Monday, December 06, 2004

பண்டிகை தினங்கள்

கடேசி குவார்ட்டர் என்று ஏற்கனவே இங்கே எழுதி இருந்தேன். இது கிட்டத்தட்ட அதனுடைய தொடர்ச்சிதான்.

கிறிஸ்துமஸ் வர இன்னமும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. குளிர் அதிகம். பண்டிகை கூட்டமும் அதிகம். இரவில் எங்கள் குடியிருப்புப் பகுதியே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் ஜொலிக்கிறது. எல்லா கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது வருவதைப் போலவே, இப்போதும் ஒரு படம் வந்திருக்கிறது என்றாலும், இதைப் போல இன்னொரு படம் வர முடியாது என் டீம்மேட் ஜீன் தாத்தா சொல்கிறார். இன்னமும் நான் இரண்டையும் பார்க்கவில்லை.

போன கிறிஸ்மஸ் நாங்கள் அபார்ட்மெண்டில் இருந்தோம். வாங்கிவந்த கலர் பல்புகளை வாசலில் உள்ள பந்தல் மாதிரி உள்ள roof ல் தொங்கவிட்டு விளக்கெரிந்தபோது ஜூனியர் மூஞ்சில் சூரியகோடி பிரகாசம். எங்களுக்கு இதிலெல்லாம் ஈடுபாடு இல்லை என்றாலும், கிறிஸ்மஸ் மரம் வைத்து, புகை போக்கி வழியாக தாத்தா இறங்கி வந்து கிஃப்ட் கொடுப்பார் என்றெல்லாம் கதை விட்டு, கிறிஸ்மஸ் காலையில் எழுப்பி, பரிசு கொடுத்தோம். மறுபடியும் அண்ணாச்சி மூஞ்சு முழுக்க 1000 வால்ட் பல்பு போட்டார்.

இந்த வருடம் இன்னமும் கிறிஸ்மஸ் மரம் வைக்கவில்லை. போனமுறை லோக்கல் சித்தி விநாயகர் கோவிலில், கிறிஸ்மஸ் மரத்தைப் பற்றி அங்கு உள்ள ஐயர் ஒருவர் உயர்வாக சொல்ல, ( நம் புராணங்களில் இந்த தேவதாரு மரத்தைப் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அதிலிருந்து வரும் காற்று உடம்புக்கு நல்லது...) , போனமுறை ஒரிஜினல் மரம் வாங்கினோம். வருடா வருடம் வாங்க வேண்டி இருக்கும் என்பதால், இந்த முறை ப்ளாஸ்டிக் மரம்தான் வாங்க வேண்டும். இன்னம் கொஞ்சம் கலர் பல்பு வாங்க வேண்டும். அபார்ட்மெண்டில் போட்டிருந்த துளியூண்டு பல்பு மாலையை இந்த வீட்டின் முன் போட்டால், சரத்குமாருக்கு நாலு முழ வேஷ்டி கட்டியது மாதிரி இருக்கிறது.

அமெரிக்க பண்டிகைகளின் கோலாகலம் இப்படி இருக்க, நம் பண்டிகைகள் கொண்டாடுவது ரொம்ப சோகம் இங்கே. ஜே ஜே என்று கொண்டாடிய தீபாவளியையும், பொங்கலையும், மற்ற பண்டிகைகளையும் தனியாக கொண்டாட வேண்டி இருக்கிறது. கிறிஸ்மஸ் கேக்கையும், தேங்க்ஸ் கிவிங் பரங்கியையும் வெளியுலகில் கிடைக்கும் வெளிச்சத்திலிருந்து சுவீகரித்துக் கொள்ளும் பையன், முறுக்கையும், அதிரசத்தையும் தீண்டவே மாட்டேன் என்கிறான். வேண்டாம் என்று நாசுக்காக மறுத்து விடுகிறான். அவனுக்காகவாவது எல்லாவற்றையும் கொண்டாடி காட்ட வேண்டும் என்று தோணுகின்ற சமயத்திலேயே, அதெல்லாம் அவனுக்கு தேவைப்படுமா என்றும் கேள்வி எழுகிறது. எனக்காவது, கொஞ்ச காலம் கழித்து மாயவரத்தில் போய் செட்டில் ஆகும் நப்பாசை இருக்கிறது. இந்த சூழலில் வளரும் அவனுக்கு, இங்கிருக்கும் ஆட்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுதான், கலந்து பழக ஏதுவாக இருக்கும் என்றும் யோசனை தோன்றுகிறது இந்த ஒரு காரணத்திற்காகவே, இதுவரை தமிழில் சரளமாக பேச எழுத சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாமல் இருக்கிறது.

மனித வாழ்க்கை என்பது இத்தனை கேள்விகளால் உருவாக்கப்பட்டது என்று யாரும் எனக்கு சொல்லி இருந்தால், வண்ணத்துப்பூச்சியாக பிறந்து வர வரம் கேட்டிருப்பேன்.

டூ லேட்...!!


இதன் தொடர்பில், முன்னர் எழுதியவைகள் :

பாலம்

ஜீஸஸ் க்ரைஸ்ட் யாரப்பா
கேட்டான் பிள்ளை..
முருகன் தம்பியோ..??
சந்தேகம் அவனுக்கு....
பள்ளியில் நண்பரெல்லாம்
கிறிஸ்மஸ் கொண்டாடயில்
சர்ச்சில் ஜபிக்கையில்
கிறிஸ்மஸ் மரம் வைக்கையில்
சான்டா க்ளாஸ¤டன் பேசுகையில்
வீட்டில்
'தனந்தரும் கல்வி தரும்'
சொல்லும் குழப்பம் அவனுக்கு...
அலைந்து தேடி
கிறிஸ்மஸ் மரம் வாங்கி
அலங்கரித்து
லைட் பொருத்தி
ஓய்ந்து போய்
போர்ச்சுகல் ஒயினும்
கோழி வறுவலுமாய்
உட்காருகையில் போன் வந்தது
..'அண்ணாமலை தீபம்டா இன்னைக்கு..
பெரிய கார்த்திகை..
வாசல்ல ரெண்டு
வெளக்கேத்தி வை.
.இன்னைக்காவது 'சுத்தமா' இரு..
என்றார் அப்பா..

தனியே

கிறிஸ்துமஸ¤க்கு ஜெபிக்கவில்லை
லேபர் டே வீக் எண்ட்
ஒரு அர்த்தமும் தரவில்லை
ஹலோவீன் வேஷமும்இல்லை எனக்கு..!!
தாங்ஸ் கிவிங்...
கேட்கவே வேண்டாம்...

தீபாவளியும்..சரஸ்வதிபூஜையும் ...
பொங்கலும்..கொண்டாடிவிட்டு
காரில் போகையில்
பரபரவென்று நெற்றி சந்தனத்தை
அழித்தழித்து
திரு திரு வென விழித்தபடி
ஓடிக்கொண்டிருக்கின்றன நாட்கள்...!!

2 comments:

  1. இந்த சூழலில் வளரும் அவனுக்கு, இங்கிருக்கும் ஆட்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுதான், கலந்து பழக ஏதுவாக இருக்கும் என்றும் யோசனை தோன்றுகிறது இந்த ஒரு காரணத்திற்காகவே, இதுவரை தமிழில் சரளமாக பேச எழுத சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாமல் இருக்கிறது.
    >>>>>>>
    லாஜிக் புரியல.(பதில் தேவையில்ல :) )

    ReplyDelete
  2. அண்ணே வாங்க..வாங்க..

    தமிழ் சொல்லிக் கொடுக்க கூடாதுன்னு விரதமெல்லாம் எடுக்கலைண்ணே..!! ஆனா, இந்த வயசுல ஸ்கூல்ல மத்த பசங்க கூடவும், அழகான மிஸ் கிட்ட அப்பாவைப் பத்தி சொல்லவும் :-) , முதல்ல இங்க்லிபீசு தெரியணுமில்லை. அது தெரியட்டும். அதுக்கப்புறம், தமிழ், (அதான் விட்ட குறை தொட்ட குறையா ஜீன்லயே இருக்கே) சொல்லிக் குடுக்கலாம்னு இருக்கேன்.

    எக்குத்தப்பா நீங்க கேள்வி கேக்க வந்தா, நாங்க எகனை மொனையா பதில் சொல்ல மாட்டோமா..??!! :-)

    பதில் வேண்டாம்னு, இது இன்னா ஸ்டண்ட் நாய்னா..??

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...