Thursday, December 30, 2004

வதந்தீ

நேற்றிரவு "மறுபடியும் சுனாமி அபாயம்" என்று இனையப் பத்திரிக்கைகளில் பார்த்தவுடன் பதட்டத்துடன் பெற்றோரை தொடர்பு கொண்டேன். கடற்கரையோரத்தில் இருந்து மாயூரம் இருபத்தேழு கி.மி என்றாலும், இறக்கை கட்டிக் கொண்டு கிளம்பும் வதந்திகள் மக்களை மிகுந்த பீதிக்குள்ளாக்கி வருகின்றன.

முதல் தடவை அசட்டையாக இருந்ததால், இந்த முறை ஏதாவது சிறிய அபாயம் என்றால் கூட மக்களை முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினத்து அரசுகள் முனைவது புரிகிறது. ஆனால் காலம் கடந்த எச்சரிக்கை என்ன செய்யும்..?? புனே நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சீஸ்மாலஜிஸ்ட் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே அந்தமான் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி வந்ததாக இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்கிறது. கடலலை தாக்கிய அன்று காலை, அதைப்பற்றி அந்தமானிலிருந்து சிலர் அனுப்பிய தகவல் முன்னாள் மத்திய அமைச்சருக்கு சென்றிருக்கிறது.இம் மாதிரியான எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த நமது மனம் இப்போது இழப்புகளை பற்றி நினைத்து துயருற்றுக் கொண்டிருக்கிரது.

அதுவும் எல்லோரும் அல்ல.

இங்கே பணியிடத்தில் என் தோழி, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், திங்கள் காலை வேறு ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில், " சுனாமி பற்றி கேள்விப்பட்டீர்களா..?? " என்று வினவினேன். "ஆமா..கேள்விப்பட்டேன். கடலோர மீனவர்களுக்குத்தான் பாதிப்பாமே..?? " என்றார் அசட்டையாக. " ஏன்..அவர்கள் மனிதர்கள் இல்லையா ..?? என்று நான் மறுபடி கேட்டவுடன்தான், தான் சொன்னதன் அபத்தம் அவருக்குப் புரிந்தது. அதே தோழி, மறுநாள் காலை பேசும்போது, தன் தம்பியும் அவன் தோழர்களும் மாமல்லபுரத்தில் சுனாமி அலையில் சிக்கி தப்பித்து வந்தது தனக்கு நேற்று வரை தெரியாது என்றும் இன்று காலைதான் விஷயம் தெரிந்தது என்றும் கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருந்தார்.

நம்மில் பலபேர் இப்படித்தான். ஒரு க்ரூப் ஃபோட்டோ பார்த்தால் கூட, ஃபோட்டோவில் தான் எப்படி இருக்கிறோம் என்றுதான் எல்லோரும் முதலில் பார்க்கிறார்கள். பிறகுதான் மனைவி, குழந்தை எல்லாம். ஆனால், இம் மாதிரியான பேரிடர் சமயங்களில் தன்னலத்தை இப்படி வெளிப்படையாக விரித்து சொல்வதுதான் பிரச்சினைக்குள்ளாக்கி விடுகிறது.

நானும், நீங்களும் கவலைபடுகிறோம். அதில் சந்தேகமில்லை. உதவுகிறோம். அதில் பொய்யில்லை. ஆனால் அதற்காக நம்முடைய தினசரி கடமைகளை மறக்கிறோமா..? அலுவலகத்துக்கு போகாமல் அஞ்சலி செலுத்துகிறோமா..?? இல்லை... அதில் தவறுமில்லை. ஆனால் இதற்கு அடுத்த கட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். சென்னையிலேயே, கடலுக்கு அதிக தூரத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் இதை பற்றி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்று கேள்விப்படுகிறேன். ' நான் தப்பிச்சேன் பா. எனக்கெதுக்கு கவலை " என்கிற மனோபாவம்தான். அப்படி இருக்கும் மக்கள்தான் டீவியில் தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு, சங்கீத சபாக்களுக்கு போய் பட்டம் வாங்கி பக்கோடா தின்று கொண்டு உடம்பில் உறைப்பு என்ற ஒன்றே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு, தொடர்ந்து வரும் சுனாமி பற்றிய வதந்திகளும், செய்தித்தாள்களில் வரும் படங்களும் இல்லை என்றால் இத்தனை மக்கள் மாய்ந்து போனார்கள் என்ற விவரமே கூட மறந்து போகும். சின்ன வயதில் என் தாத்தா வீட்டுத் தோப்பில், வயற்காட்டில் நான் மாடு மேய்க்கப்போவது வழக்கம். வயலில் ஒரு முளை அடித்து, ஒரு பெரிய கயிறை அதில் கட்டி, கன்றுக்குடியின் கழுத்தில் கட்டி விடுவோம். அந்த கயிறு இருப்பதே தெரியாமல் கன்றுக்குட்டி மேய்ந்து கொண்டிருக்கும். கயிறின் நீளம் தாண்டி, அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, கயிறு கன்றுக்குட்டியை பின்னோக்கி இழுக்கும். தன் வட்டமும், தான் மேய அனுமதிக்கப்பட்ட தூரமும் நினைவு வர, கன்றுக்குட்டி பின்னே வரும்.

சுனாமியின் பின் விளைவுகளையும், அது தொடர்பான வதந்திகளையும் நான் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன்.

வாழ்க வதந்தி.


4 comments:

 1. /நான் தப்பிச்சேன் பா. எனக்கெதுக்கு கவலை " என்கிற மனோபாவம்தான். அப்படி இருக்கும் மக்கள்தான் டீவியில் தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு, சங்கீத சபாக்களுக்கு போய் பட்டம் வாங்கி பக்கோடா தின்று கொண்டு உடம்பில் உறைப்பு என்ற ஒன்றே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்./
  போன செவ்வாய் இரவு தமிழ்மணத்திலே சில பதிவுகள் தந்த நாட்டுநடப்பு விபரங்களைப் பார்த்தவுடன் தோன்றிச் சொன்னால் வாங்கிக்கட்டிக்கொள்வேன் என்று விட்டுவிட்டதைப் பதிந்து இன்றைக்குப் பூனைக்கு மணி கட்டியதைச் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்க.

  ReplyDelete
 2. அன்புள்ள சுந்தர்,

  உயிர் பிழைச்சவுங்க எல்லாம் இந்த பேரழிவு தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து நம்பிக்கையுடன் மறுவாழ்வு தொடங்க
  நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதுதான் முக்கியம்.

  இந்த நிலையிலே வலையிலே ஏதாவது பதிவுகளை ( அவைகள் முன்பே எழுதிவைக்கப்பட்டிருந்தாலுமே) பதிவது அபத்தமாகத்
  தானே இருக்கும்.

  சிறிது பண உதவியைத்தவிர வேறு ஏதும் செய்ய இயலாத தொலைதூரத்தில் இருந்து கொண்டு,
  என் கையாலாகாத நிலையை எண்ணித் துக்கப்படுவதைத்தவிர வேறு வழியில்லை.

  என்றும் அன்புடன்,
  துளசி.

  ReplyDelete
 3. நன்றி துளசி.

  ரமணி, நீங்கள் எல்லாம் (பூனைக்கு மணி கட்டவேண்டியதைப் பற்றி எழுதினால் வாங்கிக் கட்டிக் கொள்வேன் என்று..) ஒதுங்குவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

  Brand பண்ணப்படுவதைப் பற்றி நீங்கள் கூட கவலைப்பட ஆரம்பித்து விட்டீர்களா என்ன..??

  ஆனால், உங்கள் "கழுதைப் புலி" பதிவு எனக்கு வருத்தத்தை தந்தது என்பதை சொல்ல விரும்புகிறேன் :-(. It was unexpected from you at this moment.

  ReplyDelete
 4. //Brand பண்ணப்படுவதைப் பற்றி நீங்கள் கூட கவலைப்பட ஆரம்பித்து விட்டீர்களா என்ன..??

  ஆனால், உங்கள் "கழுதைப் புலி" பதிவு எனக்கு வருத்தத்தை தந்தது என்பதை சொல்ல விரும்புகிறேன் :-(. It was unexpected from you at this moment.//

  நான் பேச விரும்பாவிட்டாலும் இந்த முரண் புரியவில்லை.

  இந்த நேரத்தில் மற்ற பதிவு (கள்) உங்களுக்கு வருத்ததை தரவில்லையே!

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...