப்ப?
மொட்டை மரம் ..?
புத்தர் படம் ..?
கற்றை குழல் ஜானகியின் தனியுருவம்?
இல்லை - அட்டைக் கறுப்பில்
நீல மசி தோய்த்து
நீங்காத நினைவோடே
என்றெழுதி அனுப்புகிறேன்
தேடிப் புரிந்து கொள் !

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...