Thursday, December 16, 2004

நாத்திகம் பயில்

மறுபடியும் மரத்தடி மகாத்மியம். எந்த நேரத்தில் தேவை இன்னொரு பெரியார் என்ற இழை தொடங்கியதோ, அது இன்னமும் செயின் ரியாக்ஷன் மாதிரி வெவ்வேறு அவதாரங்கள் எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. புது தகவல்கள், சுட்டிகள், பேட்டிகள் என்று மக்கள் கைக்கு கிடைத்தை எல்லாம் போட்டுக் தாக்குகிறார்கள்.

இணையத்தில் எழுதுபவர்கள் முழுநேர எழுத்தாளர்களோ, அல்லது அதி தீவிர சிந்தனையாளர்களோ இல்லை - அட்லீஸ்ட் நான் இல்லை. எல்லோரும் எழுதப் பழகுவதோடு, எழுதும் விஷயத்தை எழுதுவதற்காகவாவது சிந்திப்பவர்கள் மற்றும் சிந்திக்கப் பழகுபவர்களே. எந்த இஸங்களையும் கட்டிக்கொண்டும், அதைத் தூக்கி நிறுத்துவதற்காக அதில் தீவிர ஆராய்ச்சியும் செய்கிறவர்கள் அல்ல. சொல்லப்போனால், எந்த இஸத்துக்கும் அடியார்களாக இருப்பதை விடவும், எல்லாவற்றில் உள்ள நல்லது கெட்டதை ஆராயும் திறந்த மனம் இருப்பவர்களாக இருத்தல் நன்று. அப்படி இருக்கையில் இம் மாதிரி விவாதங்கள் நடக்கும்போது, மடலாடற்குழுவில் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் விவாதத்தின் போக்கை குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இப்படி நடந்தால் வெறும் சாம்பார் திரியாகவும், புதுக்கவிதை திரியாகவும், நவராத்திரி/தணுர் மாத திரியாகவும் போய்விடக்கூடிய அபாயங்கள் உள்ளன.

சமீபத்திய மரத்தடி விவாதங்களின் தொடர்ச்சியாக "வலைப்பூவுலகின் வால்ட் டிஸ்னி" அருள்செல்வன் கந்தசாமியின் கட்டுரையை பகிர்ந்து கொள்ள விருப்பம்.

தன் இளமையிலாவது ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.

1.


நாத்திகம் மனிதனை விடுவிக்கிறது. மூதையர் சிந்தனைக் கட்டுகள்தான் ஒவ்வொருமனிதனுக்கும் மிகப் பெரும் தளை. தந்தையை எதிர்ப்பது சிறுவன் மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.

2.


நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள்குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தைவழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.

3.


நாத்திகம் மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனை தன் செயல்களுக்குதன்னையே பொறுப்பேற்க கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்கவேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.

4.


நாத்திகம் மனிதனை இரக்கமுள்ளவனாக, அன்புடையவனாக மாற்றுகிறது. பிற மனிதரை, பிற உயிர்களை தன்னைப் போலவே எண்ண வைக்கிறது. வாழ்வில் கிடைக்கும்ஒவ்வொரு கணத்தையும் இழக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுத்தருகிறது. மனிதவாழ்வின் நிலையில்லாமையும் இலக்கில்லாமையும், அவனை ஏங்கோ என்றோ அடையும்சொர்க்கம் போன்ற புனைகதைகளில் இளைப்பார விடாமல் இக்கணத்தை, இச்சூழலை,இங்குள்ள உயிர்களை செல்வமாக போற்றும் மனதைத் தருகிறது.

5.


நாத்திகம் மனிதனை மனிதனாக்குகிறது. மதங்கள் மனிதனை மிருகம் என்கின்றன.பாவி என்கின்றன. அவனை தேவனாக்க முயல்கின்றன. மனிதனின் இருத்தல் நிலையை கீழானதாகக் காட்டி வசைபாடி அவனை குற்றவுணர்சியும் பய உணர்சியும்கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றன.

6.


நாத்திகம் மனிதனை அறநெறியாளனாக ஆக்குகின்றது. விடுபட்ட மனமுடைய,தூய்மையான சிந்தனைகள் கொண்ட, பொறுப்புள்ள, அன்பு நிறைந்த ஒரு மனிதன்,சுய அறம் இன்றி வாழ இயலாது. மனிதனுக்கு அந்த சாத்தியத்தை நாத்திகம்வழங்குகிறது.

முழு நாத்திகனாக இருப்பது ஒரு அசாதாரணமான கடினமான ஒரு நிலை. ஒவ்வொருமனிதனுக்கும் இந்தநிலை வாழ்வின் இளமையிலாவது வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பளிக்கட்டும். (:-)


7 comments:

  1. சரியா சொன்னே சாமியெ ! நானும் இப்படித் தான் எழுதிப் போடனுமுன இருந்தனுங்க..நீங்க முந்திகினீங்க ! பாப்போம்...நேரம் கிடைச்சா ...

    ReplyDelete
  2. நாத்திகம் பழகாமல் ஆத்திகன் ஆவது சரியான சிந்தனையை வளர்க்காது. இளமையில் நாத்திகம் அறியாமல் வளர்ந்த தமிழகத் தமிழர் குறைவல்லவோ?

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  3. அய்யா,

    வரவேண்டும். வணக்கம்.

    ஆமாம்..நீங்கள் சொல்வது சரிதான். உலகில் உள்ள எல்லா ஆன்மிக அறங்களையும் விட சிறந்த அறம், எவரையும் இழிக்கலாகாது; யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்ற தன்னுணர்வு தானே..!!

    வந்தமைக்கும், உங்கள் குறிப்புக்கும் நன்றி.

    ReplyDelete
  4. Anonymous11:49 PM

    I totally agree with Arul Selvan. Already it was discussed in RKK.

    suresh Kannan

    ReplyDelete
  5. சுந்தர்
    சிறுவயதில் (ஆறுமாசத்துக்கு முந்தி :-)) அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை இப்ப ஞாகபப்படுத்தலாமா?
    மரத்தடியிலே உட்கார இடமில்லே. வெந்நீர் ஊற்று அனலாய் தகிக்கிது.

    ReplyDelete
  6. நண்பர்களுக்கு நன்றி. முக்கியமாய் அருள்செல்வனுக்கு. அவருடைய கட்டுரையை நான் சேமித்து வைத்திருந்தேன்.

    ஜெ, இது என்ன...இங்க எழுதறதுக்கு எதுக்கு யோசிக்கணும்.
    எல்லா இடத்தையும் விட சுதந்திரமான தளம் இது. ஆன்மிகத்தை ஒரு கவசமா நினைக்காம, அதை ஒரு வழியா நினைக்கிற உங்கள் எண்ணங்களை மதிக்கிறேன். அதே மாதிரி நாத்திகத்திலும் ஆட்கள் உண்டுங்கிறதை நான் நம்பறேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. இளமையில் நாத்திகம் பழகு என்றுக் கூறியுள்ளீர்கள். பிறகு முதுமையில்? நாத்திகமோ ஆத்திகமோ இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. ஜாபாலி, சார்வார்க்கர் ஆகியோர் கூறாத நாத்திகமா? பல நாத்திகர்கள் ஆத்திகராக மாறியதோ அல்லது எதிர்த் திசை நோக்கி மாற்றமோ அவரவர் சூழ்நிலைக்கேற்ப அமைகிறது. நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் ஆத்திகர் நாத்திகர் இருவரிலும் உண்டு. நீங்கள் உங்கள் வாதத்துக்காக ஒரு நல்ல நாத்திகரை ஒரு கெட்ட ஆத்திகரோடு ஒப்பிடுவது நேர்மையான வாதமில்லை. அவ்வளவுதான் கூற இயலும்.

    அன்புடன்,
    டோண்டு.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...