Tuesday, December 21, 2004

தூக்கம் தொலைத்த நேற்றிரவு...

நல்ல படம் ஒண்ணு பாத்தேன். அதனால தூக்கம் போச்சு.படத்தின் ஆரம்பத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும், போகப் போக மெல்லிய சோகமாக மாறி, பின் சில இடங்களில் சிரிப்பை வரவழைத்து கடைசியில் படம் முடியும்போது கண்களின் ஓரங்களில் கண்ணீராக மாறி நின்றது. படத்தின் கதாநாயகன் தயாரிப்பாளர் மகனாம். யாராவது "தத்தி" மாதிரி நடித்தால், யாருப்பா அது..ப்ரொட்யூஸர் மகனா ..?? என்றுதான் கேட்போம். ஆனால் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் கிருஷ்ணா, பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி, கதிராகவே வாழ்ந்திருக்கிறார். நடிப்பிலும், டயலாக மாடுலேஷனிலும் அங்கங்கே தனுஷின் சாயல் தெரிவதை தவிர்த்திருக்கலாம். ரஷ் பார்த்த செல்வராகவனாவது திருத்தி இருந்திருக்கலாம். போகட்டும்...

சந்தேகமில்லாமல் யுவன் ஷங்கர் ராஜா தூள் கிளப்பி இருக்கிறார். ரீ ரிக்கார்டிங்கில் அப்பா ராஜாவை மிஞ்ச ஆள் கிடையாது என்று சொல்வார்கள். வரும் தலைமுறைக்கு யுவன் சரியான ஆளாக இருப்பார் என்று தோன்றுகிறது. படத்தில் பல இடங்களில் பின்னணி இசை என்ற ஒன்றே இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு, சூழலில் கலந்து படத்தின் பலத்தில் இசை ஒரு பாத்திரமாகவே ஆகி விட்டிருக்கிறது. பாடல் ஆரம்பிக்கும் இடங்களும், பாடலுக்கு என்று திணிக்கப்பட்ட காட்சிகள் போல இல்லாமல் படு இயல்பு - கிரிக்கெட் விளையாடும் கதிர், அனிதாவைப் பார்க்கும்போது ஆரம்பிக்கும் இது போர்க்களமா பாடல் போல ... !! செயற்கையாய் இருந்தது - படத்தின் இறுதியில் வரும் ஒரு மேடைப் பாட்டு. அதற்குப் பிறகு வருகிறேன்.
படத்தின் நாயகியும் அம்சமாக பண்ணி இருக்கிறார். நடிப்பிலும் சரி, தோற்றத்திலும் சரி, சோனியா அகர்வால் இதற்கு சரியான தேர்வு. பொறுக்கித்தனமாக தன் பின்னே அலையும் ஹீரோவைப் பார்த்து பயந்து ஒதுங்கும்போதும் சரி, பின் கொஞ்சம் கொஞ்சமாக, அவனுடைய விவரமில்லாத அப்பாவித்தனம் கலந்த முரட்டுத்தனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, அவன் மேல் ஸ்நேகம் கொள்வதும் சரி, அவரது நடிப்பு ஹல்திராம்ஸ் ரசகுல்லா மாதிரி வழுக்கிக் கொண்டு போகிறது. சில இடங்களில் அவரது வசனம் கொஞ்சம் வள வள என்று இருக்கிறது. குறிப்பாக, கதிருக்கு தன்னையே நன்றியாக தர விரும்பும் காட்சியில். பண்பாடு கலாச்சாரம் எல்லாம் பேசும் தமிழ் கூறும் நல்லுலகில், நாயகியே முன் வந்து நாயகனுக்கு தன்னைத் தர விரும்பும் காட்சி, எந்த விதமான அதிர்வுகளை எழுப்புமோ என்று பயந்ததால், சரியாக ஜஸ்டிஃபை பண்ண வேண்டும் என்று முனைந்து, வசனங்களை அதிகப்படுத்தியதால் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. காதல் என்ற உணர்வில் விழுந்தபின், அன்பை, சந்தோஷத்தை, மற்ற விஷயங்களினை பகிர்தலில் பெண்களுக்கு இருக்கும் மனோபாவம் ஆண்களுக்கு இல்லை. இன்னமும் ஆண்களில் பெரும்பாலானோருக்கு செக்ஸ் என்பது கெட்ட வார்த்தைதான். அது காதலியின், மனைவியின் வாயிலிருந்து வந்தாலும் கூட. அதனால் தான் கதிரைப்போல பல ஆண்கள், இந்தப் பகிர்தல் வெறும் உடம்புக்காக எனத் தவறாகப் புரிந்து கொண்டு விடுகிறார்கள். பெண்கள் காதலுக்கு தரும் அங்கீகாரத்தை ஆண்கள் முழுக்க தர தயங்குவது வினோதம்தான். இந்த வினோதத்தை, விமரிசனங்களைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாகச் சொன்ன செல்வராகவன், கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய டைரக்டர்தான்.

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" மற்றும் "கங்கை எங்கே போகிறாள்" என்ற நாவல்கள் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற ஒரே படமாக வந்த போது, வாழ்க்கையை தொலைத்து விட்ட கங்கா, தன் நிலைக்கு காரணமான நாயகனை பின்னாளில் சந்திப்பது போன்ற காட்சி வரும். அவனால் கெடுக்கப்பட்டதால், சாதாரண பெண்கள் போல வாழாமல் , தனிமரமாக வாழ்ந்து வரும்போது , குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகி விட்ட நாயகனிடம் " I would like to share my bed with you " என்று தன் பிரியத்தை சொல்லும் காட்சி, பலத்த ஆட்சேபத்தையும் அதிர்வுகளையும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படுத்தியது. ஆனால் இங்கோ, தன்னைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லும் நாயகி, தன் காதலனுடன் சேர்வதை பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. அவனுக்கு சந்தோஷம் தருமே என்பதற்காகவும், வாழ்நாள் முழுக்க வேறு யாருடன் இருந்தாலும் இந்த நினைவுகள் போதும் என்று சொல்லும்படியும் வைத்து, அதை விரசப்படுத்தாமல், மலினப்படுத்தாமல், மிகச் சரியாக சொல்லி, இன்னொரு சூட்சுமமான கதவைத் திறந்து காட்டி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இவ்வளவு சொல்லியும் இது 7G ரெயின்போ காலனியின் விமரிசனம் என்று தெரியாதவர்கள், தமிழ்நாட்டு பத்திரிக்கை படிக்காத பாக்கியசாலிகள் . அநேகமாக நம்மில் யாருக்கும் அந்த பாக்கியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

படம் வந்தவுடன் ரோகிணிக்கு போய் பார்த்து உடன் பகிர்ந்து கொள்ளும் லக்ஸூரி, கடல் கடந்த என் போன்ற கணிணிக் கூலிகளுக்கு இல்லை. ம்...

6 comments:

 1. ஜெயகாந்தனின் "கங்கை எங்கே போகிறாள்" என்ற நாவல் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற படமாக வந்த போது
  >>>
  ஏனுங்ணா, நாவலும் படமும் ஒரே பேர்தானுங்களே?

  "கங்கை எங்கே போகிறாள்" என்பது தான் சி.நே.சி.ம-வின் அடுத்த பகுதி. - bbபடத்த அல்லாரும் ஆஹ ஓஹோங்றீங்க. எங்கூருக்கு டிவிடி வர்றதுக்குள்ள....

  ReplyDelete
 2. பரி,

  அக்னிப்பிரவேசம் ---> சில நேரங்களில் சில மனிதர்கள் - கங்கை எங்கே போகிறாள் . இதுதான் கதை வரிசை.

  ஆனா, படம் ஒண்ணுதான். சி.நே. சி.ம மட்டும்தான்.

  சரியா கம்யூனிகேட் பண்ணலையோ..?? பாக்கிறேன்.

  ReplyDelete
 3. தூக்கம் தொலைந்த காரணம் புரியுதுங்கோ!!!

  ReplyDelete
 4. 'ஹீரோவை எதுக்கும் உதவாத உதவாக்கரை, தம்மடிச்சு தண்ணியடிக்கிற தெருப்பொறுக்கியாக காட்டணும். என்ன பண்ணலாம்?'

  'சிம்பிள் ஸார், பேசாம ரஜினி ரசிகனா காட்டிலாம்!'

  ReplyDelete
 5. லக்சுரிதான் இல்லேங்கலே.... ஆனா சில சமயம் மன்மதன் மாதிரி ஆக்சிடெண்டும் ஆறதுண்டு. நேத்திரிக்கு ராத்திரி ஆன மாதிரி.

  ReplyDelete
 6. Hi there " Blogger " --- I was in the search engines researching SEO Software when I came upon your blog..... I don't know if you are out of place in the engines, or I am out of place and just don't realize it :-)

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...