Thursday, December 02, 2004

மாதர் சங்கம் - 1982

கண்ணாடி என்கிற பிரயோகத்தையே சந்தேகப்படுத்தும் விதமாக எப்போதும் மணல்கயிறு கிஷ்மு மாதிரி மூக்கிலேயே தொங்கிக் கொண்டிருக்கும் சோடாபுட்டி. மெலிந்த தேகம். எப்போதும் கலைந்து கிடக்கும், அம்மா தேய்த்துவிட்ட yendeluxe தேங்காய் எண்ணையோடு கோரை முடித தலை. நெற்றியில் பளிச்சென்று தெரிய வேண்டுமென்பதற்காக பாண்ட்ஸ் பவுடரில் (விபூதிக்) கீற்று. வாய்க்குள் சதா ஏதாவது ஒரு பாட்டு. தெருவில் நடந்து கொண்டே கதைப் புத்தக வாசிப்பு. சட்டைப் பையில் "சிவந்த மண்" வாங்கித் தின்ன, பெருஞ் சண்டைக்குப் பிறகு அம்மா கொடுத்திருக்கும் அஞ்சு காசு. மேற்சொன்னவைகளோடு சுற்றிக் கொண்டிருந்த ஒரு பொடியன் சடாரென்று ஒரு நாள் பிரபலமானான்.

மாயவரம் மாதர் சங்கம் சார்பாக நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் " மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்ற தலைப்பில் 1982 ஆம் வருடம் பேச்சுப் போட்டி. அப்போது அவன் ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். உருவத்துக்கு சம்பந்தமில்லாத கணீர் குரலோடு அப்பா எழுதி கொடுத்த தமிழ், சரளமாக நாவில் விளையாட, அந்தப் பேச்சுப் போட்டியில் அவனுக்கு முதல் பரிசு. பாரதி புண்ணியத்தில் கழுத்தில் விழுந்த முதல் மாலை. தமிழில் பேசினால், திறமையை காட்டினால், கைதட்ட, பரிசு தந்து ஊக்கப்படுத்த நான்கு பேர் இருக்கிறார்கள் என்று புரிந்து போக, புகழ் போதைக்காக, மேலும் மேலும் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள் என்று கலந்து கொண்டு வளர்ந்தாலும், விவரம் தெரியாத வயதில் பேச்சுப் போட்டிக்காக நெட்டுரு பண்ணிய பாரதி மட்டும் இன்று வரை தொடர்கிறான். கவிஞனாக வசீகரித்த அவன், இப்போது, விவரம் தெரிந்த இந்த வயதில் கவிஞன் என்ற எல்லையைத் தாண்டி தமிழ் சமூகத்தில் அரிதாகத் தோன்றும் மாமனிதர்களில் ஒருவனாக மனதுள் இருக்கிறான். இணையம் முழுக்க விரவிக் கிடக்கும் அவன் பற்றிய தகவல்கள், அவன் மேல் வெறிபிடித்த பாரதி பித்தர்கள் தரும் செய்திகள் என்று ஒவ்வொன்றும் கேட்கக் கேட்க அதிசயமாய்த்தான் இருக்கிறது. வாங்கி வைத்த பாரதி கவிதைகள் தொகுப்பை என்றாவது ஒரு நாள் ஹரிமொழியின் துணையோடு முழுதாய்ப் படித்து விட முடியும் என்கிற பேராசை இன்னமும் பாக்கி இருக்கிறது.அது நீண்டகாலத் திட்டம் . திசைகள் தந்திருக்கும் பாரதி சிறப்பிதழ் அமர்க்களமாக வந்திருக்கிறது. அது இன்றைய திட்டம்

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\Subramaniya+Bharathi

பாரதிக்கு, நல்லவனாய்ப் பிறந்து தொலைத்ததால் கிறுக்குப் பார்ப்பான் என்று இகழப்பட்ட அந்த விராட் புருஷனுக்கு, இந்தத் துரும்பின் நினைவு அஞ்சலி...

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...