Friday, February 11, 2005

தமிழும் தங்கமணியும்

ஒரு பெண் பெரியவளாகும்போது அதை வீடும் வெளியுலகமும் பார்க்கும் விதங்கள் வித்தியாசமானவை. வண்ணமயமானவை. தாய்மைக்காக இயற்கை நிகழ்த்தும் ரசவாதம் என்கிற கனிவான நோக்கோடு பார்க்கப்படுபவை. பெரியவளாக இருப்பதற்காக, அந்தக் குழந்தை அணைத்துக் கொள்ளப்படும் விதங்கள் இதமூட்டுபவை. லா.ச.ரா வின் "புத்ர" வில் இதை அழகாக சொல்லி இருந்தது பிடித்திருந்தது.



ஒரு பையனுக்கு இது நிகழ்வது கிட்டத்தட்ட அவனுக்கே தெரிவதில்லை. ஜல்லடைக் கண்களின் வழியே இறங்கும் வெல்லப்பாகு போல மெல்ல மெல்ல நிகழ்கிறது இது. சில விவரமானதுகளைத் தவிர பெரும்பாலான விடலைச் சிறுவர்கள் இந்த விஷயத்தில் மக்குகள். சக மக்குகளிடம் பேசியும், தகுதியில்லா புத்தகங்களால் அறிவுறுத்தப்பட்டும், தனக்கு நிகழ்வதையே கூட்டி கழித்து புரிந்து கொள்வதிலும், சினிமாக்களைப் பார்த்து கிளுகிளுத்துக் கொள்வதிலுமேதான் அவனுடைய "அறிவு" விரிகிறதே தவிர சக வயதொத்த பெண்ணுக்கு கிடைக்கும் தனிப்பட்ட கவனிப்பும் அறிவுரைகளும் அவனுக்கு கிடைப்பதில்லை.

அப்படியொரு பையன் ஒம்போதாம்ப்பு தமிழ் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். பையன்கள் தங்களுக்குள் கிளுகிளூத்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். முதல் பெஞ்சியில் உட்கார்ந்திருந்தால் இம் மாதிரி லீலைகள் எல்லாம் கஷ்டம் என்பதால் ஆவலை அடக்க முடியவில்லை. ஆனால் தமிழ் டீச்சர் திட்டுவார்களே என்ற கவலை வேறு. ஒரு வழியாக தமிழ் வகுப்பு முடிகிற தருணத்தில் நண்பன் "மசால்வடை" சிவக்குமார் க்ளாஸுக்கு புதிதாக வந்திருந்த சிங்கப்பூர் பெண் தங்கமணி, கடைசி பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு வகுப்பு நடக்கும் போதே டிபன்பாக்ஸை திறந்து சாப்பிட்ட கதையை கிசு கிசுத்தான். அப்போதுதான் வடிவேலுக்கு ஆம்பிளை வேஷம் போட்டாற் போலிருக்கும் அந்த பெண், அவர்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சியை கடந்தது. அதைப் பார்க்க ஆரம்பித்த அவன், அது நடந்து போய், வகுப்பு சுவரை விட்டு வெளியே மறையும் வரை வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை துரத்திய திக்கைப் பார்த்த தமிழாசிரியை, "பிஞ்சிலே பழுத்தால்....வெம்பிவிடும்" என்று சம்த்காரமாக சொல்லிவைக்க வகுப்பறை சிரிப்பில் குலுங்கியது.

அவனுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அடடா... இப்படி தவறாக நினைத்து, உண்மையை தெரிந்து கொண்டார்களே என்ற அவமானம். கொஞ்சம் வெளைஞ்சவனாக இருந்திருந்தால், கண்டுகொள்ளாது போயிருப்பான். தான் சின்ன பையனா, பெரிய பையனா என்பதே தெரியாத சுள்ளான். நேராக டீச்சர்ஸ் ரூமுக்கு போய், சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆசரியையிடம் " நான் அப்படி எல்லாம் இல்லை டீச்சர்" என்று பூசி மெழுகும் அவசரத்தில் தான் எதற்காக பார்த்தோம் என்று சொல்வதற்காக, தங்கமணி சாப்பிட்ட கதையை டீச்சரிடம் போட்டுக் கொடுத்தான். டீச்சர் சிரித்துக் கொண்டே " உன்ன மட்டும் சொல்லலைப்பா...எல்லா பையன்களும் கிட்டத்தட்ட அப்படித்தான் பாக்கிறீங்க" என்று கூறியது ஆறுதலாக இருந்தது என்று நினைத்துக் கொண்டான்.

மத்தியான வகுப்பு ஆரம்பிக்கு முன், போட்டுகொடுத்த விஷயம் தங்கமணிக்கு போனது. அந்தப் பெண் கோபாவேசமாக வந்து, சிங்கப்பூர் ஆங்கிலத்தில் தாட்டு பூட்டென்று கத்தினாள். இவனுக்கு என்ன சொல்வதென்றே விளங்காமல், டெஸ்கில் படுத்துக் கொண்டு விசும்ப ஆரம்பித்து விட்டான். டீச்சர் அடித்த கமெண்ட் என்னெவென்று தெரிந்து விட்ட மற்ற பெண் சொன்னாளோ என்னமோ, கொஞ்ச நேரம் கழித்து தங்கமணியே வந்து சாரி சொன்னாள். இவனுக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது.

கொஞ்ச நாள் கழித்து பஸ்ஸில் தன் அம்மாவுடன் தஞ்சாவூர் போகும்போது, அதே பஸ்ஸில் வந்த தமிழாசிரியையோடு ஒரே இருக்கையில் உட்கார்ந்து போக நேர்ந்தது. அந்த 72 கிலோமிட்டரும், எந்த நேரத்தில் ஆசிரியை தங்கமணி மேட்டரை பேசுவார்களோ என்கிற அசட்டுத்தனமான பதை பதைப்புடன், ஜன்னலுக்கு வெளியேயே பார்த்துக் கொண்டு அவன் கழித்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அந்த மாதிரி எதுவும் சொல்லாமல் மானத்தை காத்த தமிழாசிரியையிடம் அவனுக்கு வந்த மதிப்புதான், எதை விட்டாலும் தமிழை மட்டும் விடாமல் இன்னமும் துரத்திக் கொண்டிருக்க சொல்கிறதாக்கும். :-)

இப்போதுகூட "என் முரசு" படிக்கும்போது அவனையும் அறியாமல் எழுந்து நின்று கொண்டே படிப்பது கூட அதனால்தானோ. :-) . ஆனா இந்தத் தங்கமணி மீசை வச்ச பெங்களூர் தங்கமணிங்கிறது ஒரு ஆறுதல்.

படம் : அய்யய்யோவ்..இங்கேர்ந்து எடுத்தது. அது ஃபோட்டோவா, ஓவியமா ஒண்ணும் தெரியாதுங்கோவ்....

5 comments:

  1. //தமிழாசிரியையிடம் அவனுக்கு வந்த மதிப்புதான், எதை விட்டாலும் தமிழை மட்டும் விடாமல் இன்னமும் துரத்திக் கொண்டிருக்க சொல்கிறதாக்கும்.//

    புரியுது, புரியுது, செய்யறதையும் செஞ்சுட்டு தப்பிக்க பாக்கறது. :-)

    ReplyDelete
  2. எனது தோழி ஒருத்தி சொன்ன வார்த்தைகள் இவை:
    "எனக்கு சாமத்திய வீடு வைச்ச போது பெருமையாக இருந்தது. அப்பேக்கை எடுத்த படங்களை பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுபோய் எனது தோழிகளிற்குக் காட்டி அந்தமாதிரிச் சந்தோசப்பட்டன். ஆனா, இப்ப அதை நினைச்சுப் பார்க்க வெட்கம் வெட்கமாய் இருக்குது".

    நான் சொல்வது: எமது மகளின் இனப்பெருக்கத் தொகுதி பூரண நிலைக்கு வந்தாகிவிட்டுது. அதனைக் கொண்டாட பூப்பூ புனித நீராட்டு விழா வரும் ஆனி மாசம்....

    ReplyDelete
  3. தலைப்பைப் பார்த்துட்டு என்னாட நம்ம ஒன்னும் பண்ணலயேன்னு பார்த்தேன்.

    சுவராசியமா இருந்தது. அதுமாதிரி சில ஆசிரியைகளிடம் மாட்டிக்கொண்ட தர்மசங்கடமான (அப்போது அப்படி எண்ணிய)பொழுதுகளில் அவர்கள் நடந்துகொண்ட விதம் இப்போதும் ஆச்சர்யப்படவே வைக்கிறது. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட கனிவும், பெருந்தன்மையும் கொண்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் இருப்பார்களா என்று பெருமூச்சு வருகிறது. அதுபோன்று அவ்வாசிரியர்கள் காரணமாக வந்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள் இவற்றையும் நான் வியக்கவே செய்கிறேன்.

    நன்றி!

    ReplyDelete
  4. அட வாங்க தங்கமணி, யார் ஆச்சரியப்படணும்ணு நெனச்செனோ, அது நடந்துட்டுது.

    நன்றி.

    ReplyDelete
  5. மன்னிக்கனும் மூக்கன், நான் பெரும்பாலும் மீசை வைப்பதில்லை!
    :))

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...