Monday, December 13, 2004

கொலையும் செய்வார் மதி கெட்ட பதி...

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\1-scott-peterson-before

அமெரிக்க மீடியாக்களுக்கு அவ்வப்போது ஏதாவது பரபரப்பு செய்தி கிடைத்துவிடும். அதை ஊதிப் பெரிதாக்கி, நோண்டி நுங்கெடுத்து, பாடி பறக்கச்செய்து, எல்லாரும் அதைப் பற்றி பேச செய்து விடுவார்கள். எலெக்ஷன் பரபரப்பிலும், இராக் படையெடுப்பிலும் முக்கியத்துவம் இழந்து இருந்த செய்திகளில் முக்கியமானது லாசி பீட்டர்சன் கொலை வழக்கு.
அவரைக் கொன்றதாக அவர் கணவர் ஸ்காட் பீட்டர்ஸன் மீது குற்றச்சாட்டு நிரூபணமாகி, அவருக்கு தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. இடையில், ஜூரிகளில் ஒருவரை "வாங்க" முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்து, ஏகப்பட்ட பரபரப்புக்குப் பின் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தண்டணை நிறைவேறுகிறது. கிட்டத்தட்ட இதுவரை கலிஃபோர்னியா மாகாணத்திலேயே அறுநூற்றைம்பது பேருக்குத்தான் தூக்குத்தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது. கடைசியாய் தூக்குத்தண்டணை வழங்கப்பட்டது 2002 ஆம் வருடம்.

ஆரம்பத்தில் தன்னுடைய லாயர்களுடன் சோக முகத்தோடு ஷேவ் செய்யாமல் பரிதாபமாக வந்த ஸ்காட், பிறகு ஜம் என்று ட்ரிம் ஆக வர ஆரம்பித்தார். Scott is Hot என்றெல்லாம் டாப்ளாய்டுகளில் செய்தி வந்தது. இந்த வழக்கில் இருந்து மட்டும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தால், வெளியே வந்தவுடன் அவர் பிரபலமான புள்ளியாய், ஒரு சூப்பர் மாடலாய் ஆகியிருந்திருக்ககூடிய வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்ல, ஜூரர்கள் கூட இந்த பரபரப்பான வழக்கை அட்லீஸ்ட மூன்றுமாதங்களுக்கு, வெளியில் பேசி, பணமோ, அன்பளிப்போ பெறக்கூடாது என்று ஜட்ஜ் தடை போட்டிருக்கிறார்.

இதே மாதிரி ஓ.ஜே.சிம்ப்ஸன் என்ற ஒரு விளையாட்டு வீரர் பற்றிய கொலை வழக்கும் ஜவ்வாக இழுத்துக் கொண்டே போனது. கிட்டத்தட்ட அவருக்கும் இம் மாதிரி ஒரு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் அவர் விடுதலையானார். பேட்டி எடுக்கப்பட்ட ஒரு பார்வையாளர் உதிர்த்த வார்த்தை இது:

Man...!! I would hire his attorney, if I ever get in to trouble...!!!

நீதி எப்போதும் ஜெயிப்பதில்லை. பிரதிவாதியின் வக்கீல்கள் சொதப்பும்போது மட்டும்..!!

பி.கு: இந்தப் பதிவை எழுதி முடித்த பிறகு, அதே இரவில், இந்த கொலைவழக்கு சம்பந்தமாக ஒரு முழு நிகழ்ச்சி, Court TV என்ற சானலில் ஒலிபரப்பபட்டது. முழுதும் பார்த்து முடிப்பதற்குள் திகில் உச்சத்துக்கு போய் விட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த போது ஸ்காட் அளித்த டீவி பேட்டி, அவசர அவசரமாக அவர் விற்க முயன்ற லாசியின் கார் மற்றும் அவர்கள் மொடஸ்டோவில் வசித்த வீடு, அவர் காதலி ஆம்பர் அளித்த பேட்டி, பதிவு செய்யப்பட்ட அவர்கள் தொலைபேசி உரையாடல்கள், போலிஸ் வளைத்த விதம், பொதுமக்கள் எதிர்ப்பால் மொடஸ்டோவில் இருந்து ரெட்வுட் ஷோர்ஸ் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றிய முடிவு, கோர்ட்டில் ஸ்காட்டின் உடல்மொழி, இறுதியில் தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன் கோர்ட் வெளியே மக்கள் ரியாக்ஷன் என்று மிக கலவையான வீடியோ பதிவு அது. கண்டிப்பாய் படமாக வரும் எனு தோன்றுகிறது.

3 comments:

  1. செய்திகளில் பார்த்தவரை, இவ்வழக்கின் பிரபலத்துக்குக் காரணம், கிறிஸ்துமஸ் அன்று லேஸி பீட்டர்ஸன் காணாமல் போனது ஒரு symbolic விஷயமாக அமைந்துவிட்டதாலும், கர்ப்பிணிப் பெண்ணின் சிரித்த முகம் 'அனைத்து அமெரிக்கப் பெண்களின் நற்குணத்தையும்', ஸ்காட் பீட்டர்ஸனின் தோற்றமும் இறுக்கமும் அவரை 'அனைத்து அமெரிக்க ஆண்களின் குரூரத்தையும்' சுட்டுவதாகச் சித்தரிக்கப்பட்டதாலும்தான் என்று பெரும்பாலும் கூறப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அனுபவிக்கவேண்டியது நியாயமே என்றாலும், இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகப் பட்டது பொதுஜனங்களின், ஊடகங்களின் voyeuristic தன்மைதான். எனக்கு என்னவோ, வெகுகாலம் முன்பே ஸ்காட் பீட்டர்ஸனுக்கு மரணதண்டனை உறுதியாகிவிட்டதுபோல் பட்டது. போதாக்குறைக்கு இந்த சந்தர்ப்பத்தில்தான் Runaway Jury படமும் பார்த்துவைத்தேன்!!

    ReplyDelete
  2. தமிழ்ப்பாம்பு,

    (அட ஏதாவது ஒரு சின்னப் பேரை சொல்லுமய்யா...இப்படிக் கூப்பிட எனக்கே விநோதமாக இருக்கிறது) கிட்டத்தட்ட இதேதான் என் நண்பர் காலையில் சொல்லிக் கொண்டிருந்தார் - ஸ்காட் பீட்டர்சனுக்கு ஏற்கனவே பத்திரிக்கைகள் தண்டணையை உறுதிப்படுத்தி விட்டன - என்று.
    ஆனாலும், பத்திரிக்கைகள் குறை சொல்லுகின்ற எல்லாரும் உண்மையில் நல்லவர்களாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தையும் பொதுமைப்படுத்த முடியாதே..!! அவர்களுக்குத் தேவை பரபரப்பு. அது எப்படி கிடைக்கிரதோ. எப்படி கொடுக்க முடியுமோ, அந்தந்த காரணிகளை ஊதி கொடுக்க வேண்டியதுதான். பத்திரிக்கை ஆசிரியர்கள் புது சமூகத்திலிருந்தா வந்து விட்டார்கள். அப்போதைய சமூகத்தின் வரிவடிவ பிரதிபலிப்புதானே அவர்களும்..!! பொதுவாகவே மக்களுக்கு மற்றவர் வாழ்வில் நுழைந்து பார்க்கும் ஆவலின் வடிகால்கள்தானே டீ.வி சீரியல்களின் வெற்றியாக வெளிப்படுகிறது.

    ReplyDelete
  3. மூக்கரே,
    தமாசுதான் போங்க உங்களோட! என்னைச் சுருக்கமாகக் கூப்பிடணும்னா பாம்புன்னு கூப்பிடுங்க போதும். இந்த Montresor என்ற பேரும் தொந்தரவா இருக்கிறதாலே, வெறுமனே பாம்பு ன்னு மாத்திக்கிறதுக்கு யோசிச்சிகினு இருக்கேன்.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...